மான்டேஜ் மனசு 6 - அனிதாக்களின் காலனிகள்!

By க.நாகப்பன்

நட்பு காதலாக மலரலாமா? பார்த்த உடனே வரும் காதலைக் காட்டிலும், பழகிப் பார்த்து வரும் காதல் நிலைக்கும்தானே என்பது பேசிப் பேசி தீர்த்தாலும், இன்றும் விவாதத்துக்கு உரியதாகவே இருக்கிறது.

என்னைக் கேட்டால், தோழி காதலியாவது ஆகச் சிறந்த வரம் என்றுதான் சொல்வேன்.

ராஜா - ஜெனி காதல் அப்படிப்பட்டதுதான். மிகச் சிறந்த காதலர்களாக, தம்பதிகளாக அவர்கள் வாழ்வதை ரசித்துக்கொண்டே இருக்கலாம். எந்த மிகைத்தன்மையும் இல்லாமல் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்ட தம்பதிகள். அவர்கள் வாழ்வதைப் பார்க்கும்போது நமக்கும் காதலிக்கத் தோன்றும்.

'எப்போ பார்த்தாலும் அடுத்தவன் காதலைப் பத்தியே சொல்றியேப்பா. உன் காதலைச் சொல்லு' என்று உங்களில் சிலர் கேட்பது எனக்கும் கேட்கிறது.

நான் ரெடி.

ஆரம்பிச்சிடலாமா?

டீச்சர் ட்ரெய்னிங் முடித்த கையோடு ஒரு கல்விப் பத்திரிகையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த தருணம் அது.

இரண்டு நாள் விடுப்பில் ஊருக்கு வந்தேன். நண்பன் நேசமணி சோளிங்கர் அழைத்தான்.

ஏன்? எதற்கு? என்று எந்த கேள்வியும் கேட்காமல் பைக்கின் பின்னால் அமர்ந்துகொண்டு வழக்கம்போல் பேசிக்கொண்டே வந்தேன்.

கொஞ்ச தூரம் போனதும் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தினான். யார் வீடு என்று புரியாமல் கேட்டேன்.

''சொல்றேன் வாடா.''

''உன் சொந்தக்காரங்க வீட்டுக்கு நான் வந்தா சங்கடமா இருக்கும். வேணாம்டா.''

''என் ஃப்ரெண்ட் வீடுதான் வாடா.''

பைக்கில் இறங்கி வீட்டுக்குள் வந்த பிறகுதான் தெரிந்தது அவனுடன் படித்த ஒரு பெண்ணின் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கிறான் என்று.

அப்போதுதான் அவளைப் பார்த்தேன். அன்றலர்ந்த மலராய் டெய்லரிங் மிஷினில் துணி தைத்தபடி இருந்தாள்.

அவள் அம்மா 'வாங்கப்பா' என்று வரவேற்றார்.

அவள் அம்மாதான் முதலில் பேசினார்.

''நீ என்னப்பா படிச்சே?''

''திரூர்ல டீச்சர் ட்ரெய்னிங் படிச்சேன்க்கா...''

''நீயுமா... என் பொண்ணும், மணியும் பெங்களூரு போய் படிச்சாங்க. எப்போ வேலை வரும்னே தெரியலை. பக்கத்துல இருக்குற மெட்ரிகுலேஷன் ஸ்கூலுக்குதான் இப்போ வேலைக்கு போய்க்கிட்டு இருக்கா. ரெண்டு லட்சம் செலவு பண்ணி படிக்க வெச்சதுக்கு மாசம் ரெண்டாயிரம் சம்பளம் வாங்குறா. என்ன பண்றது?'' என அங்கலாய்த்துக்கொண்டார்.

இந்த உரையாடல் எதிலும் கவனம் செலுத்தாமல் இருந்தாள் அவள்.

''அம்மு. உன்கிட்ட பேசதானே வந்திருக்கான். உன் பாட்டுக்கு அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?''

மீண்டும் திரும்பி என்னிடம் பேசினார்.

''மணி என் புள்ளை மாதிரிப்பா. அவன் கொடுக்கிற தைரியம்தான் இப்போ மனசுக்கு திருப்தியா இருக்கு. எப்படியாவது இவளுக்கு ஒரு வேலை கிடைச்சிட்டா என் பாரம் குறைஞ்சிடும்''

எல்லா கதைகளையும் ஒன்று விடாமல் சொல்ல ஆரம்பித்துவிட்டார். மணிக்கு பெரிதாய் சாதித்ததைப் போல முகத்தை வைத்துக்கொண்டான்.

''அம்மா... போதும் மொக்கை போட்டது. போய் காஃபி கொண்டு வா'' என்று அவள் துரத்தி புலம்பல் எபிசோடில் இருந்து காப்பாற்றினாள்.

அதற்குப் பிறகு அளவாகப் பேசினாள். அழகாக சிரித்தாள். வேலை, படிப்பு என்று எல்லாம் விசாரித்தாள்.

அதோடு நான் சென்னை வந்துவிட்டேன். பெரம்பூரை அடுத்த அகரம் அமிர்தம்மாள் காலனி என் புகலிடம் ஆனது. அவளும் இங்கிலீஷ் சொல்லித்தரும் டீச்சராக வேலை செய்து கொண்டிருந்தாள்.

ஒரு காலை நேரத்துப் பொழுதில் என் செல்போன் சிணுங்கியது. அவள்தான் பேசினாள்.

''ஹலோ நான் அம்மு பேசுறேன்.''

''பேசுங்க.''

''அது வந்து''

''அய்யோ சும்மா விளையாட்டுக்கு அப்படி சொன்னேன். கலாய்க்கலை. சொல்லுங்க.''

''என் டீச்சரோட அண்ணன் பொண்ணுக்கு நாளைக்கு பேச்சுப்போட்டி. என்னை பிரிப்பேர் பண்ண சொல்லிட்டாங்க. மணிகிட்ட கேட்டேன். உங்க நம்பர் கொடுத்து பேசச் சொன்னான்.''

''என்னைக்கு போட்டி? என்ன தலைப்பு?''

''நாளைக்கு போட்டி. தமிழகத்தில் இன்றைய கல்வி நிலை.''

''அதெல்லாம் சரி. ஆனா, நாளைக்கு போட்டி வெச்சுக்கிட்டு இப்போ கேட்டா எப்படி? நான் எழுதி கொரியர்ல அனுப்பிச்சாலும் நாளைக்கு உங்க கைக்கு வருமான்னு தெரியலையே?''

''ப்ளீஸ். என்ன பண்ணலாம்? என்னை ரொம்ப நம்புறாங்க. ஏதாவது பண்ணுங்களேன்.''

''ஒண்ணு பண்ணலாம். நான் வேணும்னா உங்க நம்பருக்கு எஸ்எம்எஸ் பண்றேன். தங்கிலீஷ்லதான் அனுப்புவேன். அதை சேர்த்து கோர்வையா எழுதிப்பீங்களா?''

''ஓ யெஸ். தாராளமா!''

88 மெசேஜ் அனுப்பினேன். ஸ்பெஷலாய் வணக்கம் சொல்ல ஒரு கவிதை அனுப்பினேன்.

மறுநாள் மாலை போன் செய்தாள்.

''நன்றி''

''என்னாச்சு?''

''செகண்ட் பிரைஸ்.''

''சூப்பர். வாழ்த்துகள்.''

''உங்களுக்குதான் நன்றி சொல்லணும். அதை நீங்க எழுதிக் கொடுத்து ஒரு முறை பேசிக் காட்டியிருந்தா கண்டிப்பா முதல் பரிசு வாங்கியிருப்பா. பிளஸ் ஒன் படிக்குற பொண்ணு. ஆனா, அவ வாங்கின முதல் பரிசு இதான்.''

''சூப்பர்.''

''மணிக்கு இப்படி ஒரு ஃப்ரெண்டா? ''என்று ஆச்சர்யம் அகலாமல் கேட்டாள்.

அப்போது ஆரம்பித்த மெசேஜ் சாட் மிகப்பெரிய நெருக்கத்தை வரவழைத்துவிட்டது.

சன் மியூசிக்கில் அவளுக்குப் பிடித்த பாடல்கள் வந்தால் c sun music என்று மெசேஜ் தட்டுவாள். நானும் ரிப்ளை பண்ணுவேன்.

ஒரு கட்டத்தில் நான் காதலைச் சொன்னேன்.

''ஃப்ரெண்ட்தான் நீ. காதலனா உன்னை பார்க்க முடியாது'' என்று கறாராக சொல்லிவிட்டாள்.

''சரி. ஃப்ரெண்டாகவே நீ பழகு என்று அவளிடம் சொல்லிவிட்டேன்.''

ஆனால், அவள் நிச்சயம் காதலைச் சொல்வாள் என்ற நம்பிக்கை இருந்தது.

நான் வேலை செய்யும் பத்திரிகையின் ஒரு பிரதியை அவளுக்கு அனுப்பினேன். என் கவிதைகள் படித்துவிட்டுப் பாராட்டினாள்.

அவளுக்காக கவிதை சொல்ல ஆரம்பித்தேன்.

படித்த கவிதைகள், பாதித்த கவிதைகள் எல்லாம் அவளுக்காக உருமாற்றம் செய்யப்பட்டு காதல் கவிதைகள் ஆயின. ஒரு கட்டத்தில் எழுதிய கவிதையா, படித்த கவிதையா என்று தெரியாத அளவுக்கு மாறிப் போனேன்.

*

அழகான பரிசொன்றை

அன்பளிப்பாய் தர ஆசை...

உன்னை விட அழகாய்

இன்னொன்றுக்கு என்ன செய்வது?

என்று பிறந்த நாள் கவிதையாக வாழ்த்தட்டையில் எழுதித் தந்தேன்.

*

பத்து நிமிடம் லேட்டாக போன் பேசினாலும் கோபித்துக்கொள்வாள். அதற்கும் கவிதை சொல்லி சமாதானம் செய்தேன்.

பத்து நிமிடம் தாமதமாய்

வந்து பேசுவதற்கே

கரித்துக்கொட்டுகிறாய் நீ...

23 வருடங்கள் தாமதமாய்

வந்த உன்னை

எதுவுமே சொல்லாமல்

ஏற்றுக்கொள்கிறது என் காதல்...

*

உடல் தானம் செய்யவே

ஆசைப்படுகிறேன் அன்பே!

இடம் மாறி இருக்கும்

இதயத்தை என்ன செய்ய?

*

உயிரோடு இருப்பதல்ல வாழ்க்கை.

உயிர்ப்போடு அதுவும்

உன்னோடு இருப்பதே வாழ்க்கை...

இப்படி அனுப்பும் அத்தனை கவிதைகளையும் அவ்வளவு ரசிப்பாள்.

*

''உன்னைபோல என்னை யாரும் நேசிக்க முடியாது என சொல்வாள்.

ஆனால், நீ என் ஃப்ரெண்ட் தான்''.

சத்தியம் செய்யாத குறையாக பேசினாள்.

*

அவள் அம்மா பிறந்த நாள்தான் மறக்க முடியாதது.

சரியாக இரவு 12 மணிக்கு வாழ்த்துவோம். என்னதான் இருந்தாலும் வருங்கால மாமியாராச்சே என்று இமை மூடாமல் விழித்திருந்தேன். ஆனால், போனை எடுக்கவே இல்லை. 163 முறை முயற்சித்துப் பார்த்ததுதான் மிச்சம். காலையில் போனைப் பார்த்துவிட்டுப் பேசினாள். கடுப்பாகப் பேசினேன்.

''உலகத்துலயே லவ் பண்ற பொண்ணோட அம்மாவுக்கு விஷ் பண்ண 163 மிஸ்டு கால் கொடுத்தவன் நீதான்டா'' என சிரித்தாள்.

நானும் அந்த சிரிப்பில் கரைந்துபோனேன்.



முருகன் கோயில், தக்கான்குளம், தீபாவளி பர்ச்சேஸ், பாஸ்போர்ட் புகைப்படங்கள் பரிமாற்றம், ஏடிஎம் சந்திப்புகள் என நீண்டன.

தினமும் 500 மெசேஜ் அனுப்புவது அவ்வளவு சுலபமாய் தெரிந்தது. நள்ளிரவு 12 மணி பனியிலும் வாசலில் போர்வை போர்த்தியபடி மென்குரலில் என்னிடம் பேசினாள்.

'சத்தம் போடாதே' படம் பார்த்துவிட்டு பத்மப்ரியாவைப் பற்றி அள்ளி விட்டேன். அவள் பொறாமையில் பொங்கினாள். ஒட்டுமொத்த பொஸஸிவ்னெஸையும் ஒன்றாகக் காட்டினாள்.

ஃப்ரெண்ட் ஃப்ரெண்ட் என்று மூச்சுக்கு மூச்சு சொன்னாலும் அவளுக்குள் இருக்கும் என்னை நான் கண்டுகொண்டேன்.

ஹமாம் சோப்புக்காரி எனக்காக டெட்டாலுக்கு மாறினாள். மார்க் ஷீட்டில் இஷ்டத்துக்கும் மார்க் அள்ளிப்போட்டு குழந்தைகளின் மனதை அள்ளினாள். ஆம்லெட்டை கருக வைப்பது, பாலில் சர்க்கரை போடாதது என்று தன்னை மறந்து அம்மாவிடம் திட்டு வாங்கினாள்.

ஒவ்வொரு முறை பத்திரிகை அனுப்பும்போதும் என் மேல் உனக்கு காதலா? எழுத்தின் மீது காதலா? என்று கேட்டு, செல்ல விவாதம் செய்தாள்.

உன் கையெழுத்தில் வந்த பிறகு என் விலாசம் கூட அழகாய் மாறிப் போனது என கவிதை தட்டினாள்.

என் கவிதைகளை ஒரு நோட்டில் வரிசையாய் எழுதி வைத்தாள். இப்படியே இரண்டாண்டுகள் கழிந்தன.

அவளுக்கு அரசாங்க வேலை கிடைத்தது. நான்காயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் இருபத்து மூன்று வயது இளைஞன் என்ன ஆவேன்? ஓடினேன். பதறினேன்.

''நம் காதல் செட்டாகாது. சாதி மாறி கல்யாணம் பண்ண என் அம்மா ஒத்துக்க மாட்டாங்க'' என்றாள். என் வேகமும், தீவிரமும் அவளை பயம் கொள்ள வைத்திருக்க வேண்டும். விடாப்பிடியாகக் கேட்டேன்.

''ரெண்டு பேர் உயிர் போய் தான் நாம ஒண்ணு சேரணுமா?'' என்று தடாலடியாகக் கேட்டாள்.

மௌனம் காத்தேன்.

''என் ஃப்ரெண்டா இருந்தா கடைசிவரைக்கும் என் கூட பேசவாவது முடியும். இல்லைன்னா அதுவும் முடியாது'' என்றாள்.

''எனக்கு ஆயிரம் பேர் ஃப்ரெண்டா இருக்கலாம். நீ மட்டும் காதலியாவே இரு'' என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

செல்வராகவனின் 7 ஜி ரெயின்போ காலனி பார்க்கும்போதெல்லாம் எனக்கு அகரம் அமிர்தம்மாள் காலனியில் தங்கியிருந்த ஞாபகம் வரும். அவளுடன் பேச ஆரம்பித்தது, பழகியது எல்லாம் தான்.

அந்த வகையில் 7ஜி என்னால் மறக்க முடியாத படம்.

ரெயின்போ காலனியில் இருக்கும் கதிர் அங்கு புதிதாக குடிவரும் அனிதாவை காதலிக்கிறான். அனிதா காதலை மறுக்கிறாள். கதிரை யாரும் அவ்வளவு நல்லதனமாக பார்ப்பதே இல்லை. அனிதா அவனை அலட்சியம் செய்கிறாள். அவமானப்படுத்துகிறாள்.

ஒரு கட்டத்தில் நண்பனாக ஏற்றுக்கொள்கிறாள். மெல்ல மெல்ல காதல் வளர்கிறது. வீட்டில் தெரியவர, பிரச்னை வெடிக்கிறது. அனிதா கதிருடன் ஓடிப்போகிறாள். ஓர் இரவைப் பகிர்ந்துகொள்கிறார்கள். மறு நாள் ஒரு விபத்தில் அனிதா அகால மரணமடைய, கதிர் கதி கலங்கிப் போகிறான். மனநிலை பிறழ்ந்த கதிர் அனிதாவின் நினைவுகளோடே வாழ்கிறான்.

கதிராக அறிமுகம் ஆகியிருந்த ரவிகிருஷ்ணா கதாபாத்திரத்துக்கு ஏற்ற பொருத்தமான தேர்வு. அழுகை, சோகம், அவமானம் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு முகபாவத்தில் ஸ்கோர் செய்திருப்பார். அனிதாவாக சோனியா அகர்வால். சொல்லவே தேவையில்லை. படத்தின் ஜீவனே சோனியாதான்.

பொதுவாக செல்வாவின் பெரும்பாலான படங்களில் நாயகிக்கான முக்கியத்துவம் பெரிதும் இருக்கும். இதிலும் அப்படித்தான். எனக்கு ஒண்ணும் தெரியாது. நல்லா சாப்பிடுவேன். தூங்குவேன். எவனையாவது போட்டு அடிப்பேன் என்கிறார் ரவிகிருஷ்ணா.

உனக்கு ஏதாவது ஒரு திறமை இருக்கும் என்று துருவித் துருவி கேட்கிறார் சோனியா அகர்வால்.

கடைசியாக, சுமன் ஷெட்டி மூலம் ரவிகிருஷ்ணாவுக்கு பைக்கை பிரிச்சு மேயத் தெரியும் என்று தெரிந்தபிறகு மெக்கானிக் வேலைக்கு தயார்படுத்துகிறாள்.

அதுவும் அந்த மெக்கானிக் தொழிற்சாலை டாய்லெட்டில் ''ஐ லவ் யூ கதிர். என்னை வெச்சு எப்படி காப்பாத்துவ. ஐ லவ் யூ கதிர்'' என்று சொல்லி பைக் பொருட்களை அசெம்பிள் செய்ய வைப்பாள். அந்த ஒற்றை சம்பவம் ரவிகிருஷ்ணாவை அப்படியே புரட்டிப் போடுகிறது.

காலையில் பால் பாக்கெட் வாங்கவில்லை என்று கத்தும் அப்பா, நீ பிடிக்குறது சிகரெட் இல்லைடா. உன் அப்பனோட ரத்தம் என்று கறுவும் அப்பா, சமயம் கிடைக்கும்போதெல்லாம் கரித்துக்கொட்டும் அப்பா விஜயன் வேலை கிடைத்ததாக ரவிகிருஷ்ணா சொல்லும்போது அப்போ படிக்கலையா? என்று கேட்கிறார்.

எப்ப நான் சொல்லி கேட்டிருக்க. இப்போ மட்டும் என்ன புதுசா? என்று அப்பா விஜயன் வீண் ஜம்பம் செய்வார். ஆனால், இரவில் அவன் தூங்கிட்டான என்று உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு மனைவியிடம் பேசுவார்.

''அவனுக்குள்ளயும் ஏதோ ஒண்ணு இருந்திருக்கு பாரேன். ஹீரோ ஹோண்டா கம்பெனியில் மெக்கானிக் வேலைன்னா சும்மாவா? என் பையனுக்கு ஹீரோ ஹோண்டாவுல வேலை கிடைச்சிருக்கு, நானாவது தூங்குறதாவது?'' தன் மனைவியிடம் சொல்வார்.

காசுக்காகத் தான் நம்ம அப்பா நம்மளை மதிக்கிறாருன்னு அவன் நெனைச்சிடக் கூடாது பாரு" விஜயன் பேசும் காட்சியில் கதாநாயகனுடன் சேர்ந்து நமது விழிகளிலும் பொங்குகிறது கண்ணீர். மறுநாள் காலையில் விஜயனே பால் பாக்கெட் வாங்கி வருவார்.

இன்னொரு காட்சி இன்னும் சிறப்பானது. ரெயின்போ காலனியே விழாக்கோலம் பூண்டிருக்கும். கதிரை பாடச் சொன்னால் ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா என்று படுமொக்கையாய் பாடுவார். காலனியே கொல்லென சிரிக்கும். இன்னொரு கட்டத்தில், சோனியா நிச்சயதார்த்தம் உறுதி ஆகும்போது கிண்டல், கேலிக்கு ஆளாகும்போது கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை பாடல் பாடி அசத்துவார்.

சினிமாவில் பொதுவாக ஒரு மேடையோ அல்லது பாடச் சொன்னாலோ திறமையை நிரூபிக்கிறேன் பேர் வழி என்று பாடி அசத்துவார்கள். இது எதிர்பார்த்தபடி அச்சரம் பிசகாமல் நிகழும். இதயம் முரளியில் இருந்து யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால், செல்வா அதை மாற்றிக்காட்டினார். எதிர்பாராத தருணத்தில் நாயக பிம்பத்தை செதுக்கினார். இப்படி 7ஜி படத்தை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.

கலாசார ரீதியில் சில அதிர்ச்சிகளை ஏற்படுத்தக் கூடிய காட்சிகள் இருப்பதாக சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம். ஆனால், கதைப்போக்கில் அந்த குற்றச்சாட்டு காணாமல் போய் விடுகிறது என்பதுதான் உண்மை.

சொல்ல மறந்துவிட்டேன்.

ஒரு நிமிஷம் ப்ளீஸ்.

காலங்கள் மாறின... காட்சிகள் மாறின...

பிளஸ் ஒன் படிக்கும்போது பேச்சுப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற அந்த பெண் இப்போது டி.சி.எஸ்ஸில் வேலை செய்கிறாள்.

இதோ சென்ற வாரம் தான் என் குழந்தை இசையின் முதல் பிறந்த நாளைக் கொண்டாடி இருக்கிறேன் நான்.

அவள் எப்படி இருக்கிறாள் என்று மட்டும் தெரிந்துகொள்ள வேண்டாமே... ப்ளீஸ்...

*

க.நாகப்பன் - தொடர்புக்கு nagappan.k@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம்: >மான்டேஜ் மனசு 5 - காதல் கொண்டவர்களின் கதை!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்