சிம்மக்குரலோன் ஜெயகாந்தன்: சில நேரங்களில் சில சர்ச்சைகள்

By கா.சு.வேலாயுதன்

ஜெயகாந்தன்... மேடைக்கேற்ற சிம்மக் குரலும், எழுத்துக்கேற்ற யதார்த்தவாதமும், உண்மையை உரக்கச் சொல்லும் - அதில் யாரும் அசுவாரசியப்பட்டால் இடித்துச் சொல்லும் சொல்லுக்கும் செயலுக்கும் சொந்தக்காரர். அவரின் அருகாமையில் இல்லாவிட்டாலும், அவர் எழுத்தில் இரண்டறக் கலந்து எழுந்து நின்ற எழுத்தாளர்கள் எண்ணிலடங்கார்.

அப்படியானதொரு நிலையில்தான் பத்திரிகை நிருபன் என்ற முறையில் சில சமயங்களில் ஜெயகாந்தனைப் பற்றிய அண்மைவெளிகள் சில எனக்கு வாய்த்தது. சொல்லொன்று செயலொன்று, எழுத்தொன்று என வாழ்ந்த - வாழும் போலித்தனமான புகழ்பாடிக் கூட்ட எழுத்தாளர்கள் பலரை நான் சந்தித்திருக்கிறேன். ஆனால் அவர் தம் எழுத்தில் மட்டுமே தரிசனம் பெற்று, அருகில் நெருங்கும் வாய்ப்பு கிடைத்த போதும் கூட அவரின் கிட்டத்தில் நின்று ஒட்டி உறவாட அச்சப்பட்டவர்களில் நானும் ஒருவன்.

மகாகர்வி... பேச்சிலும், எழுத்திலும், கேள்வியிலும் எதிராளிகளை வளைப்பவர், பத்திரிகை பேட்டி என்று சராசரி மனிதர்கள், எழுத்தாளர்கள், பேச்சாள அரசியல்வாதிகளைப் போல இவரை நெருங்கினால் அவன் செத்தான் என்று நண்பர்கள் பேசக் கேட்டிருக்கிறேன். ஆனால் அவரின் தரிசனம் சில இடங்களில் வாய்த்தபோது அந்த சிம்மக்குரலில் தொனித்த யதார்த்தமும், உண்மையும், நேர்மையும், உள்ளத்து உருவை வெளிப்படை காட்டும் பாங்கும், வாழ்ந்தால் இந்த மாமேதையை போலல்லவோ எழுத்தாளர்கள் வாழவேண்டும் என்ற உத்வேகம் பெற்றேன். போலித்தனம் கண்டு முணுக்கென்று கோபப்படும் பாங்கு ஏறத்தாழ அவர் அளித்த பிச்சை என்றே சொல்லுவேன்.

கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்கு முன்பு. ஓர் இலக்கிய விழாவில் கலந்து கொள்ளும் நிமித்தம் திருப்பூரில் ஒரு நட்சத்திர ஓட்டலில் அவர் தங்கியிருந்தார். அவருக்கு நெருக்கமான நண்பர்கள் மட்டும் அறையில். வழக்கமான பாணியில் ஒரு குழாயில் தூள்களை அடைத்து நெருப்பேற்றி ஆளாளுக்கு மாற்றி, மாற்றி புகைத்துக் கொண்டிருந்தார்கள். ஐந்தாறு நண்பர்கள் மாற்றி மாற்றி புகைச் சுற்று வரும் அந்த புகைத் தொடர் ஓட்டத்தில் ஜெயகாந்தனும் கலந்து கொண்டிருந்தார்.

கல்கி பத்திரிகை நிருபன், இளம் எழுத்தாளன் என்ற முறையிலும் எழுத்தாளர் நண்பர் சுப்ரபாரதிமணியன் மூலம் எனக்கும் அங்கே அனுமதி கிடைத்தது. எங்கே போனாலும் பேட்டி என்று கையேட்டை தூக்கிவிடும் எனக்கு ஜெயகாந்தனின் அருகாமை கிடைத்தபோது எதுவும் தோன்றவில்லை. அவர்களுக்குள் நடந்த இலக்கிய சம்பாஷணைகளேயே கவனித்துக் கொண்டிருந்தேன்.

ஒரு பிரபல எழுத்தாளரின் பெயரைச் சொன்ன ஒரு நண்பர் 'உங்கள் எழுத்தைப் படித்துத்தான் அவர் எழுதிப்பழகியதாக சொல்லியிருக்கிறாரே ஜே.கே?' என்றார் ஒரு நண்பர். ஜே.கே முகத்தில் பிரதிபலிப்பு தெரியவில்லை. உறுத்த பார்வை. அதைவிட உறுதியான குரல்.

'அவன் பொய் சொல்றான்!' என்றார் கர்ஜனையுடன். எப்படி? கண்கள் சிவக்க அவரே விளக்கம் சொன்னார்: 'இப்படித்தான் ஒருத்தன் நான் கஞ்சா அடிக்கறதை பார்த்து கஞ்சா அடிச்சுப் பழகினதா சொன்னான். அதை எப்படி ஏத்துக்க முடியும்? என்னிடம் அவரவர்க்கு எது பிடிக்கிறதோ அதை எடுத்துக்கொண்டு, அதை நான் பழக்கி விட்டேன் என்பது போல சொல்கிறார்கள். அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?'. அவர் பேச்சில் ஒரு துளி செயற்கைத்தனம் இல்லை.

'ஊரைக்கூட்டி ஒலிக்க அழுதிட்டு பேரை நீக்கி பிணமென்று பேரிட்ட பின், சூரையங்காட்டிடையே சுட்டிட்டு, நீரில் மூழ்கி நினைப்பொழிந்து, அனைவரும் நீங்கிக்கழிந்த பின் அவன் விழித்தான்..! உறங்குவது போலும் சிறுகதையில், இப்படியொரு தொடக்கம் வைத்திருந்தீர்களே. அது எப்படி சாத்தியாமானது?' என்று ஒரு கேள்வி.

'நான் எங்கே எழுதினேன்? அது முழுக்க, முழுக்க திருமூலருடைய வார்த்தைகள்!'

உண்மையை, அதையும் உறுதிபட ஒப்புக் கொள்வது... அதுதான் ஜெயகாந்தன்.

இரவு இலக்கிய கூட்டம். அதில், சுப்ரபாரதிமணியனின் சாயத்திரை நாவல்குறித்த அறிமுகம். சாயக்கழிவுகளால் நொய்யல் நதி நஞ்சானது. அதற்கு காரணமான தொழிற்சாலைகளை, தொழில் முதலாளிகளை பற்றி கடுமையாக சாடினர் கூட்டத்தில் பேசியவர்கள்.

ஜெயகாந்தன் பேசுகையில் பேச்சின் நிலை தலைகீழானது. 'சாயம் விஷம். வாஸ்தவம். ஆனால் சாயம் விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்பு. வளர்ச்சியின் வளர்ச்சி. அந்த வளர்ச்சியின் வளர்ச்சி இல்லாவிட்டால் நாம் இங்கே ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்க முடியுமா? நமக்கு இப்படியொரு பொருளாதார வளர்ச்சி வந்திருக்க முடியுமா? எனவே கண்டுபிடிப்புகளை, வளர்ச்சிகளை சாடாதீர்கள். வளர்ச்சியின் வளர்ச்சியினால் வரும் எதிர்வினைகளுக்கு மாற்று வினைகளை எதிர்ப்பதற்கு பதில் அந்த நேரத்தை மாற்று விஞ்ஞானத்தை கண்டுபிடிக்க உதவுங்கள். அதைவிட்டு விட்டு விஞ்ஞானத்தையே கூடாது என்பதும், மறுப்பதும் எப்படி சரியாகும்?'

ஆணித்தரமான பேச்சு. தீர்க்க தரிசனப்பார்வை. அதேமேடையில், ஒரு சுயதம்பட்டம் அடித்துக் கொள்ளும் எழுத்தாளர்கள் பற்றி சிலர் பேசியதை இப்படிக் குறிப்பிட்டார். 'சிறுமைதான் தன்னைத்தானே அணிந்து வியந்து கொள்ளும்!' மேடையில் பலர் முகத்தில் ஈயாடவில்லை. அதுதான் ஜெயகாந்தன். எழுத்தும், பேச்சும், செயலும் ஒரேமாதிரி.

அவர் அரசியல் நிலைப்பாடுகளில் பலர் கடுமையான விமர்சனங்கள் வைப்பதுண்டு. ஆனால், அவர் கடைசி வரை தான் வாழ்ந்த கம்யூனிஸத் தத்துவத்தின் மீது உயிர்ப்பாக இருந்தார் என்பது அவரின் நெருக்கமான நண்பர்கள் அறிந்ததே.

நண்பர்கள் உரையாடிக் கொண்டிருந்த வேளையில் ஒருமுறை, 'கம்யூனிஸ்ட் கட்சி தங்களை ஒதுக்கிவிட்டது. உங்கள் அருமை புரியாமல் விலக்கி வைத்துவிட்டது...! என்ற ரீதியில் ஒரு நண்பர் கடுமையாக பேசினார். உடனே சூடாகிப்போனார் ஜெயகாந்தன்.

'கம்யூனிஸ்ட் கட்சி எங்கே என்னை விலக்கியது; ஒதுக்கியது? ஒரு தாய் பொற்கிண்ணத்தில் நெய் சாதத்தை பிசைந்து குழந்தைக்கு ஊட்ட வருகிறாள். அதை சாப்பிட்டு, சாப்பிட்டு அலுத்துப்போன குழந்தை வேண்டாம் போ! என்று போக்குக்காட்டி ஓடுகிறது. ஓடியது. தாயின் ஸ்தானத்தில் நின்றுதான் கம்யூனிஸ்ட் கட்சி எனக்கு அமிழ்தூட்டியது. ஆங்கிலம், பிரஞ்சு, லத்தீன் என உலகத்தில் எத்தனை மொழிகள் உள்ளதோ அதையெல்லாம் கற்றுக் கொள்ளும்படி ஆசிரியர்களை அமர்த்தியது. உலக நாடுகளுக்கெல்லாம் போய்வரும்படி அனுமதித்தது. நான்தான் மாட்டேன் போ என்று குழந்தையின் ஸ்தானத்தில் துள்ளி ஓடினேன். அப்படியிருக்கையில் எப்படி நான் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலக்கப்பட்டவனாகவோ, தாய்க்கு பிள்ளையல்லாதவனாகவோ ஆவேன்?' என்று திருப்பிக் கேட்டார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு கோவை ஓட்டல் ஒன்றில் பாரதீய ஞானபீடம் பெற்ற ஜெயகாந்தனுக்கு பாராட்டு விழா நடந்தது. அந்த விழாவிற்கு முன்புதான் ஒரு விழாவில் சமஸ்கிருதம் தான் அறிந்த மொழிகளிலே சிறந்த மொழி என்று பொருள்பட பேசி சர்ச்சையை கிளப்பியிருந்தார் ஜெயகாந்தன். அதை முன்னிட்டு பகுத்தறிவு பாசறை தோழர்கள் அவருக்கு கடும் எதிர்ப்புக் காட்டி வந்தனர்.

கோவை விழாவில் ஜெயகாந்தன் தமிழில் பேச்சை ஆரம்பித்தபோது, 'ஜெயகாந்தா.. தமிழில் பேசாதே, சமஸ்கிருதத்தில் பேசு...! என்று ஒருமையில் ஜெயகாந்தனை நோக்கி, பெரியாரிஸ்ட் தோழர்கள் கத்த ஆரம்பித்தனர். தொடர்ந்து நோட்டீஸ் விநியோகித்தும், ஜெயகாந்தனை நோக்கி பாய்ந்து சென்று மைக்கை பிடுங்கி ரகளையில் ஈடுபடும் சூழ்நிலையும் ஏற்பட்டது.

அப்போதும் அந்த சிம்மக்குரலோன் கர்ஜனை ததும்ப தீர்க்கமான பார்வையுடன் மைக்கின் முன் அசராது நின்றிருந்தார். தமிழில்தான் பேசுவேன். அதுதான் என் தாய்மொழி! என்றார் கர்ஜனை மாறாமல். பாதுகாவலர்கள் வந்து போராளிகளை அப்புறப்படுத்தின பின்பு மேடையில் பேசிய ஜெயகாந்தன், ''எனக்கு தமிழ் தான் தெரியும். தொட்டிலில் குழந்தையாக தவழ்ந்தபோதே எனக்குத் தமிழ்தான் தெரிந்தது. எனது தாய் தமிழில் தாலாட்டியதால் தமிழ் அறிந்தேன். என்னை நான் இந்தியாவைச் சேர்ந்த தமிழன் என்று கூறிக் கொள்ளவே ஆசைப்படுகிறேன்.

இந்தி, ஆங்கிலமும் நாம் படிக்க வேண்டும். அப்போது தான் அகண்ட பாரத்தில் தமிழின் பெருமையை நாம் உணர்த்த முடியும். அரசியலுக்காக இந்தி, சமஸ்கிருதம் படிக்காதே என்று எதிர்த்துவிட்டு பின்னர் பதவிக்காக மண்டியிடுபவன் அல்ல நான்.

இமயத்தின் உச்சியில் நின்று தமிழின் புகழைக் கொக்கரித்த பாரதி, அண்ணா போன்ற தமிழ் அறிஞர்களையே எதிர்த்தவர்கள் தமிழர்கள். அதுபோலத்தான் என்னையும் எதிர்க்கிறார்கள். தமிழனுக்கு என்று தனிக் குணம் உண்டு என்று பாடி வைத்தவர் நாமக்கல் கவிஞர். வாழ்க்கையில் எதிர்மறைகள் இருந்தால்தான் வாழ்க்கை சுவராஸ்மானதாக இருக்கிறது. ஜாதிகள் ஒழிய வேண்டும். ஜாதிகள் கூடாது என்பது லட்சிய நோக்காளர்களின் கருத்து. ஜாதிகளே இல்லையென்றால் வாழ்க்கை சுவாரஸ்மானதாக இருக்காது என்று சொல்ல எனக்கு சுதந்திரம் இல்லையா? மாற்றுக்கருத்துக்களும், தேடல்களும்தான் புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு வித்திட்டிருக்கிறது.

நான் கூறிய கருத்து மற்றவர்களின் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன். ஆனால் எனது கருத்தில் எந்த மாற்றமும் கிடையாது!'' என்று ஆணியடித்த மாதிரி மேலும் சர்ச்சைகளையே கிளப்பின ஜெயகாந்தனை அங்கு தரிசிக்க நேர்ந்தது.

ஆம்... சமூக நலனுக்காக மட்டுமே சர்ச்சைகளை கிளப்பி, அந்த சர்ச்சைகளுக்குள்ளேயே தைரியமாக நின்று, பிறிதொரு சர்ச்சையையும் கிளப்பி விட்டு சர்ச்சைகளின் நாயகனாக ஒரு எழுத்தாளன் நின்றிருந்தானென்றால் அது ஜெயகாந்தனை தவிர வேறொருவர் இருக்கவே முடியாது.

கா.சு.வேலாயுதன் - கட்டுரையாளர், தொடர்புக்கு velayuthan.kasu@thehindutamil.co.in

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்