நான் ஜெயகாந்தனின் நண்பன் என்று அறிந்த பொதுஜனங்களில் பலர் கேட்ட கேள்வி, ‘‘அவர் நாஸ்திகரா, ஆஸ்திகரா?’’ என்பதுதான்.
அவரது சில கூற்றுக்களும் பிரகடனங் களும் அவரை ஒரு நாஸ்திகர் என்றே சித்தரிக்கக் கூடும். ஆனால், நான் உணர்ந்த விதத்தில் அவர் ஓர் ஆஸ்திகர் தான். ஆனால், ஒரு வட்டாரத்தின் ஆஸ்திக சமாஜத்தில் கொண்டுசென்று சேர்க்கத் தகுந்தவர் அல்லர் அவர்!
நாஸ்த் என்றால் இல்லை என்றும், ஆஸ்த் என்றால் உண்டு என்றும் நாங் கள் அறிந்தோம். ஒரு வாழ்வை மட்டும் அன்று, பல வாழ்க்கைகளைத் தனது காவியத்தில் நிலைநிறுத்தப் பாடுபடுகிற ஒருவன், ‘‘இல்லை’’ என்கிற சித்தாந் தத்தை எவ்வாறு ஒப்ப முடியும்? க்ஷண நேரத்தில் அழிவனவற்றை எல்லாம் சாஸ்வதமாக்கப் பிறந்தவன் அவன். எனவே, எழுதுகிறவன் எல்லாருமே இயல்பான ஆத்திகனாகிவிடுகிறான்.
ஆத்திகன் என்பவன் உண்டு உண்டு என்கிறவன். கடவுள் உண்டு, பிதுர்க் கடன் உண்டு, புண்ணியமும் பாவமும் உண்டு, அன்பு உண்டு, நேசம் உண்டு, கனவிலே தான் பெற்ற முத்தமும் உண்டு என்கிறவன். உள்ளது ஒன்று, அதுவே மறுபடியும் மறுபடியும் உருவெடுக் கிறது என்பவன். மண்டியிட்டுத் தொழுது சொந்த நலன்களுக்காக மன்றாடுபவரை யும் விரதம் இருப்பவரையும் விழா எடுப்பவரையும் விட, ‘‘ஊருக்கு உழைத்திடல் யோகம் - நலம் ஓங்கிடு மாறு வருந்துதல் யாகம்’’ என்று செயல்படுபவர்கள் மேலான ஆன்மிக வாதிகள் என்பவன். அந்த சமூக ஆன்மிக விஞ்ஞானத்தைத் தனது கதைகளால் உருவாக்கி விளக்குபவன்.
ஜெயகாந்தனை நன்கு அறிந்தவர்கள் அவரை நாஸ்திகர் என்றும் கூறலாம்; இல்லையில்லை அவர் ஓர் ஆஸ்திகர் என்றும் கூறலாம். இவர்கள் அனை வரும் கூறுவதற்கேற்ப அவர் வாழ்வில் சான்றுகள் உள்ளன.
அவரை அவ்வாறு ஆராய முற்படு பவர் அனைவரும் முதலில் தாங்கள் எங்கு நிற்கிறார்கள் என்பதைத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.
இவற்றையெல்லாம் எழுத வந்த நான் நாஸ்திகனா அல்லது ஆஸ்திகனா என்பதை நான் எண்ணிப் பார்க்கிறேன்.
எனக்குப் பன்னிரண்டு வயசு இருக் கலாம். எங்கள் வீட்டுக்கு ஜோசியம் சொல்ல வந்த சாமல்பட்டி பண்டாரத்தை எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. வெல்ல உருண்டை போன்ற மொட்டைத் தலையில் ஒரு சிறு முடிச்சுப்போட்டுத் தொங்கவிடும் அளவுக்கு ரோமம் அருள் பாலித்திருந்தது. பட்டையாக விபூதிப் பூச்சும் உறுத்துப் பார்க்கும் கண் போன்றதோர் பெரிய குங்குமப் போட்டும். காதிலே நிறம் மங்கிய கடுக்கன்!
என் ஜாதகத்தைப் பார்த்த அவர், ‘‘இவன் பிற்காலத்தில் ஒரு கோயில் கட்டுவான்!’’ என்றார்.
‘‘நான்தான் சாமியே இல்லை என்று சொல்றேனே, நான் எப்படி கோயில் கட்டுவேன்!’’ என்று அவர் சொன்னதை மறுத்து நான் ஒரு பாலவிவாதம் செய்தேன்.
சாமல்பட்டி பண்டாரம் மிகவும் சாவதானமாகச் சொன்னார்.
‘‘இப்ப இப்படித்தான் துள்ளுவே தம்பி. கொஞ்சம் ரத்த ஓட்டம் குறை யட்டும். அப்புறம் பார்!’’ என்றார். அந்தப் பதிலின் பொருள்பூராவும் அப்போது எனக்குச் சரியாகப் புரியவில்லை.
பெரியம்மாவின் பக்தி கமழும் அரவணைப்பில் வளர்ந்த நான், வெகுசீக்கிரமே அதில் இருந்து நீங்கி, ‘‘பொய்மை சேர் மதியினில் புலை நாத்திகம் பேசும் பரம்பரைக்குள் புகவிருந்தேன்.
எங்கள் குடும்பத்தில் என் தந்தையார் மட்டுமே, கையெடுத்துக் கடவுளைக் கும்பிடாதவராக இருந்தார். ஒரு முறை எங்கள் குடும்பம் பூராவும் தீர்த்த மலைக்கு இரண்டு நாட்கள் யாத் திரை போனபோது, சிவன் கோயில் மூலஸ்தானத்தில் அனைவரும் நின்று வணங்கியபோது, என் தந்தையாரும் கைகூப்பி வணங்கி நின்ற காட்சி எங்கள் குடும்பத்தில் வரலாற்றுச் சிறப்புடைய ஒன்று ஆகும்.
ஜெயகாந்தனோடு பரிச்சயம் ஏற் பட்ட பிறகு, ஒருநாள் இரவு எங்கள் பழைய வீட்டின் மொட்டை மாடி யில் பாய் விரித்து அமர்ந்தும், படுத் தும் நாங்கள் பேசிக்கொண்டிருந் தோம்.
அப்போது யாரோ ஒருவரின் யோச னையின் பேரில், திருப்பத்தூர் நண்பர் கள் ஒவ்வொருவரையும் பற்றியும் ஜெய காந்தனிடம் அபிப்ராயம் கேட்கப்பட்டது.
மற்ற நண்பர்கள் ஒவ்வொருவரையும் பற்றி அவர் என்ன சொன்னார் என்பது என் நினைவில் பதிவாகவில்லை.
‘‘குப்பனைப் பற்றி… ஜே.கே..?’’ என்று யாரோ கேட்டனர்.
‘‘அவன் ரொம்ப ஸ்பிரிட்சுவல். அது அவனுக்கு ரொம்ப உதவும்’’ என்றார் ஜெயகாந்தன்.
இந்தக் கூற்று நானே எதிர்பாராததாக இருந்தது. என்னை நான் எனக்குள் உற்றுப் பார்த்துக்கொண்டேன்.
ஓர் ஆன்மிகவாதியின் அடையாளம் எதுவும் என்னிடம் எடுப்பாக இருப் பதாகத் தெரியவில்லை. மனைவி தைராய்டு ஆப்பரேஷனுக்குப் போகிற போது, பொது மருத்துவமனையின் செவிலியர்கள், வார்டின் வராந்தாக் கோடியில் மர பீரோவை போல் ஒன்று வைத்து, அதனுள் அன்னை மரியாளின் திவ்ய உருவுக்கு மெழுகுவத்தி ஏற்றி வைப்பதைக் கண்டு, மனைவி பிழைத்து வந்தால், வேளாங்கண்ணிக்குக் செல் லும்போது மாதாவுக்கு ஒரு மெழுகு வத்தி ஏற்றுவதாக மனசுக்குள் வேண்டிக்கொண்டேன்.
அதற்கப்புறம் இன்று வரை நான் வேளாங்கண்ணிக்குப் போகிற சந்தர்ப்பமே எனக்கு வாய்க்கவில்லை. அதனால் அந்த மெழுகுவத்தியை இன்னும் ஏற்றவில்லை. ஆனால், அதற்கப்புறம் என் மனைவி உயிர் பிழைத்து 45 ஆண்டுகள் உயிரோடு இருந்து பெருவாழ்வு வாழ்ந்தது கூட, நிறைவேற்றாத என் பிரார்த்தனையின் விளைவுதான் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். என் மனசுக்குள் நான் அதை நிறைவேற்றிவிட்டதே பரம்பொருளுக்கு போதும் போலும்!
ஜெயகாந்தன் ஒரு நாத்திகர் என்று கூறினால் அவரது பாத்திரங்களில் பெரும்பாலோர் கண்ணீர் விட்டு அழுவார்கள். அவர் ஓர் ஆஸ்திகர்தான் என்பதைச் சாஸ்திரம் சம்பிரதாயங்களில் நம்பிக்கைக் கொண்டோர் யாரும் ஏற்க மாட்டார்கள். ஆனால், ஆந்திரப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த, கே.ஆர்.நிவாஸ ஐயங்கார், ‘‘உங்கள் தலைக்குப் பின்னால் ஒரு விஷ்ணுச் சக்கரம் சுழல்கிறது. உங்களை ஒரு கிருஷ்ணப் பித்து பிடித்து ஆட்டுகிறது!’’ என்றார்.
இந்த ஆஸ்திக, நாஸ்திக குழப்ப நிலையில் உள்ள யாரையும் போலவே இருந்த நான் ஒரு முறை அவரிடம் கேட்டேன்.
‘‘நாஸ்திகர்கள் மத்தியில் இருக் கும்போது எனக்கு ஆஸ்திக மனோ பாவம் ஏற்படுகிறது. ஆஸ்திகர்கள் மத்தியில் இருக்கும்போது நாஸ்திக மனோபாவம் ஏற்படுகிறது. இது ஏன் ஜே.கே?’’
எல்லாக் கேள்விகளுக்கும் எப் போதும் தயங்காமல் பதில் சொல்கிற ஜெயகாந்தன், இந்த என் கேள்விக்கும் அவ்வாறே சட்டென்று பதில் சொன்னார்.
‘‘நாம் சின்ஸியராக இருக்கிறோம் என்பதன் அடையாளம் அது!’’ என்றார் அவர்.
ஆன்மிகத்தின் பெயரால் பக்தி யின் பெயரால் ஜகத்தில் நடக்கும் சகலவற்றையும் ஒரு ‘பிள்ளை விளை யாட்டு’ என்று வர்ணித்த வள்ளலாரின் ஆன்மிகக் கம்பீரத்தை, அவரது ஜில்லாவாசியான ஜெயகாந்தனும் உள்வாங்கியிருந்தார் என்று நாம் கொள்ள வேண்டியதுதான்.
- வாழ்வோம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pisakuppusamy1943@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
27 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
1 month ago