ஆவலை வீசுவோம் 8 - கிகாபிளாஸ்ட் எனும் சிறிய/அரிய தளம்

By சைபர் சிம்மன்

| கிகாபிளாஸ்ட் - சிறிய தேடியதிரம். எளிமையானது. ஆனால், சுவாரஸ்யமான அமசங்களை கொண்டது. |

மாற்று தேடியந்திர அறிமுகத்தை கிகாபிளாஸ்ட்டில் இருந்து துவக்கலாம். கிகாபிளாஸ்ட் தேடியந்திரத்தை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பத்தாண்டுகளுக்கும் மேலாக இணைய உலகில் நீடித்திருக்கும் தேடியந்திரமாக கிகாபிளாஸ்ட் இருந்தும், அது பரவலாக அறியப்படாமல் இருப்பது ஆச்சர்யம்தான். அதிகம் அறியப்படாமல் இருப்பதை மீறி, கிகாபிளாஸ்ட் நல்லதொரு தேடியந்திரம்தான். அதை பயன்படுத்திப் பார்க்கும்போது இதை உணரலாம்.

ஆனால் ஒன்று... கிகாபிளாஸ்ட்டை பயன்படுத்த ஆரம்பித்ததுமே, ஆஹா கூகுளில் இருந்து விடுபட ஒரு தேடியந்திரம் கிடைத்துவிட்டது என்று துள்ளி குதிப்பதற்கில்லை. கூகுளின் அளவுகோள் கொண்டு கிகாபிளாஸ்ட்டை அளப்பதற்கில்லை. கூகுளுடன் ஒப்பிடும்போது கிகாபிளாஸ்ட் தேடியந்திரம் மிகவும் சிறிது. அதனிடம் உள்ள தேடல் பட்டியலும் சிறியது. கூகிள் வர்த்தக சாம்ராஜ்ஜியம் என்றால் இது ஒரு தனிமனித முயற்சியில் உருவாகி வளர்ந்த தேடியந்திரம்.

இருந்தாலும் என்ன, கிகாபிளாஸ்ட்டை கவனிக்கவும், கணக்கில் எடுத்துக்கொள்ளவும் காரணம் இல்லாமல் இல்லை. கிகாபிளாஸ்ட் தன்னளவில் சில தனித்தன்மைகளை கொண்டிருக்கவே செய்கிறது.

ஒற்றை நிபுணரின் முயற்சி

ஒரு தேடியந்திரமாக கிகாபிளாஸாட் குறை நிறைகளை பார்ப்பதற்கு முன்பு அதன் தோற்றம் பற்றி தெரிந்துகொள்ளலாம். கிகாபிளாஸ்ட்டின் தோற்றம் ஆச்சர்யங்களை கொண்டது. முதல் ஆச்சர்யம், அது மேட் வெல்ஸ் (Matt Wells) எனும் தனி மனிதரால் நிறுவப்பட்டது. 2000-மாவது ஆண்டில் மேட் வெல்ஸ் தனியாளாக இந்த தேடியந்திரத்துக்கான புரோகிராமை எழுதினார்.

சர்ச்இஞ்சின் வாட்ச் இணையதளத்தில் வெளியான மேட் வெல்ஸ் பேட்டிக்கான அறிமுகத்தில், 'ஆம், ஒற்றை உரிமையாளர்' என்று தான் குறிப்பிட்டேன். கிகாபிளாஸ்ட் முழுக்க முழுக்க மேட்டின் உருவாக்கம். கோடிங் முதல் இணையத்தில் உலாவி பக்கங்களை தேடுவது முதல் மார்கெட்டிங் வரை எல்லாமே மேட்டின் பணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், மேட்டின் பின்னணியை தெரிந்துகொண்டால் இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை. ஏனெனில், ஆரம்ப கால தேடியந்திரங்களில் ஒன்றான இம்போசீக் நிறுவனத்தில் பணியாற்றியவர் அவர். இன்போசீக்கின் ஆதார தேடல் நுப்டத்தை உருவாக்கி கொடுத்தவர். அந்நிறுவனத்தில் இருந்து வெளியேறிய பிறகு தன் சொந்த முயற்சியில் கிகாபிளாஸ்ட்டை உருவாக்கினார்.

ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு கோடாக C++ மொழியில் இதை உருவாக்கியதாக மேட் வெல்ஸ் அந்த பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த பேட்டியில் கிகாபிளாஸ்ட்டின் நோக்கம் பற்றி மேட் வெல்ஸ் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார். கிகாபிளாஸ்ட் நிரப்ப முயற்சிக்கும் இடைவெளி தேடல் முடிவுகள் தொடர்பான அல்ல, தேடலின் ஆற்றலை மற்ற எவரையும் விட சிறப்பாக அதிகரிக்கச்செய்யும் வழிவை தான் கண்டுபிடித்துள்ளதாக அவர் அதில் குறிப்பிடுகிறார்.

மற்ற தேடியந்திரங்களை விட, கிகாபிளாஸ்ட்டால் பத்து மடங்கு, ஏன் நூறு மடங்கு குறைவான வன்பொருட்களை கொண்டு அதே அளவிலான செயல்பாட்டை தரமுடியும் என்று அவர் தொடர்ந்து குறிப்பிடுகிறார்.

சிக்கன முதலீடு

கூகுள் போன்ற தேடியந்திரங்கள் பிரம்மாண்டமான சர்வர் பண்ணைகளை எல்லாம் நிறுவி மேலும் மேலும் செலவு செய்து வருவதை பார்த்தால் இதை சொல்ல மேட்டுக்கு எந்த அளவுக்கு தெம்பு இருக்க வேண்டும் என புரிந்து கொள்ளலாம். அதனால்தான் அவரால் இதனை தனி மனிதராகவே பராமரிக்க முடிந்திருக்கிறது.

தேடியந்திரத்தை சிக்கனமாக எப்படி நடத்துவது என்பது அவருக்கு தெரிந்திருக்கிறது என்றும் கொள்ளலாம். (எனது வன்பொருளுக்கான செலவு 8.000 டாலர், கூகுள் செலவு 50 மில்லியன் டாலர் இருக்கலாம் என்று இதே பேட்டியில் கூறியிருக்கிறார்; இது 2003-ம் ஆண்டு கணக்கு) இதே பதிலில் பயனாளிகள் நோக்கில் கிகாபிளாஸ்ட் எந்த அளவு விஷேசமானது என்று அவர் குறிப்பிடுகிறார். மற்ற தேடியந்திரங்களை விட இது இணைப்புகளுக்கு குறைவான முக்கியத்துவம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிக இணைப்புகளை கொண்ட பழைய இணையதளங்களுடன் ஒப்பிடும் போது புதிய இணையதளங்கள் பாதகமான நிலையை பெறக்கூடாது என்பதற்காக இவ்வாறு திட்டமிட்டு தேடல் உத்தி அமைக்கப்பட்டதாக அவர் சொல்கிறார். இதை உணர்த்தவே , இணையத்தில் மாறுபட்ட கோணத்தில் இருந்து தேடுங்கள் என முகப்பு பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். (இந்த பேட்டி 2003-ல் வெளியானது. இப்போது முகப்பு பக்கத்தில் இந்த வாசகம் இல்லை).

அது மட்டும் அல்லாமல், தான் அறிந்தவரையில் தொடர்ந்து முடிவுகளை அப்டேட் செய்து கொண்டிருக்கும், உடனுக்குடன் தேடல் தரவுபட்டியலை புத்துப்பித்துக் கொண்டிருக்கும் தேடியந்திரம் கிகாபிளாஸ்ட் மட்டும்தான் என்று கூறியிருக்கிறார். இணையதள உரிமையாளர்களும் தங்கள் இணையதளங்களை உடனுக்குடன் இந்த தரவு பட்டியலில் சேர்க்க முடியும்.

கிகாபாட் குறித்து...

இதே பேட்டியில் அவர், கிகாபிளாஸ்ட்டின் தேடல் சிலந்தியான கிகாபாட் பற்றியும் குறிப்பிட்டிருக்கிறார். இணையத்தில் உலாவி இணையப் பக்கங்களை சேர்க்கும் கிகாபாட், ஒரு பக்கத்தை பார்க்கும் போதெல்லாம் அதை அப்டேட் செய்யாமல், காத்திருந்து அதில் உள்ள தகவல்கள் புதுப்பிக்கப்படும்போது மட்டுமே அதை சேர்த்துக்கொள்வதாகவும் குறிப்பிடுகிறார். கிகாபிளாஸ்ட் ஏதோ ஒரு தேடியந்திரம் அல்ல, அதனிடம் நுடபங்களும் நுணுக்கங்களும் இருக்கின்றன என்பதற்கு இது உதாரணம்.

கூகுளின் விஸ்வரூப வளர்ச்சியால் முன்னுக்கு வரமுடியாமல் போனாலும் கிகாபிளாஸ்ட் காணாமல் போய்விடவில்லை என்பது முக்கியமானது. அது மட்டும் அல்ல, அமெரிக்காவில் இணையத்தில் தேடுவதற்கு சொந்த தேடல் தரவு பட்டியலை கொண்ட நான்கு தேடியந்திரங்களில் ஒன்றாக கிகாபிளாஸ்ட் இருப்பதாக இதன் அறிமுக பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2013-ல் யிப்பி தேடியந்திர நிறுவனத்திடம் கிகாபிளாஸ்ட் விற்கப்பட்டது. அதே ஆண்டு மேட் வெல்ஸ் இதன் பின்னே உள்ள தேடல் நுணுக்கங்களை ஓபன் சோர்ஸ் முறையில் பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்தார்.

கிகாபிளாஸ்ட் தன்னை இணையத்தில் முதல் திறந்த வெளித்தன்மை கொண்ட தேடியந்திரம் என வர்ணித்துக்கொள்கிறது. அதாவது தேடல் பட்டியலில் இணையப் பக்கங்கள் எப்படி பட்டியலிடப்படுகின்றன என்பதை அது வெளிப்படையாக சொல்வதாக அது பெருமிதம் கொள்கிறது. கோக்கின் ரகசிய பார்முலா போல தேடல் ராங்கிங் ரகசியத்தை கட்டிக்காக்கும் கூகுளால் ஒரு நாளும் இவ்வாறு கூற முடியாது.

கிகாபிளாஸ்ட் வெகுமக்களால் அதிக அளவில் பயன்படுத்தப்படாவிட்டாலும் அதன் தேடல் நுட்பத்தை கிளஸ்ட்டி, பிலிங்கோ போன்ற மற்ற தேடியந்திரங்கள் பயன்படுத்திக்கொண்டுள்ளன.

செயல்படுவது எப்படி?

இனி ஒரு தேடியந்திரமாக இதன் செயல்பாட்டை பார்க்கலாம். கூகுள் போலவே கிகாபிளாஸ்ட்டிலும் தேடுவது எளிதானது. கிகாபிளாஸ்ட் எளிமையான சிக்கல் இல்லாத முகப்பு பக்கத்தை கொண்டிருப்பதாக, தேடியந்திரங்கள் தொடர்பான அபவுட் டாட் காம் விளக்கப்பகுதியில் பாராட்டப்பட்டுள்ளது.

மையத்தில் உள்ள தேடல் கட்டத்தில் நாம் எதிர்நோக்கும் தகவலுக்கான குறிச்சொல்லை டைப் செய்து தேடலாம். தேடல் முடிவுகளை மற்ற தேடியந்திரங்கள் போல தான் பட்டியலிடுகிறது. ஆனால் முடிவுகளில் ஒரு தனித்தன்மையை பார்க்கலாம்.

முடிவுகள் பெரும்பாலும் தரமாகவே இருக்கிறது. உதாரணத்துக்கு இமெயில் என டைப் செய்தால் முதல் முடிவு ஜிமெயிலாக இருக்கிறது. இரண்டாவது முடிவு யாஹூ மெயிலாக இருக்கிறது. இதே பட்டியலில் இமெயில் மார்கெட்டிங் மற்றும் செய்திமடல்களுக்கான இணையதளங்களும் இடம்பெறுகின்றன.

கொஞ்சம் கவனித்துப் பார்த்தால், தேடல் முடிவுகளில் உப தகவல்களும் இருப்பதை பார்க்கலாம். குறிப்பிட்ட சில முடிவுகளுக்கு கீழே மேற்கொண்டு தேடுவதற்கான தேடல் வகைகளும் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன. கவனத்தை திசை திருப்பாத வகையில் அமைந்துள்ள இந்த பரிந்துரைகள், தேடலை மேலும் மேம்படுத்திக்கொள்ள உதவக்கூடும். இந்த வகைகள் பெரும்பாலும் கிகாபிளாஸ்ட்டில் உள்ள இணையதள பட்டியலில் தேட வழி செய்கின்றன. ஆம், ஒரு காலத்தில் யாஹூ பெற்றிருந்தது போல இது இன்னமும் இணையதள வழிகாட்டி (வெப் டைரக்டரி) பகுதியை பெற்றுள்ளது.

இவை தவிர இணைய தளங்களின் பழைய சேமிக்கப்பட்ட வடிவத்தையும் காட்டுகிறது. இது மிகவும் முக்கியமான அம்சம். தற்போது பயன்பாட்டில் இல்லாத தளங்களில் இருந்துகூட இந்த சேமிப்பு பகுதி மூலம் பழைய கட்டுரை அல்லது தகவலை பெற முடியும். (இந்த வசதி கூகிளிலும் இருக்கிறது. இது தான் ஒரு தேடியந்திரத்தின் ஆதார பலம் என்கிறார் மேட் வெல்ஸ்).

இதில் மற்றொரு முக்கிய அம்சம் கிகாபிளாஸ்ட்டில் குறிப்பிட்ட பக்கம் எப்போது பட்டியலிடப்பட்டது என்ற விவரமும் இடம்பெற்றிருப்பது தான். இந்த தேடியந்திரத்தில் மட்டுமே உள்ள வசதி இது என சிலாக்கிறது சர்ச் இஞ்சின் ஷோடவுன் விமர்சனம்.

அதே போல கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் பற்றி தேடினால், முதல் முடிவாக விக்கிபீடியா பக்கத்தை அளித்து, அடுத்த்தாக சச்சின் பெருமைகளை உணர்த்தும் இணைப்புகளை சுட்டிக்காட்டிவிட்டு, 5-வது முடிவுக்கு பின் நடிகர் சச்சின், சச்சின் அகர்வால் என வெரைட்டி காட்டுகிறது. இவற்றில் சச்சின் கார்க் என்பவர் தொடர்பான தளத்தில் மட்டும் வகைகள் பற்றிய பரிந்துரையை பார்க்க முடிகிறது.

அதே நேரத்தில் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனி தொடர்பான தேடலில் முதல் பத்து முடிவுகளும் தோனி தொடர்பானவையாகவே இருக்கின்றன.

கிகாபிளாஸ்ட் தேடல் முடிவுகள் மாறுபாட்டை காட்டுகின்றனவே தவிர அதிகம் ஏமாற்றத்தை அளிப்பதில்லை என்றே சொல்ல வேண்டும். வழக்கத்துக்கு விரோதமான தேடலில் இது அதன் துல்லியத்தால் ஆச்சர்யத்தையும் அளிக்கலாம்.

இதில் அடிப்படை தேடல் தவிர மேம்பட்ட தேடல் வசதியும் உண்டு. குறிப்பிட்ட பதத்தை சேர்த்து தேடுவது, விலக்கி தேடுவது ஆகியவையும் சாத்தியம். மேம்பட்ட தேடலுக்கான வசதிகள் அழகாக இணைய படிவம் போல கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான அம்சங்களை எளிதாக தேர்வு செய்து கொள்ளலாம். குறிப்பிட்ட இணையதளங்களில் மட்டும் தேடும் வசதியும் இருக்கிறது.

கிகாபிளாஸ்ட் தேடலில், புகைப்படங்கள், வீடியோக்கள் ,பிடிஎப் பக்கங்கள், ப்வர் பாயிண்ட் காட்சி விளக்கங்கள் என எல்லாமே தேடப்படுகின்றன. இதில் உள்ள மிகப்பெரிய குறை ஆங்கிலம் தவிர பிற மொழி தேடல் வசதி மிகவும் குறைவு என்பதே.

கிகாபிளாஸ்ட்டின் ஹைலைட்டாக அதன் கிகாபிட்ஸ் அம்சத்தை குறிப்பிடலாம். குறிப்பிட்ட தேடல் தொடர்பான பொருத்தமான பரிந்துரைகளே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. தேடல் பட்டியலுக்கு மேலே கண்ணை உறுத்தாமல் இந்த கிகாபிட்ஸ் பரிந்துரைகள் இடம்பெறுகின்றன. தேவை எனில் அவற்றை கிளிக் செய்து தேடலுக்கு உதவுகிறதா என பார்த்துக் கொள்ளலாம். பெரும்பாலும் இந்த பரிந்துரைகள் பொருத்தமாகவும் கச்சிதமாகவும் இருக்கின்றன. ஆய்வுக்கான பக்கங்கள் மற்றும் தொடர்புடைய பக்கங்களையும் இதில் காணலாம்.

கிகாபிளாஸ்ட் தன்னைப் பற்றி குறிப்பிட்டு சொல்லிக்கொள்ளும் மற்றொரு விஷயம், இதன் பசுமைத்தன்மை. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத ஆற்றலை தனது செயல்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்வதை தான் இப்படி சொல்கிறது. தேடல் முடிவு பட்டியலில் கூகுள் மற்றும் பிங் போன்ற நிலக்கரி ஆற்றலை பயன்படுத்தும் தேடியந்திரங்களை இதே தேடலுக்காக பயன்படுத்திப்பாருங்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு மாற்று தேடல் அனுபவத்துக்காக தாராளமாக பயன்படுத்திப் பார்க்கலாம். உங்கள் தேடலுக்கு எப்படி கைகொடுக்கிறது என்று சொல்லுங்கள்!

தேடியந்திர முகவரி:>http://www.gigablast.com

தொடர்புடைய இணைப்புகள்:

* >சர்ச் இஞ்சின் வாட்ச் பேட்டி

* >கிகாபிளாஸ்ட் பற்றிய சர்ச் இஞ்சின் ஷோடவுன் விமர்சனம்

* >கிகாபிளாஸ்ட் பற்றிய அபவுட்.காம் பக்கம்

சைபர்சிம்மன், இணைய வல்லுநர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

*

முந்தைய அத்தியாயம்:>ஆ'வலை' வீசுவோம் 7 - கூகுள் போட்டியாக பிரான்ஸ்சில் ஒரு தேடியந்திரம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்