மாற்று தேடியந்திரங்களுக்கான பயணத்தை 'மெட்டா' தேடியந்திரங்களில் இருந்து துவங்குவதே பொருத்தமாக இருக்கும். ஏனெனில், தேடியந்திர வகைகளில் அவை முக்கியமானவை.
தேடியந்திரங்கள் பற்றி பேசும்போது பொது தேடியந்திரங்கள், டைரக்டரி வகையிலான வழிகாட்டிகள், இவை இரண்டும் கலந்த தேடியந்திரங்கள் மற்றும் மெட்டா தேடியந்திரங்கள் என்றே வகைப்படுத்தப்படுகின்றன.
கோட்பாடு நோக்கில் பார்த்தால் மெட்டா தேடியந்திரங்கள் தேடல் குழப்பத்துக்கு தீர்வாக உருவானவை. முதல் முறையாக இவை அறிமுகமானபோது, 'அடடா, தேடல் சிக்கலுக்கு தீர்வு பிறந்தாகிவிட்டது' என உற்சாகம் கொள்ள வைத்தன. ஆனால், அந்த அளவுக்கு அவை தேடல் உலகில் செல்வாக்கு பெறவில்லை. இருந்தாலும் மெட்டா தேடியந்திரங்களை புறக்கணிப்பதற்கில்லை.
பொதுவாக பார்த்தால், சாதாரண தேடியந்திரத்தை விட மெட்டா தேடியந்திரம் சிறந்தது என கருத வேண்டும். ஏனெனில், ஒரு தேடியந்திரத்தில் தேடுவதைவிட ஒரே நேரத்தில் பல தேடியந்திரங்களில் தேட முடிவது சிறந்ததாகத் தானே இருக்க வேண்டும்!
மெட்டா தேடியந்திரங்கள் இதைத்தான் செய்கின்றன. எந்த ஒரு தனி தேடியந்திரத்தையும் சார்ந்திராமல், இதுதான் சிறந்த தேடியந்திரம் என தீர்மானித்துக்கொள்ளாமல் பல முக்கிய தேடியந்திரங்களில் ஒரே நேரத்தில் அவை தேடிப்பார்க்க உதவுகின்றன.
இப்போது மெட்டா தேடியந்திரங்கள் பற்றி புரிந்திருக்குமே!
ஆம், ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட தேடியந்திரங்களில் தேடிப் பார்க்க வழி செய்யும் தேடியந்திரங்களே இவ்வாறு குறிப்பிடப்படுகின்றன.
உதாரணத்துக்கு, கூகுள் முன்னணி தேடியந்திரமாக இருக்கிறது. கூகுள் தவிர பிங், யாஹு என பல தேடியந்திரங்கள் இருக்கின்றன. இவற்றில் அவரவர் விருப்படி தங்களுக்கான தேடியந்திரத்தை தேர்வு செய்து கொள்ளலாம். பெரும்பாலானோர் எந்த கேள்வியும் இல்லாமல் கூகுளையே பயன்படுத்துகின்றனர் என்பது வேறு விஷயம். ஆனால், ஒவ்வொரு நேரத்திலும் ஒரு தேடியந்திரத்தை பயன்படுத்த வேண்டிய தேவையோ அல்லது குறிப்பிட்ட தேவைக்கு எந்த தேடியந்திரம் சிறந்தது என தேர்வு செய்யும் நிர்பந்தமோ இருக்கிறது என வைத்துக்கொள்ளுங்கள் அப்போது ஒருவரே பல தேடியந்திரங்களை பயன்படுத்த வேண்டியிருக்கும் அல்லவா? அது மட்டும் அல்ல, தேடியந்திரங்களை எடைபோட்டு சீர்தூக்கி பார்க்கும் நிலையும் ஏற்படலாம்.
தேடலின் ஆரம்ப காலத்தில் இப்படித்தான் இருந்தது. அதிலும் ஒவ்வொரு தேடியந்திரம் தரும் மாறுபட்டதாக இருந்தன. எனவே இவற்றில் ஏதாவது ஒன்றில் தேடுவதை விட ஏன் எல்லா தேடியந்திரங்களிலும் தேடினால் என்ன என்ற எண்ணம் இயல்பாக தோன்றியது. அதோடு ஒன்றை விட இன்னொன்றின் முடிவு மேம்பட்ட்தாக இருப்பதாக தோன்றியது. எந்தத் தலைப்பில் எந்த தேடியந்திரம் சிறந்த தேடலை தருகிறது என அறிந்துகொள்வது பெரும் சவாலாக இருந்தது.
அல்டாவிஸ்டா, யாஹூ, லைகோஸ் என பல தேடியந்திரங்கள் பிரபலமாக இருந்த ஆரம்ப காலத்தில், ஒரு தேடியந்திர தேடலுடன் திருப்தி அடைய வேண்டாம், அதே குறிச்சொல்லை இன்னும் சில தேடியந்திரங்களில் சமர்பித்து முடிவுகளை ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறப்படுவது சகஜமான ஆலோசனையாக இருந்தது. எனவே, இப்படி தனித்தனியாக ஒவ்வொரு தேடியந்திரமாக சமர்பிப்பதை விட ஒரே நேரத்தில் பலவற்றில் தேடக்கூடிய வாய்ப்பு சிறந்ததாக இருக்கும் என்ற எண்ணமும் இயல்பாக எழுந்ததையும் எளிதாக புரிந்து கொள்ளலாம்.
இந்த தேவையை உணர்ந்த புரோகிராமர்கள் மெட்டா தேடியந்திரங்களை உருவாக்கி உலாவ விட்டனர். ஒற்றை தேடியந்திரத்தில் தேடாமல் பல தேடியந்திரங்களில் தேடிப்பார்க்கும் வாய்ப்பு இருப்பது இன்னும் சிறப்பு அல்லவா?
மெட்டா தேடியந்திரங்கள் மற்ற பல தேடியந்திரங்களில் தேடி அவற்றின் முடிவுகளை தொகுத்து அளிக்கின்றன. அதாவது, தேடுபவர்கள் சார்பில் குறிப்பிட்ட குறிச்சொல்லை பல தேடியந்திரங்களில் சமர்பித்து, அவை தரும் முடிவுகளை முன்வைக்கின்றன. இவை எல்லாம் பின்னணியில் நடப்பவை. வழக்கமான தேடியந்திரத்தை பயன்படுத்துவது போலவே இவற்றிலும் தேவையான குறிச்சொல்லை டைப் செய்து தேடலில் ஈடுபடுமாறு கிளிக் செய்யலாம். ஆனால் மற்ற பொது தேடியந்திரம் போல தன்வசம் உள்ள இணையத்தின் தரவு பட்டியலில் இருந்து முடிவுகளை தேடித் தராமல் பல தேடியந்திர முடிவுகளை தொகுத்தும் பகுத்தும் அளிக்கின்றன. இந்த அம்சத்தையே தங்கள் பலமாக மெட்டா தேடியந்திரங்கள் முன்னிறுத்திக்கொள்கின்றன.
எதிர்பார்க்கக் கூடியது போலவே மெட்டா தேடியந்திரங்கள் எண்ணிகையிலும் அதிகமாகவே இருக்கின்றன. பழமையான டாக்பைலில் துவங்கி இக்ஸ்விக், கார்ட்டோ, கிளஸ்டி (யிப்பி) வரை பல மெட்டா தேடியந்திரங்கள் இருக்கின்றன. இவை தவிர முதல் கிராளர் தேடியந்திரமான வெப்கிராலரும் மெட்டா தேடியந்திரமாக மிஞ்சி நிற்கிறது. சர்ச்.காம், மெட்டாசர்ச்.காம் ஆகிய பெயரிலும் மெட்டா தேடியந்திரங்கள் இருக்கினறன
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு முக்கிய விஷயமும் இருக்கிறது. 1996-ம் ஆண்டு வாக்கிலேயே முதல் மெட்டா தேடியந்திரம் அறிமுகமாகி தொடந்து பல தேடியந்திரங்கள் உருவானாலும் கூகுள் செல்வாக்கு பெற்றபோது இவை பின்னுக்குத்தள்ளப்பட்டு விட்டன. தேடல் என்றால் கூகுள் என்பது இணையவாசிகள் பொதுபுத்தியில் பதிந்த பிறகு மற்ற தேடியந்திரங்களிலும் தேடிபார்க்கும் சேவைக்கு என்ன தேவை? ஆனால் இன்று கூகுளுக்கான மாற்று தேடியந்திரங்கள் பற்றி பெரிதாக பேசப்படும் நிலையில், எது சிறந்தது எனும் கேள்விக்கு போவதை விட, எல்லாவற்றிலும் தேடிப்பார்க்க வாய்ப்பிருப்பது சிறந்ததாகவே தோன்றுகிறது.
கூகுள் மட்டும் அல்ல, பிங், யாஹூ, ஆஸ்க் உள்ளிட்ட பத்து, இருபது தேடியந்திரங்களுக்கு மேல் தேடு முடிவுகளை சலித்து தருகிறோம் என்று மெட்டா தேடியந்திரங்கள் கம்பீரமாகவே சொல்லிக்கொள்கின்றன.
தேடல் தொடர்பான பரிந்துரைகளில் சிறந்த மெட்டா தேடியந்திரங்கள் என பெரிய பட்டிலையே பார்க்கலாம்.
தேடியந்திர தோழன்!
டாக்பைல் (http://www.dogpile.com/) முதல் முக்கிய மெட்டா தேடியந்திரம். ஆரோன் பிலின் (Aaron Flin) என்னும் அமெரிக்கர் உருவாக்கியது. ஆய்வு வழக்கறிஞரும் பகுதிநேர புரோகிரமருமான ஆரோன் 20 க்கும் மேற்பட்ட தேடியந்திரங்கள் மற்றும் வழிகாட்டிகளில் தேடிக்கூடிய வகையில் 1996-ல் இதை உருவாக்கினார்.
ஆரோன் பின்னர் இந்த தேடியந்திரத்தை கோ2நெட் எனும் நிறுவனத்துக்கு விற்றுவிட்டார். இந்நிறுவனம் பின்னர் இன்போ ஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டது. ஆனால் டாக்பைல் தேடியந்திரம் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
துவக்கத்தில் அல்டாவிஸ்டா, எக்சைட் மற்றும் லைகோஸ் உள்ளிட்ட தேடியந்திரங்களில் இருந்து தேடித்தந்தது. இப்போது கூகுள், யாஹு, பிங் மற்றும் ஆஸ்க் உள்ளிட்டவற்றில் இருந்து தேடல் முடிவுகளை உருவித்தருகிறது.
தேடியந்திரத்தில் தேடுவது போல டாக்பைலிலும் தேடுவது எளிது. கொஞ்சம் வண்ணமயமான முகப்பு பக்கத்தின் நடுவே தேடல் கட்டம் இருக்கிறது. அதில் தேவையான் குறிச்சொல்லை டைப் செய்தால் முடிவுகள் தோன்றுகிறது. கூகுள் உள்ளிட்ட முன்னணி தேடியந்திரங்களில் இருந்து பெறப்பட்ட சிறந்த முடிவுகளின் கலவையாக இந்த பட்டியல் அமைகிறது.
வலைப்பக்கங்கள் தவிர செய்திகள், படங்கள், வீடியோ மற்றும் ஷாப்பிங் விவரங்களை தேடலாம். பாதுகாப்பான தேடலுக்கான வடிகட்டல் வசதியும் இருக்கிறது. டாக்பைலில் மற்றொரு சுவாரஸ்யமான அம்சம் இணையவாசிகளின் சமீபத்திய தேடல் குறிச்சொற்கள் இடது பக்கத்தில் சுட்டிக்காட்டப்படுவது தான். பல நேரங்களில் சற்றைக்கு முன் என்ன தேடினோம் என்பதை பார்க்க இது உதவும். ஆனால் இவை நிரந்தமாக சேமிக்கப்படுவதில்லை என்றும் இந்த பதங்களுடன் அதை தேடிய இணையவாசியின் தனிப்பட்ட விவரங்கள் எதுவுமே சேமிக்கப்படுவதில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மெட்டா சர்ச் ஏன் சிறந்து என்பதற்கான விளக்க அறிக்கை ஒன்றும் இந்த தளத்தின் அறிமுக பகுதியில் பார்க்கலாம். டாக்பைல் தேடல் நுப்டங்கள் பற்றிய குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. முகப்பு பக்கத்தில் பிரபலமான தேடல்கள் மற்றும் உடனடி தேடலுக்கான பதங்களும் வழிகாட்டுகின்றன.
டாக்பைலை பயன்படுத்தும்போதே அதன் இலச்சினையான ஆர்ஃபியையும் கவனிக்காமல் இருக்க முடியாது. ஆர்ஃபி அழகான சுட்டி நாய். தேடல் கட்டளையிட்டால் அதுதான் போய் முடிவுகளை அள்ளிக்கொண்டு வருவதாக உருவகப்படுத்தாக கொள்ளலாம். அதற்கேற்ப தேடல் கட்டத்தில் , போய் எடுத்து வா ( Go Fetch!) எனும் கட்டளை பதமே இடம்பெற்றுள்ளது.
டாக்பைலை பார்க்கும் போது துடிப்பான தேடியந்திரம் போலவே தோற்றம் தந்து வரவேற்கிறது. வெப்கிராலர் (webcrawler.com) மற்றும் ஜூ (zoo.com) ஆகிய மெட்டா தேடியந்திரங்களும் இன்போஸ்பேஸ் நிறுவனம் வசம்தான் இருக்கின்றன.
தனியுரிமை காவலன்!
இக்ஸ்குவிக் ( >https://ixquick.com) இன்னொரு முக்கிய மெட்டா தேடியந்திரம். 1998 முதல் இருக்கும் இக்ஸ்குவிக், இப்போது இணையம் முழுவதும் தனியுரிமை பெரிய பிரச்சனையாக பேசப்படும் நிலையில் ,உலகின் தீவிரமான தனியுரிமை தேடியந்திரம் என்று பெருமைபட்டுக்கொள்கிறது. அதற்கு காரணம், கூகுள் உள்ளிட்ட மற்ற தேடியந்திரங்கள் போல இது இணையவாசிகளின் தேடல் குறித்த விவரங்களை பின் தொடர்ந்து சேகரிப்பதில்லை என்பதுதான். ஐபி முகவரியை குறித்து வைப்பதில்லை; அடையாளம் குக்கிகள் கிடையாது. தனிப்பட்ட விவரங்களை யாருடனும் பகிர்வதில்லை ஆகிய அம்சங்களையும் விஷேசமாக குறிப்பிடுகிறது.
இக்ஸ்குவிக்கின் முகப்பு பக்கம் எளிமையாகவே இருக்கிறது. இதன் மையப்பகுதியில் உள்ள தேடல் கட்டத்தில் குறிச்சொல்லை சமர்பித்தால் முடிவுகளை பட்டியலிட்டு காட்டுகிறது. முடிவுகள் வழக்கமான பட்டியலில் தோன்றினாலும் ஒவ்வொரு முடிவு அருகிலும் நட்சத்திர குறியை பார்க்கலாம். அப்படியே அந்த முடிவு எந்த குறிப்பிட்ட தேடியந்திரத்தில் இருந்து பெறப்பட்டது என்ற விவரத்தையும் மவுஸ் கர்சரை அருகே கொண்டு செல்லும் போது பார்க்கலாம். நட்சத்திர குறியீடு என்பது குறிப்பிட்ட அந்த முடிவு எத்தனை தேடியந்திரங்களில் முதல் பத்து இடங்களில் காணப்படுகிறது எனும் விவரத்தை குறிக்கிறது. முடிவுகளை சீர் தூக்கிப்பார்த்து எடைபோடுவதற்கான வழி இது.
எல்லா முடிவுகளுக்கு கீழே முற்றிலும் தனியுரிமையுடன் அதை பார்வையிடும் வசதி மற்றும் தேடல் சொல் அந்த பக்கத்தில் எங்கெல்லாம் இருக்கின்றன என்பதையும் பார்க்கலாம். தொடர்புடைய பதங்களின் பரிந்துரையும் இடம்பெறுவதை பார்க்கலாம். முடிவுகளை கடந்த 24 மணி நேரத்திலானவை, ஒரு வார காலத்திலானவை என்றெல்லாம் வடிகட்டிக்கொள்ளலாம். வலை, புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆகிய வகைகளிலும் தேடலாம். மேம்பட்ட தேடல் வசதியும் இருக்கிறது.
குறிப்பிட்ட வார்த்தைகள் மட்டும், குறிப்பிட்ட வார்த்தை இல்லாமல் என பலவித வடிகட்டல்களுடன் தேடலை மேமப்டுத்திக்கொள்ளலாம்.
டேவிட் பாட்னிக் (David Bodnick) எனும் அமெரிக்கரால் துவக்கப்பட்ட இந்த தேடியந்திரம் பின்னர் சர்ப் போர்ட் ஹோர்டிங் (Surfboard Holding B.V,) எனும் நெதர்லாந்து நிறுவனத்தால் விலைக்கு வாங்கப்பட்ட்து. அமெரிக்காவில் ஸ்டார்ட்பேஜ் எனும் பெயரில் இது செயல்பட்டு வருகிறது.
அழகான மெட்டா தேடியந்திரம்
பாலிமெட்டா ( >http://www.polymeta.com/) பரவலாக அறியப்படாமல் இருந்தாலும் மெட்டா தேடியந்திரங்களில் அழகானது. முடிவுகளை பல தேடியந்திரங்களில் இருந்து தொகுத்து அளிப்பதுடன் நின்றுவிடாலம் அவற்றை பொருத்தமான அளவிற்கு ஏற்ப வரிசைப்படுத்தி அளிப்பதாகவும் சொல்கிறது. முடிவுகளை தொகுத்தும் அளிக்கிறது. கூகுள், பிங், யாஹு, ஆஸ்க் ,பிளெக்கோ, எக்ஸாலீட் உள்ளிட்ட தேடியந்திரங்களில் இருந்து தேடுகிறது. இவற்றில் எந்த ஒரு தேடியந்திரத்தை மட்டுமே தேர்வு செய்தும் தேட்லாம்.முடிவுகளுக்குள்ளும் கூட தேட முடியும் என்பது விஷேசமானது.
பட்டியலிடப்படும் போது மத்தியில் முடிவுகள் இடம்பெறுகின்றன. இடது பக்கத்தில் தொடர்புடைய தலைப்பு வகைகள் மற்றும் தலைப்புக்கான வரைப்ட அறிமுகம் இடம்பெறுகிறது. வலது பக்கத்தில் வரிசையாக செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வலைப்பதுவு முடிவுகளை பார்க்கலாம். ஒவ்வொரு முடிவிலும் அந்த இணையபக்கத்திற்கான பேஸ்புக் எண்ணிக்கையை பார்க்கலாம். முடிவுகளின் முன்னோட்ட வசதியும் இருக்கிறது. ஒவ்வொரு தேடியந்திரத்திலும் குறிச்சொல்லுக்கான முடிவுகள் எண்ணிக்கை விவரங்களையும் தேர்வு செய்து பார்க்கலாம். வெப்லிப் (WebLib Search Solutions) நிறுவனத்திற்கு சொந்தமானது.
இன்னும் பல மெட்டா தேடியந்திரங்கள் இருக்கவே செய்கின்றன. ஆனால் அவற்றில் தனித்துவம் மிக்கவை என்று சொல்லக்கூடியவறை சொற்பமே.
எல்லாம் சரி, மெட்டா தேடியந்திரங்கள் சிறந்தவையா? அவற்றால் என்ன பயன்?
பல தேடியந்திரங்களில் தேட முடிவதால் வழக்கமான தேடியந்திரத்தை விட அவை மேம்பட்டவையாக இருக்க வேண்டும் என கருதப்படுகின்றன. ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை என்று கருதுபவர்களும் இருக்கின்றனர். எப்படியும் மெட்டா தேடியந்திரங்கள் சொந்தமாக தேடவில்லை. அவை மற்ற தேடியந்திரங்களில் தானே தேடித்தருகின்றன. தவிர இணையத்தில் உள்ள கோடிக்கணக்கான பக்கங்களை எல்லாம் திரட்டி வைத்துக்கொள்வது தேடலின் ஒரு பாதி தான். அந்த தொகுப்பில் இருந்து தேடப்படும் குறிச்சொல்லுக்கு பொருத்தமான முடிவுகளை பொறுக்கி எடுத்து தருவது தான் இன்னும் முக்கியமானது.
மெட்டா தேடியந்திரங்களை பொறுத்தவரை பல தேடியந்திரங்களில் இருந்து முடிவுகளை திரட்டி, ஒப்பிட்டுப்பார்த்து, ஒன்றாக இருப்பவற்றை நீக்கி கலைவையான முடிவுகளை சமர்பிக்கின்றன.ஒற்றை தேடியந்திரத்தை சார்ந்திருக்காமல் , இணையத்தில் உள்ள சிறந்த தேடியந்திரங்களின் தேடல் பலனை எல்லாம் ஒருங்கே கொடுக்க முயல்வதால் மெட்டா தேடியந்திரங்கள் கவனிக்கத்தக்கவையாகவே இருக்கின்றன.
மெட்டா தேடியந்திர வரலாறு தொடர்பாக சில தகவல்கள்:
அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழக ஆய்வாளர் டேனியல் ட்ரெய்லிங்கர் (Daniel Dreilinger ) தான் இதற்கான முயற்சியில் ஈடுபட்டார். 20 வகையான தேடியந்திரங்கள் மற்றும் வழிகாட்டிகளில் ஒரே நேரத்தில் தேடக்கூடிய தேடல் வழியான சர்ச்சவ்வியை (SearchSavvy) அவர் உருவாக்கினார். எனினும் இது எளிமையான தேடலுக்கே ஏற்றதாக இருந்தது. இதனையடுத்து வாஷிங்டன் பலகலைக்கழகத்தின் எரிக் செல்பர்க் (Eric Selberg) இதன் மேம்பட்ட வடிவமாக மெட்டாகிராலர் தேடியந்திரத்தை அறிமுகம் செய்தார். இது ஆறு தேடியந்திரங்களில் மட்டுமே தேடினாலும் முடிவுகள் மேலும் துல்லியமாக இருந்தன. மெட்டாகிராலர் பின்னர் இன்போஸ்பேஸ் நிறுவனத்திடம் சென்றுவிட்டது.
மெட்டா தேடியந்திரங்களில் மம்மா (Mamma ) என்று ஒரு தேடியந்திரமும் இருக்கிறது. தேடியந்திரங்களில் அம்மா என வர்ணிக்கப்படும் இந்த தேடியந்திரம் பற்றி பல மதிப்பு மிக்க தொழில்நுடப் தளங்களில் நல்ல விமர்சனங்கள் இடம்பெற்றிருந்தாலும் ,இது பற்றி தகவல் தேடும் போது, இந்த பெயரில் செயல்படும் தேடல் சேவை, இணையவாசிகளின் தேடலை கடத்திச்செல்லும் மால்வேராக இருப்பதாகவும் பல இடங்களில் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த எச்சரிக்கையையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
தேடியந்திர பயணம் தொடரும்...
சைபர்சிம்மன், இணைய வல்லுநர், தொடர்புக்குenarasimhan@gmail.com
| முந்தைய அத்தியாயம்:>ஆ'வலை' வீசுவோம் 4- கூகுளாண்டவரும் 3 சிறு தெய்வங்களும் |
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
14 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago