ஆர்.கே. நகருக்கு அடித்தது யோகம்!

By ராணிப்பேட்டை ரங்கன்

சென்னை மாநகரில் இடம் பெற்றுள்ள ஆர்.கே. நகருக்கு ஜே.ஜே. நகராக - அதாவது இடைத்தேர்தலினால் ஜன சந்தடி மிக்க நகராக - மாறும் அதிருஷ்டம் அடித்திருக்கிறது. அ.தி.மு.க. சார்பில் இத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றிவேல் தன்னுடைய சட்டப் பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்திருக்கிறார். (அவருடைய ராஜிநாமாவை நாம் அதிர்ஷ்டம் என்று கூறவில்லை. அதற்கு பதில் மரியாதையாக அவருக்கு அமையக்கூடிய அதிர்ஷ்டத்தைச் சொன்னோம்).

ஜெயலலிதா வேட்பாளர் என்றால், தேர்தல் முடிவு என்ன என்று, “முட்டாளே முட்டாளே மூளையில்லா முட்டாளே” என்ற பாடலுக்கு வாட்ஸ்-அப்பில் வாயசைக்கும் சிறுமி கூட சொல்லிவிடுவாள்.

எதிர்க்கட்சிகள் தனித்தோ, கூட்டாக நின்றோ போட்டியிடலாம். ஆனால் முடிவு வந்தவுடன் “பண பலம், ஆள் பலம் வென்றது. காவல்துறை, மத்திய தேர்தல் ஆணையம், மாநிலத் தேர்தல் ஆணையம், தேர்தல் பார்வையாளர் நடுநிலையோடு செயல்பட்டிருந் தால் முடிவு மாறியிருக்கும்” என்று அறிக் கையை இப் போதே தயா ராக எழுதி வைத்துக் கொள் ளலாம்.

இந்த நேரம் பார்த்து ராதா கிருஷ்ணன் நகர் வாக்காளராக நாம் இல்லையே என்ற ஏக்கம் யாருக்கு எழுந்தாலும் தப் பில்லை. அங்கே இனி குப்பைகள் காணாமல் போகும். அந்தக்கால தபால் ஆபீஸ் கிளி யரன்ஸ் போல 4 மணி நேரத்துக்கு ஒருமுறை குப்பைகள் அகற்றப்படும். அதற்கென்று ஒரு தனி ஐ.ஏ.எஸ். அதிகாரி வண்டியோடு தெருமுனையில் (தேர்தல் முடியும்வரை நிற் பார். சாலை விளக்குகள் அனைத்தும் ஜெகஜோதியாக எரியும்.

நியூயார்க்கா, பாரீஸா என்று வியக்கும் அளவுக்கு சாலைகள் மேடு பள்ளமில்லாமல் பளிச்சென்று ஆகிவிடும். பாதாள சாக்கடையில் அடைப்பே இருக்காது. ஒவ்வொரு தெரு முனை யிலும் ஒரு மேஸ்திரி ரப்பர் டியூபுடன் உள்ளே குதித்து அடைப்பை நீக்கக் காத்திருப்பார்.

குழாயில் பன்னீர், ஜாதிக்காய், ஏலக்காய் கலந்த வாசனையோடு இடைவிடாமல் தண்ணீர் வரும். பிராட்வே யிலிருந்து தாம்பரம் போகும் பஸ் கூட ஒரு முறை ஆர்.கே. நகர் வழியாகப் போய்விட்டு வரும்.

முக்கியமாக, தெருவுக்கு ஒரு டிரான்ஸ்பார்மர், டிரான்ஸ்பார்மருக்கு ஒரு ஏ.இ., ஒரு ஏ.இ.க்கு 2 லைன்மேன் என்று மின்சாரம் நேரடியாக வீடுகளுக்குள் தடையின்றி பாயும். இப்படிப் பல வசதிகள் அந்தத் தொகுதிக்கு வந்து குவியும்.

இப்போது எல்லோருடைய ஆர்வமும் ஜெயலலிதாவை எதிர்க்கப் போகும் கட்சி(கள்) எது என்பதை அறிவதுதான். எல்லா எதிர்க்கட்சிகளும் இணைந்து பொதுவேட்பாளரை நிறுத்தப் போகின்றனவா அல்லது தனித்தனியாகக் களம் இறங்கி தங்களுடைய பலத்தை (!) நிரூபிக்கப் போகின்றனவா என்று பார்க்க வேண்டும்.

மு.க. தமிழரசுவின் மகன் திருமணத்தை முன்னிட்டு எல்லா கட்சித்தலைவர்களையும் சந்தித்து, அரசியல் பேசாமல் நாகரிகத்தோடு திரும்பியுள்ள மு.க. ஸ்டாலின் இதற்கான முன் முயற்சியை எடுக்கக்கூடும். (அரசியல் பேசா தது நாகரிகம் என்றால், அரசியலைப் பேசுவதே அநாகரிகம் என்றாகிறதே இதற்கு என்ன அர்த்தம்?)

எதிர்க்கட்சி வரிசையில் முக்கியமான தலைவர் என்றால் அது விஜயகாந்த்தான். அவர்தான் முதல் தீர்த்தகாரர். (ஏடாகூடமாக சிந்திக்க வேண்டாம், அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சித் தலைவர், பிற கட்சிகளின் முதல் மரியாதைக்குரியவர் என்று பொருள்) எனவே அவருடன் (அவர் என்றால் அவருடைய துணைவியார், மைத்துனர்) ஆலோசனை கலந்த பிறகே எதிர்க்கட்சிகள் ஒரு முடிவுக்கு வர முடியும்.

அடுத்த முதல்வரை வீட்டுக்குள் தயாராக வைத்திருப்பதாகச் சொல்லும் பா.ம.க. இடைத்தேர்தலில் போட்டியிட்டு என்னதான் தனக்கு செல்வாக்கு என்று காட்டலாம். ஆனால் பொதுத் தேர்தல் நெருக்கத்தில் வரும்போது இடைத் தேர்தலைத் திணிக்கக் கூடாது என்று சாமர்த்தியமாகச் சொல்லி இருப்பதன் மூலம் - பா.ம.க. இந்த பல(விஷ)ப் பரீட்சையில் இறங்குவது சந்தேகமே!

தி.மு.க.வின் கட்சி யமைப்பும் தொண்டர் அமைப்பும் தலை வரின் சாணக்கியத் தனமும் உலகம் அறிந் தது. ஆளும் கட்சியாக இருக்கும்போது இடைத் தேர்தல்களை எப்படிச் சந்திக்க வேண் டும் என்று அ.தி.மு.க- வுக்கே பாடம் எடுத்த கட்சி. அவர்களுடைய திருமங்கலம் பார்முலாவை பேடண்ட் சட்டப்படி காப்புறுதி செய்யாததால், அதையே மேம்படுத்தி திருவரங்கம் பார்முலாவாக ஜனநாயகத்துக்கு வழங்கியிருப்பது அ.தி.மு.க. இந்தத் தேர்தலில் எதிர்கட்சிகளுக்குத் தலைமை தாங்கி தி.மு.க. தன் வேட்பாளரை களம் இறக்காவிட்டால் அடுத்த பொதுத் தேர்தலில் கூட்டணிக் கட்சி கள் குறைந்த தொகுதிகளுக்கு ஒப்புக் கொள்ளாமல் பிடிவாதம் காட்டலாம். கெத்துவிடாமலிருக்க தி.மு.க. போட்டி யிடும் நிலை வரலாம்.

ஜெயலலிதாவை எதிர்த்து எல்லா கோர்ட் படியும் ஏறி இறங்க தி.மு.க. பயன்படுத்திக் கொண்ட பேராசிரியர் அன்பழகனையே ஆர்.கே. நகர் பரீட்சையிலும் இறக்கிவிடாமலிருந் தால் சரி.

இதைவிட்டால்... எல்லா எதிர்க் கட்சி களுக்கும் ஒரு யோசனை. உங்கள் அனைவருடைய உண்மை யான மக்கள் செல்வாக்கை இந்த இடைத் தேர்தலில் சோதனைக்கு உள்ளாக்கி, வரப்போகிற பொதுத் தேர்தலுக்கு முன்பாக ஏன் முழுக்க நனைய வேண்டும்? உங் களில் யார் போட்டியிட்டு தோற்றாலும், ஆளும் கட்சியிடமிருந்து தப்பாமல் வரப் போகிற எக்காளம் என்னவாக இருக்கும் தெரியுமா?

‘நீதி வென்றது - நீதிமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும்! பொய் வழக்கு போட்டவர்களுக்கு மக்களும் பாடம் கற்பித்து விட்டார்கள்’ என்பதாகத்தான் இருக்கும். அதற்குப் பதிலாக நீங்கள் அனைவருமே போட்டியிடாமல் ஒதுங்கினால் எப்படி இருக்கும்?

வேண்டாத இடைத்தேர்தல் செலவை தவிர்த்து, போட்டி இல்லாமல் ஜெயலலிதாவை ஜெயிக்க வைத்து... அப்படி யாவது மக்களிடம் நல்ல பெயர் வாங்கலாமே!

மொத்தமாக ஒதுங்கினால், ‘அம்மாவை எதிர்க்க யாருக்கும் தெம்பில்லை’ என்று ஆளும்கட்சி ஏகடியம் பேசும். பேசிவிட்டுப் போகட்டுமே!

முக்கியமாக தி.மு.க. கவனத் துக்கு... பொதுத் தேர்தல் சமயத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கும்போது இந்தத் தேர்தல் முடிவையும் அவர்கள் ஒரு சமீபத்திய சான்றாகக் காட்டி, அதிகத் தொகுதிகளைக் கேட்கக்கூடும். கேட்பது என்ன, பிளாக் மெயிலே கூட செய்வார்கள். இப்போது போட்டியிடாமல் இருந்தால் உங்களுடைய உண்மையான செல்வாக்கு என்னவென்று தெரியாமல் நீங்கள் ஒதுக்கும் தொகுதிகளைப் பெற்றுச்செல்லவும் வாய்ப்பிருக்கிறது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் போட்டியிடாது. காங்கிரஸ், பாஜக கட்சிகளின் மாநிலத் தலைமை உணர்ச்சி வசப்படாமல் முடிவெடுக்க வேண்டும். மற்ற சிறு கட்சிகளும் அடக்கி வாசிப்பதே நல்லது. பொது வேட்பாளருக்கு இங்கு பஞ்சமே இல்லை. டிராபிக் ராமசாமி போன்ற உற்சாகமுள்ள இளைஞர்களைக் களத்தில் இறக்கலாம்.

அதே வேளையில் ‘ஜெயா’ம்மா, ‘லலிதா’, ‘ஜெயா’க்காள், ‘அம்மா’கண்ணு என்ற பெயரில் அந்தத் தொகுதியில் பெண் வாக்காளர்கள் யாராவது வசிக்கிறார்களா என்று தேடிக் கண்டு பிடித்து அவர்களை சுயேச்சை வேட்பாளர்களாக்கி னால் சில நூறு வாக்குகளை சிதறடிக்கலாம்.

வேறு என்னதான் சாத்தியம்?

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

2 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

4 months ago

மேலும்