இன்று அன்று | பிர்ஸா முண்டா எனும் போராளி: 1900 ஜூன் 9

By சரித்திரன்

25 ஆண்டுகளே வாழ்ந்த ஒரு மனிதர், நாட்டார் வழக்காற்றியலில் மட்டுமல்லாமல், வரலாற்றுரீதியாகவும் ஒரு நாயகனாகப் போற்றப்படுவது சாதாரண விஷயமல்ல. அந்தப் பெருமைக்குரிய மனிதர் பிர்ஸா முண்டா. பழங்குடி இன விடுதலைக்காகவும், ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகவும் போராடிய அவர் ‘தர்த்தி அபா’ (மண்ணின் மைந்தர்) என்று அழைக்கப்படுகிறார்.

தற்போதைய பிஹார் மற்றும் ஜார்க்கண்ட் பகுதிகள் ஒன்றிணைந்திருந்த பகுதியைச் சேர்ந்த முண்டா பழங்குடியினக் குடும்பத்தில் 1875 நவம்பர் 15-ல் பிறந்தவர். உலிஹாத்து கிராமத்தில் பிறந்தவர் என்று சொல்லப்பட்டாலும் அவர் பிறந்த இடம் குறித்த சர்ச்சை இன்றும் நீடிக்கிறது. அவரது தாயின் சொந்த ஊரான சல்காட்டில்தான் அவர் பிறந்தார் என்று சொல்பவர்களும் உண்டு. ஆனால், அவரது குறுகிய கால வாழ்வு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்பதுகுறித்து யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. சல்காட் கிராமத்தின் புழுதி மண்ணில் விளையாடியவர்; துடிப்பும் பொலிவும் நிறைந்த இளைஞராக வளர்ந்தார் என்று அவரைப் பற்றிய நாட்டுப்புறப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. தனது தாய்மாமாவின் கிராமமான அயுபத்துவில் கல்வி பயின்றார். அந்தக் கல்விதான், பழங்குடி சமூகத்தினர் மீதான அடக்குமுறையை எதிர்த்துப் போராடும் நம்பிக்கையையும் அவருக்குத் தந்தது.

கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய அவர், முண்டா சமூகத்தில் நிலவிய பிற்போக்குத்தனங்களையும் சாடத் தவறவில்லை. ஆடு மேய்க்கச் சென்ற இடத்திலும் புத்தகம் வாசித்துக்கொண்டிருந்ததால், ஆடுகள் அருகில் இருந்த வயல்களில் இறங்கிப் பசியைத் தீர்த்துக்கொண்டன. இதனால் ஆத்திரமடைந்த நிலத்தின் சொந்தக்காரர் அவரைக் கடுமையாகத் தாக்கிய சம்பவமும் நடந்தது. இதெல்லாம் அவரது மனதைக் கடுமையாகப் பாதித்தது. கிறிஸ்தவ மதத்தின் குறைபாடுகளையும் எதிர்த்தார். எல்லாவற்றுக்கும் மேலாக, ஏற்கெனவே வறுமையில் வாடிய பழங்குடி மக்களைச் சுரண்டும் வகையில் நடந்துகொண்ட நிலச்சுவான்தாரர்களை எதிர்த்து நின்றார். பல ஆண்டுகாலமாகப் பழங்குடியினரிடம் இருந்த நிலங்கள், ஆங்கிலேய அரசின் உதவியுடன் நிலச்சுவான்தாரர்களால் பிடுங்கப்பட்டபோது, போராட்டத்தில் குதித்தார். அவரது தலைமையின் கீழ் பழங்குடியினர் ஒன்றிணைந்து போராடினர். எனினும், 1900 பிப்ரவரி 3-ல் எதிரிகளின் சூழ்ச்சி வலையில் சிக்கி ஆங்கிலேயர்களால் கைதுசெய்யப்பட்டார். ஜூன் 9-ல் மர்மமான முறையில் உயிரிழந்தார். காலரா பாதிப்பால் இறந்தார் என்று ஆங்கிலேய அரசு கூசாமல் பொய் சொன்னது. அவரது போராட்ட வாழ்க்கையைச் சரித்திரம் பதிவுசெய்துகொண்டது. அவரது பெயர் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியின் விமான நிலையத்துக்குச் சூட்டப்பட்டிருக்கிறது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் அவரது படம் வைக்கப்பட்டிருக்கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

30 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்