ஜெயகாந்தனோடு பல்லாண்டு 27- இன்ஷா அல்லாஹ்

By பி.ச.குப்புசாமி

பைபிளில் காரல் மார்க்ஸுக்குப் பிடித்த வரி, ‘பிரசங்கி’ என்கிற பகுதியில் வரும் ‘‘எல்லாவற்றுக்கும் ஒரு காலம் உண்டு’’ என்பதே!

சேர ஒரு காலம், பிரிய ஒரு காலம் என்று பிரசங்கி அதிலே தொடர்ந்து பேசுவார். ஜெயகாந்தனோடு சேர்ந்திருந்த காலம் முடிந்து போயிற்று. பிரிந்திருக்கும் காலம் தொடங்கிற்று.

ஜே.கே. ஒன்றும் அன்று அந்த பெசன்ட் நகர் மயானத்தில் தீக்கொழுந்துகளுக்குள் புகுந்துவிடவில்லை. பிற பூதங்களும் அவரைப் பங்கிட்டுக் கொள்ளவில்லை. நாம் நினைக்கிற ஜெயகாந்தன் தன் எழுத்துகளுக்குள்ளே புகுந்துகொண்டுவிட்டார். அந்த எழுத்துக்களில் நாம் புகுந்து பார்த்தால் அவரை இன்னமும் நேரடியாகக் காணலாம்.

சென்ற வார கட்டுரை வரையில், அவர் இருக்கிறார் என்கிற பிரக்ஞையுடன் எழுதினேன். இந்த வாரத்தில் இருந்து, அவர் இல்லாமல் போவதில்லை என்கிற பெரும் பிரக்ஞையுடன் எழுதுகிறேன்!

‘மாகாளி பராசக்தி

உருசிய நாட்டிடைக் கடைக்கண் வைத்தாள்

ஆங்கே ஆகாவென்றெழுந்தது பார் யுகப் புரட்சி’

என்று பாரதியார் பாடியது பற்றி ஜெயகாந்தன் பின்வருமாறு எழுதுகிறார்.

‘‘நவீன தொழிலாள வர்க்கத்தின் புரட்சியைத் திரித்துக் கூறுகிற நோக்கத்தில் அவன் அவ்விதம் சித்தரித்தான் என்று விமர்சிப்பது பேதமையாகும். அவன் ஓர் இந்தியன் என்பதா லும், இரண்டையும் தொடர்புபடுத்தித் தொடர்பு காணும் நோக்கத் தாலேயே, தனது மக்களிடம் அவர்கள் பாஷையில் அவன் பேசினான்.

‘‘அப்படித்தான் நானும் காரல் மார்க்ஸ் ஓர் ஆன்மிகவாதி என்று கூறுகிறேன். கிருஷ்ணரின் அவதாரம் என்றும் சொல்லுவேன். என்னையும் என் கலாச்சாரத்தையும் எனது பாஷையையும் உதறிவிட்டு நான் யாரையும் புரிந்துகொள்ளவும் முடியாது; அதனால் பயனும் ஏற்படாது!’’

மார்க்ஸியம் பற்றி நாங்களும் ஏதோ கொஞ்சம் படித்திருக்கிறோம். ஆனால், எங்கள் நினைவில் பதிந்து நிற்கும் மார்க்ஸின் மேற்கோள் மொழிகள் பூராவும், ஜெயகாந்தன் மூலமாகத்தான் ஒரு பறவை தன் குஞ்சுகளுக்கு ஊட்டுவது போல் ஊட்டப்பட்டன.

பொதுவாக எல்லோருக்கும் காரல் மார்க்ஸின், ‘மதம் மக்களுக்கு அபின் போன்றது’ என்கிற கூற்றுதான் தெரிந்திருக்கும். ‘இதயமற்ற சமூகத்தின் இதயமாயிருப்பது மதம் (Heart of the Heartless Society)’ என்று சொல்லியிருப்பது தெரிந்திருக்காது.

காரல் மார்க்ஸ், ‘மரபு என்பது ஒரு பெருங்காடு. அதன் நடுவே நின்று நீ நல்லதுக்குக் குரல் கொடுத்தால் நல்லதே எதிரொலிக்கும். தீயதற்குக் குரல் கொடுத்தால் தீயதே எதிரொலிக்கும்!’ என்றார்.

ஜெயகாந்தனின் முக்கியமானதும் முற்போக்கானதுமான பாத்திரங்கள் பலவும் மரபு என்கிற பெருங்காட்டிலே நின்று நல்லதுக்குக் குரல் கொடுப்பவர்களே ஆவர்!

ஜெயகாந்தனின் தர்க்கவாதங்களுக்குப் பலமுறை காரல் மார்க்ஸ் துணைபுரிந்திருக்கிறார்.

அடித்தட்டு மக்களின் வாழ்வைப் பல கோணங்களில் ஜெயகாந்தன் சித்தரித்தபோது அவரைப் பலவாறு புகழ்ந்து போற்றிய சில இடதுசாரி விமர்சகர்கள் பணக்காரக் குடும்பங்களின் பாத்திரங்களை வைத்து அவர் கதைகள் எழுதியபோது, முரண்பட்டு நின்று மறைமுகமான தூற்றல்களைத் தொடங்கினார்.

அப்போது ஜெயகாந்தன் எங்களுக்கு ஷேக்ஸ்பியரைப் பற்றி காரல் மார்க்ஸ் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டினார்.

ஷேக்ஸ்பியரின் நாடகங்கள் பல ராஜகுல, பிரபுகுல ஆடவரையும் பெண்களையும் பாத்திரங்களாகக் கொண் டவை. அதைக் கொண்டு மார்க்ஸ் ஷேக்ஸ்பியரை மட்டையடியாக அடித்து விமர்சித்துப் பிளந்து எறிந்து விடவில்லை. அதற்குப் பதிலாக ஷேக்ஸ்பியரைப் பெரிதும் கொண்டாடினார். ‘ஷேக்ஸ்பியர் எனது மதம்’ என்று அவர் உயர்வாகக் கூறிப் புகழ்ந்தார்.

ஜெயகாந்தன் முதல்முறை மாஸ்கோ சென்றபோது, அங்கே அறிமுகமாகிறவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கு வதற்கு சிறுசிறு பிள்ளையார் விக்கிரகங்களை நிறைய வாங்கிக் கொண்டு போனார்.

அதிலே ஒன்றை அருணாச்சலம் என்கிற நண்பர் பெற்றுக் கொண்டு வந்து நெடு நாட்கள் ‘மாஸ்கோ பிள்ளையார்’ என்று போற்றிக் கொண்டிருந்தார்.

இஸ்லாமியர்கள், ‘‘இன்ஷா அல்லாஹ்!’’ என்று சொல் வதன் உட்பொருளை, அகில இந்திய வானொலியில் பணியாற்றிய ஹக்கீம் மூலம் அறிந்து, ஜெயகாந்தன் எங்களுக்கும் சொன்னார். அதிலிருந்து, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, எங்களின் நெருங்கிய நண்பர்கள் வட்டம் அதைப் பயன்படுத்தி வருகிறது.

‘‘நாளைக்கு வேலூரில் சந்திக்கலாம். இன்ஷா அல்லாஹ்!’’ என்போம்.

1961-63ம் ஆண்டுகளில் நான் ஆசிரியப் பயிற்சியில் போளூரில் இருந்தபோது, வீட்டுக்குக் கடிதம் எழுதுவேன். தபால் அட்டையின் தலைப்பில், ‘ஓம், மாகாளி பராசக்தி துணை புரிக!’’ என்று தொடங்குகிற நான், ‘‘வெள்ளிக்கிழமை இரவே திருப்பத்தூர் வந்துவிடுவேன் இன்ஷா அல்லாஹ்!’’ என்று கடிதத்தை முடிப்பேன்.

குணங்குடி மஸ்தானின் பாடல்கள் ஜெயகாந்தனுக்கு ரொம்பப் பிடிக்கும். நாங்கள் நெடுந்தொலைவு செல்கிறபோது பாடிக்கொண்டு போகிற பாடல்களில் நிச்சயம் குணங்குடி மஸ்தானின் பாடல்களும் இருக்கும். அதிலும்,

‘பரமுத்தன் குணங்குடி

தெருவில் வரும் பவனி

பார்த்து வருவோம் வாருங்கள்!’ -

என்று ஆரம்பித்து,

‘சரித்திரம் வேதம்

சலாம் சலாம் சலாம் என்ன

ஜெகஜோதி மின்னல்

பளீர் பளீர் பளீர் என்ன’

என்று தொடர்ந்து போகும் அந்தப் பாடலை எத்தனை முறை பாடியிருப்போம் என்பதற்குக் கணக்கே இல்லை.

குணங்குடி மஸ்தானிடம் தாயுமானவரின் சாயல் இருப்பதாக எனக்குத் தெரிந்தது!

- தொடர்வோம்…

எண்ணங்களைத் தெரிவிக்க:

pisakuppusamy1943@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

வலைஞர் பக்கம்

28 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்