நெல்லை ஜெனா
ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவும், பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றது முதல் தீர்க்கப்படாத பிரச்சினையாக காஷ்மீர் விவகாரம் இருந்து வருகிறது. நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பு, அதனைத் தொடர்ந்து போர் அல்லது ராணுவ நடவடிக்கை நடைபெறுவதும் காஷ்மீரில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த விவகாரத்துக்காக இந்தியாவும், பாகிஸ்தானும் அமெரிக்கா தொடங்கி ஐ.நா.வரை சென்று குரல் எழுப்பிய வரலாறும் தொடர்ந்து நடந்து வந்துள்ளது.
இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று கடும் அமளிக்கு இடையே ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். இதுதொடர்பான மசோதாவை அவர் தாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்படுவதாக அமித் ஷா அறிவித்தார். அதன்படி ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு யூனியன் பிரதேசமாக செயல்படும் என அமித் ஷா அறிவித்தார். இதுமட்டுமின்றி இட ஒதுக்கீடு திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது.
இந்திய அரசமைப்புச் சட்டம் இனிமேல் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்துக்கும் பொருந்தும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசமைப்புச் சட்ட உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக காஷ்மீர் விவகாரத்தின் பயணத்தைப் பற்றிய ஒரு சுருக்கமான தகவல்:
நாடு சுதந்திரமடைந்த பிறகு சுதேச சமஸ்தானங்களை இணைக்கும் பணியை அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் மேற்கொண்டார். ஹைதராபாத், ஜுனகட் போல காஷ்மீரும் இந்தியாவுடன் இணைய மறுத்தது. படேலின் முயற்சியால் ஹைதராபாத், ஜுனகட் சமஸ்தானங்கள் இணைந்தன.
காஷ்மீரைப் பொறுத்தவரை சுதந்திரமடையும்போது மன்னராக இருந்த ஹரிசிங், இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதில்லை என்ற முடிவை எடுத்தார்.
காஷ்மீர் மன்னர் ஹரி சிங் ஒரு இந்து. ஆனால் காஷ்மீரில் வசித்தவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்களாக இருந்தனர். இதனால் இந்தியாவுடன் சேர்வதா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா என்ற கேள்வி தொடர்ந்தது.
ஜம்மு மற்றும் சுற்றுப்பகுதி மக்கள் இந்தியாவுடன் இணைய விரும்பினர். அதேவேளையில் காஷ்மீரின் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினர்.
இந்நிலையில் 1947-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாகிஸ்தான் பழங்குடி மக்களைக் கொண்ட படை காஷ்மீருக்குள் நுழைந்தது. தற்போதைய பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை வளைத்தது. பாகிஸ்தான் ராணுவம் பின்புலத்தில் இருந்து செயல்பட்டது.
வேறு வழியில்லாத சூழலில் மன்னர் ஹரி சிங், இந்தியாவிடம் ராணுவ உதவி கோரினார். காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க அவர் சம்மதித்தார். அப்போது பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் மன்னர் ஹரி சிங் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
காஷ்மீர் இந்தியாவுடன் இணைய ஒப்புக்கொண்டது. அதன் பாதுகாப்புக்கு இந்தியா முழு பொறுப்பேற்றது. இருப்பினும் பாகிஸ்தான் காஷ்மீரின் குறிப்பிட்ட பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டதால் நேரு, ஐ.நா.விடம் முறையிட்டார். இதனைத் தொடர்ந்து ஐ.நா. சபையின் தீர்மானத்தின்படி பாகிஸ்தான் படைகளும் தங்கள் பகுதிக்குள் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போதைய நிலையில் கட்டுப்பாட்டுக்கோடு உருவாக்கப்பட்டது. இன்றவுளவும் அதுவே காஷ்மீரின் பாகிஸ்தானுடனான தார்மீக எல்லையாக இருந்து வருகிறது.
காஷ்மீர் மாநிலத்தில் வாக்கெடுப்பு நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதற்கு இருநாடுகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் வாக்கெடுப்பு இன்று வரை நடைபெறவில்லை. இந்த ஒப்பந்தத்திற்கு முன்பாகவே காஷ்மீர் விவகாரத்தில் மன்னர் ஹரி சிங்கின் பங்கு முடிந்து விட்டது.
தேசிய மாநாட்டுக் கட்சி இஸ்லாமிய மக்களிடையே செல்வாக்கு பெற்ற கட்சியாக இருந்தது. அக்கட்சியின் தலைவராக ஷேக் அப்துல்லா இருந்தார். முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவின் தந்தை இவர். உமர் அப்துல்லாவின் தாத்தா ஆவார். எனவே மன்னர் ஹரி சிங்குக்கு பிறகு காஷ்மீர் விவகாரத்தில் அதன் தரப்பாக ஷேக் அப்துல்லா இருந்தார்.
1948ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 370 சேர்க்கப்பட்டது. இந்தப் பிரிவு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கியது. அத்துடன் 1952 ஆம் ஆண்டு ஷேக் அப்துல்லா மற்றும் பிரதமர் நேரு ஆகியோர் இடையே ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது.
அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் சட்டபிரிவு 35 ஏ-வை உருவாக்கி ஆணை பிறப்பித்தார். இது அரசியல் சட்டப்பிரிவு 370-ன் இணைப்பாக பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது. சட்டப்பிரிவு 35ஏ ஜம்மு- காஷ்மீர் மக்களுக்கு பிரத்யேக சலுகைகளை வழங்குகிறது.
சட்டப்பிரிவு 35ஏபடி, ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் யார் என்பதை நிர்ணயம் செய்கிறது.
* நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களுக்கு சிறப்பு உரிமைகள் உள்ளன.
* அரசுப் பணி பெறும் உரிமை, நிலம், வீடு போன்ற சொத்து வாங்கும் உரிமை, அரசு ஊக்கத்தொகை மற்றும் பிற சலுகைகளைப் பெறும் உரிமைகளை அளிக்கிறது.
* இது நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
* வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் காஷ்மீரில் சொத்து வாங்க முடியாது. ஆனால் அவர்கள் வெளி மாநிலங்களில் சொத்துகளை வாங்க முடியும்.
* அதுபோல மற்றவர்களுக்கு அரசு வேலை கிடைக்காது.
* ஜம்மு- காஷ்மீரில் நிரந்தரக் குடியுரிமை பெற்ற பெண் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவரையோ அல்லது நிரந்தரக் குடியுரிமை பெறாதவரையோ திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படாது.
* இதுபோன்ற பெண்கள் சொத்திலும் உரிமை கொண்டாட முடியாது.
காஷ்மீரின் பெரும்பான்மையான பகுதி இந்தியாவுடன் இணைந்தாலும் அது நாட்டின் தனிப்பகுதியாகவே இருந்து வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் இடையே வெறுப்பும், வன்மமும், பகையும் ஏற்பட பல காரணங்கள் இருந்தாலும் முதன்மையான காரணமாக காஷ்மீர் விளங்கி வருகிறது.
இந்த விவகாரத்தை வைத்து சர்வதேச நாடுகளிடமும், ஐ.நா.விடமும் ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் அரசியல் செய்கிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.
இந்தக் காரணத்தை முன்வைத்தே இரு நாடுகள் இடையே போர்களும் நடந்துள்ளன. எனினும் 1989-ம் ஆண்டுக்குப் பிறகு காஷ்மீரில் தீவிரவாதம் புதிய வடிவத்தை எடுத்தது. காஷ்மீர் தீவிரவாதமும், அதனைத் தூண்டிவிடும் பாகிஸ்தானும் இன்றளவும் இந்தியாவுக்குப் பெரிய தலைவலியாக இருந்து வருகிறது.
அரசியல் ரீதியாக காஷ்மீர் பல துண்டுகளாகி விட்டன. தேசிய மாநாட்டுக் கட்சி மட்டுமின்றி மக்கள் ஜனநாயக கட்சியும் காஷ்மீர் பள்ளத்தாக்கு மக்களின் கட்சியாக விளங்குகிறது. பாஜகவும், காங்கிரஸும் ஜம்மு பகுதியை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன.
அரசியல் மட்டுமின்றி பிரிவினைவாதம், தீவிரவாதம் என பல வடிவங்களைக் கொண்ட சிக்கல் நிறைந்த பிரச்சினையாக காஷ்மீர் விவகாரம் இன்று உருவெடுத்துள்ளது. இந்த விவகாரத்தை வைத்து அவ்வப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா - பாகிஸ்தான் இடையே அரசியல் செய்து வருகிறார். இதுபோன்ற சூழலின் பின்னணியில் தான் காஷ்மீர் விவகாரத்தில் மத்திய பாஜக அரசு பல அதிரடி நடவடிக்கைகளை இன்று எடுத்துள்ளது.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
22 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago