என் வாழ்வில் நான் இதுவரை அனு பவித்தறியாதோர் கட்டத்தை அடைந்துவிட்டது போல் தோன்று கிறது. இனி என்றும் ஜெயகாந்தனைக் காண முடியாததோர் காலம் எதிரே காத்துக் கிடக்கிறது. ஒரு பரமானுபவம் போல ‘தி இந்து’ நாளிதழில் இதுவரை நான் எழுதிக் கொண்டு வந்தது இந்த வாரத்துடன் நிறைவுறுகிறது.
முடிக்கும் முன்பு மொழிய சில உள.
கலைஞன் பதிப்பகம் மாசிலாமணி, ஜெயகாந்தனோடு நாங்கள் பழகியதை எல்லாம் நன்கு அறிந்தவர். “திருப்பத் தூர் போவது என்றால் ஜெயகாந்தனுக்கு மாமியார் வீடு போவது போல் அவ்வளவு ஒரு மகிழ்ச்சி ஏற்படும்!” என்று ஜெய காந்தனின் மணி விழா மலரில் எழுதியவர். அவர்தான் ஜெயகாந்தனைப் பற்றி என்னை எழுதச் சொல்லி முதன்முதலில் சொன்னவர்.
“குப்புசாமி, ஜான்ஸனைப் பற்றி பாஸ்வெல் எழுதியது போல் ஜே.கே-வைப் பற்றி நீங்கள்தான் எழுதணும்!” என்று, சபரிமலை யாத்திரையில் இருந்தபோது ஒருமுறை குறிப்பிட்டார்.
நான் பயந்துவிட்டேன். எனக்கு ஜான் ஸனையும் தெரியாது, பாஸ்வெல்லை யும் தெரியாது. அது ஒருபுறமிருக்க, நான் விதந்து போற்றிக் கொண்டிருக்கும் மாபெரும் ஓர் ஆளுமையைப் பற்றி எழுதும் வல்லமை எனக்கு இருப்ப தாகவோ, அல்லது பின் ஒரு காலத்திலாவது அது வாய்க்கும் என்றோ அப்போது நான் நம்பவில்லை. ஜெய காந்தனைப் பற்றி மட்டும் அல்லாமல், பொதுவாகவே எதையும் எழுதாமல் வெகுகாலம் கழித்தேன் நான்.
பாரதிதாசனைப் பற்றி சுவையான ஒரு செய்தி உண்டு. ‘‘பாரதியார் இருக்கும் போதே நீங்க நிறைய கவிதை எழுதிட் டீங்களா? ’’ என்று யாரோ கேட்டார்களாம். அதற்கு பாரதிதாசன், ‘‘யார்ரா இவன்? ஐயர் இருக்கும்போதே நான் எழுதறதா? ஒரு கல்யாண வீட்டில் ஐயரைச் சந்தித்தேன். ‘எங்கெங்கு காணினும் சக்தியடா’ என்கிற கவிதையைப் பாடிக் காட்டினேன். ஐயர் அதைப் பாராட்டி, ‘எழுக, நீ புலவன்’னார். அத்தோடு நிறுத் திட்டேன். ஐயரும் கவிதை எழுதறது, நானும் கவிதை எழுதறதா? அப்புறம் ஐயருக்கு என்ன மரியாதை? ஐயர் போனாரு… அப்புறம்தான் நான் மறுபடி யும் எழுத ஆரம்பிச்சேன்!’’ என்றாராம்.
என் நண்பர்கள் இதைச் சொல்லி என்னைக் கிண்டல் செய்வார்கள். ‘‘ஜே.கேவும் எழுதறது நானும் எழுதறதான்னு சொல்லித் தப்பிக்காதே. நீ எழுது…’’ என்பார்கள்.
கொஞ்சகாலம் கழித்து, தான் ஆசிரி யராக இருந்த ‘கல்பனா’ மாத இதழில் எழுதுமாறு எனக்கு கட்டளையிட்டார் ஜே.கே.
அப்போதெல்லாம் பாட்டிலில் கார்க் அடைத்துக் கொண்டிருப்பது போல் ஜெயகாந்தனே என்னை அடைத்துக் கொண்டிருந்தார். ஏதாவது எழுத நினைத் தால், அவர் சம்பந்தமான விஷயங்களே எல்லாவற்றுக் கும் முன்னால் வந்து நின்றன. எனவே, இவரைப் பற்றி முடிந்த வரை எழுதி முடித்தால்தான், நாம் வேறு விஷயத்தை எழுத முடியும் என்று தோன்றிற்று.
‘தெரிந்த முகங்கள்’ என்று ஒன்று எழுதினேன்.
‘ஒன்று’ என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் அது சிறுகதையா, குறுநாவலா, செய்தித் தொகுப்பா எதுவும் எனக்குத் தெரியாது. அது வெறும் செய்தித் தொகுப்பு என்று சொல்ல முடியாத அள வுக்கு, அதில் வரும் நபர்கள் நிஜமான வர்கள். ஆனாலும்கூட, புனைபெயர் களைப் பூண்டிருந்தனர். அந்தப் புனை பெயர்களுக்கும் ஒரு பூர்வீகக் காரணம் இருந்தது. வர்ணனைகள் செய்தியின் வரம்புகளைத் தாண்டியிருந்தன.
எப்படியோ கஷ்டப்பட்டு எழுதி, அதைவிடவும் கஷ்டப்பட்டு அதற்கு ‘தெரிந்த முகங்கள்’ என்று தலைப்பு வைத்து ஜெயகாந்தனிடம் கொடுத்து விட்டேன். அப்போது கிட்டத்தட்ட ஒருவார காலம் நான் ஆழ்வார்ப்பேட்டையில் தங்கியிருந்தேன். இரண்டு நாட்கள் கழித்து, ஜெயகாந்தனும் தேவபாரதியும் நானும் மட்டும் இருக்கும்போது நான் எழுதிக் கொடுத்ததைப் பற்றி ஜெயகாந்தன் பேச்சை ஆரம்பித்தார்.
‘‘நீ எழுதியிருக்கறதைப் பத்தி நீ என்ன நினைக்கிறே?” என்று கேட்டார்.
‘‘அது எப்படியிருக்குதோ எனக்குத் தெரியாது ஜே.கே. ஆனா, அதைத்தான் இப்போது என்னால் எழுத முடியும்” என்று நான் சொன்னேன்.
கொஞ்சம் பொறுத்து ஜெயகாந்தன் சொன்னார் ‘‘இந்த மாதிரி ஒண்ணை நான் எழுதியிருந்தா, எனக்குள் இருக்கிற விமர்சகன் என்னைக் கொன்றிருப்பான். ஆனா, இந்த மாதிரி வேற யாராவது எழுதினா நான் கையெடுத்துக் கும்பிட்டுடுவேன்!’’ என்றார்.
இது என்ன கருத்து என்று குழம்புகிறீர்களா? அடியேனுக் கும் அதே குழப்பம்தான். அவர் என்ன சொல்லவந்தார் என்பது இன்றுவரை எனக்குப் புரியவில்லை.
பிறகு சொன்னார்: ‘‘ஏம்ப்பா, கம்யூனிஸ்ட் கட்சி ‘கல்பனா’ பத்திரிகைக்கு ஆசிரியர் பொறுப்பை எனக்குக் கொடுத் திருக்கு. இதில் என்னையே புகழ்ந்து எழுதுவதை நானே போட்டுக்கிட்டா நல்லாவா இருக்கும்?’’ என்றார்.
‘‘புரியுது ஜே.கே” என்று சந்தோஷ மாகச் சொல்லி, அந்தக் கையெழுத் துப் பிரதியைத் திரும்பப் பெற்றுக் கொண்டேன்.
பரணில் நெடுங்காலம் காத்திருந்து விட்டு அந்தக் காகிதக் கத்தை அமெ ரிக்கா புறப்பட்டுச் சென்றது. அங்கே ராஜாராம், துக்காராம் என்கிற அபூர்வ சகோதரர்களின் கைங்கரியத்தினால், அது வெளியிடத் தக்கது என்று தீர் மானிக்கப்பட்டு, ‘எனி இந்தியன்’ பதிப் பகம் வெளியிட்ட என் சிறுகதைத் தொகுப் பில் கடைசி பக்கங்களில் சேர்க்கப்பட்டு, அந்த நூலுக்கும் ‘தெரிந்த முகங்கள்’ என்றே தலைப்பு வைக்கப்பட்டது.
அதன் முன்னுரையில் ஜெயகாந்தன் நான் மேலே சொன்ன நிகழ்ச்சிகளை எல்லாம் பிரஸ்தாபித்துவிட்டு, ‘இப்போது இத்தொகுப்பில் படிக்கும்போது சுவா ரஸ்யமாகத்தான் இருக்கிறது. எதையும் சுவாரஸ்யமாக சொல்வதில் நண்பர் குப்புசாமி நிபுணர். சபை நடுவே இந்தக் கதைகளையெல்லாம் ஏற்கெனவே பலமுறை சொல்லியிருக்கிறார். அப்போ தெல்லாம் ‘குப்பன் பூ சுற்றுகிறான்’ என்று நாங்களெல்லாம் கேலி செய்வோம். யதார்த்தத்தில் நாங்களெல்லாம் அறிந்த சாதாரண நபர்கள் பற்றியும் சம்பவங்கள் பற்றியும் கற்பனையலங்காரத்தோடு கவிதை மணம் கமழ, பொய் கலவாமல் அவர் சொல்லும்போது, அதை புகழ்கிற நோக்கம்தான் கேலி வார்த்தைகளில் இருந்தது’ என்று எழுதியிருந்தார்.
2014-ம் ஆண்டு, ஜெயகாந்தனின் 80-வது பிறந்த நாளையொட்டி, நண்பர் களின் அன்பான வற்புறுத்தலால், ‘ஜெய காந்தனோடு பல்லாண்டு’ என்னும் இந்தத் தொடரை எழுத ஆரம்பித்தேன். ‘அடியோ மோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு’ என்கிற பிரபந்த வரியில் இருந்து இந்தத் தலைப்பை தேர்ந்தெடுத்தேன்.
ஜெயகாந்தனின் படைப்புகளைப் பற்றி விமர்சனம் எஞ்ஞான்றும் எக்காலத் தும் தொடர்ந்து எவராலும் எழுதப்பட லாம். ஆனால், ஒரு மனிதராக அவர் எத் தகைய வாழ்க்கை வாழ்ந்தார் என்பதை, அவர் வாழ்ந்தபோது அருகிருந்து கவனிக்கும் ஓர் அரும்பேற்றினை அதிர்ஷ்டவசமாக நண்பர்களாகிய நாங்கள் பெற்றிருந்த காரணத்தால், அதை எழுதுவது அத்தியாவசியமானது என்று எனக்கு உணர்த்தப்பட்டது.
ஜெயகாந்தன் ஒரு தனி மனிதராக மட்டுமே வாழ்ந்து மறைந்தவர் அல்லர். தனது காலத்தின் சகல தாக்கங்களையும் தன்னோடு கலந்து பிசைந்து எழுத்தாக வார்த்து எடுத்தவர். தமிழ் எழுத்தாளன் என்றாலே சகஜமாக மனதில் தோன்றும் அந்தப் பழைய சாதாரண பிம்பத்தைத் தகர்த்து எறிந்து, அதை ஒரு கம்பீரமான பிம்பமாக மாற்றிக் காட்டியவர்.
இந்தத் தொடர்கட்டுரையின் 29-வது அத்தியாயம் வரைக்கும்… குப்பன் என்ன எழுதியிருக்கிறான் என்பது ஜே.கே-வுக் குத் தெரியும். இந்தக் கட்டுரைகளின் சிறப்போ, சிறப்பின்மையோ ஒருபுறம் இருக்கட்டும். தமிழில் இதுவரை எந்த எழுத்தாளரைப் பற்றியும் இத்தகைய நீண்ட தொடர், அதுவும் அவர் வாழ்கிற காலத்திலேயே எழுதப்பட்டது இல்லை என்று நண்பர்கள் கூறுகிறார்கள். இந்தப் பாராட்டும் பெருமையும் இந்தக் கட்டு ரையை எழுத தொடர்ந்து தூண்டு தலாக இருந்த நண்பர்களையே சேரும். அவர்களுக்கெல்லாம் நான் செலுத்த விரும்பும் நன்றி அளப்பரியது.
இந்தத் தொடரில் வெளிவந்த பல பேர் சொல்லிச் சொல்லிப் பாராட்டிய படங்களில் சில, திருப்பத்தூர் நண்பர்களாகிய எங்களிடமே இருந்தன. சில படங்கள் தமிழ் நாடெங்கும் விரவிப் பரந்துள்ள ஜெயகாந்தனின் நண்பர் களால் அனுப்பப்பட்டவை. அவர்களுக் கும் என் அன்பு நன்றி!
- நிறைவு
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pisakuppusamy1943@gmail.com
முந்தைய அத்தியாயம்:>ஜெயகாந்தனோடு பல்லாண்டு 38- ஜெயகாந்தனும், விவேகானந்தரும்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
27 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
1 month ago