இணையம் காக்க நீங்களும் இணையலாம்!

By சைபர் சிம்மன்

இணைய சுதந்திரத்துக்கு ஆதரவாக இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேலான மெயில்கள்!

நீங்கள் தினமும் 100 இ-மெயில்களை அனுப்பலாம். அல்லது எப்போதாவது முக்கியப் பணிகளுக்கு மட்டுமே இ-மெயிலை பயன்படுத்துபவராக இருக்கலாம். எப்படி இருந்தாலும் இப்போது நீங்கள் அனுப்பும் இ-மெயில் இணைய சுதந்திரம் காக்க குரல் கொடுக்கும் வகையில் அமையலாம்.

இந்த நம்பிக்கையில்தான் ஒரு லட்சம் இந்தியர்களுக்கு மேல் இதுவரை தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய்-க்கு இ-மெயில் அனுப்பியுள்ளனர். வருங்காலத்தில் இணைய உரிமை பாதிக்கப்படக்கூடாது என கருதினால், நீங்களும் டிராய்க்கு இமெயில் அனுப்பி கருத்து தெரிவிக்கலாம்.

அதற்கு முன்னர் நெட் நியூட்ராலிட்டி (இணையதள சமநிலை) பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் நெட் நியூட்ராட்லிட்டியை காக்கவேஇணையவாசிகள் இ-மெயில் மூலம் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நெட் நியூட்ராலிட்டி எனும் பதம் சமீப காலமாக இந்தியா முழுவதும் பலமாக அடிபடுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். அதிலும் சமீபத்தில் டிராய் அமைப்பு இது தொடர்பாக கருத்து திட்ட முன்வடிவை வெளியிட்டு பொதுமக்களிடம் இருந்து கருத்து கோரியதை அடுத்து, இது தொடர்பான விவாதம் தீவிரமாகி இருக்கிறது.

அமெரிக்கா போன்ற நாடுகளில் நெட் நியூட்ராலிட்டி தொடர்பான விவாதம் பல ஆண்டுகளாகவே தீவிரமாக நடைபெற்று வருகிறது என்பதுடன் அதை காக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இணையதள சமநிலை என புரிந்து கொள்ளக்கூடிய நெட் நியூட்ராலிட்டி என்றால் இணையத்தில் எல்லா வகையான இணையதளங்கள் மற்றும் சேவைகளை சமமாக கருதுவது என புரிந்துகொள்ளலாம். அதாவது, எல்லா இணையதளங்களையும் அணுகுவதற்கான சமமான வாய்ப்பு எப்போதும் இணையவாசிகள் கையில் இருக்க வேண்டும் என்று பொருள். எல்லா இணையதளங்களும் சமமான வேகத்தில் அணுகக் கூடியதாக இருக்க வேண்டும்.

இதன் உட்பொருள் எந்த ஓர் இணையதளத்தையும் பயன்படுத்த தனியே கட்டணம் கொடுக்கும் நிலை வரக்கூடாது என்பதும், இதற்கான உரிமை இணைய சேவை வழங்கும் நிறுவனம் அல்லது தொலைத்தொடர்பு நிறுவனங்களிடம் வழங்கப்படக்கூடாது என்பதுதான்.

நெட் நியூட்ராலிட்டி பாதிப்பின் விபரீதம்

இணைய சேவைய வழங்குவது மட்டும்தான் நிறுவனங்களின் வேலையே தவிர, அதை எப்படி பயன்படுத்துவது என்பது இணையவாசிகளின் உரிமை என்பதுதான் இணைய சமநிலையின் அடிநாதம்.

ஆனால், இப்போதே இணையத்தை அப்படித்தானே பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் என நீங்கள் கேட்கலாம். உண்மை தான். ஆனால் இந்த நிலை தொடர்வதற்கு ஆபத்து வந்திருக்கிறது என்பதே விஷயம்.

எப்படி என்றால், இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் குறிப்பிட்ட இணையதளங்கள் அல்லது செயலிகளை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கும் நிலை உருவாகலாம் என்பதுதான். இப்படி கட்டுப்பாடு விதிக்கப்படும் இணையதளங்களைப் பார்க்க கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிவரலாம். மற்ற இணையதளங்களை இலவசமாக பயன்படுத்தலாம் என்று சொல்லப்படலாம்.

உதாரணத்துக்கு, வீடியோ பகிர்வு சேவையான யூடியூப் அல்லது இணைய தொலைபேசி சேவையான ஸ்கைப்பை பயன்படுத்த கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரலாம். அதேபோல செல்பேசியில் வாட்ஸ்அப் போன்றவைக்கும் கட்டுப்பாடுகள் வரலாம்.

இத்தகைய உரிமை இணைய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டால், இணைய பயன்பாட்டுக்கான கட்டணம் வசுலிக்கப்படுவதற்கு பதிலாக, குறிப்பிட்ட இணையதளங்களை அதிகம் பயன்படுத்துவதற்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டி வரலாம். அப்போது செலவை மிச்சமாக்க இணையவாசிகள் சில இணையதளங்களை பயன்படுத்துவதை குறைத்துக்கொள்ள நேரலாம். அல்லது சில இணையதளங்களை அதிகம் பயன்படுத்த அதிக கட்டணம் செலுத்த வேண்டி வரலாம்.

இதுதான் நெட் நியூட்ராலிட்டி பாதிக்கப்படும்போது ஏற்படும் விபரீதம்.

ஏனெனில், நிறுவனங்கள் இணைய சேவையை சமமாக வழங்குவதை நிறுத்திக்கொண்டு தங்கள் இஷ்டம்போல வழங்கத் துவங்கும். இதனால் இணையத்தின் அடிப்படை சுந்ததிரம் பாதிக்கப்பட்டு, அதன் ஆதாரத் தன்மையான எவராலும் கட்டுப்படுத்தப்படாத குணமும் பாதிக்கப்படும் என்று வல்லுனர்களும் இணைய ஆர்வலர்களும் கவலைப்படுகின்றனர்.

பொதுவாக இந்த கட்டுப்பாட்டை இணைய நிறுவனங்கள் கொள்ளைப்புற வழியாக கொண்டு வர பார்க்கின்றன. உதாரணத்துக்கு, அவை அதிவேக இணைய சேவையை பெற அதிக கட்டணம் வசூலிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அரசுகளிடம் அனுமதி கோரி வருகின்றன. இவை இன்டெர்நெட் பாஸ்ட் லேன் என குறிப்பிடப்படுகின்றன. இந்த விரைவு பாதையில் பயன்படுத்தக்கூடிய இணைய சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் இவை அனுமதி கோருகின்றன.

ஆனால், இப்படி அனுமதித்தால் அதிக பயன்பாடு உள்ள இணையதளங்களை எல்லாம் அதிவேக சேவைக்கு கொண்டு சென்று இணையத்தை கூறு போட்டு விடுவார்கள் என்று அஞ்சப்படுகிறது. ஓர் இணையம் இருப்பதற்கு பதில் துண்டு துண்டாக பல இணையங்கள் இருக்கும். அவற்றின் மீது இணைய நிறுவனங்களுக்கே கட்டுப்பாடு இருக்கும் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

ஃபேஸ்புக் நிறுவனம் குறிப்பிட்ட இணையதளங்களை இலவசமாக வழங்க முயலும் இன்டெர்நெட். ஆர்க் அமைப்பும் சரி இந்தியாவில் ஏர்டெல் அறிமுகம் செய்துள்ள ஜிரோ இன்டெர்நெட்டும் சரி... இத்தகைய நிலைக்கே வித்திடும் என்று இணைய ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

இணைதளங்களை இலவசமாக பார்க்கலாம் என்பது கவர்ச்சியாக தோன்றினாலும் இதையே சாக்காக வைத்து மற்ற இணைய சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க முற்படும் நிலை வரும் என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

இணைய ஆர்வலர்கள் எல்லோருமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், இணைய நிறுவனங்கள் மட்டும் இதை ஆதரிக்கின்றன. ஸ்கைப், வாட்ஸ் அப் போன்ற இணைய சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும்போது அவற்றுக்கு எந்த லாபமும் வருவதில்லை. எனவே, இதுபோன்ற சேவைகளுக்கு கட்டணம் வசூலிக்க உரிமை கேட்கின்றன. அதேபோல தங்கள் சேவையை பயன்படுத்தி வருவாய் ஈட்டும் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்களும் கட்டணம் செலுத்த வேண்டும் என கேட்கின்றன.

இது தொடர்பாகத்தான் டிராய் அமைப்பு இப்போது இணையவாசிகளின் கருத்தை கேட்டுள்ளது.

நெட் நியூட்ராலிட்டி காக்கப்பட வேண்டும் என்பதையும், அதற்கான காரணங்க்ளையும் விளக்கி மெயில் அனுப்பலாம்.

இணையவாசிகள் இப்படி டிராய் அமைப்புக்கு கருத்து தெரிவிக்க வசதியாக சேவ் தி இன்டெர்நெட் ( >http://www.savetheinternet.in/) எனும் இணையதளமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தளம் மூலம் மெயில் அனுப்பலாம். இதுவரை ஒரு லட்சம் மெயில்களுக்கு மேல் அனுப்பட்டுள்ளன.

இதே போல இந்த பிரச்சனையின் அடிப்படையை விளக்கி நெட்நியூடிராலிட்டி ( >http://www.netneutrality.in/ ) எனும் தளமும் அமைக்கப்பட்டுள்ளது.

நெட்நியூட்ராலிட்டிக்கான பாதிப்பு இணையம் பயன்படுத்தப்படும் விதம் மற்றும் நிர்வகிக்கப்படும் விதத்தை பாதிக்கும் என்பதால் இது தொடர்பாக இமெயில் அனுப்பி கருத்து தெரிவிப்பது உங்களின் உரிமையை மட்டும் அல்ல இணையத்தையும் காக்கும்!

சைபர்சிம்மனின் அதிகாரபூர்வ வலைதளம்: >http://cybersimman.com/

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்