காட்ஸ் ஓன் கன்ட்ரி: அதிரடி ஃபகத்தும் அட்டகாச திரைக்கதையும்!

By சினிமா பித்தன்

சமகால மலையாள திரைப்படங்கள் கொடுத்து வரும் விந்தை என்னவெனில், வேகத்திற்கும் தடை விதிக்காத, அதே நேரத்தில் உணர்ச்சிப் பெருக்கையும் சிதைக்காத பல அற்புதப் படைப்புகளை அது அளித்து வருவதுதான்.

தரமான கதை - நாயகனாம் திரைக்கதை, உயிரூட்டும் கதாபாத்திரங்களை வைத்து இதை சாத்தியப்படுத்தியுள்ள படைப்புகள் தமிழர்களின் கவனத்தையும் ஈர்த்து வருவது மறுப்பதற்குரியதல்ல. இவ்வாரம் வெளியாகி நெஞ்சார்ந்த உவகையை அளித்து மாஸ் அண்ட் கிளாஸ் பிரிவிற்குள் அழகாக நுழைந்துள்ள படம் தான் 'காட்ஸ் ஓன் கன்ட்ரி'.

வேகமாக முட்டவரும் வாகனம்... கையில் குழந்தையுடன் சட்டென்று நகர்கிறார் ஃபகத் ஃபாசில், வெறுப்பும் விரக்தியும் கலந்த ஒரு பார்வை இவரிடம். ஒற்றையில் குழந்தையுடன் இருக்கும் இவரைப் பார்த்து நள்ளிரவில் நிற்கிறது ஒரு ஆட்டோ. ஆட்டோவிற்குள் ஒரு பெண் அமர்ந்திருக்க, ஒரு நிமிடம் யோசிக்கிறார் ஃபகத், 'அட ஏறுங்க சார் இந்த டைமுக்கு ஆட்டோவே கிடைக்காது, இவ பாதி வழியில இறங்கிப்பா, உங்கள ஒண்ணும் செய்ய மாட்டா!' என்று ஆட்டோக்காரன் உரைக்க, ஃபகத் தன் குழந்தையுடன் ஏறுகிறார்.

ஆட்டோவினில் குழந்தையைத் தொடுவது போல் ஃபகத்தினை நெருங்குகிறாள் அங்குள்ள பாலியல் தொழிலாளி. 'தொடாதே தள்ளிப்போ' என்று அப்பெண்ணை விலக்கி விட்டு அமைதியாக அமர்கிறார். முன்னுள்ள கண்ணாடியில் நடப்பதை பார்த்தபடியே பேச்சு கொடுக்க தொடங்குகிறார் டிரைவர். 'இந்த உலகத்துல ஒவ்வொருவருக்கும் நேரம் ஒவ்வொரு மாதிரி இருக்கு. சிலருக்கு நேரம் நல்லா இருக்குன்னா பலருக்கு அது மோசம்' இப்படி அவர் பேசிக்கொண்டே வர வழியில் அப்பெண் இறங்குகிறாள். மீண்டும் ஆட்டோ புறப்பட்டு ஃபகத் கேட்ட மேர்மைட் ஹோட்டலின் முன் வந்து நிற்கிறது. எவ்வளவு? அறுபது ரூபாய் சார். காசை கொடுத்துவிட்டு 'நீ சொன்ன மாதிரி இந்த உலகத்துல சில பேருக்கு நேரம் நல்லா இருக்குன்னா, பல பேருக்கு அது மோசம் தான். கொஞ்ச நாளா என் நிலைமை மோசம்' என்று ஆட்டோக்காரரிடம் கூறி ஹோட்டலுக்குள் நுழைந்து, தன் அறைக்கு ஃபகத் செல்கிறார்.

அழுது கொண்டிருக்கும் தன் மகளை அமைதிப்படுத்தி, பால்கனியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அங்கே ஒரு அம்மா அவள் குழந்தையை தோளில் போட்டுக் கொண்டு அழுவதை நிறுத்திக் கொண்டிருக்கிறாள்.

அங்கிருந்து அறைக்குள் நுழைந்து நேரத்தை பார்க்கிறார். வாழ்க்கையில் சாதாரணமாக கடந்து போகும் நாட்களை போல் இந்நாள் அமையவில்லை என எண்ணியபடி இவர் இருக்க, கடிகாரம் இடப்புறமாக பின் நோக்கி வேகமாக நகர்கிறது. முதல் பதினைந்து நிமிடங்களில் வைக்கப்பட்ட அமைதியான பின்னணி அந்த கடிகாரத்தின் சுழற்சிக்கு பிறகு அப்படியே டாப் கியர் எடுத்து சீறுகிறது.

1. கேரளம் முழுவதும் ஊடகங்களால் பேசப்பட்டு வருகிறது, ஓர் இளம் பெண்ணின் பாலியல் பலாத்கார வழக்கு. இன்று இவ்வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது பாதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு உரிய நீதி கிடைக்குமா? இதில் குற்றம்சாட்டப்படும் எம்.எல்.ஏ'க்கு தண்டனை கிடைக்குமா? என்று ஊடகங்களில் பேசப்படுகிறது. இவ்வழக்கை அப்பெண்ணின் சார்பில் எடுத்து நடத்தும் சாமர்த்தியமான வழக்கறிஞர் மாத்தென் தாரகென் (ஸ்ரீனிவாசன்).

2. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தன் மகளை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று துடிக்கும் பாசமிகு அப்பா முஹமத் (லால்).

3. தன் மனைவியை மீட்பதற்காக, எழுபத்து ஐந்து லட்சத்தை சேர்க்க துபாயிலிருந்து தன் குழந்தையுடன் கொச்சினுக்கு வந்திறங்கும் மனு கிருஷ்ணன் (ஃபகத் ஃபாசில்).

மனுவிற்கு மனைவியை காப்பாற்ற வேண்டும், முஹமத் தன் மகளின் ஆப்ரேஷனுக்கு காசு தேற்ற வேண்டும், மாத்தேன் அப்பாவி பெண்ணிற்கு நீதி கிடைக்கச் செய்ய வேண்டும். ஃபகத் மற்றும் லாலின் தேவை நிதி; ஸ்ரீனிவாசனின் தேவை நீதி. இவர்களுக்கு கிடைக்கின்ற கடைசி அவகாசம்தான் அந்த ஒரு நாள். மூன்று பெண்களை காக்கப் போராடும் மூன்று ஆண்மகன்களின் கதை இது.

மலையாளத்தில் 'டிராபிக்' (தமிழில் 'சென்னையில் ஒரு நாள்') படத்தின் வெற்றிக்கு பெரும் வித்தாக அமைந்தது அப்படத்தில் அமையப்பட்ட பேரலல் ஸ்கிரீன்ப்ளே. பல கதாபாத்திரங்கள் ஒரே சமயத்தில் ஆட்கொள்கிற வெவ்வேறு உணர்ச்சிகளை பதிவு செய்வதுதான் இதன் சிறப்பு. தெலுங்கில் 'வேதம்' (தமிழில் 'வானம்') படத்திலும், 'நேரம்' படத்திலும் இது கையாளப்பட்டுள்ளது.

'டிராபிக்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, மலையாளத்தில் பல படங்களில் இந்த யுக்தி கையாளப்பட்டது. ஆனால் எல்லா முயற்சிகளும் வெற்றி பெறவில்லை. ஒரே கதாபாத்திரத்தின் கதையை சொல்லும்போதே பல சமயங்களில் கதாபாத்திரங்களின் நிலைப்பாடு ரசிகர்களை வந்தடையாமல் போகின்றது, அப்படி இருக்கையில் பல கதாபாத்திரங்களை காட்டும்பொழுது அவர்களின் நிலைப்பாட்டை பார்ப்போருக்கு உணர வைப்பது சவாலான காரியம் தான். அச்சவாலிற்கு இப்படம் சரியாக ஈடு கொடுத்துள்ளது.

லால், ஸ்ரீனிவாசன், ஃபகத் மூவருமே தாங்கள் ஏற்ற கதாபாத்திரத்திற்கு முழு மரியாதை கொடுக்கும் உன்னத நடிகர்கள். இந்த மூவரையும் வைத்து, இந்த பேரலல் ஸ்க்ரீன்ப்ளே யுக்தியை கையாண்டுள்ள இப்படம், நடிகர்களுக்கேற்றார் போல் திரைக்கதையை வளைந்து கொடுக்காமல், திரைக்கதையின் வளைவிற்கேற்ப கதாபாத்திரங்களை நுழைத்ததில் அட! இதுவரை கண்களால் பேசிய ஃபகத்'தை கைகளாலும் பேச வைத்து.

ஒரு கையில் குழந்தையை வைத்து மறு கையில் ஆக்ரோஷப் பார்வையுடன் ஃபகத் கொடுக்கும் கும்மாங் குத்துகளில்... அடடே!

மலையாளப் படங்களை உலகெங்கும் எடுத்துச் செல்லும் பொருட்டு தொழில்நுட்ப மேன்மையை படத்திற்கு படம் வளர்த்துக் கொண்டு வருவதை பார்க்க முடிகிறது.

முப்பரிமாணத்தில் நடக்கின்ற திரைக்கதைக்கு வடிவம் அளித்துள்ள எடிட்டிங், படத்திற்கு சுவாரசியத்தை கூட்டியுள்ளது. கோலிவுட், டோலிவுட், பாலிவுட்டில் காணப்படுகிற குத்தாட்டமும், தடால் புடால் சண்டைக் காட்சிகளும் மாலிவுட்டில் சிறப்பு பெறாமலே இருந்தது. இப்போது அந்தக் குறையும் மலையாளத்தில் ஈடு கட்டப்படுகிறது. ஏய்.. ஆகாசத்த நான் பாக்குறேன்.. ஆறு கடல் நான் பார்க்கிறேன்.. என்று விண்ணிற்கும் மண்ணிற்கும் பறந்தடிக்காமல், சண்டைக்காட்சிகளிலும் யதார்த்தை கொடுத்துள்ள விதத்தில் இப்படம் மேலும் ரசிக்க வைக்கிறது. குறிப்பாக ஒரு பைக் சேசிங் காட்சி.

பார்வையாளர்கள் கதையை கணித்துவிடக் கூடாது என்ற போக்கில் இரண்டாம் பாதி ஏக போகமாக திணிக்கப்பட்டுள்ளதோ? ஃபகத் கையில் இருக்கும் குட்டிக் குழந்தையின் உணர்சிகளை பதிவு செய்திருக்கலாமோ? ஸ்ரீனிவாசன், லால் கதை ஒன்றிப் பிணைந்துள்ளதை போல் ஃபகத் கதையையும் இணைத்திருக்கலாமோ? படம் முடிந்த பின், இப்படி குறைகளைத் தேடினால், லாமோ லாமோ என்ற இக்கேள்விகள் பிறக்கின்றன. படம் பார்க்கையில் பெரிதாக குறைகள் என்று மனதில் எதுவும் பதிந்து போகவில்லை.

நாட்டில் கடத்தல் நிகழ்கிறது, சுயநலம் திகழ்கிறது, தீமை நீள்கிறது இருப்பினும் பிறருக்கு நன்மை பயக்கும் அந்த மனிதத்தின் துணையால் தான் இன்னும் இந்த உலகம் வாழ்கிறது. அந்த மனிதத்தை எப்போதும் நம்மிடம் வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி முடிக்கையில் 'ஆஹா..!' என உச்சுக் கொட்ட வைக்கிறது வாசுதேவ் சனலின் இயக்கம்.

மொழி, மதத்தினைக் கடந்து படத்தில் அமைந்துள்ள மனிதம் நம்மை ஈர்க்கும்!

சினிமா பித்தனின் ஃபேஸ்புக் பக்கம்>https://www.facebook.com/CinemaPithan

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

மேலும்