சொல்லத் தோணுது 43 - நெஞ்சு பொறுக்குதில்லையே!

By தங்கர் பச்சான்

திரைப்படங்களைத் தரக் குறைவாக நினைப்பவர்களும், சினிமா பிடிக் காது என்பவர்களும் தொடர்ந்து கேட்டு ரசிப்பது திரைப்படப் பாடலைத் தான். என்னைப் போன்ற பலருக்கு உணவாக, உயிராக இருப்பது பழைய திரைப்படப் பாடல்களே. அந்தப் பாடல்களில் என்னதான் இருந்தது? மனதை மயக்கும் இசை, சிந்தனையைக் கிளரும் வரிகள், மனதை வட்டமிடும் மெட்டுக்கள், திரும்பத் திரும்ப முணுமுணுக்க வைக்கும் ராகங்கள் என எல்லாமும் இருந்தன.

ஒவ்வொரு பாடலிலும் புதிய புதிய வடிவங்கள், புதிய இசை, புதிய ராகம், புதிய மெட்டு, புதுப் புது வரிகள், அதற்கும் மேலாக புதியப் புதிய குரல்கள். இவையெல்லாம் எப்படி சாத்தியமோ என ஆச்சர்யத்தில் தலை சுற்றும். அரசுப் பேருந்தில் நடத்துநராக அல்லாடிக் கொண்டிருக்க வேண்டிய என்னை, இழுத்துக் கொண்டு வந்ததே திரைப்படப் பாடல்கள்தான்!

இதற்கெல்லாம் மூலக் காரணம் எது? எம்.எஸ்.விஸ்வநாதன் என்னும் மன்னர்தான் அதற்கு மூலக் காரணமாக இருந்திருக்கிறார். இளமைப் பருவத்தில் எம்.ஜி.ஆர் ரசிகனாக இருந்த நான் சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் படங்களைப் புழுப் பூச்சாகக் கூட மதிக்க மாட்டேன். இவர்களின் படங்களைப் பார்த்தவர்களின் பக்கத்தில்கூட உட்காரக் கூடாது என்ற கோட்பாட்டுடன் வாழ்ந்த தால், பல சிறந்த படங்களைப் பார்க் காமல் இப்போது அதனை நினைத்து ஏங்கும் பாவி நான். என்னை மயக் கிய பல பாடல்கள் இவர்கள் நடித் தப் படங்களாக இருந்துவிடும். அப்போ தெல்லாம் இந்த மெட்டுக்கள் எம்.ஜி.ஆர் படத்துக்காக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டது. அதைத் திருடித் தான் இவர்கள் தங்கள் படத்தில் வைத்துக் கொண்டார்கள் என நான் கூறியதை நம்புவதற்கும் அப்போது நண்பர்கள் இருந்தார்கள்.

திரைப்படத் துறையில் இருப்பவர் களில் ‘இவர் தமிழர், இவர் மலையாளி, இவர் தெலுங்கர்’ என்று மற்றவர்கள் சொல்லும்போது, அதே பார்வைதான் என்னிடமும் அப்போது இருந்தது. பின்பு தான் தெரிந்தது பாடல் எழுதுபவர்கள், நகைச்சுவை நடிகர்கள் என சிலரைத் தவிர, பெரும்பாலும் மற்ற மொழிக்காரர் கள்தான் என்பது. அவ்வாறு பார்ப்பது மடமையானது என்பதும் பின்புதான் புரிந்தது. நடிகர், இயக்குநர், ஒளிப்பதி வாளர், தயாரிப்பாளர், இசையமைப் பாளர், பாடகர் என எல்லோருமே மற்ற மொழிக்காரர்களாக இருந்து, அது தமிழ்ப் படங்களாகவும், சிறந்த படங்களாகவும் இருந்த பட்டியல்தான் அதிகம்.

இரண்டு மாதங்களாகவே எம்.எஸ்.வி யைப் போய் நேரில் பார்க்க வேண்டும். அவரோடு ஒரு படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தேன். அது நிராசையாகவே முடிந்துவிட்டது. எப்போதும் என் கைப்பேசியில் சேமித்து வைத்திருக்கும் அவருடைய தனித்துவ மான பாடல்களைக் கேட்டுக் கொண்டே தான் எழுதுவது வழக்கம். அவரது இறப்புச் செய்தி அறிந்ததும் எழுதிக் கொண்டிருந்ததை விட்டுவிட்டு அப் படியே கண்ணீர் சிந்திக் கொண்டே யிருந்தேன்.

நான் சோர்வடைந்து, மனமுடைந்து போகும்போதெல்லாம் என்னைத் தொடர்ந்து இயக்குபவை அவர் இசை யமைத்தப் பாடல்களே. அவ்வளவு திறமை ஒரு மனிதனுக்கு சாத்தியமா எனத் தெரியவில்லை. ஏளனம், நையாண்டி, வீராப்பு, பெருமை, தன்னம்பிக்கை, தோல்வி, சகோதர உணர்ச்சி, நட்பு, பாசம், உல்லாசம், வீரம், தாய்மை, சோகம், ஏமாற்றம் என எந்த உணர்ச்சியில் பாடல் அமைத்தாலும் அதில் தனித்துவம் படைத்தவர் ஐயா எம்.எஸ்.வி!

இப்போது வரும் பாடல்கள் எனச் சொல்லக் கூடியவைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஒரே சூழ்நிலை. ஒரே உணர்ச்சி. ஒரு பாடலை எந்தப் படத்திலும் ஒட்டிக் கொள்ளலாம். யாரும் நடிக்கலாம், யாரும் வாயசைக்கலாம்.

எம்.எஸ்.வியின் பாடல்களை இப் போதெல்லாம் நான் கேட்பதோடு நிறுத்தி வருகிறேன். பழைய பாடல்களை ஒளிபரப்பும் பல தொலைக்காட்சிகள் இன்று இயங்குகின்றன. அவற்றில் ஒரு சில பாடல்களைத் தவிர, பல பாடல்களுக்கு நடித்த விதம், படமாக்கிய விதம், நடனம் அமைத்த விதம் போன்றவற்றைப் பார்க்கிறபோது, நான் உயிராக நினைத்த அந்தப் பாடல்களை மீண்டும் கேட்க வேண்டுமா எனத் தோன்றுகிறது. அந்தப் பாடலின் தரத்துக்கு, உழைப்புக்கு இணையாக நடிகர்களும், இயக்குநர்களும், தொழில் நுட்பக் கலைஞர்கலும் ஈடுபாட்டுடன் உழைக்காமல் படமாக்கப்பட்டிருப்பதை என்னால் சகித்துக் கொள்ள முடிய வில்லை. எம்.எஸ்.வி. என்னும் குதிரை யின் மேல்தான் மேற்சொன்ன அத்தனைப் பேரும் பயணித்திருக்கிறார்கள்.

நெடுந்தொலைவில் வெளியூரில் இருந்துவிட்டதால் எம்.எஸ்.வியின் முகத்தை என்னால் கடைசியாக ஒரு முறை பார்க்க முடியாமல் போன குற்ற உணர்ச்சி இருந்து கொண்டேயிருக் கிறது. கண்ணதாசன், வாலி போன்ற நம் உடைமைகளாகிப் போன நான் வணங்கும் கவிஞர்களின் பாடல் வரிகள் எம்.எஸ்.வி இல்லாமல் போயிருந் தால், அந்தப் பாடல்களெல்லாம் இந்த அளவுக்கு கொண்டாடப் பட்டிருக்காது.

இத்தகைய சிறப்புவாய்ந்த அவ ரின் இறுதிச் சடங்கையும், இரங்கல் தெரிவிப்பவர்களையும், அவரின் வாழ்க் கைக் குறிப்புகளையும், பாடல் காட்சி களையும் தொலைக்காட்சிகளில் காண் பிப்பதும், பத்திரிகைகளில் வெளியிட்டு விட்டால் மட்டும் போதும் என நினைக் கிறோம்.

அண்மைக்காலமாக திரைப்படத் துறையினரைச் சார்ந்தவர்களின் இறப்பை தொலைக்காட்சிகள் நேரலை செய்வதும், அதைப் பார்த்துவிட்டு பிரபலங்களும், மக்களும் அங்கே திரள்வதும் கூடிக் கொண்டேயிருக் கிறது. இப்படிப் பட்ட நேரங்களில் தங்களி்ன் இருப்பைக் காட்டிக் கொள்பவர்களும், மக்களுக்குத் தெரிந்த புகழ்பெற்ற முகங்களைக் காட்டி அதன் மூலம் பணம் பண்ணுபவர்களும் இருக்கிறார்கள்.

இறந்துபோன சாதனையாளர்களின் ஆளுமைத் திறனை, பங்களிப்பை, சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங் களைச் சொல்லி, அவை தொடர் பான காட்சிகளை திறனாய்வாளர் களைக் கொண்டு மக்களுக்கு வெளிப் படுத்துவதுதான் ஊடகங்களின் முதற் பணி. அதனை விட்டுவிட்டு பிரபல மானவர்கள் என்கிற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு, திரும்பத் திரும்ப அவரைப் பற்றிய புகழுரைகளை மட்டுமே எல்லோரும் சொல்வதை காண்பிப்பதால் சமுதாயத்துக்கு எந்தப் பயனும் இல்லை. மரண வீட்டில் கேமராவை நிற்கவைத்து, அங்கு வருவோர் போவோரை நேரலையில் காண்பிப்பதாலும், அவர்கள் பங்குபெற்ற படத்தின் பாடல் காட்சிகளை ஒளிபரப்பு வதாலும் யாரோ சிலருக்கு மட்டும்தான் லாபம்.

பல திரைப்பட ஆளுமைகளின் மரணம் ஊடகத்தினரால் கண்டுகொள் ளப்படவே இல்லை. அதனால் அந்த ஆளுமைகளின் பங்களிப்பு உலகத்துக்கு தெரியாமலே போய்விடுகிறது. அஞ்சலி செலுத்த புகழ்பெற்ற நடிகர்களும், அரசியல்வாதிகளும் வருகிறார்கள் என்றால் ஊடகத்தினர் அங்கே ஓடு கிறார்கள். புகழ்பெற்ற நடிகர்களும், அரசி யல்வாதிகளும் அஞ்சலி செலுத்த செல்ல வில்லை என்றால் அக்கலைஞர்களின் மரணம், அவர்கள் வாழ்நாள் முழுக்க தன்னை ஒப்படைத்த திரைத்துறைக்கே தெரிவதில்லை. இவ்வளவு பெரிய, காலத் தால் வாழும் ஒரு திரைக் கலைஞனின் பெயர் அவரது இறப்புக்குப் பின்புதான் ஊடகங் களில் இந்த அளவுக்கு வெளியிடப் படுகிறது.

கிராமங்களில் சிலரின் மரணத் துக்காக சிலர் காத்திருப்பார்கள். இறந்த வுடன் புதுத் துணி கிடைக்கும், உறவினர்கள் பணம் வைப்பார்கள் கறி விருந்து கிடைக்கும் என்கிற காரணத்துக்காக. அதுபோலதான் இது போன்ற சந்தர்ப்பங்களில் சிலரது செயல்பாடும் தொடர்கிறது.

ஒரு சாதனையாளரின் உடல் நலிவு சேதி தெரியவரும்போதே, முன்கூட்டியே அவர்கள் குறித்த விவரங்களை, ஆய்வுகளை வெளிக் கொண்டுவருவதுதான் சமுதாயத்தின் நான்குத் தூண்களில் ஒன்றாக இருக்கும் ஊடகத் தூணின் முதல் பணியாக இருக்க வேண்டுமென விரும்புகிறேன்.

- சொல்லத் தோணுது...

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:thankartamil@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

26 mins ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

மேலும்