நம்பிக்கை இந்தியா: இருளுக்கான காத்திருப்பு போதுமே!

"நான் யாருடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்பதை நானே தீர்மானிப்பேன். அது திருமணத்துக்கு முன்பா அல்லது திருமணத்துக்கு அப்பாற்பட்டா என்பதும் எனது முடிவே" என தங்கள் சுதந்திர உணர்வை இணையத்தில் ஓங்கி முழங்கிக் கொண்டிருக்கின்றனர் என் எலைட் சகோதரிகள்.

மற்றொருபுறம் அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு. வானம் எப்போது இருட்டும்...என் வலி எப்போது தீரும் என ஏங்கியபடி, அன்றாடம் வெளிக்குப் போவதே போர்க்களமாக இருக்கிறது எனது 'டாய்லட்' வசதி இல்லாத சகோதரிகளுக்கு.

சமூக மாற்றத்தில் இதை இடைவெளி என்ற சொல்வதைவிட பள்ளத்தாக்கு என்றே சொல்ல வேண்டும்.

ஒரு பேரவலத்தின் சாட்சியம் இது. இதைக் கொஞ்சம் படிங்க...

உத்தரப்பிரதேசம் மாநிலம் லோதிப்பூர் கிராமத்தில் உள்ள பெண்கள் கூறுவதைக் கேளுங்களேன். அடிவயிற்றில் மல, ஜலம் முட்டிக்கொண்டு இருந்தாலும். அந்த வேதனையோடு அன்றாடப் பணிகளை மேற்கொள்ள நாங்கள் பழகிவிட்டோம். இருள்...அது எப்போது வானத்தை கவ்வுமோ அப்போதே எங்களுக்கு விடுதலை கிட்டும். இருள் பரவும் தருணத்தில் நாங்கள் வயல்வெளிகளை நோக்கி படையெடுப்போம். எவ்வளவு நேர வேதனை. அதை போக்கிக் கொள்ள வேண்டாமா? இந்த உபாதை ஒருபுறம் என்றால் பாம்புகள், வன விலங்குகளும் கூட சவால்தான். நிம்மதியாக இயற்கை உபாதையை கழிக்க நாங்கள் இவ்வளவு மெனக்கிட வேண்டியிருக்கிறது.

நம் வயது வந்த குழந்தைகளுக்கான நாப்கின்களை தரம் பார்த்து வாங்கித் தருகிறோம். ஆனால், லோதிப்பூரில் உள்ள தாய் ஒருவர் தனது மகள் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் அவள் நினைத்த நேரத்தில் இயற்கை உபாதையை கழிக்க முடியாமல் தவிப்பதாக வேதனைப்படுகிறார்.

மழைக்காலங்களில் இருளில் மந்தைக்குச் செல்லும் போது பலமுறை வழுக்கி விழுந்த அனுபவமும் இந்தப் பெண்களுக்கு உண்டு.

இது உத்தரப்பிரதேசத்தில் மட்டுமே நடக்கவில்லை. நாட்டில் கிட்டத்தட்ட எல்லாப் பகுதிகளிலும் இந்த அவலம் இருக்கிறது. இந்தியாவில், 63.6 கோடி பேர் திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர். இதில், நாம் முதலிடத்தில் இருக்கிறோம். இந்த முதலிடம் நமக்குத் தேவையா?

இன்னும் எத்தனை காலம்தான் இருளுக்காக காத்திருப்பது. இருளுக்கான காத்திருப்பு போதுமே.

ஆமாம், இப்போதுதான், விரல் விட்டு எண்ணும் அளவுக்கு வெகு சில ஆண்டுகளாகத்தான், திறந்தவெளியை கழிப்பிடமாக பயன்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தும் அரசின் பிரச்சார விளம்பரமும் காஸ்மடிக் விளம்பரங்களுக்கு ஈடாக ஒளி/ஒலிபரப்ப்படுகிறது. இதுவே மாற்றத்திற்கான பெரிய வித்து.

இதை அடுத்துகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் வகையில்தான் அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அண்மையில் வெளியாகி இருக்கும் அந்த அறிவிப்பில், கழிப்பறை கட்ட அரசாங்கமே ரூ.4000 அளிக்கும் என உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சித் துறை இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதாவது, ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்ட அரசாங்கமே ரூ.4000 அளிக்கும். இதில் பாதித் தொகை கழிப்பறை கட்டுமானப் பணி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே வழங்கப்படும். மீதி பாதி அரசுப் பணத்தில் கழிப்பறை கட்டடப் பணி தொடங்கிவிட்டதை உறுதி செய்யும் வகையில் புகைப்பட ஆதாரங்களை அரசாங்கத்திடம் சமர்ப்பித்து அதை அரசும் உறுதி செய்துவிட்ட பின்னரே வழங்கப்படும். கழிப்பறை கட்டுவதற்கான கூடுதல் நிதியை மாநில அரசும் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யும்.

இத்திட்டத்தின் மூலம், கழிப்பறை இல்லாத எல்லா வீட்டுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். அங்கீகரிக்கப்படாத காலனி குடியிருப்புகள், வரையறுக்கப்படாத சேரிக் குடியிருப்புகள் என எந்த பேதமும் இல்லை. கழிப்பறை இல்லாவிட்டால் அதனைக் கட்டிக்கொள்ள உடனடியாக நிதி ஒதுக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை கட்டி பயன்படுத்துவதில் பொது சுகாதாரம் மட்டும் அடங்கவில்லை. மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும் அவலத்தையும் போக்க முடியும்.

விழிப்புணர்வு அவசியம்:

அரசு ஆவணத்தின்படி, 503,142 கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. ஆனாலும், ஆண்டாண்டு காலமாக திறந்தவெளியை பயன்படுத்திய கிராமத்து மக்களிடம் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. காரணம் போதிய விழிப்புணர்வு இல்லாமை. எனவே, கழிப்பறைகளை கட்டிக் கொடுப்பது எவ்வளவு அவசியமோ, அதே அளவுக்கு அவற்றைப் பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவசியம்.

கழிப்பறைகளை மக்கள் பயன்படுத்துகிறார்களா என்பதையும் கண்காணிப்பது அவசியம் என்கின்றனர் சுகாதார அமைச்சக அதிகாரிகள். எனவேதான், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.62,009 கோடி நிதியில் 15%-த்தை கழிப்பறை பயன்பாட்டு விழிப்புணர்வுக்கு பயன்படுத்துகிறது அரசு.

பிரதமர் மோடி வலியுறுத்துவதுபோல், கோயில்களை விட கழிப்பறைகளை அதிகமாகக் கட்டுவோம். இருளுக்கான காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைப்போம்.

தகவல் உதவி: www.thebetterindia.com

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE