ஆவலை வீசுவோம் 3 - தேடியந்திரங்களின் சுருக்கமான வரலாறு

By சைபர் சிம்மன்

தேடியந்திரங்கள் இல்லாமல் இணையத்தை பயன்படுத்த முடியாது என்று சொல்லும் அளவுக்கு தேடியந்திரங்கள் இணைய வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமாகி இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தேடல் என்பது முன் எப்போதையும் விட மனித வாழ்க்கையில் இரண்டற கலந்த விஷயமாகி இருக்கிறது.

ஒரு காலத்தில் அறிஞர்களும் கண்டுபிடிப்பாளர்களும் அறிவுத்தேடலில் ஈடுபட்டனர். தத்துவஞானிகள் வாழ்க்கையின் பொருளை தேடினர். இலக்கியவாதிகள் இதை இலக்கியம் மூலம் தேடினர். ஒவ்வொருவருக்கும் ஒரு தேடல் இருந்து வந்திருக்கிறது என்றாலும் எல்லோரும் எப்போதும் தேடிக்கொண்டிருப்பதை தேடியந்திரங்கள் இயல்பாக்கி இருக்கின்றன.

தகவல்களை தேடுவதில் துவங்கி எதற்கும் இணையத்தில் தேடியந்திரங்களை பயன்படுத்துகிறோம். வார்த்தைகளின் உச்சரிப்பில் சந்தேகம் என்றால் கூட அகராதியை புரட்டுவதில்ல. தேடியந்திரத்தில் அந்த வார்த்தையை அடித்துப்பார்த்து உச்சரிப்பையும் எழுத்துக்களையும் நொடிப்பொழுதில் உறுதி செய்து கொள்கிறோம். மனதில் உள்ள எந்த கேள்வி என்றாலும் அதற்கான பதிலை தேடியந்திர கட்டத்தை நாடிச்செல்கிறோம்.

தேடியந்திரங்கள், தேடுவதை எளிமையாகவும் இன்றியமையாதாகவும் ஆக்கியிருக்கின்றன. இதன் விளைவாக நாம் சோம்பல் மிக்கவர்களாக மாறிக்கொண்டிருப்பதாக ஒரு கவலை இருக்கிறது. எளிய விஷயங்களை கூட நினைவில் நிறுத்திக்கொள்ளும் தேவையை மெல்ல இழந்து வருவதாகவும் வருத்தமிருக்கிறது. கூட்டல், கழித்தல் என்றால் கூட, அதுதான் கூகுள் இருக்கிறதே என சொல்வது வெகு இயல்பாக இருக்கிறது.

35 ஆண்டுகால வரலாறு

நாம் எல்லாம் தேடியந்திர அடிமைகளாகி கொண்டிருக்கிறோமோ என்று சந்தேகிக்கும் அளவுக்கு இவற்றின் ஆதிக்கம் இருந்தாலும் தேடியந்திரங்களின் வரலாறு என்று பார்த்தால் 35 ஆண்டுகள் தான்!

ஆம், தேடியந்திரங்களின் அதிகாரபூர்வ வரலாறு 1990-ல் இருந்து தான் துவங்குகிறது. அப்போது தான் இணைய உலகின் முதல் தேடியந்திரமான ஆர்ச்சி அறிமுகமானது. ஆர்ச்சிக்கு பிறகு ஆயிரக்கணக்கில் தேடியந்திரங்கள் அறிமுகமாகி தேடியந்திரங்கள் எண்ணிக்கையிலும் வகையிலும் பரந்து விரிந்திருக்கின்றன.

தேடியந்திர வரலாறு மறக்கப்பட்ட மைல்கல்களையும், திருப்புமுனைக்கு வித்திட்ட புதிய நுட்பங்கள் என சுவாரஸ்யமாகவே இருந்தாலும், இந்த வரலாற்றை ஒற்றை வரியில் புரிந்து கொள்வது என்றால் கூகுளுக்கு முன் கூகுளுக்கு பின் என பிரித்துக்கொள்ளலாம்.

தேடல் என்றால் கூகுள் என்று கருதப்படும் அளவுக்கு அது முன்னணி தேடியந்திரமாக இருந்தாலும் அதற்கு முன்னர் முன்னோடி தேடியந்திரங்கள் பல இருக்கின்றன.

ஒரு காலத்தில் தேடியந்திரங்களாக இருந்தன என்று சொல்லும் அளவுக்கு இவற்றில் பல மறக்கப்பட்டுவிட்டன என்றாலும், இவற்றின் முக்கியத்துவத்தை மறப்பதற்கில்லை. இந்த ஆரம்ப கால தேடியந்திரங்கள்தான் தேடலுக்கான அடித்தளத்தை அமைத்து கொடுத்திருக்கின்றன.

ஒவ்வொரு முன்னோடி தேடியந்திரமும் இணைய தேடலின் ஒரு முக்கிய அம்சத்தை அறிமுகம் செய்து தேடியந்திர கருத்தாக்கத்தை மேம்படுத்தி இருக்கின்றன.

ஆரம்ப காலத்தில்...

தேடியந்திரம் எனும் போது பொதுவாக இணையத்தில் உலாவி இணையதளங்களை திரட்டி பட்டியலிட்டு தகவல்களை தேடித்தரும் துழாவன்கள் (கிராலர்ஸ்) தேடியந்திரமாகவே புரிந்து கொள்ளப்படுகின்றன. ஆனால் இணைய தேடல் துவங்கிய போது துழாவன்கள் கிடையாது. இவ்வளவு ஏன் இணையதளத்தின் முழு பக்கங்களையும் தேடிக்கொள்ளும் வசதியும் இருந்திருக்கவில்லை.ஆரம்ப காலத்தில் தேடியந்திரம் என்பது இணைய முகவரிகளை மட்டுமே சேகரித்து தருபவையாக இருந்தது தெரியுமா? ஆனால் இணைய கற்காலத்தில் அதுவே பெரிய விஷயமாக இருந்தது.

இந்த அற்புதத்தை செய்து காட்டிய ஆர்ச்சி தான் உலகின் முதல் தேடியந்திரம். ஆர்ச்சி தேடியந்திரம் ஆலன் எம்டேஜ் (Alan Emtage) எனும் கல்லூரி மாணவரால் உருவாக்கப்பட்டது. ஆலன் அப்போது கனடாவின் மாண்டிரியேலில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த ஆர்ச்சிக்கான நிரலை எழுதினார்.

ஆர்ச்சி உதயமான போது இணையத்தில் கோப்புகளை தேடுவதற்கான வழி இருக்கவில்லை. குறிப்பிட்ட கோப்புகள் இருக்கும் முழு முகவரி தெரிந்தால் மட்டுமே அவற்றை அணுக முடியும் எனும் நிலை இருந்தது. அது மட்டும் அல்ல, அந்த காலகட்டத்தில் இணையம் இருந்ததே அதன் பிரதான அங்கமான வைய விரிவு வலை உருவாகி இருக்கவில்லை. இணைப்புகள் மூலம் விரியும் வலைப்பின்னலாக வலையை உருவாக்கிய இணைய முன்னோடி டிம் பெர்னர்ஸ் லீ 1989-ல் தான் வலைக்கான கருத்தாக்கத்தின் வரைவை எழுதியிருந்தார். 1990-ம் ஆண்டு இறுதியில் தான் உலகிற்கு வலை அறிமுகமானது.

இந்த நிலையில்தான் ஆலன், இணையத்தில் இருந்த எப்டிபி முகவரிகளின் பட்டியலை உருவாக்கி அதை குறிச்சொல்லுக்கு ஏற்ப தேடக்கூடியதாக செய்தார். ஆனால் இதில் முகவரிகளை மட்டுமே தேட முடியும். உள்ளட்டக்கத்தை அறியவோ தேடவோ வழியிருக்கவில்லை.

ஆர்ச்சி அதன் தேடல் வசதிக்காக பிரபலமாக அமெரிக்காவின் மின்னசோட்டா பலகலைக்கழக மாணவரான மார்க் மெக்காஹில் (Mark McCahill ) 1991 ல் கோஃபர் எனும் தேடியந்திரத்தை உருவாக்கினார். கோஃபர் பெரும்பாலும் வரிவடிவ கோப்புகளை தேடித்தரும் வகையில் உருவாக்கப்பட்டது. வைய விரிவு வலை பயன்பாட்டிற்கு வந்ததும் இந்த பக்கங்கள் வலைதளங்களாக மாறின. இதே கால கட்ட்த்தில் வெரோனிகா மற்றும் ஜக்ஹெட் ஆகிய இரண்டு தேடல் அமைப்புகளும் உருவாக்கப்பட்டன.

பெரிய பாய்ச்சல்...

தேடியந்திரங்களில் அடுத்த பெரிய பாய்ச்சல் 1993-ல் நிகழ்ந்தது. இதனிடையே 1992ல் டிம் பெர்னர்ஸ் லீ வர்ச்சுவல் லைப்ர்ரி சேவையை உருவாக்கினார். இது தான் இணையத்தின் முதல் டைரக்டரி சேவை. உண்மையில் இது லீ உருவாக்கிய மைய சர்வரில் மற்ற சர்வர்களின் பட்டியலாகவே இருந்தது.

1993-ல் எம்.ஐ.டி மாணவரான மேத்யூ கிரே (Matthew Gray) எந்த ஒரு தேடியந்திரத்தின் முக்கிய அங்கமாக இருக்கும் இயந்திராவை ( ரோபோ அல்லது பாட்) உருவாக்கி முதல் முறையாக உருவாக்கி இணையத்தில் உலாவவிட்டார். இங்கு ரோபோ என குறிப்பிடப்படுவது பெளதீக நோக்கிலான ரோபோக்களை அல்ல. இவை உண்மையில் கம்ப்யூட்டர் புரோகிராம்கள். தொடர்ந்து செய்யக்கூடிய விஷயங்களை மனிதர்களால் நினைத்து கூட பார்க்க முடியாத மின்னல் வேகத்தில் செய்யக்கூடிய புரோகிராம்கள்! இவையே சுருக்கமாக பாட்கள் என குறிப்பிடப்படுகின்றன. இணையத்தில் உள்ள தகவல்களை துழாவி தேடி திரட்டும் வேலையை அசாத்தியமான வேகத்தில் செய்து முடிக்கும் இந்த புரோகிராம்களே தேடியந்திர சிலந்திகள் என்றும் அறியப்படுகின்றன.

தேடியந்திர சிலந்திகளில் முதன் முதலில் இணையக்கடலில் நீந்தத்துவங்கியது மேத்யூ கிரே உருவாக்கிய வாண்டரர் (World Wide Web Wanderer ) தான். இந்த சேவை தொடர்பாக மேலும் சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கின்றன என்றாலும் தேடியந்திரங்களின் முக்கிய அங்கமாக இருக்கும் இணையவெளி முழுவதும் உலாவி, துழாகி தகவல் சேகரிப்பில் ஈடுபட்ட முதல் சேவை என்ற அளவில் இதை மனதில் கொள்வோம். கிரே உண்மையில் இணையத்தின் வளர்ச்சியை கணக்கிடுவதற்காகவே இந்த சிலந்தியை உருவாக்கினார். ஒரு இணைய பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கத்திற்கு தாவி, செயல்பாட்டில் இருந்த சர்வர்களை கணக்கிடுவதன் மூலம் இணையத்தை அவர் அளந்து பார்க்க முற்பட்டார். பின்னரே இணைய முகவரிகளையும் குறித்து கொள்ளக்கூடியதாக இதை மேம்படுத்தினார். இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்ட அட்டவணை வேண்டெக்ஸ் என குறிப்பிடப்பட்டது.

சிலந்திகள்...

ஆனால் அறிமுகமான காலத்துல் இணைய தளங்களுக்குள் இது தினமும் நூறு முறைக்கு மேல் எட்டிப்பார்த்தது தொல்லையாக பார்க்கப்பட்டது. ஆனால், இணையத்தை தொகுக்க இப்படி சிலந்திகளை உலாவவிடுவதை தவிர வேறு வழியில்லை என புரோகிராமர்கள் நினைத்தனர்.

இணையம் பிரபலமாகத்துவங்கி தினமும் புதுப்புது இணையதளங்கள் சேர்ந்து கொண்டிருந்த நிலையில், புதிய பக்கங்களில் பகுத்தாய்வது சிக்கலாக இருந்தது. இதற்காகவே சிலந்திகளை நாடினர். இவை உண்மையில் என்ன செய்தன என்றால் ஒவ்வொரு இணைய பக்கத்திலும் உள்ள இணைப்புகளுக்கு சென்று பார்த்து தகவல்களை சேகரித்தன. பின்னர் இணைப்பு பக்கத்தில் இருந்த இணைப்புகளுக்கு சென்றன.

இணையத்தில் உள்ள ஒவ்வொரு இணைய பக்கமும் இன்னொரு பக்கத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று கருதப்பட்ட்தால், சிலந்திகள் மூலம் ஒவ்வொரு பக்கத்தில் உள்ள இணைப்புகளை பின்பற்றி செல்வதன் மூலம் இணையத்தில் புதிதாக சேரும் இணைய பக்கங்களை கண்டுபிடித்து விட முடியும் என்பதே இதன் பின்னே இருந்த நோக்கம். இன்று வரை தேடியந்திரங்கள் இப்படி தான் செயல்படுகின்றன. நமக்கு தகவல்களை திரட்டித்திருவதற்காக சிலந்திகள் ஓயாமல் இணையத்தில் துழாவிக்கொண்டே இருக்கின்றன.

முதல் விதை...

மேத்யூ கிரேவை தொடர்ந்து மார்டின் கோஸ்டர் (Martijn Koster) எனும் புரோகிராமர் அலிவெப் மூலம் இணையத்தை பட்டியலிடும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் சிலந்திகளை கொண்ட பக்கங்களை பட்டியலிடாமல் புதிதாக உருவாக்கப்படும் பக்கங்களை சமர்பிக்க கேட்டி அவற்றை தொகுக்கும் பணியை மேற்கொண்டார். ஆனால் இந்த சேவை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

அலிவெப் (ALIWEB) அறிமுகமாவத்ற்கு சில மாதங்கள் முன் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆறு பட்டதாரி மாணவர்கள் இணைந்து எக்சைட் (Excite ) எனும் பெயரில் ஒரு தேடியந்திரத்தை உருவாக்கினர். ஆர்கிடெக்ஸ்ட் எனும் திட்ட்த்தின் அடிப்படையில் இது உருவானது. எக்சைட் இரண்டு வியங்களில் முக்கியமாக அமைந்தது. அது ஒரு தேடல் கொள்கையுடன் செயல்பட்டது. இணைய பக்கங்களை திரட்டுவதோடு நின்றுவிடாமல் அவற்றில் உள்ள வார்த்தைகள் இடையிலான உறவை புள்ளியியல் முறையில் ஆய்வு செய்வதன் மூலம் தேடலை மேம்படுத்த முடியும் எனும் நம்பிக்கையில் இது செயல்பட்டது. தேடலை பகுப்பாய்வதில் முதல் முயற்சியாக இதனை கொள்ளலாம். பின்னாளில் தேடலை பொருள் பொதிந்த்தாக ஆக்க கூகுள் பின்பற்றி இணைப்புகளின் தரத்தின் அடிப்படையிலான பேஜ்ராங்க் முறைக்கு இதை முன்னோடியாக குறிப்பிடலாம். இரண்டாவது முக்கிய விஷயம், இந்த திட்டத்திற்கு தாராளமாக நிதி கிடைத்தது. இதன் பொருள் தேடலில் முதலீடு செய்தால் அது லாபம் தரும் எனும் நம்பிக்கையை இது உணர்த்தியது.

ஆக, தேடியந்திர துறை மாபெரும் தொழிலாக உருவாவதற்கான முதல் விதையாக இதை கருதலாம். எக்சைட் பரவலாக வரவேற்பை பெற்ற முதல் தேடியந்திரமும் கூட!. சில ஆண்டுகளில் எக்சைட் @ஹோம் இணைய சேவை நிறுவனத்தால் வாங்கப்பட்டதும் பின்னர் அந்நிறுவனம் திவாலாகி எக்சடி இன்போசிக்கால் வாங்கப்பட்டது.

இவை எல்லாமே 1993 ல் அரங்கேறின.என்றாலும் தேடியந்திர வரலாற்றில் பொன்னான ஆண்டாக 1994 அமைந்தது. அந்த ஆண்டில் தான் இணையத்தின் முதல் மேம்பட்ட தேடியந்திரமான அல்டாவிஸ்டாவும் இணையத்தின் நுழைவு வாயிலாக உருவான யாஹுவும் உதயமானது. அதோடு அடுத்த தமைமுறை சிலந்திகளை பயன்படுத்திய வெப்கிராலரும் அறிமுகமானது. லைகோஸ் தேடியந்திரமும் பயன்பாட்டிற்கு வந்தது. இன்போசீக்கும் அறிமுகமானது.

அல்டாவிஸ்டா பற்றி ஒரு வரியில் அறிமுகம் செய்து கொள்ளலாம். அது அந்த காலத்து கூகுள். இதைவிட கூகுளை இந்த காலத்து அல்டாவிஸ்டா என்பது பொருத்தமாக இருக்கும் என்கிறார் தேடியந்திர வல்லுனரான அல்டாவிஸ்டா கேள்வி பாணியில் தேடல் கோரிக்கையை சமர்பிக்க அது வழிசெய்தது. அடுத்த கட்டமாக மேம்பட்ட தேடலை மேற்கொள்ளவும் வசதி அளித்தது. இன்று தேடியந்திரங்களின் முக்கிய லட்சனமாக கருதப்படும் தேடல் கட்டத்தையும் கொண்டு வந்தது.

பூலியன் தேடல் என்று சொல்லப்படும் தேடல் பதத்துடன் அல்லது, மற்றும் ஆகிய பதங்களை சேர்ந்தது தேடலை மெருக்கேற்ற முடிந்தது. மேலும் தேடுவதற்கான குறிப்புகளையும் வழங்கியது. ஆரம்ப கால இணையவாசிகளுக்கு அல்டாவிஸ்டா அளித்த ஆனந்தத்தை இப்போது நினைத்தப்பார்ப்பது கடினமாக இருக்கலாம். டிஜிட்டல் எக்யூப்பெண்ட் கார்ப்பரேஷனால் உருவாக்கப்பட்ட முதல் வெகுஜன தேடியந்திரமாக கோலோச்சி பின்னர் பல கைகள் மாறி கடைசியில் யாஹூவால் வாங்கப்பட்டு 2013-ல் மூடப்பட்டது.

நவீனத் தேடலின் துவக்கம்

அல்டாவிஸ்டா தேடியந்திரமாக வரவேற்பை பெற்ற நிலையில், டேவிட் பைலோ மற்றும் ஜெரி யங் (David Filo and Jerry Yang ) ஆகிய இரண்டு இளைஞர்களின் படைப்பாக யாஹு உருவானது. இணையத்தில் புதிதாக உருவாக்கப்படும் இணையதளங்களில் பயனுள்ளவற்றை பட்டியலிட்டு தரும் வழிகாட்டியாக அறிமுகமான யாஹு, வெகு விரைவில் எல்லாவற்றையும் ஒரே இடத்தில் தரும் வலைவாசலாகி இணையத்தின் நுழைவு வாயிலானது.

யாஹு அறிமுகமான அதே ஏப்ரல் மாதத்தில் வெப்கிராலர் தேடியந்திரம் அறிமுகமானது. அதுவரை இணைய முகவரிகள் மற்றும் அவற்றுக்கான அறிமுக வாசகங்களை மட்டுமே தேடியந்திர சிலந்திகள் திரட்டி வந்த நிலையில், இணைய பக்கத்தில் உள்ள முழு தகவல்களையும் திரட்டக்கூடிய சிலந்திகளை இது முதல் முறையாக பயன்படுத்தியது. நவீன தேடலுக்கு வித்திட்ட முக்கிய அம்சம் இது.

1994 ஜூலை மாதம் லைகோஸ் தேடியந்திரம் அறிமுகமானது. 54,000 ஆவணங்களுடன் இது பொது மக்களுக்கு அறிமுகமானது. அடுத்த சில ஆண்டுகளுக்கு அல்டாவிஸ்டா, யாஹு மற்றும் லைகோஸ் ஆகிய பெயர்கள் மாற்றி மாற்றி பயன்படுத்தும் அளவுக்கு அவை இணையவாசிகள் மத்தியில் பிரபலமாக இருந்தன. அல்டாவிஸ்டாவில் கிடைக்கவில்லையா? லைகோசில் தேடிப்பார்க்கவும் என சொல்வதும் பழக்கமாக இருந்தது. இதனிடையே இன்போசீக்கும் முக்கிய தேடியந்திரமாக பிரபலமானது. தேடியந்திர பரப்பு விரிவடைந்து கொண்டே இருந்த்து.

இணையம் மெல்ல மெல்ல பிரபலமாகி புதிய பயனாளிகளை கவர்ந்திழுக்க அதற்கேற்ப புதிய இணையதளங்களும் தினமும் உருவாக்கப்பட்டு இணையம் மேலும் செழுமையாக தேடியந்திரங்களுக்கான தேவையும் அதிமாக உணரப்பட்டது.

1995-ல் யாஹு போன்ற வழிகாட்டி சேவையான லுக்ஸ்மார்ட் அறிமுகமானது. எனினும் 1996 ல் இன்க்டோமி நிறுவனம் ஹாட்பாட் தேடியதிந்திரத்தை இணைய உலகம் மீது கட்டவிழ்த்துவிட்டது. இதுவும் சிலந்திகளை பயன்படுத்திய தேடியந்திரம் தான் என்றாலும் ஏற்கனவே பட்டியலிட்ட பக்கங்களை ஒரே நாளில் மீண்டும் விஜயம் செய்து மறுபட்டியலிட்டு புதுப்பிக்கும் ராட்சத ஆற்றல் கொண்டிருந்தது இதன் சிறப்பாக அமைந்தது. அதோடு தற்போது தேடியந்திரங்கள் பயனாளிகள் விருப்பங்களை அறிய பயன்படுத்தும் முக்கிய ஆயுதமான குக்கி மென்பொருளை முதன் முதலில் பெரிய அளவில் பிரயோகம் செய்ததும் ஹாட்பாட் தான். 2003-ல் இது யாஹு வசமானது.

1998ல் மைக்ரோசாப்ட் எம்.எஸ்.என் வலைவாசலில் தேடல் சேவையை அறிமுகம் செய்தது. தேடல் உலகையே தலைகீழாக புரட்டிப்போட்டு தன்வசமாக்கி கொண்டுள்ள கூகுள் தேடியந்திரம் அறிமுகமானது. ஸ்டான்ப்போர்டு பல்கலை மாணவர்களான செர்ஜி பிரைன் மற்றும் லாரி பேஜ் சமர்பித்த ஆய்வுக்கட்டுரை அடிப்படையில் கூகுள் தேடியந்திரம் செயல்பட்டது. ஒரு இணைய பக்கம் கொண்டுள்ள இணைப்புகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் தரத்தின் அடிப்படையில் தேடல் முடிவுகளை பட்டியலிடலாம் எனும் கருத்தாக்கம் கூகுலை இயக்கியது.

கூகுள் ஆதிக்கம்

பேஜ்ராங்க் என சொல்லப்படும் இந்த முறைக்கு ஆரம்பத்தில் முதலீட்டாளர்கள் மத்தியில் வரவேற்பு இல்லாமல் போனாலும், எதிர்பார்த்த தேடல் முடிவுகளை அளிக்க கூடிய ஆற்றல் இணையவாசிகளை கவர்ந்து கூகுளை நட்சத்திர தேடியந்திரமாக ஆக்கியது. வெகு விரைவிலேயே தேடல் என்றால் கூகுள் என்று ஆனது. கூகுளின் வளர்ச்சி யாஹு போன்ற வலைவாசல்கள் செல்வாக்கை குறைத்தது. தேடுவது என்பதை கூகுளிடுவது என குறிப்பிடும் அளவுக்கு கூகுள் தேடலுக்கான வினைசொல்லாக மாறி முன்னணி தேடியந்திரமாக ஆதிக்கம் செலுத்த துவங்க தேடல் ஒரு மாபெரும் துறையாகவும் உருப்பெற்றது.

கூகுளுக்கு பிறகு எண்ணற்ற தேடியந்திரங்கள் உதயமாயின. இன்னமும் உருவாகி கொண்டிருக்கினறன. இவற்றில் கூகுளுக்கு சவால்விடக்கூடிய கருத்தாக்கத்தை கொண்டவை கூகுள் கில்லர் என வர்ணிக்கப்படுவதும் வழக்கமாக இருக்கிறது. இப்படி வர்ணிக்கப்பட்ட பல புதிய தேடியந்திரங்கள் காணாமல் போய்விட்டன. தாக்கு பிடித்து நிற்பவை மாற்று தேடியந்திரங்கள் என கம்பீர்மாக சொல்லப்படுகின்றன.

இவை தவிர என் வழி தனி வழி என செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிறப்பு மற்றும் குறிப்பிட்ட நோக்கிலான கணக்கற்ற குறுந்தேடியந்திரங்களும் உருவாகி இருக்கின்றன.

தேடியந்திரம் சார்ந்த தேடியந்திரங்களும் ஒட்டு தேடியந்திரங்கும் அநேகம் இருக்கின்றன. இணையம் விரிவடைந்து கொண்டே இருக்கும் நிலையில் அதற்கேற்ப பலவகை தேடியந்திரங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

தேடியந்திர உலகம் எந்த அளவுக்கு பரந்து விரிந்திருக்கிறது என்பதை பார்ப்போம் வாருங்கள்!

தேடியந்திர வரலாறு இணைப்புகள்:

1; >http://www.wordstream.com/articles/internet-search-engines-history

2; >http://www.searchenginehistory.com/

3; >http://www.wiley.com/legacy/compbooks/sonnenreich/history.html

சைபர்சிம்மன், இணைய வல்லுநர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

| முந்தைய அத்தியாயம்:>ஆ'வலை' வீசுவோம் 2 - தேடியந்திர வகைகள் |

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

16 hours ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

மேலும்