பட்ஜெட் தொடரின் 2-ம் பாகமும் ராகுலின் புதிய முகமும்

By பாரதி ஆனந்த்

சமூக வலைத்தளங்களில் கலாய்ப்புகளுக்கு ஆளாவதில் ராகுல் காந்தி இந்தியாவின் 'கேப்டன் விஜயகாந்த்' என்று சொல்லும் அளவுக்கு அவர் மிகை மிஞ்சியே விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

அண்மையில் அவர் எடுத்துக்கொண்ட 56 நாட்கள் விடுப்பு #ராகுல்மிஸ்ஸிங் என டிரெண்டானது. அவர் மீண்டும் தாயகம் திரும்பியதும், #ராகுல் ரிட்டர்ன்ஸ் என டிரெண்டானது.

ராகுல் எது செய்தாலும், எதுவுமே செய்யாவிட்டாலும் அது செய்திதான் என்ற நிலை உருவாகிவிட்டது.

இந்நிலையில், 56 நாட்களுக்குப் பின்னர் தாயகம் திரும்பிய ராகுல் காந்தியின் பேச்சில் ஒரு தேர்ச்சி தெரிவாத அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த விடுப்பை அவர் அரசியல் பாடம் கற்றுக்கொள்ளக்கூட பயன்படுத்தியிருக்கலாம் என்றும் சில அரசியல் உள்நோக்கர்கள் கூறுகின்றனர்.

விவசாயிகள் மாநாடும் பிரதமரின் உடனடி ரியாக்‌ஷனும்...

ராகுல்காந்தி தலைமையில் கடந்த 19-ம் தேதி டெல்லியில் விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. வழக்கம்போலவே, கிசான் மாநாட்டுக்கு தலைமை தாங்குகிறார் ராகுல் என கிசான் ஜாம், சாஸ் பாட்டில்கள் படத்தைப் போட்டு கலாய்ப்புடனேயே தொடங்கியது. ஆனால், ராகுல் அந்த மாநாட்டில் பேசிய உடனேயே '#ராகுல் ராக்ஸ்' ட்விட்டரில் டிரெண்டாக தொடங்கியது. அட, ராகுலை மவுனியாக, பிதற்றல்காரராக விமர்சிக்கும் எதிர்ப்பாளர்கள்கூட ராகுல் ஏதோ பேசியிருக்கிறார் என்ற தொணியில் #பப்புமியாவ் என பதிவிட்டனர்.

விவசாயிகள் பேரணியில் "மக்களவைத் தேர்தலின்போது கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வாங்கிய கடனை அடைப்பதற்காக மோடி அரசு நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை கொண்டு வருகிறது. தேர்தலின்போது மோடி தொழிலதிபர்களிடம் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடனாக வாங்கினார். அதை இப்போது திருப்பிக் கொடுக்க வேண்டும். எனவே விவசாயிகளின் நிலத்தை கையகப்படுத்தி தொழிலதிபர்களுக்கு கொடுக்க முயற்சிக்கிறார். அதற்கு பலிகடா விவசாயிகள்தான்.

குஜராத் மாதிரி ஆட்சி நிர்வாக முறை மூலமாக விவசாயிகளின் நிலத்தை எளிதாக பறிக்கமுடியும் என்பதை நிரூபித்த மோடி இப்போது நாடு முழுவதும் அதை செய்ய முடியும் என தொழிலதிபர்களுக்கு உறுதி கொடுத்துள்ளார். அடித்தளம் பலவீனமாகி கட்டிடம் ஆட்டம் போடுவதாக இருந்தாலும் அதன் மீது ஏணி சாத்தி வெள்ளை பூசி கட்டிடம் பளபளக்கிறது என்று காட்டுவதுதான் குஜராத் மாதிரி வளர்ச்சி" என பேசினார்.

டெல்லி மாநாட்டில் ராகுல் முழங்கியதாக ஊடகங்களில் பேசப்பட்டன. ராகுலின் பேச்சு வலிமையானதாகவே இருந்தது என்பதை உறுதி செய்வதுபோலவே "மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ஏழைகள், விவசாயிகளுக்கு ஆதரவானது என்றும் பாஜகவை குறை கூறிப் பேசுவது எதிர்க்கட்சிகளின் பிறவி குணம் என்றும்" பிரதமர் நரேந்திர மோடியும் உடனடியாக பதிலடி கொடுத்தார்.

அடுத்த நாளே, பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் பகுதி தொடங்கியது. நாடாளுமன்றத்தில் தூங்கியதால் சர்ச்சைக்குள்ளான ராகுல் நடப்புத் தொடரில் தனது இன்னொரு முகத்தை அடையாளப் படுத்தத் துவங்கியிருப்பதாக கூறும் அரசியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டும் சில சுவாரஸ்ய பேச்சுகள் இதோ..

நாள் 1 (ஏப்ரல் 20) - பிரதமருக்கு ஆலோசனை

"பிரதமர் மோடிக்கு ஓர் ஆலோசனை சொல்ல விரும்பு கிறேன். தொழிலதிபர்கள், செல்வந்தர்களிடமிருந்து மோடி தனது பார்வையை விவசாயிகள், தொழிலாளர்கள் பக்கம் திருப்ப வேண்டும். அப்படித் திருப்பினால் மக்கள் தொகையில் 67 சதவீதம் உள்ள விவசாயிகளால் அவருக்கு அரசியல்ரீதியான பலன் கிடைக்கும். விவசாயிகள், தொழிலாளர்களை புண்படுத்தியதன் மூலம் நீங்கள் பெரும் தவறு செய்துவிட்டீர்கள். பதிலுக்கு வரும்காலத்தில் அவர்கள் உங்களைப் புண்படுத்துவார்கள். உங்களின் பார்வையை மாற்றிக் கொண்டால் அது உங்களுக்குப் பலனளிக்கும். அதன் மூலம் எங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம்"

சில விசாரிப்புகள்...

நாடாளுமன்ற வளாகத்தில் கட்சி பேதங்களைக் கடந்து மூத்த அரசியல் தலைவர்கள் ஹை, பை சொல்லிக் கொள்வதும் நலம் விசாரித்துக் கொள்வதும் வழக்கம். அதே பாணியில், பாஜக மூத்த தலைவர் சுஷ்மா ஸ்வராஜை சந்தித்த ராகுல் அவர் உடல் நலன் குறித்து விசாரித்தார். அவரைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே என காங்கிரஸ் எம்.பி.க்கள் பலர் ராகுல் லீடர்ஷிப்பில் நலம் விசாரித்தனர்.

நாள் 2 (ஏப்ரல் 22) - அரசியல் விமர்சகர்

"பிரதமர் மோடியை பாராட்டி அமெரிக்க அதிபர் ஒபாமா மிக நீண்ட குறிப்புரை எழுதியிருக்கிறார். இதுவரை எந்த ஒரு இந்தியப் பிரதமரை குறித்தும் அமெரிக்க அதிபர் ஒருவர் இவ்வளவு பாராட்டி புகழ்ந்து எழுதியதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்னர் அப்போதைய சோவியத் ரஷ்யாவின் அதிபர் மிச்செல் கோர்பசேவை அப்போதைய அமெரிக்க அதிபர் வெகுவாக பாராட்டிப் பேசியிருந்தார். மிச்செல் கோர்பசேவ் அதிகாரத்தின் கீழ்தான் சோவியத் ரஷ்யா பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. சோவியத் ரஷ்யா வீழ்ச்சிக்கு வித்திட்டுக் கொண்டிருந்த கோர்பசேவை அமெரிக்க அதிபர் பாராட்டியதுக்கு இணையானதே ஒபாமா மோடியை பாரட்டியதும்"

இப்படி ராகுலின் பேச்சு நாளுக்குநாள் மெருகேறி வருவது அவர் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவராக நியமிக்கப்படும் வாய்ப்புகளையும் உறுதி செய்வதாகவே உள்ளது எனலாம்.

எல்லாம் சரி, எந்த 'ஸ்கூல் ஆஃப் பாலிடிக்ஸில்' பயிற்சி எடுத்து வருகிறார் என ராகுல் தெரிவித்தால் சற்றே சுவாரஸ்யமாக இருக்கும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்