எதனொன்றின் உண்மையையும் அறிய வேண்டும் என்றால்; அதைத் திருப்பிப் போட்டுப் பாருங்கள் என்று மார்க்ஸ் சொல்லியிருக்கிறார்’ என ஜெயகாந்தன் ஒருமுறை கூறினார். ஜெயகாந்தனின் எழுத்தின் பாங்கு எனக்குப் பளிச் என்று புலப்பட்டது போல் இருந்தது அப்போது.
இந்தக் கூற்றை, எங்கள் நெடிய வாழ்வில் ஓரிரு தடவைகளுக்கும் அதிகமாக ஜெயகாந்தன் சொல்லியிருக்கிறார்.
இந்த சூத்திரத்தை வைத்து அவர் பல கதைகள் எழுதிவிட்டதாகக் கருது கிறேன். மேல்தட்டு மக்களின் நயமிக்க நாகரிக வார்த்தைகளைக் காட்டிலும், பரம பாமரரான மனிதரின் கொச்சை வசைகளிலும்கூட சத்தியம் கொலுவிருந்ததை அவர் எடுத்துக் காட்டினார்.
குடும்பத்தின் மெத்தப் படித்து உத்தியோகம் பார்க்கும் எல்லோரையும் விட, ஒரு மொட்டைத் தலை பிராமண விதவை முற்போக்கான ஒரு முடிவை எடுக்கிறாள்.
குரு, சீடப் பாத்திரங்களைக் கலைத் துப் போட்டு அவர் எழுதிய கதைகள் எல்லாம் தத்துவார்த்தரீதியில் மிகவும் கொண்டாடப்பட்டன.
இலக்கிய சம்பந்தமான விஷயங் களில் மட்டும் ஜெயகாந்தன் காரல் மார்க்ஸின் அந்த ஆலோசனையைப் பின்பற்றினார் இல்லை; நிகழ் காலச் சம்பவங்களையும் அவ்வாறே பரிசீலித்தார்.
நான் ஒரு முறை, ‘‘உத்தியோகத்தில் இருந்தபோதுதான் சம்பளமும் அதுவும் இதுவும் வாங்க வங்கிக் கவுண்டர்களின் முன்னே நீளநீளமாகக் காத்துக் கிடந்தனர். இப்போது ஓய்வுபெற்ற பின்பு, மூன்று நான்கு தேதிகளுக்குப் பிறகு வந்து சாவதானமாக வாங்கிக்கொள்ளலாமே! இப்போதும் சம்பளம் வாங்குவோர் வரிசையைக் காட்டிலும் பென்ஷன் வாங்குவோர் வரிசைதான் நீளமாக இருக்கிறது!’’ என்று என் பேதைமையில் ஒரு சமூக விமர்சனத்தைப் பிரகடனம் செய்தேன்.
ஜெயகாந்தன் உடனே, ‘‘நீ ஏன் அப்படி நினைக்கிறாய்? வேலையில் இருந்தபோது எல்லோரையும் அடிக்கடி பார்க்க முடிந்தது. ஓய்வுபெற்ற பின் அவ்வாறு பார்க்க முடியவில்லை. முதல் நாள் அன்றே போனால் எல்லோரையும் பார்க்கலாமே என்று அவர்கள் வரலாம் இல்லையா?’’ என்றார்.
ஜெயகாந்தனின் ‘ஊருக்கு நூறு பேர்’ நாவலை கற்பனைப் புரட்சி (Imaginary Revolution) என்றார்கள். ஜெயகாந்தன் அதை புரட்சிகரமான கற்பனை (Revolutionary Imagination) என்று திருத்தினார்.
ஒரு முறை, ‘‘தூக்கம் வரவில்லை ஜே.கே’’ என்று யாரோ சொன்னார்கள். ‘‘தூக்கம் வராவிட்டால் என்ன? நல்ல நல்ல நினைவுகளாக நினைத்துக் கொண்டிருக்கலாமே?’’ என்றார் ஜெய காந்தன்.
ஜெயகாந்தன் கூடுவிட்டுக் கூடு பாய்வதில் வல்லவர்.
சரஸ்வதி இதழில் அவர் எழுதிய கதை ஒன்றில், குழந்தைக்குப் பாலூட்டும்போது ஒரு தாய் எய்துகிற பரவச நிலையை வர்ணித்திருந்தார். அது ஆபாசம் என்று ஒரு விமர்சனம் எழுந்தது. அப்போது அந்த விமர்சனங் களுக்குப் பதிலாக அவர் எழுதிய கட்டுரையில் தலைப்பே ‘கூடுவிட்டுப் கூடு பாய்தல்’தான். அந்தக் கட்டுரை யில் ஒரு பிரபந்தப் பாசுரம் எடுத்தாளப்பட்டிருந்தது.
எழுத்தாளன் எந்தப் பாத்திரத்தை எழுதினாலும், அதை எழுதுகிறபோது அந்தப் பாத்திரமாகவே மாறிவிட வேண்டும். அப்போதுதான் அந்தப் படைப்பு சிறக்கும். அவ்வாறு, தான் எழுதுகிற பாத்திரமாகத் தானே மாறிவிடுவதுதான் ஜெயகாந்தனின் தனிச் சிறப்பு ஆகும்.
நாயக, நாயகிகளின் மனசுக்குள் புகுந்து பார்த்து எழுதுகிற அவர், அவ்விதமே எதிர் தரப்பின் வாதத்தையும் எப்போதும் சிறப்பாக எழுது வார். ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’ நாவலில், ஒரு குறிப்பிட்ட நடிகரை எதிர் மறையாகவே முழுவதும் சித்தரிப்பதைத் தவிர்த்து, அந்த ‘சித்தாளு’வின் புருஷன் வாயாலேயே அவருக்கும் அந்த நடிகருக்கும் ஒரு நியாயம் கற்பித்திருப்பார்.
‘‘உன் பொண்டாட்டி திமிரெடுத்து ‘இது’ கொயுத்து அலையறதுக்கு, அதுக்கு வாத்தியார் இன்னாடா பண்ணு வாரு? அவரு படத்தைக் கட்டிக்கினு இவ கெடந்தா அதுக்கு அவரு மேலேயாடா பயி’’ன்னு செல்லமுத்து மனசு அவ னையே குத்திக் கொடைஞ்சிது. அவ அயுதான்.
‘‘வாத்யாரே… வாத்யாரே மன்சிக்க வாத்தியாரே! நானும் ஒரு ஆம்பள இல்லியா..? இன்னாதான் உன் ரசிகன்னாலும் நானும் ஒரு ஆம்பளை இல்லியா வாத்யாரே! அதிலேதான் அந்த ரோசத்திலேதான் வந்த ஆத்திரத்துல இன்னா செய்றோம்னு தெரியாம செஞ்சிட்டேன். நீ இன்னா வாத்யாரே செய்வ? இந்தக் கம்சலைக் கய்தே மட்டும்தானா? ஊரிலே இன் னும் எம்மாங் கய்தெங்க உம்மேல ‘கேரி’ புடிச்சி அலையுதுங்க! அதுங்க களுக்கெல்லாம் நீதான் என்ன பண்ணுவே? எவந்தான் இன்னா பண்றது’ என்று அந்த சித்தாளுவின் புருஷன் செல்லமுத்து அழுவான்.
‘அக்னிப் பிரவேசம்’ கதை உண்மை யில் சேரி வாழ் மக்களிடையேதான் நிகழ்ந்தது. அதை அப்படியே ஓர் உயர்மட்ட சமுதாயத்தில் பிரயோகித்துக் கதை எழுதி, அதன் விளைவுகளைக் கண்டு, அதற்கப்புறம் கற்பனையாக அவர் விரித்து எழுதியது, இன்றைய சமூகப் போக்குகளை எல்லாம் சேர்த்து ஆராயும் ஆழமான ஒரு நாவலாயிற்று.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலில், ஒவ்வொரு பாத்திரத்துக் குள்ளும் அவர் கூடுவிட்டுக் கூடு பாய்ந்திருப்பதைப் படிக்கும்போது நாம் உணரலாம்.
‘லவ் பண்ணுங்கோ சார்’ கதையில் ஒரு ஹோட்டல் முதலாளிக்குள் நுழைந் திருப்பார். ‘நான் ஜன்னலோரம் உட்கார்ந்திருக்கிறேன்’ கதையில் ஜீவிய காலம் பூராவும் திருமணமாகாமலே கழிக்கும் ஓர் எளிய, ஆனால் கம்பீரமான பேதைப் பெண்ணின் மனசுக்குள் நுழைந்திருப்பார். வெயில் படப் பட கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து படுத்துக்கொள்ளும் ஒரு சோம்பேறி யின் சோம்பேறித் தனத்தையும் நன்கு துய்த்தார்.
‘இடிந்த கோயிலில் சிவலிங்கம் இருந்தால் அதனை வணங்கிடுவார், நலிந்த உடலும் கோயிலையா, நாதன் உள்ளிருப்பதை யாரறிவார்?’’ என்று பாடும் நோயாளியின் உணர்ச்சிகளையும் கொஞ்சம் குடிபுகுந்து பார்த்தார். அவர் பார்வையின் நியூட்ரினோக்கள் எல்லாவிதமான பாத்திரங்களையும் எளிதில் ஊடுருவின!
- தொடர்வோம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pisakuppusamy1943@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
30 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago