இந்த வருஷம் காணும் பொங்கல் ஒரு சனிக்கிழமை வந்தது.
முன்பு ஒரு காணும் பொங்க லன்று திருவண்ணாமலை சென்று, ஜெய காந்தனையும் இளையராஜாவையும் சந்தித்தது கவனம் வந்தது. நாண்பர்கள் கோவை மணி, பழனி, டாக்டர் பூங்குன்றன் ஆகியோரோடு சேர்ந்து சென்று ஜெயகாந்தனைக் கண்டேன்.
நன்றாக இருப்பதாகத் தெரிந்தார். நினைவுகள் எல்லாம் சரியாக இருந் தன. ‘‘நீங்களும் இளையராஜாவும் திருவண்ணாமலை வந்தீர்களே, அது நடந்து எத்தனை வருஷம் இருக்கும் ஜே.கே?’’ என்று கேட்டேன்.
கொஞ்சநேரம் யோசித்தவர், ‘‘ஒரு பத்தாண்டுகளுக்கு உள்ளாகத்தான் இருக்கும்!’’ என்றார். அந்த சந்திப் புப் பற்றிய கட்டுரையை நானும், ‘கடந்த பத்தாண்டுகளுக்கு உள்ளாகத்தான் இருக்கும்!’ என்றுதான் ஆரம்பித்திருந் தேன்.
ஜெயகாந்தனின் வீடு அன்று கல கலப்பாகவே இருந்தது. டாக்டர் பூங் குன்றன் சமீபத்தில்தான் அமெரிக்காவில் இருந்து திரும்பியிருந்தார். ‘‘ஸ்பெஷல் ரம் கொண்டாந்திருக்கேன் ஜே.கே. உங்களுக்குக் கொண்டுவந்து தரட் டுமா?’’ என்றார். ஜெயகாந்தன் சிரித்த படியே வேண்டாமென்று சொல்லிவிட்டார்.
கொஞ்சநேரத்துக்கெல்லாம் நண்பர் நடராஜனும் அங்கு வந்து சேர்ந்தார். கோபண்ணா நடத்திய நேருவின் 125-வது பிறந்த நாள் விழாவைப் பற்றிப் பேச்சு வந்தது. ‘‘மத்தவங்க மறந்தாலும் இந்த மாதிரி காரியங்களை நாம்தான் செய்யணும்’’ என்றார் ஜே.கே.
நண்பர்கள் நடராஜனும் ஃப்ரெண்ட் லைன் துரைராஜும் ஆதியில் கம்யூ னிஸ்ட் கட்சியில் இருந்து புறப்பட்டு, நாளடைவில் ஜெயகாந்தனின் அரசியல் நிலைப்பாடுகளே சரி என்று ஏற்றுக் கொண்டு அவர் பின்னே வந்தவர்கள். ஆனாலும் அந்தத் தத்துவத்தின் மீது மாளாத காதல் கொண்டவர்கள்.
அமெரிக்காவில் இருந்து என் மகன் சிவகுமார் நேருவின் பெயரில் ஓரு இணையதளம் ஆரம்பித்திருப்பதாக வும், அதற்கு ஜெயகாந்தன் நேருவைப் பற்றி எழுதியிருப்பவை வேண்டும் என்றும் என்னைக் கேட்டிருந்தான். இதை நான் ஜெயகாந்தனிடம் சொன்னேன். ‘‘கல்பனா இதழில் எழுதியிருக்கிறேன் பார்…’’ என்றார் அவர். அவரது ஞாபகம் இவ்வளவு பளிச் என்றிருப்பது குறித்து வியந்தோம்.
இரண்டு மணி நேரத்துக்கும் அதிக மாக ஜெயகாந்தனுடன் பேசிக்கொண்டி ருந்துவிட்டு நாங்கள் புத்தகக் காட்சிக் குப் புறப்பட்டோம்.
ஜெயகாந்தன் வீட்டினர் அன்று மிகவும் மகிழ்ந்து, ‘‘தினந்தோறும் இப்படி இருந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும்!’’ என்றார்கள்.
ஆனால், மறுநாள் ஞாயிற் றுக்கிழமை மதியம் நாங்கள் மறுபடியும் போய் அவரைப் பார்த்தபோது, அவர் மிகவும் சோர்வாகத் தெரிந்தார். சரி யாகச் சாப்பிடவில்லை என்றும் சொன்னார்கள். எவ்வளவு நிமிர்த்தி நிமிர்த்தி உட்கார வைத்தாலும் இடதுபுறமாகத் துவண்டு துவண்டு சாயலானார்.
எல்லாருமாகப் பேசித் தீர்மானித்து வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவ மனையில் திங்கட்கிழமை காலையில் ஜெயகாந்தனைச் சேர்த்தோம்.
அவருக்கு சோடியம் குறைந்தும், ரத்த அழுத்தம் உயர்ந்தும் போயிருப்பதாகச் சொல்லி, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து, திங்கள் செவ்வாய் இரண்டு நாட்களில் அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள். புதன்கிழமை சாதாரண வார்டுக்கு மாற்றினார்கள். அது ஒரு தனியறை.
ஆரம்பத்தில் உறங்குவது போல் இருந்த ஜெயகாந்தன், கொஞ்ச நேரம் கழித்துக் கண் விழித்து, அறையை ஒரு நோட்டம்விட்டார். என்னையும் பார்த்தார்.
‘‘அந்தக் கதவைத் திறந்துவிடு!’’ என்றார்.
நான் எழுந்து, அறையின் கதவைக் கொஞ்சமாகத் திறந்து வைத்தேன்.
‘‘நல்லா பரக்கத் திற!’’ என்றார். பரக்கத் திறந்து வைத்துத் திரும்பினேன்.
‘‘எனக்குப் பிடிக்கலே!’’ என்றார்.
‘‘என்ன பிடிக்கலே ஜே.கே?’’ என்று கேட்டேன்.
‘‘நீ பண்றது எனக்குப் பிடிக்கலே!’’ என்றார்.
நான் திடுக்கிட்டு, ‘‘நான் பண்றது எது உங்களுக்குப் பிடிக்கலே ஜே.கே?’’ என்று கேட்டேன்.
‘‘என்னைக் கொண்டாந்து ஆஸ்பத்திரி யில் சேர்க்கறது, இங்கேயே இருக் கிறது… பிடிக்கலே. ஏன் உனக்கு வேற வேலை இல்லையா? இதுதான் உனக்கு வேலையா?’’ என்று கேட்டார்.
அப்போது அறைக்குள் நுழைந்தார் வனிதாம்மா. ஜெயகாந்தனைப் பார்த் துக் கொள்வதற்காகத் தனியாக அவர் வீட்டினர் அமர்த்தியிருந்த செவிலியர் அவர். ஜெயகாந்தன் என்னிடம் பேசியதைக் கேட் டுக்கொண்டே வந்த வனி தாம்மா, ‘‘அவர் என்ன வேலை செய்றார்? நான்தான் உங்களைப் பார்த்துக்கறேன். அவர் காலையிலே மாலை யிலே வந்து கொஞ்ச நேரம் உங்களைப் பார்த்துட்டுப் போறாரு!’’ என்று ஜெயகாந்தனுக்கு விளக்கமாகச் சொன்னார். அவர் அமைதியாகிவிட்டார்.
கொஞ்சநேரம் பொறுத்து, ‘‘ஜே.கே நாளைக் காலை நானும் கோவை மணியும் ஊருக்குப் போகலாம்னு இருக்கோம்…’’ என்று நான் என் விடைபெறலைத் தொடங்கினேன்.
ஜெயகாந்தன் என்னைப் பார்த்தார். அவர் இதழ்களில் ஒரு குழந்தையினு டையதே போன்ற புன்முறுவல் புலப்பட்டது. ‘‘நீ இரு, இங்கேயே இரு…’’ என்று சொன்னார்.
வனிதாம்மா, ‘‘கொஞ்சநேரம் முன்னே தான், ஏன் நீ இங்கே இருக்கிறேன்னு அவரை வெரட்டினீங்க… இப்போ, இங்கேயே இருன்னு சொல்றீங்க!’’ என்று ஜே.கேவை மடக்கிக் கேட்டதும் மீண்டும் அவர் அமைதியாகிவிட்டார்.
‘‘நான் மறுபடியும் வர்றேன் ஜே.கே!’’ என்று சொல்லிவிட்டுப் புறப்படலானேன்.
‘‘நீ இரு… நீ இங்கேயே இரு!’’ என்பதுதான் அவர் என்னிட்ம் பேசிய கடைசி வாக்கியம்.
ஜனவரியில் இது நிகழ்ந்தது. பிப்ரவரி, மார்ச் மாதங்களில் எங்களின் பழங்கால வீட்டை இடித்துக் கட்டும் பரபரப்பான வேலைகளில் நான் மூழ்கியிருந்தேன். சென்னைக்கு வந்து போக முடியவில்லை.
ஆனால், வாராவாரம் இந்தத் தொடரை எழுதிக்கொண்டு வந்ததில் அவருடனேயே இருப்பது போல் உணர்ந்தேன்.
ஏப்ரல் 24-ம் தேதி ஜெயகாந்தனின் பிறந்த நாள். தமிழ்நாடெங்கும் உள்ள ஜெயகாந்தனின் நண்பர்களாகிய நாங்கள் அன்றைய நாளில் சென்னையில் குவிந்துவிடுவோம்.
கே.எஸ்.சுப்பிரமணியம் அன்று இரவு ஜெயகாந்தனின் பிறந்த நாளுக்கான விருந்து உபசாரத்தைச் சிறப்பாக நடத்து வார். முதலில், பெருங்குடியில் இருந்த அவர் வீட்டிலும், அதன் பிறகு லயோலா கல்லூரி அருகில் உள்ள ஒரு ரயில்வே கிளப்பிலும் நடைபெற்ற அந்த விருந்து களில் ஓராண்டாக சந்திக்காமல் இருந்த நண்பர்களை எல்லாம் சந்தித்துவிடு வோம். சா.கந்தசாமி போன்ற பல எழுத் தாளர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிட்டும்.
அந்த மாதிரி இந்த வருஷமும் ஏப்ரல் 24-ம் தேதிதான் ஜே.கே பிறந்த நாளுக் குப் போகப் போகிறோமே என்கிற நினைப்பில் என் சென்னைப் பயணம் தள்ளிப் போய்கொண்டே இருந்தது.
அதற்குள் ஏப்ரல் 8-ம் தேதி விரைந்துவந்துவிட்டது.
ஜெயகாந்தனின் கவிதை வரி ஒன்று கவனம் வருகிறது. ‘ஒரு புறப்பாட்டின் சித்திரம்’ (potrait of a Departure) என்று அதற்குப் பெயர் வைக்கலாம். இந்தக் கவிதை வரி எந்த மனநிலையில் அவருக்குப் பிறந்ததோ தெரியாது.
‘பின்னுமிற உறவெல்லாம்
பிரிக்கின்ற விதியின் முன்னர்
என்னவோ எண்ணினான் சற்று
இளநகை பூத்துப் பின்னர்
ஏறினான் புரவி மீதில்!’
ஒரு வீரனுக்குப் போர்க்களத்துக்கு அழைப்பு வந்துவிட்டது. அவன் புறப்படுகிறான். அந்த ‘என்னவோ எண்ணினான்’ என்பதிலும், ‘சற்று இளநகை பூத்து’ என்பதிலும் அவனது மனஓட்டம் எவ்வளவு நுட்பமாகச் சொல்லப்படுகிறது. அவன் வீரனல்லவா? பின்னர் ஏறினான் புரவி மீதில்!
தான் புறப்பட்டுப் போகிற நிகழ்வைப் பற்றித் தன்னையறியாமலேயே ஜெயகாந்தன் ஒரு நுட்பமான சித்திரத்தைத் தீட்டிவிட்டார் என்று நினைக்கத் தோன்றுகிறது.
ஜெயகாந்தன் மறைந்த செய்தியைக் கேட்ட கணத்தில் இருந்து அவருடைய இந்த கவிதை வரி அடிக்கடி எனக்குக் கவனத்தில் வந்துகொண்டே இருக்கிறது.
- தொடர்வோம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pisakuppusamy1943@gmail.com
முந்தைய அத்தியாயம்:>ஜெயகாந்தனோடு பல்லாண்டு 36- மருத்துவமனை பயணங்கள்!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
27 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
1 month ago