இன்று அன்று | 1048 மே 18: இந்தியர் கண்டுபிடித்த ஒமர் கய்யாமின் பிறந்த நாள்

By சரித்திரன்

துயரமே மேன்மையாக்குகிறது மனிதனை/

சிப்பியின் சிறைக்குள் தாக்குப்பிடிப்பது

முத்தாக்குகிறது நீர்த்துளியை/

இவ்வுலகின் செல்வங்கள் அழிந்தாலும் உன் இதயம் இருக்கட்டும் ஒரு கோப்பை போல/

கோப்பை காலியாகும்போது அது நிரப்பப்படலாம் மறுமுறை.

(ஒமர் கய்யாமின் ‘ருபாயியத்’, தமிழில்: தங்க. ஜெயராமன், ஆசை)

“கடவுளின் பிரியத்துக்குரியவர்கள் அவருடைய இதயத்தில்தான் வசிக்கிறார்கள். அவர்களுடைய இதயத்தில் கடவுள் வசிக்கிறார். எல்லோரும் ஒரே இதயத் துடன், வெவ்வேறு கால கட்டத்தில் இந்த உலகத்துக்கு அதே ஒளியை, அதே வாழ்க்கையை, அதே செய்தியை வழங்கியிருக் கிறார்கள்.” ஒமர் கய்யாமின் கவிதைகள் சிலவற்றைத் தனது குருவிடம் சுவாமி கோவிந்த தீர்த்தர் வாசித்துக் காட்டியபோது, குரு சொன்ன வார்த்தைகள்தான் இவை. வேறொரு மதத்தையும், வேறொரு தேசத்தையும், வேறொரு காலத்தையும், வேறொரு மொழியையும் சேர்ந்த ஒருவரின் செய்தி இந்த எல்லைகளையெல்லாம் தாண்டி எல்லோரையும் வசப்படுத்திய அதிசயம் தான் ஒமர் கய்யாம் பாடல்கள். கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நம்மிடையே இன்னும் பொருத்தமானதாக, அழகியதாக, ஆழமானதாக இருப்பதுதான் ஒமர் கய்யாமின் செய்தி.

1941-வரை ஒமர் கய்யாமின் பிறந்த நாள் எதுவென்று உறுதிப்படுத்தப்படாமலேயே இருந்தது. அந்த ஆண்டில் சுவாமி கோவிந்த தீர்த்தர் வெளியிட்ட ‘தி நெக்டார் ஆஃப் கிரேஸ்’ என்ற புத்தகத்தின் மூலம் இந்தச் சிக்கலுக்குத் தீர்வுகாணப்பட்டது. ஒமர் கய்யாமின் மறைவுக்குப் பிறகு எழுதப்பட்டிருந்த ஒரு நூலிலிருந்து ஒமர் கய்யாமின் ஜாதகம் கோவிந்த தீர்த்தருக்குக் கிடைக்கப்பெற்றது. வானசாஸ்திரத்திலும் சோதிடத்திலும் நிபுணராக இருந்த கோவிந்த தீர்த்தர் கிரக நிலைகள், நட்சத்திர நிலைகள் போன்றவற்றைக் கொண்டு ஒமர் கய்யாமின் பிறந்த நாள் கி.பி. 1048, மே 18 என்பதை உறுதி செய்தார். சுவாமி கோவிந்த தீர்த்தரின் கணக்கு துல்லியமானதுதான் என்று அந்நாள் சோவியத் ஒன்றியத்தைச் சேர்ந்த ‘அறிவியல் துறைகளுக்கான சோவியத் மன்றம்’ உறுதிசெய்தது.

முந்தைய பாரசீகத்தின் வடகிழக்குப் பகுதியான குராசானின் தலைநகராக இருந்த நிஷாபூரில் பிறந்த ஒமர் கய்யாம், சிறு வயதிலிருந்தே பல்துறை அறிவு கொண்டு விளங்கினார். ஒமர் கய்யாம் தனது காலத்தில் மிகவும் புகழ்பெற்றவராக இருந்தார். ஆனால், கவிதைகளுக்காக அல்ல; தத்துவம், வானியல், கணிதம் போன்ற துறைகளுக்காக. அல்ஜிப்ரா எனும் இயற்கணிதத்தில் அவரது பங்களிப்பு இன்றுவரை முக்கியமானதாகக் கருதப்படுகிறது. செல்ஜுக் மன்னனுக் காக வடிவமைக்கப்பட்ட நாட்காட்டியின் உருவாக்கத்தில் ஒமர் கய்யாமும் பங்கு பெற்றிருந்தார். தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் கிரிகோரியன் நாட் காட்டியைவிட அது துல்லியமானது என்றும் நிபுணர்கள் சொல்கிறார்கள். இப்படியாக, ‘தனி மனிதப் பல்கலைக்கழக’மாகத் திகழ்ந்த ஒமர் கய்யாம், அவரது கவிதை களுக்காக அனைத்துத் தரப்பினராலும் வெறுக்கப்பட்டார். சூஃபிகள் உட்பட பலரும் ஒமர் கய்யாமைக் கடவுளுக்கு எதிரானவர் என்று கருதினார்கள்.

ஒமர் கய்யாமைப் பற்றி ஆராய்ந்து ‘தி வைன் ஆஃப் விஸ்டம்’ என்ற நூலை வெளி யிட்ட மெஹ்தி அமின்ரஜாவி, ஒமர் கய்யாம் இறைமறுப்பாளர் அல்ல என்கிறார். அப்புறம் ஏன் அவரது கவிதைகள் அடிப்படை வாதிகளால் வெறுக்கப்பட்டன? நாளை கிடைப்பதாக நம்பப்படும் சொர்க்கத்துக்காக இன்றைய தினத்தை, இக்கணத்தைப் புறக்கணிப்பதை விமர்சித்தவர் ஒமர் கய்யாம். மேலும், மதநம்பிக்கையோ, மதநம்பிக்கை யின்மையோ எந்தக் கருத்துகளாக இருந்தாலும் அது நமது சிந்தனையையும் பார்வையையும் சிறைப்படுத்திவிடக் கூடாது என்றவர் ஒமர் கய்யாம். இதைத்தான், ‘மதநம்பிக்கை, நம்பிக்கையின்மை இரண்டி லிருந்தும் விடுபட்டிருப்பதுதான் எனது மதம்’ என்றார் அவர். இதற்காகத்தான் எல்லாத் தரப்பிலும் உள்ள அடிப்படைவாதிகள் அவரை வெறுக்கிறார்கள். இதற்காகத்தான் சுதந்திரச் சிந்தனையாளர்கள் உலகமெங்கும் அவரைக் கொண்டாடுகிறார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

30 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்