கருமுத்து தியாகராஜன் செட்டியார் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

கலைத் தந்தை என்று போற்றப்பட்டவரும், கல்வியாளருமான கருமுத்து தியாகராஜன் செட்டியார் (Karumuthu Thiagarajan Chettiar) பிறந்த தினம் இன்று (ஜூன் 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l சிவகங்கை மாவட்டத்தில் (1893) பிறந்தவர். குடும்பம் இலங்கையில் துணி வணிகத்தில் ஈடுபட்டிருந்தது. கொழும்பு புனித தாமஸ் கல்லூரியில் கல்வி கற்றார். இலங்கையில் தமிழர்களுக்கு அடையாள சூடு போடும் வழக்கத்தை தடுத்து நிறுத்தக் காரணமாக இருந்தவர். இலங்கை மலையகத் தோட்டத் தொழிலாளர் நலனுக்காக ஒரு பத்திரிகை நடத்தினார்.

l இந்தியா திரும்பியவர், காங்கிரஸில் 1917-ல் சேர்ந்து தொழிலாளர் தலைவராக வும், மாகாண காங்கிரஸ் கமிட்டி செயலாளராகவும் இருந்தார். மதுரையில் 1925-ல் மீனாட்சி மில் நிறுவனத்தைத் தொடங்கி, நூற்பாலை, நெசவு ஆலையையும் அமைத்தார். தொடர்ந்து பல ஊர்களில் நூற்பு ஆலைகளை நிறுவினார்.

l மீனாட்சி ஆலையின் ஆரம்பகால இயக்குநர்களாக தேசியத் தலைவர்கள் பலரும் இருந்துள்ளனர். மகாத்மா காந்தி, நேதாஜி உள்ளிட்ட தலைவர்கள் மதுரைக்கு வந்தபோது இவரது விருந்தினர்களாகத் தங்கினார்கள் என்று கூறப்படுகிறது.

l இளம் வயதிலேயே புத்தகம் படிப்பதிலும் தமிழ் இலக்கண, இலக்கியங்களிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தொல்காப்பியத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு உட்பட பல நூல்கள் வெளிவர அதிகம் பொருளுதவி செய்துள்ளார். சென்னை தமிழிசை சங்கம், மதுரை திருவள்ளுவர் கழகம், காரைக்குடி கம்பன் கழகம், உ.வே.சாமிநாத ஐயர் நிலையம் போன்ற ஏராளமான அமைப்புகளுக்கு நன்கொடை வழங்கியுள்ளார்.

l நலிந்த ஆலைகளை ஏற்று தொழில்நுட்பத்தை மேம்படுத்தி, வெற்றிகரமாக நடத்தியவர். இந்தியாவின் மாபெரும் தொழில் மேதைகளில் ஒருவராகத் திகழ்ந்தார். தொழிலாளர்கள், இதர ஆலை முதலாளிகள் மத்தியில் பெருமதிப்பும் மரியாதையும் பெற்றவர். ஆலைகளின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர்.

l ஏராளமான கல்லூரிகள், பள்ளிகள் தொடங்கி கல்விப் பணியாற்றினார். ‘தமிழ்நாடு’ என்ற நாளிதழை பல ஆண்டுகள் நடத்தினார். இவர் கட்டிடக் கலைஞரும்கூட. இசை, ஓவியம், குதிரைச் சவாரியிலும் ஆர்வம் உள்ளவர். தினமும் திருவாசகம் ஓதும் வழக்கம் கொண்டவர்.

l மத்திய அரசின் கட்டாய இந்திக் கல்வி திட்டத்தை எதிர்த்தார். இதனால், காங்கிரஸில் இருந்து விலகினார். இந்தி எதிர்ப்பு இயக்கம் நடத்திய சோமசுந்தர பாரதியார், பெரியாருக்கு உறுதுணையாக இருந்தார்.

l ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றபோதிலும் ஆங்கிலம் கலவாது தமிழில் பேசி, எழுதுவார். ராமநாதபுரம் சேதுபதி, பண்டித மணி, பேராசிரியர் ரத்தின சபாபதி ஆகியோரின் நூல் நிலையங்களை விலைக்கு வாங்கி மேம்படுத்தினார்.

l தன் மனைவியை தமிழில் அரிச்சுவடியில் இருந்து கற்க வைத்து, ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுவது, சொற்பொழிவுகள் ஆற்றும் அளவுக்கு புலமைபெறச் செய்தார்.

l 14 ஜவுளி ஆலைகள், 19 கல்வி நிலையங்கள், மதுரை வங்கி, மதுரை காப்பீடு நிறுவனம் ஆகியவற்றை நிறுவியவர். கலைத்தந்தை, வள்ளல், தொழில் மேதை என்றெல்லாம் போற்றப்பட்ட கருமுத்து தியாகராஜன் செட்டியார் 81 வயதில் (1974) மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்