மேற்கே போன ரயில்

By பார்த்திபன்

ஒரு ஊர்ல... என்று ஆரம்பித்து தினமும் இரவில் என் குழந்தைகளுக்கு ஏதாவது கதை சொல்வேன். பெரும்பாலும் வழக்கமான கதைகளைச் சொல்லாமல், நானே சில கதாபாத்திரங்களை உருவாக்கி அப்படியே வாய்க்கு வந்ததை சொல்லிக் கொண்டே போவேன். இடையில் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஏற்ப கதை மாறிக் கொண்டே வரும். கடைசியில் எங்களுக்கு ஓர் அற்புதமான கதை கிடைத்துவிடும். சந்தோஷமாக தூங்கிவிடுவோம். கிட்டத்தட்ட அப்படிப்பட்டதுதான் நம்ம ஊருக்கு ரயில் வந்த கதையும்.

162 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்தான், 1853 ஏப்ரல் 16ந் தேதி, இந்தியாவில் முதல் ரயில் ஓடியது. முக்கிய வியாபார ஸ்தலமான பம்பாயில் இருந்து தானேவுக்கு அந்த ரயில் இயக்கப்பட்டபோது, வருங்கால இந்தியாவை வடிவமைப்பதில் இந்த வாகனம் எந்தளவு பயன்படப் போகிறது என்பதை அங்கிருந்த யாருமே அப்போது அறிந்திருக்கவில்லை.

ரயில் என்ற வாகனம் எப்போதிருந்து வரலாற்றின் பக்கங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது என்பதைத் தேடிக் கொண்டே போனபோது, அது என்னை 17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் கொண்டு போய் நிறுத்தியது.

1604-ல் இங்கிலாந்தின் வொலாட்டன் பகுதியில் மரத்தால் தண்டவாளம் அமைத்து, அதன்மீது சில பெட்டிகளை ஒன்றிணைத்து குதிரையைக் கொண்டு இழுத்துப் பார்த்திருக்கிறார்கள். ஆனால் அது பெரிய அளவில் வெற்றி பெற்றதாக குறிப்புகள் இல்லை. இருப்பினும் இதுதான் ரயில்வே என்ற அமைப்புக்கு பிள்ளையார்சுழி போட்டிருக்கிறது.

சரியாக இரண்டு நூற்றாண்டுகள் கழித்து, 1804-ல் ரிச்சர்ட் ட்ரெவிதிக் (Richard Trevithick) என்ற பொறியாளர் உலகின் முதல் நீராவி ரயில் என்ஜினைக் கண்டுபிடித்தார்.

என்ஜின் கிடைத்த பிறகு ரயில் குறித்த பரிசோதனை முயற்சிகள் தீவிரமடைந்தன. 1825-ல் உலகின் முதல் பயணிகள் ரயில் இங்கிலாந்தில் ஓடியது. இல்லை.. இல்லை.. 1830களில்தான் முதல் ரயில் ஓடியது என ஒரு சாரார் கூறுகின்றனர். அது எப்படி இருந்தாலும், இந்தியா அப்போது இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தில் இருந்ததால் அந்த கண்டுபிடிப்பு இங்கும் வந்தது.

சும்மா ஒன்றும் அவர்கள் இந்தியாவில் ரயிலை இயக்கவில்லை. 1846-ல் அமெரிக்காவில் ஏற்பட்ட கடும் பஞ்சுத் தட்டுபாடு, இங்கிலாந்து வணிகர்களை இந்தியாவை நோக்கி திசைதிருப்பியது. இந்தியாவின் பல பகுதிகளில் மானாவாரியாக பஞ்சு விளைந்தது. அதை எல்லாம் உடனுக்குடன் அருகில் உள்ள துறைமுக நகரங்களுக்கு கொண்டு சென்று இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும். ஆனால் இந்தியாவின் உட்பகுதியில் விளையும் பஞ்சை துறைமுகப் பகுதிக்கு கொண்டு வரவே பல நாட்கள் ஆனது. இந்த கால விரயத்தை தவிர்க்கத்தான் இங்கு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அப்போது ஆங்கிலேய உயர் அதிகாரியான டல்லவுசி (Lord Dalhousie), இந்தியா முழுவதையும் ரயில் மூலம் இணைக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். குறிப்பாக பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் ஆகிய துறைமுக நகரங்களை இணைப்பது முக்கியம் என்றார். இதற்காக இந்தியாவின் முதல் ரயில் நிறுவனமான கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வே கம்பெனி மசோதா 1847ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அப்போது இந்தியாவை ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மசோதா தோல்வியைத் தழுவியது.

இதனிடையே 1848-ல், தனது 36வது வயதில், இந்தியாவின் இளம் கவர்னர் ஜெனரலாக பொறுப்பேற்றார் டல்லவுசி. அவருக்கு ஏற்கனவே ரயில்வே குறித்த தெளிவான பார்வை இருந்ததால், அவரது முயற்சியால் 1849ஆம் ஆண்டு ரயில்வே மசோதா இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இரண்டாவது முறையாகத் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது.

கிழக்கிந்திய கம்பெனிக்கும், கிரேட் இந்தியன் பெனின்சுலார் ரயில்வே கம்பெனிக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி முதல்கட்டமாக ரயில்வே லைன் அமைக்க ரயில்வே கம்பெனி 5 லட்சம் பவுண்டுகளை முதலீடு செய்யும் என்றும், பின்னர் விரிவாக்கம் செய்யும்போது, இதனை 10 லட்சம் பவுண்டுகள் வரை அதிகரித்துக் கொள்ளலாம் என்றும் முடிவானது. இதன் அடிப்படையில் 1852, நவம்பர் மாதம் பம்பாய் – தானே இடையிலான ரயில் பாதை தயாரானது.

சோதனை முயற்சிகள் எல்லாம் முடிந்து, 1853 ஏப்ரல் 16-ம் தேதி, சனிக்கிழமை, மதியம் 3.35 மணிக்கு இந்தியாவின் முதல் ரயில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது. பம்பாயின் போரி பந்தரிலிருந்து தானே வரையிலான 34 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த ரயில் இயக்கப்பட்டது. 14 பெட்டிகளைக் கொண்ட அந்த ரயிலில் 400 விருந்தினர்கள் பயணம் செய்தனர். இந்த வரலாற்று நிகழ்வை பொதுமக்கள் பார்த்து மகிழ வேண்டும் என்பதற்காக அன்றைய தினம் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது.

புகைவிட்டுக் கொண்டே இரைச்சலுடன் ஓடிய அந்த இரும்பு வாகனத்தை ஏராளமானோர் விழிகள் விரிய வியப்புடன் பார்த்தனர். சிலர் பீதியில் பின்னங்கால் பிடரியில் அடிக்க அலறிக்கொண்டு ஓடினர். இந்த வேடிக்கைகளை எல்லாம் பார்த்தபடி, 75 நிமிடங்களில் வெற்றிகரமாக இலக்கை வந்தடைந்த ரயிலுக்கு தானேவில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

உண்மையில் இதுவெல்லாம் கல்கத்தாவில் நடந்திருக்க வேண்டியது. காரணம், அப்போது கல்கத்தா தான் இந்தியாவின் தலைநகரமாக இருந்தது. கல்கத்தாவில் இருந்து முதல் ரயிலை இயக்க நிறைய முயற்சிகள் நடந்தன.

பம்பாய், ஹவுரா ஆகிய இரண்டு நகரங்களில் இருந்து இயக்குவதற்கான ரயில் என்ஜின்களும், பெட்டிகளும் இங்கிலாந்தில் இருந்து ஏறத்தாழ ஒரே சமயத்தில் தான் கப்பலில் அனுப்பி வைக்கப்பட்டன. கிழக்கிந்திய ரயில்வேக்கான என்ஜினை ஏற்றி வந்த குட்வின் என்ற கப்பல் திசை மாறி ஆஸ்திரேலியா சென்றுவிட்டது. ரயில் பெட்டிகளை ஏற்றிவந்த மற்றொரு கப்பல் வங்கக் கடலில் நடுவழியில் கவிழ்ந்துவிட்டது.

இதெல்லாம் போதாதென்று கிழக்கிந்திய ரயில்வே கம்பெனி இருப்புப்பாதை அமைக்க விரும்பிய பாதையின் ஒரு பகுதி பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. பிரெஞ்சுக்காரர்கள் கிழக்கிந்திய ரயில்வேக்கு இடம்தர மறுத்தனர்.

இப்படி விதி நாலாபக்கமும் தலையை நன்றாக விரித்துப் போட்டு ஆடியதில், கிழக்கே போக வேண்டிய ரயில், முதலில் மேற்கே போய்விட்டது. பம்பாய் நகரம் போட்டியில் கல்கத்தாவை மண்ணை கவ்வ வைத்துவிட்டது. பின்னர் ஒருவழியாக ஓராண்டு கழித்து, 1854 ஆகஸ்ட் 15ந் தேதி ஹவுரா – ஹூக்ளி இடையே கிழக்கு இந்தியாவின் முதல் பயணிகள் ரயில் சேவையை தொடங்கியது.

நம்ம மெட்ராஸ் பக்கம் ரயில் விடும் திட்டம் இதற்கெல்லாம் முன்பே தொடங்கியது. 1845ஆம் ஆண்டே இதற்கென மெட்ராஸ் ரயில்வே கம்பெனி லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் பல காரணங்களால் இந்த வேலை தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. பின்னர் ஒரு வழியாக தென்னிந்தியாவில் இருப்புப் பாதை அமைக்கும் பணியை மெட்ராஸ் ரயில்வே கம்பெனி 1853இல் தொடங்கியது. அதற்காக அது தேர்ந்தெடுத்த இடம்தான் ராயபுரம்.

புனித ஜார்ஜ் கோட்டைக்கு பக்கத்தில் இருந்ததால், ராயபுரத்துக்கு அந்த அதிர்ஷ்டம் அடித்தது. விசாலமான அறைகள், உயரமான தூண்கள், அழகான முகப்பு என பிரம்மாண்டமாக கட்டிமுடிக்கப்பட்ட ராயபுரம் ரயில் நிலையத்தை, மெட்ராஸ் ஆளுநர் ஹாரிஸ் பிரபு 1856, ஜூன் 28ந் தேதி திறந்து வைத்தார். ஜூலை 1ந் தேதி தென்னிந்தியாவின் முதல் ரயில் இங்கிருந்து புறப்பட்டது.

ஆற்காடு நவாப்பின் தலைமை இடமாக இருந்த ஆற்காடு வரை இந்த ரயில் இயக்கப்பட்டது. ஆளுநர் ஹாரிசும், சுமார் 300 ஐரோப்பியர்களும் இந்த ரயிலில் பயணித்தனர். ஆம்பூர் சென்றடைந்த ரயிலுக்கு துப்பாக்கி குண்டுகளும், பேண்டு வாத்தியங்களும் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் மற்றொரு ரயில் ராயபுரத்தில் இருந்து திருவள்ளூர் வரை இயக்கப்பட்டது.

இப்படிதான் ஆரம்பத்தில் தட்டுத்தடுமாறி தொடங்கிய இந்திய ரயில்வேயின் பயணம் பின்னர் ராக்கெட் வேகமெடுத்து, இன்று இந்தியா முழுவதும் உள்ளங்கை ரேகைகளைப் போல ரயில் பாதைகள் பின்னிப் பிணைந்து ஓடிக் கொண்டிருக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

22 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்