சொல்லத் தோணுது 32: அவமானச் சின்னங்கள்!

By தங்கர் பச்சான்

எழுத்தால் எழுதி இதனைப் புரிய வைத்துவிட முடியும் என எனக்குத் தோன்றவில்லை. யாருக்குப் புரிய வைக்கிறோம், புரிந்து எதுவும் நடக்கப் போவதில்லை என்பதும் எனக்கு நன்றாகவே தெரிகிறது.

‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது’ என்பதெல்லாம் தெரிந்தும் அவனது பாரம்பரியத் தொழிலைத் தொடரவே நினைக்கிறான். அவனது உழைப்பில் உடல் வளர்த்து, உயிர் வளர்த்துக் கொண்டிருக்கும் மக்களும், அரசாங்கமும் கண்டு கொள்ளாமல் விட்டது போல் இயற்கை யும் அவனை கைவிட்டுக் கொண்டிருக் கிறது. அவனும் அவனது குடும்பமும் மற் றவர்களைப் போல் வாழ வேண்டுமென யாருமே நினைப்பதில்லை.

தங்களது ஊதிய உயர்வுக்காகவும் இன்னும் பிற தேவைகளுக்காகவும் இந்த நாட்டில் ஒரு உழவனைத் தவிர, யார் வேண்டுமானாலும் போராடி வெற்றி பெற்றுவிட முடியும். காலம் முழுக்க உழைத்து ஏற்கெனவே பட்டினியில் கிடக்கும் அவன், யாரை நம்பிப் போராடுவது?

எந்த ஒரு உழவனும் அவன் உற்பத்தி செய்த பொருட்களை, தன் குடும்பத்துக் காக வைத்துக் கொள்வதில்லை. இர வோடு இரவாக அதை கால் விலைக்கும் அரை விலைக்கும் கொடுத்துவிட்டு, கடன்காரனிடம் இருந்து தப்பித்துக் கொள்ள முடியுமா என்றுதான் நினைக் கிறான். நடைபாதையில் கைக்குட்டை களையும், விளையாட்டுப் பொருட்களை யும் விற்றுப் பிழைக்கிறவனுக்குக் கிடைக் கிற வருமானத்தில் கால் பகுதிகூட ஒரு குடும்பமே உழவு மாடுகளை வைத்துக் கொண்டு, இரவும் பகலும் நிலத்திலேயே உழன்றாலும் ஆண்டுக்கு ஒருமுறைகூட உழவனுக்குக் கிடைப்பதில்லை.

இந்தியாவுக்கு என்றைக்கு விடுதலை கிடைத்ததோ அப்போதே உழவனும், இந்த நிலங்களும் விலங்கிடப்பட்டன. இருப்பவற்றைக் கொண்டே யார் கையை யும் எதிர்பார்க்காமல் செய்துவந்த உழவுத் தொழிலை, கடன் வாங்கி பெரும்பொருள் செலவழித்து செய்யும் தொழிலாக மாற்றிவிட்டார்கள். நிலத்தில் கால் படாதவர்களும், ஒருபிடி மண்ணை தொட்டுக்கூடப் பார்க்காத ஆட்சி யாளர்களும், வேளாண்மை விஞ்ஞானி களும்தான் ஓராண்டுத் திட்டம், ஐந்தாண் டுத் திட்டம் எனத் தீட்டி இந்தத் தொழி லையும், உழவனையும் படுகுழியில் தள் ளினார்கள். திட்டங்களைத் தீட்டியவர் களுக்கும், செயல்படுத்தியவர்களுக்கும் பெருவாழ்வு கிடைத்தது.

மூலைக்கு மூலை, கிராமத்துக்கு கிராமம் ஓசையின்றி உழவன் தற்கொலை செய்துகொள்கிறான். இவன் இவ்வாறு சாகக் கூடாது என்பதற்காகத் தான் கால்வயிறு கஞ்சி குடித்துக் கொண் டிருந்த அவனது நிலத்தையும் பிடுங்க, அவசர அவசரமாக நாடாளுமன்றத்தைக் கூட்டி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆயுதங்களைக் கொண்டுத் தாக்கி கொலை செய்வதுதான் கொலைப் பட்டி யலில் சேர்க்கப்படுகிறது. இவ்வாறு திட் டங்களைத் தீட்டி செய்யப்படும் கொலை கள் எந்தப் பட்டியலிலும் சேருவதில்லை. புது தில்லியில் ஆயிரக்கணக்கானவர்கள் முன்னாலேயே தூக்கில் தொங்கிய உழவன் கஜேந்திர சிங், ஆசைக்காகவா செத்தான்? “என்னால் எனது மூன்று பிள்ளைகளுக்கு உணவும், உடையும், வசதியும் செய்து தர முடியவில்லை. என் நிலம் என்னைக் காப்பாற்றவில்லை. என் குடும்பத்தை நடுத் தெருவில் விட்டு விட்டு அவர்களை கடனாளியாக்கிச்விட்டு போகிறேனே!” எனக் கதறிவிட்டுத்தான் செத்தான்.

‘மற்றவர்களைப் போல அவன் போராடாமல் ஏன் செத்தான்’ என் கிறார்கள். எதிரி யார் என்பதே தெரிய வில்லை. யாரை எதிர்த்து, எப்படிப் போராடுவது?

கால்நடைக் கழிவுகளைக் கொண்டு பயிர் செய்தவனிடத்தில் இரசாயன உரங் களைக் கொடுத்தார்கள். சாம்பல் தெளித்து, பூச்சிகளை விரட்டியவ னிடத்தில் இரசாயன பூச்சிக்கொல்லி களைக் கொடுத்தார்கள். மழை நீரைக் கொண்டு இயற்கையாக உழவுத் தொழில் செய்தவனிடத்தில் கடன் கொடுத்து கிணறு வெட்டச் சொல்லி, கனரக இயந் திரங்களைக் கொடுத்து கடனாளியாக்கி னார்கள்.

அதிகாரத்தில் இருந்தவர்கள் ஏரி களையும், குளம், குட்டைகளையும், ஆறுகளையும் தங்கள் வசமாக்கி மூடி விட்டார்கள். நிலவளம் அழிந்து, தன் னிடம் இருந்த கால்நடைகளும் அழிந்து ஒவ்வொரு உழவனும் மன நோயாளியாக, உற்பத்தி செலவு பல மடங்குக் கூடிப் போய் வாழவழியின்றி குடும்பத்தையே காலம் முழுக்க தீராதக் கடனாளியாக்கிவிட்டுச் சாகிறான்.

சென்ற வாரம் வீசிய பெருங்காற்று மழையில், இன்னும் அறுவடைக்கு மூன்று மாதங்களே இருக்கிற நிலையில் இருந்த இரண்டு ஏக்கர் வாழை மரங் களும் முறிந்து சேதமடைந்தன. அதைப் பார்த்து ஏற்கெனவே இருக்கிற கட னோடு இதற்காக வாங்கியக் கடனும் சேர்ந்துவிட்டதே எனக் கலங்கிப்போன எனக்குத் தெரிந்த ஒரு ஏழை உழவன், தற்கொலை செய்துகொண்டு மாண்டு போனான். சென்ற மாதம் எங்கள் கிரா மத்தில் இதேபோன்று ஒரு தற்கொலை. இவையெல்லாம் நமக்கு உணர்த்தும் சேதி என்ன? எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக, எல்லோராலும் புது தில்லிக்குச் சென்று ஊடகத்தினரின் தொலைக்காட்சி கேமராக்களுக்கு முன்னால் தற்கொலை செய்துகொள்ள முடியுமா?

இம்மக்களுக்கு உணவளித்த, கணக் கில் வெளிவராத இலட்சக்கணக்கான உழவர்கள் மாண்டுகொண்டே இருப் பதை இன்னும் எத்தனைக் காலத்துக்குத் தான் அனுமதிக்கப் போகிறோம்? இதன் பாதிப்பை ஆட்சியாளர்கள்தான் உணரவில்லையென்றால், மக்களும்கூட உணரவில்லை. ஒரு தோசைக்கு 100 ரூபாய் கொடுக்கத் தயாராகிவிட்ட வர்கள், குளுகுளு அறைக்குச் சென்று ஒரு உடைக்கு 5 ஆயிரம் ரூபாய் தாராளமாக செலவு செய்பவர்ச்கள், உழவன் பொருளுக்கு மட்டும் பேரம் பேசுவார்கள்.

ஒரு காலத்தில் தொழில் போட்டி என்பதுகூட நம் நாட்டில் குடும்பத்துக்கு உள்ளேயே இருந்ததால், சூதாட்டத்தில் பணம் வைத்துத் தோற்றால்கூட , அந்தப் பணம் நம்மிடமே இருந்தது. இப்போது குடும்பத்துடன் போட்டியிட கார்ப்பரேட் எனும் பன்னாட்டு முதலாளிகளை இறக்கி விடுகிறார்கள். கால் காணி, அரைக் காணி வைத்திருந்தவன் எல்லாம் இந்த கார்ப்பரேட் முதலாளிகளிடம் உழவுத் தொழில் செய்து போட்டிப் போட முடி யுமா? இத்தொழிலையும், உழவர்களை யும் கொன்றுவிட்டு இயற்கை வளங்களை அழித்து நம் பணத்தை மூட்டைக்கட்டி அவர்களின் நாடுகளுக்குக் கொண்டு போகத் தொடங்கிவிட்டார்கள்.

தற்கொலை செய்துகொண்டவனுக்கு வழங்கப்படுகிற உதவித் தொகையோ, சலுகையோ, நிவாரணமோ தீர்வைக் கொடுத்துவிடுமா? அல்லது செய்தி களில் வருத்தம் தெரிவித்தால் மட்டும் போதுமா?

நாடு முழுக்க 32 வேளாண்மைப் பல்கலைக்கழகங்களை உருவாக்கி வைத்துக்கொண்டு, எதை ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்? அவர்களின் ஆராய்ச்சியெல்லாம் அரைக் காணி, ஒருகாணியை வைத்துக்கொண்டு தலைமுறை தலைமுறையாக செத்து மடியும் பெரும்பான்மை உழவர்களுக் குப் பயன்படுவதே இல்லை. 10 ஆண்டு களுக்குப் பின் எது நடக்கும் என்பதை கணக்கில் கொண்டு திட்டங்களை வழி வகுக்க உதவுபவர்கள்தான் விஞ்ஞானி கள். அவர்களின் திட்டங்கள் இத்தொழி லுக்கு எதிரானதாகவும், அழிவைத் தருவதாகவும் உணரும்போது மாற்று நடவடிக்கை மேற்கொள்ள வேண்டாமா?

நீர்நிலைகளை மீட்டெடுத்து, நில வளங்களைக் காப்பாற்றி செலவில்லாத பழையமுறை உழவுத் தொழிலை நடைமுறைப்படுத்தும்படியான நடவடிக் கைகளை உடனடியாகச் செய்யவேண் டியதுதான் இதற்கெல்லாம் உடனடி யான ஒரே தீர்வு. இதை விட்டுவிட்டு ஆட்சியில் பொறுப்பேற்ற உடனே, அவ னிடம் இக்கிற மீதி உயிரான நிலத் தையும் பிடுங்குவதற்கான சட்டத்தை உருவாக்குவதையே முதன்மையாக நினைத்தால், இனி இந்நாட்டின் உழவர்கள் மட்டுமல்ல; பிற மக்களும் பட்டினியால்தான் தற்கொலை செய்துகொள்வார்கள்.

உழவுத் தொழிலுக்காக தனி நிதிநிலை அறிக்கையை உருவாக்கி செயல்படுத் தாத ஆட்சியாளர்களே இந்நாட்டுக்குத் தொடர்ந்து வாய்த்திருக்கிறார்கள். தொடர்வண்டி சேவைகளுக்காக தனி நிதிநிலை உருவாக்குபவர்களுக்கு, இது கட்டாயம் என்பது புரிவதில்லை. ஒதுக்குவதே சிறு தொகை. அதையும் இத்தொழில் என்னவென்றே தேரியாத அமைச்சர்கள், அதிகாரிகள், நிர்வாகி களிடம் கொடுத்துவிட்டு மானியத்தை யும், நிவாரணத்தையும், கடன்களை யும் கொடுத்துவிட்டால் போதும் என இருந்துவிடுவது தொடரும்வரை இந்தத் தற்கொலைகள் தொடர்ந்துகொண்டு தான் இருக்கும். நிலங்களும் அழிந்து கொண்டுதான் இருக்கும்.

இதற்கு ஒரு தீர்வு எட்டும் வரை இந்நாட்டின் அவமானச் சின்னங்கள் தற்கொலை செய்துகொள்ளும் இந்த அப்பாவி உழவர்களா? இல்லை அவர் களைக் கண்டுகொள்ளாமல் எல்லா வற்றையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் இந்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களா? நீங்கள்தான் சொல்ல வேண்டும்!



- சொல்லத் தோணுது...

எண்ணங்களை பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 hour ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

10 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

26 days ago

மேலும்