| வலைப்பதிவுத் தளங்கள், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் சமூக வலைதள பக்கங்களில், தமிழில் தீவிரமாக இயங்கி வருபவர்களை அறிமுகப்படுத்தும் புதிய ஆன்லைன் தொடர். |
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்துக்கு அருகில் இருக்கும் கரட்டடிபாளையம் என்னும் ஊரில் பிறந்தவர் வா.மணிகண்டன். இளநிலைப் பொறியியல் படிப்பை, சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியிலும், முதுநிலைப் பட்டப் படிப்பை (எம்.டெக்.) வேலூர்ப் பல்கலைக் கழகத்திலும் முடித்தவர், பெங்களூரில் இருக்கும் பன்னாட்டு நிறுவனத்தில் மென்பொருள் ஆலோசகராகப் பணியாற்றுகிறார்.
எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராத ஆர்வம் கொண்டு, சமூகம், இலக்கியம், அரசியல், கல்வி மற்றும் அன்றாட நிகழ்வுகள் குறித்து, தினமும் தன் இணையதளத்தில் எழுதி வருபவர். www.nisaptham.com என்கிற அவரது வலைதளத்துக்காக 2013-ம் ஆண்டின் சுஜாதா இணைய விருதைப் பெற்றவர். இதுவரை இரண்டு கவிதை நூல்கள், ஒரு சிறுகதைத் தொகுப்பு, இரண்டு கட்டுரைத் தொகுப்புகள் என ஐந்து புத்தகங்களை எழுதியுள்ளார். சமீபத்தில் வெளிவந்த "லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன்" என்னும் சிறுகதைத் தொகுப்பு இணைய வாசகர்களிடையே பெறும் வரவேற்பைப் பெற்றது.
தற்போது மணிகண்டன், வேலை, எழுத்து தவிர தனது "நிசப்தம் அறக்கட்டளை" மூலம் ஏராளமானோருக்கு மருத்துவம் மற்றும் கல்வி உதவிகளைச் செய்து வருவதோடு, கல்வி ஆலோசகராகவும் செயல்பட்டு வருகிறார். நிசப்தம் அறக்கட்டளைக்கு, கடந்த நவம்பரிலிருந்து மார்ச் வரைக்கும் பத்து லட்ச ரூபாய் பணம் வந்திருப்பதாகவும், இதுவரை ஐந்து லட்ச ரூபாய்க்கு உதவிகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறும் மணிகண்டன், அவை குறித்த விவரங்களை உடனுக்குடன் தன் தளத்தில் பதிவேற்றிவிடுகிறார்.
கடிதங்கள் மூலம் தனது இணைய வாசகர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதோடு, அக்கடிதங்களையும் தளத்தில் பதிவேற்றுகிறார். கவிதைகளைப் பற்றிப் பெரிதாய் ஒன்றும் தெரியாது என்னும் மணிகண்டன், "மின்னல் மாதிரி மனதில் தோன்றுவதுதான் கவிதை. அதற்கு பிறகு எவ்வளவு நகாசு வேலைகளைச் செய்கிறோமோ அவ்வளவு தூரம் கவிதை விலகிக் கொண்டேயிருக்கும்" என்றும் எழுதுகிறார்.
2005-ல் நிசப்தம் என்னும் வலைதளத்தைத் தொடங்கியவர் பத்து வருடங்களாக தொடர்ந்து எழுதி, 1000க்கும் மேற்பட்ட வசீகரிக்கும் தனது படைப்புகளுடன், தனியாய் ஒரு வாசகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார். எழுத்தார்வத்தையும், வாசிப்பையும் ஊக்கப்படுத்தும் மணிகண்டன் புதிதாய்த் தொடங்கப்பட்ட மின்னிதழ்கள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரை மற்றும் கவிதைத் தொகுப்புகளை தனது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார்.
பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டே அவரால் இயற்கையின் தேவையையும், காற்று மாசுபடுதல் குறித்த விழிப்புணர்வுக் கட்டுரையையும் எழுத முடிகிறது. "நம் ஒவ்வொருவரால் புவி எவ்வளவு மாசடைகிறது, அதை எப்படித் தடுக்கலாம்" என சுற்றுச்சூழலியலும் பேசுகிறார்.
"பொழுதுபோக்காய்ச் சுற்றுலா செல்பவர்களில், இரண்டு பேருக்கு ஒரு கார். பத்து கார்களாவது குழுவாகச் செல்லும். சென்றுவிட்டு வரட்டும். ஆனால் நகைமுரண் என்னவென்றால் ‘Save Nature' என்று தங்களது வாகனத்தில் ஸ்டிக்கரை ஒட்டியிருப்பார்கள்" என்னும் அவர் வார்த்தைகள் நிதர்சனமாய் நெற்றிப்பொட்டில் அறைகின்றன. | வாசிக்க - >எவ்வளவு துரோகங்களைச் செய்கிறோம்? |
பிறமொழிப் படங்கள் குறித்த தனது பார்வையை, நம் அருகில் நடக்கும் சம்பவங்களோடு கோர்த்து அழகியலுடன் எடுத்துச் சொல்லும் வல்லமைக்குச் சொந்தக்காரர் மணிகண்டன். "The Fault in our Stars" என்னும் அமெரிக்கப் படத்தின் நாயகியை, புற்றுநோய் காரணமாக அவள் அடையும் துயரங்களை, மணிகண்டனின் வீட்டுக்கு அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சஹானாவின் வழியாக, வாசகர்களுக்கு உணரவைக்கிறார். விமர்சனம் என்ற பெயரில் இல்லாமல், சினிமாவை ஒரு பார்வையாளனாக எப்படிப் புரிந்து கொண்டார் என்று எழுதுவது மணிகண்டனின் பாணி. | வாசிக்க - >நட்சத்திரங்கள் சரியில்லை |
பச்சைக்காதலன் என்றொரு புனைவு. அது உண்மையாகவும் கூட இருக்கலாம். நாடு முழுக்க மரங்களை நட்டு, வளர்த்து, பாதுகாத்து அவற்றை நேசிப்பதிலேயே தன் முழு வாழ்க்கையையும் கழித்த ஒருவரைச் சந்தித்ததாக எழுதியிருந்த அக்கதையின் ஊடாக நம்மால் மிகவும் இயல்பாகப் பயணிக்க முடிகிறது. கதையின் இறுதியில் சற்றே நெகிழ்ந்த மனத்தையும், மரத்தை வெட்டக்கூடாது என்ற மெல்லிய நிலைப்பாட்டையும் படிப்பவர்களினூடே விதைக்கிறது. | வாசிக்க - >பச்சைக் காதலன் |
பத்தி வகை எழுத்துக்களைத் தாண்டி, புனைவுக் கதைகளை அலாதியான சுவாரஸ்யத்துடன் சொல்லும் திறன் இவருக்கே உரித்தானது. சொல்லுகின்ற கதையின் போக்குக்கே நம்மை அழைத்துச் சென்று, கனத்த மெளனத்துடனோ, ஆழ்ந்த யோசனையுடனோ, விரிந்த மனத்துடனோ வாசகர்களை நனவுலகத்துக்கு மீட்டு வருவதில், இவரின் புனைவுக் கதைகள் அதீதச் தேர்ச்சி பெற்றிருக்கின்றன. மொத்தத்தில் இவரின் 'நிசப்தம்' வலைதளம், படிப்பவர்களை பெரும் சப்தத்தோடு அலைகளாய் அதனுள்ளிழுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
வா.மணிகண்டன் நிசப்தம்:>http://www.nisaptham.com/
|நீங்கள் வாசித்து வரும் நல்ல பக்கங்களை பரிந்துரைக்கramaniprabhadevi.s@thehindutamil.co.in என்றமின்னஞ்சலில் இணைப்புகளை அனுப்பலாமே! |
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
3 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago