நாங்கள் மொத்தம் ஆறு பேர். கல்லூரி முடித்த தருணம் அது. தீபாவளியை முன்னிட்டு திரைப்படம் பார்க்கலாம் என்று திட்டம்.
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் அஜித் நடித்த 'வரலாறு' வெளியாகியிருந்தது.
கே.எஸ்.ரவிகுமார் பிறந்து வளர்ந்ததெல்லாம் எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள வங்கனூர் கிராமத்தில்தான். பத்து வயது வரைக்கும் அங்கேதான் பாட்டி வீட்டில் ரவிகுமார் வளர்ந்ததாக சொல்வார்கள். அதனாலேயே ரவிகுமார் நம்ம ஏரியா ஆள் என்ற பாசம் எங்கள்
பக்கத்து கிராமங்கள் முழுக்க ஒட்டிக்கிடந்தது. அஜித் நடித்த படம் என்றால் இன்னும் சொல்லவா வேண்டும்?
நான், மணி, உதயன், புருஷோத், சந்துரு, பாபு என்று ஆறு பேரும் ராணிப்பேட்டை ராஜேஸ்வரி தியேட்டருக்கு 'வரலாறு' படம் பார்க்க பேருந்தில் பயணித்தோம்.
சினிமா குறித்து பேச ஆரம்பித்த எங்கள் பேச்சு, எப்படி காதல் தலைப்புக்குள் வந்தது என்றே தெரியவில்லை. யாரும் எதிர்பார்த்திராத அந்தக் கணத்தில் புருஷோத் தான் அந்த வார்த்தையை உதிர்த்தான்.
''எனக்கு ப்ரியா மேல ஒரு இது இருந்துச்சுடா'' என்றான்.
''என்னடா சொல்ற? நீயா!'' என்று நம்பமுடியாத ஆச்சர்யத்தோடு கோரஸாகக் கேட்டோம்.
''ஆமாம்'' என்றான்.
டவுசருக்கு குட் பை சொல்லிவிட்டு பேன்ட்டுக்கு வெல்கம் சொன்ன அந்த ஒன்பதாம் வகுப்பில்தான் ப்ரியாவின் மறுவருகை நிகழ்ந்தது.
பக்கத்து ஊர் ஸ்கூலில் படித்தவள் புதிதாக எங்கள் வகுப்பில் வந்து சேர்ந்தாள். புது ஆசிரியர்கள், புதிய சூழல் என்று கொஞ்சம் திணறிய அவளுக்கு உதவ ஏராளமான நட்புக்கரங்கள் நீண்டன. நோட்ஸ் கொடுப்பதும், புரியாத கணக்கை புரிய வைப்பதுமாக அவள் சொல்லும் ஒற்றை நன்றிக்காக ஒரு கும்பலே காத்துக் கிடந்தது.
அப்போதுகூட புருஷோத், ப்ரியாவிடம் பெரிதாய் ஒன்றும் பேசிவிடவில்லை. நெருக்கமாகப் பழகியதுமில்லை. அப்புறம் எப்படி இவனுக்கு காதல் முளைத்தது?
உதயன் கூட சின்ன சின்ன சேட்டைகள் செய்திருக்கிறான். மாணவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால், பெண்கள் அமரும் பகுதியில் 2 பெஞ்ச் மட்டும் ஆண்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது. உயரம் குறைவான உதயனும், இன்னும் சில பேரும் மட்டும் 2-வது பெஞ்சில் அமர்ந்தனர். அதற்கடுத்த பெஞ்ச்சில்தான் ப்ரியா இருந்தாள்.
அப்போதெல்லாம் உதயன் செய்யும் ஹீரோயிஸம் ஒன்றே ஒன்றுதான். ஆசிரியர் பாடம் நடத்தாமல் வெட்டியாய் பொழுது கழியும்போது ஏதாவது சேட்டைகள் செய்வான் உதயன். உச்சபட்சமாக ஒரு நாள் எல்லா பெண்களையும் சிரிக்க வைத்துவிட்டான்.
பேசுகிறவர்கள் பெயரை போர்டில் எழுதிக்கொண்டிருந்தான் வகுப்புத் தலைவன். உதயன் பெண்கள் அணியிடம் பேச்சு கொடுத்தான். முதலாவதாக அவன் பெயர் எழுதப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த உதயன் உடனே பேன்ட்டை கழட்ட ஆரம்பித்தான்.
பயப்படாதீர்கள்... உள்ளே டவுசர் போட்டிருந்தான். உதயன் இப்படி பேன்ட்டுக்குள் டிரவுசர் போட்டு வந்திருப்பான் என்றோ, பெண்கள் மத்தியில் அதிரடியாய் இறங்குவான் என்றோ எதிர்பார்க்கவில்லை. ஆனால், அந்த நேரத்தில் எல்லோரும் கொல்லென்று சிரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த சிரிப்பு ஒர்க் அவுட் ஆனதால் உதயன் இதையே வழக்கமாக்கிக் கொண்டான்.
இப்படி இருந்த உதயனுக்கே புருஷோத் காதல் அரும்பியதாகச் சொன்னது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி இருந்தது. உதயன் தான் காதலில் விழுவான் என்று எல்லோரும் எதிர்பார்த்த தருணத்தில் புருஷொத் தனக்கு காதல் பூத்த தருணத்தை சொல்ல ஆரம்பித்தான்.
இத்தனைக்கும் ப்ரியா 5-ம் வகுப்பு வரை எங்களுடன்தான் படித்தாள். ஆறாம் வகுப்பு படிக்க பக்கத்து ஊர் சென்றவள் 9-ம் வகுப்பு படிக்க மீண்டும் வந்தாள். புதிதாக ஒரு பெண் வந்ததும் புருஷோத் தனக்கு ஏற்பட்ட குறுகுறுப்பையும், உணர்வுகளையும் எங்களிடம் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தான்.
அந்த வயதில் காதல் கதை கேட்பதை விட வேறு என்ன சுவாரஸ்யம் இருந்துவிடப் போகிறது?
புருஷோத் ஒவ்வொரு சம்பவமாய் சொல்லிக்கொண்டே போனதும், எனக்கு 'அழியாத கோலங்கள்' பட்டாபி ஞாபகம் வந்தது. தமிழில் இப்படி ஓர் உலக சினிமா எப்படி சாத்தியம் ஆனது என்று இன்றளவும் யோசிக்க வைக்கும் திரைப்படம் 'அழியாத கோலங்கள்'.
பரபரப்பான நகரத்தில் அலுவல் நிமித்தமாக காரில் பயணிக்கிறார் கமல்ஹாசன். லிஃப்டில் ஏறி தன் இருக்கையை அமர்ந்ததும், அங்கு வரும் உதவியாளரிடம் மெயில் குறித்து ஆங்கிலத்தில் எழுதச் சொல்கிறார்.
ஒரு போன் கால் வருகிறது. அதற்குப் பிறகு அந்த உதவியாளர் வந்திருக்கும் பெர்சனல் கடிதங்களை கமலிடம் கொடுக்கிறார். எல்லா கடிதங்களின் அனுப்புநர் முகவரியைப் பார்க்கும் கமலுக்கு, ஒரு கடிதம் மட்டும் புன்னகையை வரவழைக்கிறது.
''10 நிமிடங்களுக்கு நோ போன் கால்ஸ். வந்தாலும் கொடுக்காதீங்க'' என்ற கட்டளையிட்டு, கடிதத்தைப் பிரித்துப் படிக்கிறார் கமல்.
''டேய் ராஸ்கல். நான் பட்டாபி எழுதுறேன்டா... எப்படிடா இருக்கே? ஊர் பக்கமே வர்றதில்லை. வருஷத்துக்கு ஒரு முறை வருவ. இப்போ அதுவும் இல்லை... நான் ஏன் இந்த லெட்டரை எழுதுறேன்னா... இந்து டீச்சர் இல்ல... நம்ம இந்து டீச்சர். அவங்க முந்தாநாள் காலமாயிட்டாங்கடா'' என்று எழுதியிருக்கும் கடிதத்தைப் படித்ததும் கமலின் நினைவுகள் பின்னோக்கி நகர்கின்றன.
அந்த கிராமம், அந்த ஜனங்க எதையும் மறக்கலை நான் என்று வாய்ஸ் ஓவரில். ஒரு கிராமம் நம் கண் முன் விரிகிறது.
ரகு, கௌரி, பட்டாபி எனும் மூன்று நண்பர்களை நீங்கள் எந்த கிராமத்திலும் சந்தித்திருக்கலாம்.
வயல்வெளி, ஆறு, ரயில்வேகேட், சிமெண்ட் பெஞ்ச் என்று சுற்றித் திரியும் இந்த மூன்று பேர் வாழ்க்கை அவ்வளவு அழகானது. இந்து டீச்சரின் வருகையை இந்த சிறுவர்கள் கொண்டாடும் தருணம் அலாதியானது.
ஊரில் ஆட்டம்போட்டு காசு பார்க்கும் ஒரு பெண் போஸ்ட் மாஸ்டர் வெண்ணிற ஆடை மூர்த்தியுடன் காதல் ரசவாதத்தில் ஈடுபடுகிறார். பழைய கோயில் மண்டபத்தில் அந்தப் பெண்ணுக்கும், வெண்ணிற ஆடை மூர்த்திக்கும் நடக்கும் ரசவாதத்தை மூவரும் பார்க்கின்றனர்.
ஆனால், இதில் எந்த ஆபாசமும் இல்லாமல் க்ளோஸப் காட்சிகள் மூலம் உணர்வுகளை படம் பிடித்திருப்பார் இயக்குநர்.
அந்த காட்சியைப் பார்த்த அதே வேகத்தில் அந்த பெண் வீட்டுக்குச் சென்று ரகு, கௌரி (சின்ன வயது கமல்), பட்டாபி ஆகிய மூவரும் அதே மாதிரி இருக்க வேண்டும் என்று ஆசையோடு கேட்கத் துணிவார்கள். கேட்க முடியாமல், திணறி, அக்கா... தண்ணி கிடைக்குமா என்று கேட்டு, குடித்துவிட்டு வருவார்கள்.
'அழியாத கோலங்கள்' படத்தில் இந்து டீச்சர் முக்கியமான படலம். இந்து டீச்சராக ஷோபாவின் நடிப்பு அத்தனை இயல்பாய் இருந்தது.
''என் பேரு இந்து. உங்க பேர்லாம் சொல்லுங்கம்மா'' என தயக்கமும், வெட்கமும், படபடப்புமாய் சொல்லும்போது அந்த வகுப்பறை இன்னும் அழகாகத் தெரிந்தது. பக்கத்து வகுப்பறையில் பாடம் நடத்தும் சத்தமும் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்கும்.
இந்து டீச்சர் அந்த கிராமத்துக்கு வந்த புது தேவதையாகவே மூவரும் பார்க்கிறார்கள். மளிகை சாமான் பொருட்களை இந்து டீச்சர் தவறுதலாக கீழே போட்டு விட, அதை எடுத்து வீடு வரை கொண்டு சேர்க்கும் கௌரி, டீச்சரின் அன்புக்குப் பாத்திரமாகிறான்.
பரணில் இருக்கும் பொருளை எடுக்க, ஏணியில் ஏறும்போது தவறி விழப் பார்க்கும் கௌரியின், தொடைப் பகுதியை இந்து டீச்சர் அழுத்திப் பிடித்து, பார்த்தும்மா எனும் சொல்லும்போது அந்தப் பால்ய வயதில் அவன் பாலுணர்வை எந்த விகல்பமும் இல்லாமல் அழுத்தமாகப் பதிவு செய்திருப்பார் இயக்குநர் பாலு மகேந்திரா.
பிரதாப் போத்தன் படத்தைக் காட்டி, ''எப்படி இருக்காரும்மா? அவர் தான் என் வருங்காலக் கணவர்'' என்று இந்து டீச்சர், கௌரியிடம் சொல்கிறார். அவரை கௌரி பிடிக்காமல் பார்க்கிறான். தன் கனவைக் கலைக்க வந்த வில்லனாகவே பார்க்கிறான். பிரதாப் போத்தன் சிகரெட் பிடிப்பதைப் பார்த்து ரசித்து சிரிக்கிறார் இந்து டீச்சர்.
சிகரெட் பிடித்தால் ஆம்பளையாகிடலாம் போல என்று மூவரும் சிகரெட் பிடிக்க ஆரம்பிக்கிறார்கள். இப்படிக் கழியும் விடலைப் பருவத்தில் பட்டாபிக்கு அத்தை மகள் வருகை அவன் வாழ்வை வசந்தமாக்குக்கிறது.
''பட்டணத்துல கடைசியா என்ன பிக்சர் பார்த்த?'' என்று அத்தை மகள் மரகதத்திடம் கேட்கிறான் பட்டாபி.
''இருவர் உள்ளம்'' என்கிறாள் மரகதம்.
''என்னது இருவர் உள்ளம் பார்த்தியா. சரோஜாதேவி எப்படி இருக்கா. '' என்கிறான் பட்டாபி.
''ம்ம்ம் அவசியம் தெரிஞ்சுக்கணுமோ?''
''என் ஃபேவரைட் தெரியுமா?''
''அந்த அம்மா நடை பிடிக்கலை'' என்கிறாள் மரகதம்.
அந்த இடத்தில் பட்டாபியிடம் பாலுமகேந்திராவின் தொனியை நீங்கள் பார்க்கலாம். பிரதாப் போத்தனுக்கு இது அறிமுகப் படம். இதில் பாலு மகேந்திராதான் பிரதாப்புக்கு டப்பிங் பேசியிருப்பார்.
இரவுப் பொழுதில் மரகதம் தூங்கிக்கொண்டிருக்கையில், பட்டாபி அவள் கெண்டைக் காலைத் தடவி, நெற்றியில் ஆரம்பித்து உதட்டில் விரல்கள் பட்டு கழுத்தில் இறங்க இருமல் சத்தம் அந்த நிலையைக் குலைக்கும்.
சம்மர் ஆஃப் 42 என்ற ஆங்கிலப் படத்தின் தழுவல் கிழுவல் என்றெல்லாம் உலக சினிமா போராளிகள் சொன்னாலும், தமிழ் சினிமாவில் பதின்ம வயதினரின் பாலுணர்வுகளை இவ்வளவு அழகாக, நேர்த்தியாக, வரம்பு மீறாமல் நம் மண்ணுக்கே உரிய தன்மைகளுடன் பதிவு செய்தவர் எவரையேனும் சுட்டிக் காட்ட முடியுமா?
ரகு ஆற்றில் குளிக்கப்போய் நீச்சல் தெரியாமல் தண்ணீருக்குள் மரணமடைகிறான். அவன் மரணத்தோடு கௌரி, பட்டாபியின் மகிழ்ச்சி காணாமல் போகிறது.
ரகுவின் மரணத்தை தாங்க முடியாத இந்து டீச்சர் கௌரியைக் கட்டிப்பிடித்துக் கதறுகிறார். இதெல்லாம் நெஞ்சில் இட்ட அழியாத கோலம் என்று லெட்டரை படித்து முடித்த கமல் சொல்கிறார்.
நடிகை ஷோபா இதில் துணை இயக்குநராகவும் பணி செய்திருக்கிறார். சொந்தக் குரலில் பேசி இருந்தால் ஷோபாவுக்கு நிச்சயம் விருது கிடைத்திருக்கும்.
அத்தை மகள் குறித்த பதிவுகள் பாலு மகேந்திராவின் சொந்த வாழ்க்கை என்று சொல்வதும் உண்டு மட்டக்களப்பில் பிறந்த பெஞ்சமின் எந்த சமரசமும் இல்லாமல் இந்தப் படத்தை எடுக்கத் துணிந்தார். ஆனால், இரு பாடல்கள் வைத்தது உறுத்தல் என்று அவரே ஒப்புக்கொண்டார். இப்படி சமரசங்கள் செய்துகொண்டதைக் கூட மிக நேர்மையாக சொல்ல முடிவதால்தான் அவரை வாத்தியார் என்று தமிழ் சினிமா சொல்கிறது. பாலு மகேந்திரா என்று சினிமா உலகம் அழைக்கிறது.
அந்த பட்டாபியாய் இருந்த புருஷோத்? அதற்குப் பிறகு அவன் அட்டகத்தி நாயகனாய் மாறிப்போனதுதான் எங்களுக்கு அடுத்த ஆச்சர்யம்.
மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்...
க.நாகப்பன் - தொடர்புக்கு nagappan.k@thehindutamil.co.in
| முந்தைய அத்தியாயம்:>மான்டேஜ் மனசு 1 - அலைபாய்ந்தவன் உணர்ந்த காதல்! |
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
6 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
19 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago