மனிதர்களின் பாதம் பதியாத அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் பயணித்துப் பறவைகளின் வாழ்வை அவதானித்தவர். “சோதனைக்கூடத்தில் ஒரு நுண்ணோக்கி அடியில் பறவையைக் கிடத்தி ஆராயும் ஆய்வாளர் அல்ல நான். பறவையின் வாழ்வுலகுக்குள் பிரவேசித்து, அவற்றின் வரலாற்றைப் பதிவுசெய்வதே என் நோக்கம்” என்றார். ‘எந்தப் பறவையும் உன்னைப் பார்க்கவில்லை என்று எண்ணாதே, நீ பார்க்கும் முன்னரே அது உன்னைப் பார்த்திருக்கும்’ எனும் வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் - அவர்தான் இந்தியன் பறவையியலின் தந்தை என வாஞ்சையுடன் அழைக்கப்படும் சலீம் அலி.
1896-ல் மும்பை அருகே கேத்வாடி என்ற ஊரில் பிறந்தார் சலீம் அலி. 10 வயதில் வேட்டைப் பிரியராக இருந்த சலீம், ஒருநாள் விளையாட்டுத் துப்பாக்கியால் ஒரு சிட்டுக்குருவியைச் சுட்டார். மஞ்சள் நிறக் கழுத்துப்பட்டை கொண்ட அந்த அபூர்வமான குருவி, நொடிப் பொழுதில் மரக் கிளையிலிருந்து கீழே சரிந்து விழுந்து இறந்தது. ‘தி ஃபால் ஆஃப் எ ஸ்பேரோ’ எனப் பின்னாளில் தன் சுயசரிதைக்குப் பெயர் சூட்டும் அளவுக்கு சலீமை ஆழமாகப் பாதித்தது அந்தத் தருணம். பறவைகளை ரசிக்கத் தொடங்கினார்.
சலீம் மனதில் தொற்றிக்கொண்ட பறவை ஆர்வம், அவரை மும்பை இயற்கை வரலாற்றுக் கழகத்துக்குக் கொண்டுசென்றது. அடுத்து, மும்பையில் உள்ள சேவியர் கல்லூரியில் விலங்கியல் பட்டப்படிப்பு படித்தார். பாகிஸ்தான், திபெத், ஆப்கானிஸ்தான் எனப் பல நாடுகளுக்குச் சென்று அங்குள்ள பறவைகளின் குணாதிசயம், உடற்கூறுகள், சிறப்பியல்புகளை ஆராய்ந்தார். 1928-ல் ஜெர்மனியில் உள்ள பெர்லின் விலங்கியல் அருங்காட்சியகத்தில் பறவைப் பகுப்பாய்வு பயின்றார். 1930-ல் மீண்டும் மும்பை திரும்பியவர் கடலோரப் பறவைகளை, தூக்கணாங்குருவியின் அத்தனை அம்சங்களையும் நுணுக்கமாக ஆராய்ந்தார்.
தன் முதல் புத்தகமான ‘தி புக் ஆஃப் இண்டியன் பர்ட்ஸ்’ 1941-ல் எழுதினார். ‘ஹேண்ட்புக் ஆஃப் தி பர்ட்ஸ் ஆஃப் இந்தியா அண்டு பாகிஸ்தான்’, ‘தி பர்ட்ஸ் ஆஃப் கேரளா’, ‘பர்ட்ஸ் ஆஃப் தி ஈஸ்டர்ன் ஹிமாலயா’ போன்ற அவருடைய பிற நூல்களும் பிரசித்திபெற்றன. 1958-ல் பத்மபூஷண், 1976-ல் பத்மவிபூஷண், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களிடமிருந்து கவுரவ முனைவர் பட்டங்கள் என்று கவுரவிக்கப்பட்டார்.
கோவாவில் உள்ள எழில்மிகு பறவைகள் சரணாலயத்துக்கு ‘சலீம் அலி பறவைகள் சரணாலயம்’ எனப் பெயர் சூட்டப்பட்டது. பர்மாவில் மர வியாபாரி, ஐரோப்பாவில் குறுகிய காலகட்டத்துக்கு வாகன ஓட்டுநர், மும்பை தேசிய வரலாற்றுக் கழக அருங்காட்சியகத்தில் வழிகாட்டி - இப்படி சுவாரஸ்யமான அனுபவங்கள் நிறைந்தது அவர் வாழ்க்கை. தன் வாழ்நாளில் பெரும்பகுதியை மிகச் சிறந்த யாத்திரிகராகவும், பறவைக் காதலனாகவும் கழித்த சலீம் அலி, 27 ஜூலை 1987-ல் இயற்கையுடன் இயைந்துவிட்டார்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
30 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago