எம்.எஸ்.விஸ்வநாதன் 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளரும், ‘மெல்லிசை மன்னர்’ என்று போற்றப்படுபவருமான எம்.எஸ்.விஸ்வநாதன் (M.S.Viswanathan) பிறந்த நாள் இன்று (ஜூன் 24). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l கேரளாவின் பாலக்காடு அருகே உள்ள எலப்புள்ளி கிராமத்தில் (1928) பிறந்தவர். 4 வயதில் தந்தையை இழந்தவர், கண்ணனூரில் தாத்தா வீட்டில் வளர்ந்தார். பள்ளியில் படித்ததில்லை. தியேட்டர்களில் நொறுக்குத் தீனி விற்பார். நீலகண்ட பாகவதரிடம் இசை பயின்றார். 13 வயதில் மேடைக் கச்சேரி நிகழ்த்தினார்.

l நடிகர், பாடகராக வரவேண்டும் என்பது அவரது விருப்பம். அது நிறைவேறவில்லை. சினிமா கம்பெனியில் சர்வராக வேலை பார்த்தார். பிறகு, இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்புராமன் குழுவில் இவர் ஆர்மோனியக் கலைஞராகவும், டி.கே.ராமமூர்த்தி வயலின் கலைஞராகவும் சேர்ந்தனர்.

l சுப்புராமனின் திடீர் மறைவால் பாதியில் நின்ற அவரது படங்களை இவர்கள் இருவரும் முடித்துக் கொடுத்தனர். ‘தேவதாஸ்’, ‘சண்டிராணி’ படங்களின் இணை இசையமைப்பாளர்களாக அறிமுகமாயினர். ‘பணம்’ திரைப்படத்தில் ஆரம்பித்து, ‘ஆயிரத்தில் ஒருவன்’ வரை 700 திரைப்படங்களுக்கு இணைந்து இசையமைத்தனர்.

l எம்எஸ்வி தனியாக 500 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். இளையராஜாவோடு சேர்ந்து 3 படங்களுக்கு இசையமைத்தார். ‘கண்ணகி’, ‘காதல் மன்னன்’, ‘காதலா காதலா’ உட்பட 10-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

l பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, திருலோகசந்தர், கே.பாலசந்தர் ஆகிய 4 இயக்குநர்களிடம் அதிகம் பணிபுரிந்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உட்பட பல மொழிகளிலும் 1,200 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார்.

l ‘புதிய பறவை’ படத்தில் வரும் ‘எங்கே நிம்மதி’ பாடலுக்கு அதிகபட்சம் 300 இசைக் கருவிகளையும், ‘பாகப்பிரிவினை’ படத்தில் வரும் ‘தாழையாம் பூ முடிச்சு’ பாடலுக்கு 3 இசைக் கருவிகளையும் பயன்படுத்தியவர். பியானோ, ஆர்மோனியம், கீ போர்டு அற்புதமாக வாசிப்பார். ‘நீராரும் கடலுடுத்த..’ என்று தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இசையமைத்தவர்.

l கர்னாடக இசை மேதைகள் எம்.எல்.வசந்தகுமாரி, பாலமுரளி கிருஷ்ணா போன்றவர்களை தன் இசையில் பாடவைத்துள்ளார். இவரும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

l இந்தியா - பாகிஸ்தான் போரின் முடிவில் 1965-ல் போர் முனைக்குத் தன் குழுவினரோடு சென்று ஆர்மோனியத்தை கழுத்தில் மாட்டிக்கொண்டு, காயமுற்ற படை வீரர்களுக்காகப் பாடினார்.

l ஒரே பிறந்த தேதியைக் கொண்ட தமிழ்த் திரையுலக ஜாம்பவான்கள் எம்எஸ்வி-யும், கவியரசு கண்ணதாசனும் சிறந்த நட்புக்கு உதாரணமாகத் திகழ்ந்தனர். இவர் இசையமைத்த ‘அத்தான் என்னத்தான்’ போன்ற பாடல்களைப் பாடும் வாய்ப்பு தனக்குக் கிடைத்தால் சென்னையிலேயே தங்கிவிடுவேன்’ என்று லதா மங்கேஷ்கர் ஒருமுறை கூறினார்.

l மெல்லிசை மன்னர், கலைமாமணி, திரை இசை சக்கரவர்த்தி உள்ளிட்ட பல பட்டங்களையும் ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளையும் பெற்றவர். அரை நூற்றாண்டுக்கு மேலாக மக்களை தன் இசையால் மகிழ்வித்துவருகிறார். இவரது இசைக்கு மயங்கும் ரசிகர்கள் இன்றும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்