முகம்மது காசிம் சித்தி லெப்பை 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

நவீன உரைநடை இலக்கியத்தின் முன்னோடிப் படைப்பாளிகளில் முக்கியமானவரும் இலங்கை முஸ்லீம்களுக்கு கல்வி விழிப் புணர்வு ஏற்படுத்தியவருமான முகம்மது காசிம் சித்தி லெப்பை (Muhammad Cassim Siddi Lebbe) பிறந்த தினம் இன்று (ஜூன் 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள்பத்து:

l இலங்கை, கண்டியில் பிறந்தவர் (1838). பிரபல அரேபிய வணிக சமூகத்தின் வழித்தோன்றல். இவரது தந்தை அந்நாட்டின் முதல் முஸ்லீம் வழக்கறிஞர். திண்ணைப் பள்ளிக் கூடத்தில் கல்வி பயின்ற காலகட்டத்தில் மதக் கல்வி பெற்றதோடு, தமிழ் மொழியிலும் சிறப்புத் தேர்ச்சி பெற்றார்.

l ஆங்கில மொழியையும் கற்றுத் தேர்ந்தார். அரபு, தமிழ், ஆங்கில மொழிகளில் நிபுணத்துவம் பெற்றிருந்த இவர், தந்தையைப் போலவே சட்டமும் பயின்றார். கண்டி மாவட்ட நீதிமன்றத்தில் 1862-ல் வழக்கறிஞராக நியமனம் பெற்ற இவர், 1864-ல் உயர் நீதிமன்ற வழக்கறிஞராக உயர்ந்தார். கண்டி மாநகர சபை நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் கடமையாற்றிய இவர், சிறிது காலம் மாநகர உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

l இவர் விரும்பியிருந்தால், கண்டியின் மிகப் பெரிய செல்வந்தர் என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்க முடியும். தன் சமுதாயத்தின் மீதான பற்றினால், சட்டத் தொழிலையும், கண்டி மாநகர சபை உறுப்பினர் பதவியையும் துறந்தார்.

l தனது செல்வத்தின் பெரும்பகுதியை தன் லட்சியங்களுக்காவும் சமூக முன்னேற்றத்துக்காகவும் செலவிட்டார். இஸ்லாமியர்கள் கல்வியில் முன்னேற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த, 1882-ல் முஸ்லீம் நேசன் என்ற பெயரில் அரபு-தமிழ் வார இதழைத் தொடங்கினார்.

l இதன் மூலம் முதல் முஸ்லீம் பத்திரிகையாளர் என்ற பெருமை பெற்றார். தத்துவம், அறிவியல் சம்பந்தமான கட்டுரைகள், தேசிய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த செய்திகள், வியாபாரம், விவசாயம், வாணிபம், குடியுரிமை முதலானவை குறித்த அறிக்கைகள் இதில் இடம் பெற்றன.

l பாடசாலைகளை நிறுவியும், பாடநூல்களை எழுதியும் இலங்கை முஸ்லீம்களிடையே குறிப்பாக, கல்வித் துறையில் விழிப்புணர்வை ஏற்படுத்த அரும்பாடுபட்டவர். கண்டியிலும் குருனாகலையிலும் இவர் தொடங்கிய பாடசாலைகள் நவீன கல்வியின் ஆரம்பக் கல்விக்கூடங்களாக அமைந்தன.

l பெண்கல்விக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர். இவரது கல்விக் கூடங்களில் இஸ்லாமியப் பெண்களும் கல்வி பயின்றனர். பெண் தலைமை ஆசிரியர்களும் பதவி வகித்தனர். 1884-ல் கொழும்புவில் இவர் தொடங்கிய முதலாவது ஆங்கில முகமதிய பாடசாலைதான் பின்னாளில் கொழும்பு சாஹிரா கல்லூரியாக தழைத்தோங்கியது.

l நவீன உரைநடை இலக்கியத்தில் முன்னோடிப் படைப்பாளிகளில் முக்கியமானவராக கருதப்பட்டார். 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய அசன்பே சரித்திரம் என்ற நூல் தமிழில் வெளிவந்த இரண்டாவது புதினம் (இதுவே முதல் புதினம் என்றும் கூறப்படுகிறது), ஈழத்தில் வெளிவந்த முதல் தமிழ்ப் புதினமும் இதுதான்.

l இலங்கை சட்ட நிர்ணய சபையில் முஸ்லீம்களுக்கு பிரதிநிதித்துவம் இருத்தல் அவசியம் என்பதை இடையறாது வலியுறுத்தி வந்தார். இஸ்லாமிய சமுதாயத்தினரின் கல்விக்கு உயிர்கொடுத்து, அவர்களை அரசியல், சமூக, பொருளாதார, கலாசார துறைகளிலும் முன்னேறச் செய்தார்.

l சமூக சீர்திருத்தவாதி, பதிப்பாளர், தொலைநோக்கு சிற்பி, மறுமலர்ச்சித் தந்தை என்றெல்லாம் போற்றப்படுபவரும் முஸ்லீம் சமுதாயத் தலைவருமான மு.கா. சித்தி லெப்பை 1898-ம் ஆண்டில் 60-வது வயதில் காலமானார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்