ஆவலை வீசுவோம் 2 - தேடியந்திர வகைகள்

By சைபர் சிம்மன்

உலகில் மொத்தம் எத்தனை தேடியந்திரங்கள் இருக்கின்றன தெரியுமா? எல்லாம் தெரிந்ததாக கருதப்படும் கூகுளேகூட இந்தக் கேள்விக்கு சரியான பதிலை சொல்ல முடியாமல் விழிக்கிறது தெரியுமா? நம்ப முடியாவிட்டால், கூகுள் தேடல் கட்டத்தில் மொத்த தேடியந்திர எண்ணிக்கை என்று டைப் செய்து தேடிப்பாருங்கள். இந்தத் தேடலுக்கு பதிலாக கூகுள் பட்டியலிடம் இணைப்புகள் எதிலும் தேடியந்திர எண்ணிக்கை பற்றிய துல்லியமான பதில் இருக்கிறதா என்றும் பாருங்கள்!

உண்மையில் பிரச்சனை என்ன என்றால், உலகில் மொத்தம் எத்தனை தேடியந்திரங்கள் இருக்கின்றன என்று அநேகமாக யாருக்குமே தெரியாது. இதற்கு முக்கிய காரணம் இதுவரை உருவாக்கப்பட்ட தேடியந்திரங்கள் மற்றும் தற்போது புழக்கத்தில் உள்ள தேடியந்திரங்கள் எங்கும் முழுமையாக பதிவு செய்யப்படவில்லை என்பதுதான். அதிலும் தேடியந்திரங்களில் பல வழக்கொழிந்து போய்விட்டன எனும் நிலையில், மொத்த தேடியந்திரங்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதோ அறிவதோ பெரிய சவால் தான்.

கவலை எதற்கு?

தேடியந்திர எண்ணிக்கையை குறிப்பிடும் தளங்கள்கூட ஒன்று ஆயிரக்கணக்கில் இருக்கலாம் என்றும் உத்தேச கணக்கை சொல்கின்றன. தேடியந்திரங்களை பட்டியலிடும் தளங்களில்கூட அந்தப் பட்டியல் எந்தவித்ததிலும் முழுமையானதும் அல்ல; அப்டேட்டாடதும் இல்லை.

சரி, தேடியந்திர எண்ணிக்கை பற்றிய கவலை எதற்கு?

முதல் விஷயம் தேடியந்திரங்களில் எல்லாவற்றுக்கும் பதில் இல்லை என்பதை உணர்த்துவதற்கு. தேடியந்திரங்களை மட்டும் நம்ப கூடாது, மனித தேடல், வல்லுனர் உதவி போன்றவற்றை நாடியாக வேண்டும் என்பதையும் இது உணர்த்துகிறது. இந்த அம்சங்கள் பற்றி தொடரில் உரிய இடங்களில் விரிவாக பார்க்கலாம்.

இப்போது விஷயம் என்ன என்றால், தேடியந்திரங்களின் மொத்த எண்ணிக்கை சரியாக தெரியாமல் இருந்தாலும் அதைவிட முக்கியமானது எண்ணற்ற தேடியந்திரங்கள் இணைய உலகில் இருக்கின்றன என்பதுதான். பரவலாக அறியப்பட்ட தேடியந்திரங்கள் தவிர சின்னதும் பெரிதுமாக ஏராளமாக தேடியந்திரங்கள் இருக்கின்றன. இவற்றில் சில கூகுளுக்கு மாற்று என மார்தட்டிக்கொள்பவை. ஆனால் பல தேடியந்திரங்களோ இந்தப் போட்டிக்கு வராமலே தங்களுக்கான பிரிவில் கச்சிதமாக செயல்பட்டு கொண்டிருப்பவை.

குறிப்பிட்ட தேவைக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட மணி மணியான தேடியந்திரங்கள் பல இருக்கின்றன. இவற்றுக்காக எல்லாம்கூட தேடியந்திரங்கள் இருக்கின்றனவா என வியக்க வைக்கும் தேடியந்திரங்களும் இருக்கின்றன. உதாரணத்துக்கு கரோக்கி பாடல்களை தேடித்தருவதற்காக என்றே பல தேடியந்திரங்கள் இருக்கின்றன. கவிதைக்கான தேடியந்திரங்கள் இருக்கின்றன. இவ்வளவு ஏன் மகாகவி ஷேக்ஸ்பியருக்காக என்று பிரத்யேக தேடியந்திரங்கள் இருக்கின்றன. இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

இத்தனை தேடியந்திரங்கள் இருப்பதை எத்தை பேர் அறிந்திருக்கின்றனர்? பல நேரங்களில் நீங்கள் பொது தேடியந்திரத்தில் தேடிக்கொண்டிருப்பதை விட, குறிப்பிட்ட தேடியந்திரத்தில் தேடுவது நெத்தியடியாக பலன் தந்து நேரத்தை மிச்சமாக்கும் தெரியுமா?

உதாரணத்துக்கு கணிதத்திற்கு என்று தனி தேடியந்திரம் இருக்கிறது. சட்டத்திற்கு என்று பிரத்யேக தேடியந்திரம் இருக்கிறது. இசைக்கு என்று தேடியந்திரங்கள் கொட்டிக்கிடக்கின்றன. இவை தவிர ஒலிகளுக்கான தேடியந்திரங்கள் இருக்கின்றன. புகைப்பட மற்றும் வீடியோ தேடியந்திரங்களும் இருக்கின்றன. இவற்றை எல்லாம் எப்படி வகைப்படுத்துவது?எப்படி புரிந்து கொள்வது? எப்படி பயன்படுத்துவது?

தேடியந்திரம் என்றால் என்ன?

இப்போது தேடியந்திரம் என்றால் என்ன எனும் விளக்கத்துக்கு போகலாம். தேடியந்திரங்களுக்கு பலவகையான விளக்கங்கள் இருக்கின்றன. அடிப்படையில் தேடியந்திரம் என்றால் இணையத்தில் தகவல்களை தேடித்தருவதற்கான நிரல் என புரிந்து கொள்ளலாம். இணையதளம் என புரிந்து கொண்டாலும் தவறில்லை.

அழகான உதாரணம் வேண்டும் என்றால், இணைய உலகை ஒரு நூலகமாக உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். ஒரு நூலகம் அல்ல, நூலகங்கள் இணைந்த நூலகங்களின் நூலகம். இந்த நூலகத்தில் நமக்கு தேவையான தகவல்கள் எங்கு இருக்கின்றன என்பதை தேடி எடுப்பதற்கான வழி தான் தேடியந்திரங்கள். உண்மையில் தேடியந்திரங்கள் தகவல்களை கண்டுபிடித்து தருவதில்லை, மாறாக இருக்கும் தகவல்களை எடுத்து அல்லது மீட்டு தருகின்றன. ஆங்கிலத்தில் தகவல் மீட்பு என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த பணியை தேடியந்திரங்கள் எப்படி செய்கின்றன என்றால், இணையதளங்களை எல்லாம் பட்டியலிட்டு வைத்துக்கொண்டு தேடப்படும் குறிச்சொற்களுக்கு ஏற்ப தகவல்களை எடுத்து தருகின்றன.

இதற்காக அவை தேடல் சிலந்திகள் எனும் மென்பொருள்களை உலாவவிட்டு இருக்கும் இணையதளங்களை எல்லாம் பட்டியலிடுகின்றன.அநேகமாக இணையத்தில் உள்ள பெரும்பாலான இணையதளங்களையும் அவற்றில் உள்ள தகவல்களையும் தேடல் சிலந்திகள் உலாவி எடுத்து பட்டியலிட்டு விடுகின்றன. (முழு இணையத்தையும் எந்த தேடியந்திரத்தாலும் பட்டியலிட முடியவில்லை. தேடல் சிலந்திகள் உலாவ முடியாத ஆழ்கடல் இருப்பதாக சொல்கின்றனர். இந்த ஆழ்வலை பற்றியும் பின்னர் பார்க்கலாம்).

இந்த செயல் கிராலிங் என்று இணைய மொழியில் சொல்லப்படுகிறது. இதன் மூலம் திரட்டப்படும் இணையதளங்களின் பட்டியல், அட்டவணை (இண்டெக்ஸ்) என சொல்லப்படுகிறது.

இந்த பட்டியலில் இருந்து குறிச்சொல்லுக்கு ஏற்ப பொருத்தமான இணையதளங்களை தேடியந்திரங்கள் பட்டியலிடுகின்றன. முடிவுகளை பட்டயலிடுவதற்காக ஒவ்வொரு தேடியந்திரமும் ஒரு பிரத்யேக வழியை வைத்திருக்கின்றன. இவற்றில் கூகுளுடைய பேஜ் ராங்க் முறை சிறந்ததாக இருப்பதாக பரவலாக கருதப்படுகிறது.

ஆனால், பொதுவாக தேடியந்திரங்கள் இணையத்தில் துழாவி இணையதளங்களை திரட்டி அட்டவணையாக்கி அவற்றில் இருந்து கேட்பதை எடுத்து தருகின்றன.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், இணையத்தில் துழாவி தளங்களை திரட்டுவது பொதுவாக எந்த தேடியந்திரமும் செய்யக்கூடியது மற்றும் செய்ய வேண்டியது. இதில் உள்கட்டமைப்பு ஆற்றல் தவிர மற்ற அம்சங்களில் பெரிய வேறுபாடு கிடையாது. எல்லா தேடியந்திரங்களும் ஏறக்குறைய ஒன்று தான்.

ஆனால், இணையம் பல்கி பெருகி கொண்டிருப்பதால் அதில் உலாவி தளங்களை திரட்டுவதும், அவற்றை அப்டேட் செய்து கொண்டே இருப்பதும் பகாசுரப்பணியாகும். இவை புதிய தேடியந்திரத்துக்கு அத்தனை எளிதல்ல. ஆகவே ஒரு தேடியந்திரத்தை சீர் தூக்கி பார்க்கும் போது முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் அது சொந்தமாக இணையதள அட்டவணையை பெற்றிருக்கிறதா என்பதும் அந்த அட்டவணை எத்தனை பெரிதாகவும், துடிப்பானதாகவும் இருக்கின்றன என்பதுதான்.

பொதுத் தேடியந்திரங்கள்

பெருந்தேடியந்திரங்களான கூகுள், பிங், யாஹு மற்றும் கிகாபிளாஸ்ட், பிளக்கோ போன்ற ஒரு சில தேடியந்திரங்கள் தவிர பல தேடியந்திரங்களுக்கு சொந்தமாக இணையதள அட்டவணை கிடையாது. யாண்டெக்ஸ், பெய்டு போன்ற சர்வதேச தேடியந்திரங்களும் இந்த வசதியை கொண்டுள்ளன.

இது ஒன்றும் பெருங்குறையும் அல்ல. பெரிய தேடியந்திரங்களின் இணையதளங்களின் அட்டவணையை அடிப்படையாக கொண்டு குறிசொல்லுக்கு ஏற்ப இணையதளங்களை பட்டியலிடுவதி மட்டும் பிரத்யேக வழியை பின்பற்றும் தேடியந்திரங்களும் இருக்கின்றன. இவ்வளவு ஏன் கூகுள் தேடலையே பயன்படுத்தி குறிப்பிட்ட நோக்கிலான சேவையை அளிக்கும் தேடியந்திரங்களும் இருக்கின்றன; உதாரணம் பசுமை தேடியந்திரங்கள்.

மாறாக பாடல்களை பட்டியலிடும் இசை தேடியந்திரங்கள் தங்களுக்கான பிரத்யேக தேடல் வழிகளை பெற்றிருக்கின்றன.

தேடியந்திரங்கள் செயல்படும் விதத்தின் அடிப்படையில் இணையத்தில் உலாவி தளங்களை திரட்டி பட்டியலிடுபவை கிராலர் அடிப்படையிலானவை என்று வகைப்படுத்தப்படுகின்றன. இவையே பொது நோக்கிலான தேடியந்திரங்கள் என சொல்லப்படுகின்றன. பரவலாக அறியப்படும் கூகுள், யாஹூ மற்றும் பிங் போன்றவை இந்த ரக பொது தேடியந்திரங்கள்தான். தேடியதிந்திரம் என குறிப்பிடும் போது அது பெரும்பாலும் பொது தேடியந்திரமாகவே அமைகிறது.

இணைய டைரக்ட்ரி

இன்னொரு முக்கிய வகையான தேடியந்திரமும் இருக்கிறது. இவை தேடல் சிலந்திகளை பயன்படுத்தாமல், முடிவுகளை பட்டியலிட மென்பொருளை நாடாமல் மனித தேர்வு மூலம் செயல்படுபவை. இந்த வகை தேடியந்திரங்கள் இணைய டைரக்ட்ரி என்று குறிப்பிடப்படுகின்றன. இவை ஒருகாலத்தில் கோலோச்சி இப்போது பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டாலும் கூட மிகவும் முக்கியமானவை. எப்படி, ஏன்? என்று பின்னர் பார்க்கலாம்.

இந்த இரண்டும் கலந்தவை ஒட்டு தேடியந்திரங்கள் என்று சொல்லப்படுகின்றன. இந்த பிரிவிலும் பல இருக்கின்றன. இவை தவிர தன்னளவில் தனி தேடியந்திரமாக செயல்படாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட தேடியந்திரங்களை தேடித்தரும் சேவையை அளிப்பவை மெட்டா தேடியந்திரங்கள் என குறிப்பிடப்படுகின்றன. மகத்தான மெட்டா தேடியந்திரங்களையும் அவற்றின் பின் உள்ள கோட்பாடுகளையும் பின்னர் பார்க்கலாம்.

தேடியந்திரம் என குறிப்பட்டதும் பெரும்பாலும் கூகுளே பலருக்கும் நினைவு வந்தாலும் மற்ற தேடியந்திரங்கள் மாற்று தேடியந்திரங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. மாற்று தேடியந்திரங்களில் முக்கியமானவை என விரல் விட்டு எண்ணக்கூடிய தேடியந்திரங்களும் மண்ணைக்கவ்விய எண்ணற்ற தேடியந்திரங்களும் இருக்கின்றன.

மாற்று தேடியந்திரங்கள் தவிர குறிப்பிட்ட துறை அல்லது தேவைக்கான தனி தேடியந்திரங்களும் இருக்கின்றன. இவற்றை சிறப்பு தேடியந்திரங்களாக கொள்ளலாம் என்றால் இன்னும்கூட குறுகலான பரப்பில் சிறப்பாக செயல்படும் குறுந்தேடியந்திரங்களும் இருக்கின்றன. உதாரணம் வெப்கேமிராக்களை மட்டும் தேடித்தருபவை. இப்போது இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள சாதனங்களை எல்லாம் தேடி பட்டியலிடும் ஷோடான் தேடியந்திரம் திகில் எந்திரமாக வர்ணிக்கப்படுகிறது.

இன்னும் கூட ஏராளமான தேடியந்திரங்கள் இருப்பதை, கூகுளிலேயே தேடியந்திரங்கள் என தேடிப்பார்த்து வியக்கலாம். வியப்பு ஒரு புறம் இருக்க இணைய அனுபவத்தையும், தகவல் பெறுவதையும் சீராக்கி கொள்ள மாற்று தேடியந்திரங்கள், சிறப்பு மற்றும் குறுந்தேடியந்திரங்களை அறிந்தி வைத்திருப்பது நல்லது. இவை இணையவாசிகளின் முன் உள்ள வாய்ப்புகளை உணர்த்துவதோடு தேடல் கலை தொடர்பான விழிப்புணர்வையும் உண்டாக்கும்.

அறிவோம் வாருங்கள்.

சைபர்சிம்மன், இணைய வல்லுநர், தொடர்புக்கு enarasimhan@gmail.com

| முந்தைய அத்தியாயம்: >ஆ'வலை' வீசுவோம் 1 - இணையத் தேடல் - ஓர் அறிமுகம் |

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்