நீங்கள் ஐபோன் அபிமானியோ, ஆண்ட்ராய்டு ஆர்வலரோ... அது அல்ல முக்கியம். ஸ்மார்ட்போன்களின் செயல்திறனிலும் ஆற்றலிலும் வளரும் வேகத்தை கண்டு வியக்காமல் இருக்க முடியாது. நேற்று பார்த்த போன் இன்று அவுட்டேடாகி நாளைய போன் இப்போதே கைகளில் தவழும் காலத்தில் இருக்கிறோம். ஸ்மார்ட்போன் உலகில் இன்னும்கூட அதிசயங்கள் நிகழ காத்திருக்கின்றன. அந்த அளவுக்கு தொழில்நுட்பம் பாஸ்ட் ஃபார்வேர்டாகி கொண்டிருக்கிறது.
உள்ளங்கை கம்ப்யூட்டர்களாக வியக்க வைக்கும் ஸ்மார்ட்போன்களில் இந்த விஸ்வரூப வளர்ச்சிக்கு மூலக்காரணம் சின்னஞ்சிறிய சிப்புகள்தான் என்பது பலரும் அறிந்ததது. ஆனால் சிப்புகள் இப்படி ஆற்றலில் பெருகிக்கொண்டே இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது ஒரு மூன்று பக்க கட்டுரை என்பது உங்களுக்கு தெரியுமா? அந்தக் கட்டுரைக்குள் ஒளிந்து கொண்டிருந்த ஒரு கருத்து தான் கம்ப்யூட்டர் உலகின் முதலாம் விதியாக கொண்டாடப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஆம், மூர் விதி என்று பிரபலமாக குறிப்பிடப்படும் அந்தக் கோட்பாடுதான் சிப்புகளின் அசுர வளர்ச்சிக்கு பின்னே இருந்து வழிகாட்டிக் கொண்டிருக்கிறது. சிப்களின் நாலு கால், எட்டு கால் பாய்ச்சலை மூர் விதி சரியாக கணித்துச் சொன்னதோடு இப்போது பொன்விழா காண்கிறது என்பது வியப்பிலும் வியப்பு.
மூர் விதி தொழில்நுட்ப தீர்க்கதரிசனமாக அமைந்ததுடன், கால வெள்ளத்தில் தாக்குப் பிடித்து தொடர்ந்து செல்லுபடியாகி கொண்டிருப்பதுதான் அதிசயம்.
அதென்ன மூர் விதி? என்று கேட்லாம். கார்டன் மூர் எனும் சிப் உலக முன்னோடி முன்வைத்த கருத்து இது. சிப் ஜாம்பவான் இன்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனரும் இவர்தான்.
கம்ப்யூட்டர் சிப்புகளில் பொருத்தக்கூடிய டிரான்சிஸ்டட்டர்களின் எண்ணிக்கையானது ஒவ்வொரு ஆண்டும் இருமடங்காகி கொண்டே இருக்கும் எனும் கணிப்பு தான் மூர் விதி என்று குறிப்பிடப்படுகிறது.
இதன் உட்பொருள் என்ன என்றால், சிப்களின் ஆற்றல் அல்லது வேகம் இரட்டிப்பாகிக் கொண்டே இருக்கும் என்பதுதான். அது மட்டும் அல்ல, சிப்களின் வேகம் இரட்டிப்பாகும் அதேநேரத்தில் அதை உருவாக்குவதற்கான செலவும் குறைந்துகொண்டே போகும் என்பது இதன் முக்கியமான உப கருத்து.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல கார்டன் மூர் இந்தக் கருத்து மூலம் சிப்கள் மேலும் மேலும் ஆற்றலில் வளர்ந்து கொண்டே இருக்கும், அதற்கான தயாரிப்பு செலவும் குறைந்து கொண்டே போகும் என்று கூறி கம்ப்யூட்டர் உலகிற்கு ஊக்கமளித்து வழிகாட்டினார்.
சிப்களும் மூரின் கருத்துக்கு மிகவும் விசுவாசமாக நடந்துகொண்டு மூர்த்தியின் சுருங்கி ஆற்றலில் பெருகி கொண்டு ஸ்மார்ட்போனிலும் ஸ்மார்ட்வாட்சிலும், பிட்ன்ஸ் பட்டைகளிலும் விஸ்வரூப தரிசனம் காட்டிக்கொண்டிருக்கின்றன.
மூரின் கணிப்பில் ஒரு நம்ப முடியாத மாயம் இருக்கிறது. சிப்களின் வளர்ச்சி அவர் கணித்தபடியே முன்னேறிக்கொண்டிருக்கின்றன. இதனால் அவரது கணிப்பு நிருபணமாகி இருக்கிறது என்றால், இந்த வகை முன்னேற்றம் சாத்தியம் என்ற நம்பிக்கையை அளித்ததே மூரின் விதிதான். அந்த விதி தந்த தைரியத்தில்தான் சிப் நிறுவனங்கள் மேலும் மேலும் செயல்திறன் வாய்ந்த சிப்களை உருவாக்க முற்படுகின்றனர். சிப்களும் அவர்கள் சொல் பேச்சு கேட்டு இன்னும் எத்தனை லட்சம் டிரான்சிஸ்டர்களை வேண்டுமானால் கொடுங்கள் உள்ளே அடுக்கி கொள்கிறோம் என தங்களுக்குள் வைத்துக்கொள்கின்றன.
ஆக, சிப் உலகை இயக்குவதே மூர் விதி தான். இதனால்தான் கார்டன் மூரை கம்ப்யூட்டர் உலகில் தலையில் வைத்து கொண்டாடுகின்றனர்.
ஆரம்ப கால கம்ப்யூட்டர் எப்படி இருந்தன தெரியுமா? என்று கேட்டு ஒரு பெரிய அறையை அடைத்துக்கொண்டிருந்தன என்று விவரிக்கப்படும் மெயின்பிரேம் கால கம்ப்யூட்டரை கொஞ்சம் நினைத்துப்பாருங்கள். அதுகூட கற்கால சங்கதி விட்டு விடுங்கள். பத்து, பதினைந்தாண்டுகளுக்கு முந்தையை டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களை நினைத்துப் பாருங்கள். மெயின்பிரேமுடன் ஒப்பிட்டால் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் சூப்பர் கம்ப்யூட்டர்கள் என்று சொல்ல வேண்டும்.
இப்போது கையில் இருக்கும் ஸ்மார்ட்போனை அருகில் கொண்டு வைத்தால் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் மிரண்டுவிடும். இந்தத் திறன் பெருக்கத்திற்கு மூலக்காரணம் சிப்களின் வளர்ச்சி தான். இது மட்டுமா, மெமரி கார்டு முதல் சென்சார் வரை சின்னஞ்சிறிய சிப்புக்குள் பேராற்றல் ஒளிந்து கொண்டிருக்கின்றன.
இந்த ஆற்றலை தனது தீர்க்கதரிசனத்தால் கண்ட கார்டன் மூர் 1965-ம் ஆண்டில் எல்க்ட்ரானிக்ஸ் இதழில் எழுதிய கட்டுரையில் இதனை வெளிப்படுத்தியிருந்தார். அந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 19-ம் தேதி அந்த இதழ் வெளியானது. இண்டெக்ரேட்டட் சர்க்யூட்டில் மேலும் அதிக பாகங்களை பொருத்துவது... என தலைப்பிலான அந்த கட்டுரையில் மூர் சிப்களுக்கான எதிர்கால பாதையை சுட்டிக்காட்டியிருந்தார். கம்ப்யூட்டர்களின் மூளையாக திகழும் சிப்களின் ஆண்டுதோறும் திறனில் இரட்டிப்பாகும் எனும் கணிப்பையும் வெளியிட்டு விரிவாக விளக்கியிருந்தார்.
இந்தக் கட்டுரை வெளியான காலத்தில் இந்த கணிப்பு சாத்தியம் என்று நம்ப பலரும் தயாராக இல்லை என்பதை மீறி இன்று வரை மூர் விதி செல்லுபடியாகி கொண்டிருக்கிறது.
இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்ன என்றால், மூர் விதி என்று குறிப்பிடப்பட்டாலும் இது நியூட்டன் விதி போன்றது அல்ல. அடிப்படையில் இது ஒரு கருத்து அல்லது கணிப்பு உண்மையில் மூர் இதை விதி என்றும் குறிப்பிடவில்லை.
இந்தக் கட்டுரை வெளியான 10 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்ப கழக பேராசிரியரும் மூரின் சகாவுமான கார்வர் மியட் (Carver Mead ) என்பவர்தான் மூர் விதி என குறிப்பிட்டார். அதன் பிறகே இது பரவலாக கவனத்தை ஈர்த்தது. இதனிடையே மூர் தனது கணிப்பை ஒராண்டுக்கு ஒரு முறை என்பதற்கு பதில் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை சிப்பின் ஆற்றல் பெருகும் என சின்னதாக திருத்தம் செய்தார்.
இந்த மாற்றத்திற்கு பிறகும் மூர் விதி தாக்குப்பிடித்து நின்றிருக்கிறது. இப்போது பொன்விழாவும் காண்கிறது. 50 ஆண்டுகளாக தொழில்நுட்ப உலகின் அடைப்படை உந்துசக்தியாக இருந்து வருகிறது.
மூர் விதியை எடுத்துவிட்டால் தானியங்கி காரை இயக்க கூடிய வகையில் வேகமான சிப்பை உருவாக்குவது சாத்தியம் இல்லை என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் சொல்கின்றனர். இந்தத் துறையை முன்னோக்கி எடுத்துச் செல்லக்கூடிய ஒருங்கிணைந்த கணிப்பு இல்லாமல் வளர்ச்சி சாத்தியம் இல்லை என்பதே விஷயம்.
1969-ல் செலுத்தப்பட்ட ராக்கெட்டை இயக்கிய கம்ப்யூட்டர் சிப்பை விட தற்போது நவீன காரில் உள்ள நேவிகேஷன் அமைப்பிற்கான சின் 1.8 மில்லியன் மடங்கு வேகமானது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதேபோல ஐபோன் நவீன சிப் 1975 ஐபிஎம் கம்ப்யூட்டரைவிட ஒரு மில்லியன் மடங்கு ஆற்றல் கொண்டிருக்கிறது. ஐபிஎம் கம்ப்யூட்டரின் அளவு திமிங்கலம் என்றால் ஐபோனில் அளவு தங்க மீன் அளவு தான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எல்லாம் மூர் விதியின் மகிமை தான் காரணம்.
மூர் விதி 50 ஆண்டுகளை கம்ப்யூட்டர் உலகுக்கான அடிப்படை இயக்க விதியாக இருந்து வழிகாட்டி வந்திருக்கும் நிலையில் இப்போதுள்ள முக்கிய கேள்வி... இன்னும் எத்தனை காலம் மூர் விதி கைகொடுக்கும் என்பதுதான்!
மூர் விதி வெளியான எலக்ட்ரானிக்ஸ் இதழ் கட்டுரை:>Cramming more components onto integrated circuits
சைபர்சிம்மன், இணைய வல்லுநர், தொடர்புக்கு enarasimhan@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
12 hours ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
5 days ago
வலைஞர் பக்கம்
8 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
10 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
23 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
26 days ago