விடுதலைப் போராட்ட வீரரும் ‘சிலம்புச் செல்வர்’ என்று போற்றப்பட்ட தமிழ் அறிஞருமான ம.பொ.சிவஞானம் (Ma.Po.Sivagnanam) பிறந்த தினம் இன்று (ஜூன் 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள சால்வன்குப்பம் என்ற இடத்தில் (1906) பிறந்தார். இயற்பெயர் ஞானப்பிரகாசம். தாய் சிவகாமி மீதான பாசத்தால் ‘சிவஞானம்’ என்று பெயரை மாற்றிக்கொண்டார். தந்தை மயிலாப்பூர் பொன்னுசாமி. மிகவும் ஏழ்மையான குடும்பம். 3-ம் வகுப்போடு இவரது கல்வி நின்றது.
l தாய் சொன்ன புராணக் கதைகள், நீதிக் கதைகள்தான் இந்த ஏழைச் சிறுவனை மாபெரும் சிந்தனையாளராக மாற்றின. சிறு வயதில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டார். அச்சு கோர்க்கும் பணியையும் வெகு காலம் செய்தார்.
l காங்கிரஸில் இணைந்தார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றவர், சிறையில் பல இன்னல்களுக்கு ஆளானார். தமிழரசுக் கழகம் என்ற இயக்கத்தை 1946-ல் தொடங்கினார். சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தார்.
l பாரதியின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டார். சொந்த முயற்சியால் படித்து தமிழ் இலக்கண, இலக்கியங்களில் தேர்ச்சி பெற்றார். ஆங்கில அறிவையும் வளர்த்துக்கொண்டார். ‘வள்ளலாரும் பாரதியும்’, ‘எங்கள் கவி பாரதி’ என்பது உட்பட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். ‘எனது போராட்டம்’ என்ற சுயசரிதையையும் எழுதினார்.
l சிறையில் இருந்தபோது சிலப்பதிகாரம் கற்றார். அதன் மீது ஆழ்ந்த நேசம் கொண்டார். தமிழகத்தில் அதன் புகழைப் பரப்பியதில் இவருக்கு முக்கியப் பங்கு உண்டு. ‘சிலப்பதிகாரமும் தமிழரும்’, ‘கண்ணகி வழிபாடு’ என்பது உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். சிலப்பதிகாரத்தில் இவரது புலமையைப் பாராட்டி தமிழ் அறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை இவருக்கு ‘சிலம்புச் செல்வர்’ என்ற பட்டத்தை சூட்டினார்.
l வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சிதம்பரனாரின் தியாகங்களை உலகறியச் செய்தவர். அவர்களது வாழ்க்கை வரலாற்றை விளக்கி நூல்கள் எழுதியுள்ளார். அவற்றின் அடிப்படையில் திரைப்படங்களும் வெளிவந்தன.
l காங்கிரஸில் இருந்து 1954-ல் விலகினார். ‘தமிழன் குரல்’ என்ற இதழை நடத்தினார். இவர் எழுதிய ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயரை ‘தமிழ்நாடு’ என்று மாற்றியதில் முக்கியப் பங்காற்றியவர்.
l மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, ஆந்திராவுடன் சென்னையை இணைக்கும் முயற்சியை எதிர்த்துப் போராடினார். திருப்பதியையும் தமிழகத்துடன் இணைக்கப் போராடினார். அதற்கு முழு வெற்றி கிடைக்காதபோதிலும், திருத்தணி தமிழக எல்லைக்குள் வந்தது. தமிழகத்துடன் குமரி, செங்கோட்டை இணைவதற்கும் காரணமாக இருந்தவர்.
l சென்னை மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின. பத்ம விருது பெற்றவர். தமிழக மேலவைத் தலைவராக இருந்தார். சென்னை, மதுரை, அண்ணாமலைப் பல்கலைக்கழகங்களில் செனட் சபை உறுப்பினர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தார்.
l ‘உடல் மண்ணுக்கு; உயிர் தமிழுக்கு’ என்று முழங்கிய ம.பொ.சி., 89 வயதில் (1995) மறைந்தார். 2006-ல் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கியது.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago