ஜெயகாந்தனோடு பல்லாண்டு 35- எம்.ஆர்.ராதாவுடன்!

By பி.ச.குப்புசாமி

ஓருமுறை ஜெயகாந்தனின் காரில் அவருடைய வீட்டில் இருந்து புறப்பட்டோம். அண்ணா சாலையில் ஆனந்தவிகடன் அலுவலகத்துக்குள் கார் சென்றது. அப்போது துக்ளக் பத்திரிகையின் அலுவலகமும் அங்கே தான் இருந்தது.

துக்ளக் அலுவலகத்தில் ஆசிரியர் சோ அவர்களைச் சந்தித்தோம். ஜெயகாந்தனின் காரை துக்ளக் அலுவலகத்திலேயே விட்டுவிட்டு, தனது காரில் எங்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு புறப்பட்டார். சோ காரை ஓட்ட ஜெயகாந்தன் முன் இருக்கையில் அவருக்கு அருகே அமர்ந்துகொண்டார். நான் பின் இருக்கையில் இருந்தேன்.

வழியில் ஒரு சிக்னலில் கார் நின்ற போது, சாலையின் இருபுறமும் இருந்த மக்கள் சோ அவர்களை அடையாளம் கண்டுகொண்டு ஆரவாரத்துடன் கவ னிக்கலாயினர். “பிரபலங்களுக்கு நேரும் இத்தகைய இடையூறுகளை நிறைய சந்தித்திருக்கிறீர்களா? ’’ என்று சோவிடம் ஜெயகாந்தன் கேட்டார்.

அதற்கு அவர் “நிறைய…” என்று பதில் சொன்னார். எம்.ஆர். ராதா சிலநாட்களுக்கு முன்பு தான் சிறையில் இருந்து விடுதலையாகி இருந்தார். அவரைச் சந்திக்கத்தான் ஜெயகாந்தனும் சோவும் போகிறார்கள் என்பது எனக்கு அப்புறம்தான் புரிந்தது.

சினிமா சம்பந்தமாக மட்டும் அல் லாமல்; எம்.ஆர்.ராதாவின் ஆளு மையை வெளிப்படுத்தும் அவரது சொந்த வாழ்க்கையின் செய்திகள் சிலவற்றை நான் ஜெயகாந்தன் மூலம் அறிந்திருந்தேன். சந்தேகமே இல்லாமல் அவர் ஒரு அசாதாரணமான நபர்தான்!

திருச்சியில் ஒருமுறை ஜெயகாந்தன் பேச வேண்டிய ஒரு கூட்டம் பொது வெளியில் நடைபெற இயலாமல் போனபோது, எம்.ஆர்.ராதா தன்னுடைய வீட்டுக் காம்பவுண்டுக்கு உள்ளே இருந்த சில தென்னை மரங்களை வெட்டி அப்புறப்படுத்திவிட்டு, ஜெயகாந்தனின் கூட்டம் நடைபெறுவதற்கு சிறப்பு ஏற்பாடு களை செய்திருந்தார். எம்.ஆர்.ராதா வுக்கு ஜெயகாந்தனின் மீது எப்போதுமே அளவுகடந்த அன்பும் மரியாதையும் இருந்தது என்பதற்கு இதுவோர் உதா ரண சம்பவம்!

அப்பேர்ப்பட்ட ஒருவரைச் சந்திக்கப் போவது மகிழ்ச்சி யான விஷயம்தானே? அப் போது அடையாறு இந்திரா நகரில் எம்.ஆர்.ராதாவின் பங்களா இருந்தது. நாங்கள் சென்றதும் ராதா எங்களை உற்சாகமாக வரவேற்றார். அகலமான தோள்பட்டை உடைய ஒரு முண்டா பனியனும், அந்தக் காலத்தில் ‘பட்டா பட்டி’ என்று அழைக்கப்பட்ட பட்டை பட்டையான கோடுகளைக் கொண்ட ஒரு அரைக்கால் நிக்கரும் அணிந்திருந்தார் ராதா. நாங்கள் மூவரும் ஓர் அகலமான சோபாவில் அமர்ந்தோம். எதிரே ஒரு தனியான சோபாவில் ராதா, தன்னுடைய இரண்டு கால்களையும் சோபாவுக்கு மேலே தூக்கிக் குந்தவைத்த நிலையில், சுதந்திரமாக உட்கார்ந்து கொண்டார்..

“கீதா!” என்று அவர் குரல் கொடுக்க, ‘கிரேப் ஜூஸ்’கொண்டுவந்து கொடுத்து விட்டுச் சென்றார் ஒரு பெண்மணி. அவர்கள் மூவரும் இரண்டு மணி நேரம் என்னென்னவோ பேசினார்கள். சொல்லப்போனால் ராதாதான் அதிக மாகப் பேசினார்.

பேச்சுக்கு இடையில் “அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டீர்களாமே?” என்று ராதாவைப் பார்த்து ஜெயகாந்தன் கேட்டார்.

“அது ஒண்ணுமில்ல ஜெயகாந்தன்... ஜெயில்லே கழிவறைக்குக் கொண்டு போற பக்கெட்ல கறி வாங்கிட்டு வர்றதைப் பார்த்தேன். அதுலேர்ந்து கறி மேல ஆசையே போயிட்டு… விட்டுட்டேன்” என்று சாதாரணமாகச் சொன்னார் ராதா.

“காமராஜர் கையை நீங்க வலுப்படுத் தணும்னு வந்து சொன்னாங்க. அவ ரோட கையெல்லாம் எற்கெனவே ஸ்ட்ராங்காத்தான் இருக்குது. நான் போய் ஒண்ணும் பண்ண வேண்டியது இல்லேன்னு சொல்லிட்டேன்!” என்று ராதா சொன்னபோது, சோவும் ஜெய காந்தனும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

ராதா சிறையில் இருந்து விடு தலையானதும் அவரைச் சந்தித்து பேட்டி எடுத்து, எழுத்தாளர் விந்தன் ‘எம்.ஆர்.ராதாவின் சிறைச் சாலை சிந்தனைகள்’ என்று ஒரு நாளித ழில் தொடர் எழுதினார். பின்னர் அது நூலாக்கமும் பெற்றது. அந்த நூலில் இருக்கிற பெரும்பான்மையான தகவல் களை நாங்கள் அன்றைக்கு நேரடியாக ராதாவின் வாய்மொழியிலேயே கேட் டறிந்தோம். ராதா சொன்ன பல விஷயங்கள் அதிர்ச்சிகரமானதாகவும் நம்ப முடியாதவையாகவும் இருந்தன.

எம்.ஜி.ஆர் எம்.ஆர்.ராதா தொடர் பான வழக்கில் எம்.ஜி.ஆரை குறுக்கு விசாரணை செய்த, புகழ் பெற்ற மூத்த வழக்கறிஞர் என்.டி.வானமாமலை சாட்சிக் கூண்டில் வந்து நின்ற ஒருவரை நோக்கிக் கேட்ட கேள்விகளில் இரண்டு எனக்கு எப்போதும் மறக்க முடியாதது.

“உங்களுக்கு எழுத்தாளர் ஜெயகாந் தனை தெரியுமா? அவருடைய ’யாருக் காக அழுதான்’ கதையை நீங்கள் படித்திருக்கிறீர்களா?”

இந்த இரண்டு கேள்விகளும் எதற் காகக் கேட்கப்பட்டனவோ தெரியாது. ஒரு பிரபலமான வழக்கு விசாரணையில் கூட ஜெயகாந்தன் குறித்துக் கேள்வி கேட்கிற அளவுக்கு ஜெயகாந்தனும் அப் போது மிகவும் பிரபலமாகிவிட்டிருந்தார்.

ஜெயகாந்தனின் ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’ கதையை, ராதாவை வைத்து சினிமாவாக எடுப்பது என்கிற யோசனை ஒன்று எங்கேயோ பிறந்து, எப்படியோ பரவிக் கொண்டிருந்தது. அது, ஜெயகாந்தனின் வாசகர்களின் ஆவலை அப்போது அதிகரித்திருந்தது. அதற்கான அச்சாரங்களில் ஒன்றுதான் எம்.ஆர். ராதா, சோ, ஜெயகாந்தன் சந் திப்பு என்று கூட நான் கருதிக்கொண்டி ருந்தேன். ஆனால், அது நடைபெற வில்லை. இந்த மாதிரி விஷயங்களை, நாங்கள் ஜெயகாந்தனிடம் குடைந்து குடைந்து கேட்டுக் கொண்டிருப்ப தில்லை.

நான் ஜெயகாந்தனுடன் சென்று புகழ்பெற்ற பலரை சந்திக்கும் வாய்ப்பு களை நிறைய பெற்றுள்ளேன். அந்தச் சந்திப்புகளில் எம்.ஆர்.ராதாவுடனான சந்திப்பு மறக்க முடியாதது!

- தொடர்வோம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pisekuppusamy1943@gmail.com

முந்தைய அத்தியாயம்: >ஜெயகாந்தனோடு பல்லாண்டு 34- குருவிக்காரர்களின் லோகம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

வலைஞர் பக்கம்

28 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்