பலூனுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் காற்றுக்கு இருக்கின்ற சுதந்திரம்தான் இன்றைய தமிழ் சினிமா படைப்பாளிகளுக்கு இருக்கிறது. டாஸ்மாக் பற்றியும், பெண்களை எள்ளி நகையாடியும் சுதந்திரமாக படம் எடுக்கலாம். அந்த வட்டத்தைத் தாண்டி மதம், கலாச்சாரம், அரசியல் முதலானவற்றைப் பேசினால் படைப்பாளிகளின் நிலைமை அதோகதிதான். சமீபத்தில் வெளிவந்த பல படங்கள் சந்தித்த நிலை இதை மெய்ப்பித்துள்ளன.
'ஓ காதல் கண்மணி' படம் வெளியாகும் வரை, இது எப்படிப்பட்ட படம் என்று சொல்லாமல் இருந்ததுதான் சச்சரவின்றி அந்தப் படம் வெளிவருவதற்கான காரணமாக இருந்திருக்கும். இது 'லிவிங் டுகெதர்' உறவு பற்றிய படம் என்று தெளிவாகத் தெரிந்திருந்தால் கலாச்சாரக் காவலர்களின் போராட்டம் நிகழ்த்தப்பட்டு, கோர்ட் வாசலில் நின்றிருக்க வாய்ப்புண்டு.
வெகுநாள் கழித்து ஒரு ஜாலியான காதல் சினிமா பார்த்த திருப்தியை 'ஓ காதல் கண்மணி' அளித்தது. மணிரத்னம் மீது ஈடுபாடு இல்லாத ரசிகர்களுக்கும் ஏதோ ஒரு துள்ளலான இளைஞர் படம் போன்றுதான் தோன்றியிருக்கும். படம் முழுக்க அத்தனை இளமை. 'மௌன ராகத்தில்' இருந்த முதிர்ச்சி இப்போது இரண்டாவது குழந்தைப் பருவத்துக்கு கொண்டு வந்திருக்கிறது. மணிரத்னம் வெர்ஷன் 2.0'-வாக மீண்டும் ஒரு புதிய இயக்குனர் போல் பிறந்திருக்கிறார்.
இந்தப் படத்தை மணிரத்னம் இயக்காமல் வேறு யாராவது இயக்குநர் இயக்கிருந்தால் என் மனதில் சில முக்கியக் கேள்விகள் எழுந்திருக்காது. படம் முழுக்க என்ஜாய் செய்ததை மறுக்கவில்லை. ஆனால், இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத 'லிவிங் டுகெதர்' உறவைப் பற்றி மணிரத்னம் ஒரு படம் அளித்துள்ளார். அதுவும், இந்திய அளவில் மிகவும் கவனிக்கத்தக்க இயக்குநர் அவர்.
அப்படி இருக்கும்போது, 'லிவிங் டுகெதர்' என்றால் என்ன? இவ்வகையான உறவில் இருக்கின்ற சங்கடங்கள், சமூகப் பார்வை, அதை எதிர்கொள்ளும் விதம், இளைஞர்கள் சந்திக்கின்ற சவால்கள் என்னென்ன? இவற்றைப் பற்றி எதையுமே மணிரத்னம் பெரிதாக படத்தில் பேசவில்லை. தமிழ் சினிமா இன்று சந்திக்கும் போராட்டங்களைக் கண்டு, 'எதற்கு நாம் எதாவது பெரிதாக சொல்ல வேண்டும்' என்று ஜாலியாக படம் எடுத்ததுபோன்றுதான் 'ஒகே கண்மணி' தோன்றியது.
'லிவிங் டுகெதர்' உறவு என்பது ஒரு சுயநலத்தின் பிரதிபலிப்பு தானே?! 'எனக்கு நீ வேண்டும், உனக்கு நான் வேண்டும் நாம் இணைந்தால் என்ன? ஆனால் எனக்கு என் வாழ்க்கை முக்கியம், உனக்கும் அப்படியே! இந்த பொறுப்பெல்லாம் ஏற்க முடியாது கண்மணியே!
எண்ணங்களைப் பகிர்வோம், மெத்தையைப் பகிர்வோம், நாணத்தை மறப்போம், சமூகம் நமக்கு எதற்கு? நாம் நாமென்ற எண்ணம் மட்டும்தான் நம்மிடத்து. நாளை கசந்திடும்போது புன்னகைத்து விடை பெறுவோம். அன்று நீ யாரோ! நான் யாரோ என்று' – இதுதானே இந்த உறவின் அடிப்படை என்கின்றனர், அந்த உறவில் வாழ்ந்து வருவோர்.
என்னைப் பொறுத்தவரை இந்த உறவில் இருக்கின்ற சந்தோஷங்களை, நிகழ்கின்ற சங்கடங்களை, கசப்புகளை நேர்மையாக, நேரடியாக பேசிய தென்னிந்திய திரைப்படம் ஆர்டிஸ்ட் (மலையாளம்). மிக முக்கிய இயக்குநர்களில் ஒருவரான ஷியாம் பிரசாத் இயக்கிய இப்படம் 2013-ல் வெளியானது. Dreams In Prussian Blue என்ற நாவலைத் தழுவி புனையப்பட்ட திரைக்கதை. சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய மூன்று பிரிவுகளில் கேரள அரசின் விருதுகளைக் குவித்தது.
மைக்கேல் (ஃபஹத் பாசில்) ஓர் ஓவியக் கலைஞன். ஓவியக் கலை மீது தீராத காதல் கொண்டவன். அது குறித்த தெளிந்த பார்வை, ஒரு கலைஞனுக்கே உரித்தான வினோத சிந்தனை, நான் திறமையானவன் என்ற கர்வம், எனக்கு என் வாழ்க்கைதான் பிரதானம் என்கிற எண்ணம் படைத்தவன்.
காசு வருவதற்காக படிப்பது கல்வியல்ல, காதலுக்காக படிப்பது என்கிற தெளிந்த சிந்தனையில் ஓவியக் கல்லூரியில் சேரும் காயத்ரி (ஆன் அகஸ்டின்). "உண்மையான கலைஞன் என்பவன் 'அவன் உலகிற்கு சென்று மற்றவர் பார்க்க வேண்டும் என்று மட்டும் நினைக்கக் கூடாது. தான் தினமும் பார்க்கின்ற உலகத்தை பிறருக்கு படைக்க வேண்டும், அந்தப் படைப்பில் ஒரு நேர்மை இருக்க வேண்டும். அது நிஜத்தின் பிரதிபலிப்பாக இருக்க வேண்டும். அப்போதுதான் அது ஓர் உன்னத படைப்பு" என்றெல்லாம் மைக்கேல் பேச, அதை சலிக்காமல் கேட்டுக் கொண்டிருக்கும் காயத்ரி மெல்ல மெல்ல அவனது திறன்களால், சிந்தனைகளால் ஈர்க்கப்படுகிறாள்.
தனது படைப்பின் உன்னதத்தை உணரும் விசிறியாக காயத்ரியை கண்ட மைக்கேலும் ஈர்க்கப்படுகிறான். ஒருமுறை இருவரும் பேசிக்கொண்டிருக்குபோது, "நீ என்னுடன் வருவாயா? நாம் இருவரும் ஒன்றாக வாழலாம், எண்ணங்களைப் பகிர நிறைய நேரம் அளிக்கலாம். ஒரே வீட்டில் என்ன சொல்கிறாய்?" என்று கேட்கிறான். காயத்ரியும் பெற்றோர்களிடமிருந்து விடுபட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள்.
இப்படித்தான் இவர்களின் 'லிவிங் டுகெதர்' உறவு துவங்குகிறது. 'ஓ காதல் கண்மணி' பார்க்கும்போது எனக்கு தோன்றிய வியப்பு இதுதான்... 'ரயில் ஏறச் செல்லும்போது நாயகன், நாயகியைப் பார்க்கிறான். சில நாட்களுக்கு பிறகு அதே பெண்ணை சர்ச்சில் பார்க்கிறான், நம்பர் எக்ஸ்சேன்ஜ், அடுத்தது காபி ஷாப் உரையாடல்... அதன் பிறகு ஒரு ரயில் பயணம் அடுத்தது 'லிவிங் டுகெதர்' உறவின் தொடக்கம். நித்யா மேனன், துல்கரின் கூட்டணியில் இளமை துள்ள ஆட்டம் போட வைத்து, பீ.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவில் 'பறந்து செல்லவா?' என மறக்க வைத்து ரஹ்மான் இசையால் பார்ப்போர்கள் மனதை மென்டல் ஆக்குகிறார் மணிரத்னம்.
இதனால்தான் 'எப்படி டா இவங்க ரெண்டு பேர் லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப்புக்கு வந்தார்கள்?' என்று யோசித்தால், அந்தக் கேள்விக்கு பெரிய விடை கிடைக்கவில்லை. சரி... பிரகாஷ் ராஜ் பெரிய தலையாச்சே... அவர் ஏதாவது கேள்வி கேட்பார் என்று பார்த்தால் 'மலர்களைக் கேட்டேன்' என்று நித்யா மேனன் நித்யஸ்ரீ மகாதேவனாக மாறி கர்நாடக சங்கீதம் பாடக் கேட்டு மெய்மறந்து துல்கருடன் நித்யா சேர்ந்து வாழ சம்மதிக்கிறார்.
அங்கேயும் இது எப்படி நடக்கும் என்று நம்மை யோசிக்க விடாமல் பிரகாஷ் ராஜ், லீலா சாம்சனின் நடிப்பும், ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பும் இணைந்து மென்மையாக கடத்திச் செல்கிறது. யோசித்துப் பார்த்தால் பல விஷயங்கள் அபத்தமாக முலாம் பூசியதாக தோன்றும். ஆனால் நம்மை அழகாக யோசிக்க விடாமல் வழநடத்தி மணிரத்னம் அழைத்துச் செல்கிறார்.
இதைப் போன்ற இடங்களில்தான் 'ஆர்ட்டிஸ்ட்' என் மனதில் ஆழமாக அடித்தளம் போடுகிறது. மைக்கேல், காயத்ரி இருவரும் இணைந்து வாழத் தொடங்குவதனால் வீட்டிலிருந்து இருவருக்கும் கிடைத்த பணவரத்து நிறுத்தப்பட்டுவிடும்.
இனிமையான வாழ்வைத் தடம்புரளச் செய்கிறது ஒரு விபத்து. அந்த விபத்தில் மைக்கேலின் கண்கள் பறிபோகின்றன. இருந்தும் தன் கலைத் திறனை உலகுக்கு நிரூபிக்கத் தவிக்கிறான். 'எனக்கு இந்த பெயின்ட் இந்த பிராண்டில் இந்த வெர்ஷனில் வேண்டும்... இதை வாங்கி வா' என்று வீட்டில் இருந்தபடியே கட்டளையிடும் மைக்கேல், "எனக்கு என் வாழ்க்கை முக்கியம், என் ஓவியத்தின் தரம் முக்கியம், நீ என் ரசிகை... என் காதலி. ஆனால் நீ என் மனைவி இல்லையே! எனக்கு என் உலகம் முக்கியம்" என்ற எண்ணம் தான் மைக்கேலுக்கு. படிப்பும் நின்று போக, வீட்டை நடத்துவதற்காக பாஸ்ட் புட்டில் காயத்ரி வேலைப் பார்க்கிறாள்.
மெல்ல மெல்ல தான் மைக்கேலுக்காக எவ்வளவு செய்தாலும் அவனுக்கு அவனைப் பற்றிய கவலை மட்டும்தான். சில சமயங்களில் என்னை அவன் ஒரு மனுஷியாகக் கூட எண்ணுவதில்லை என்கிற எண்ணம் காயத்ரி மனதில் தீவிரமாக இடம் பிடிக்கிறது.
எனினும், ஒரு ரசிகையாக மட்டுமின்றி, வாழ்க்கைத் தோழியாக அவனுக்கு வேண்டியதைச் செய்கிறாள். உயர் ரக பெயின்ட் வாங்க காசில்லை. மலிவு விலையில் ஒரே நீலத்தில் டப்பா டப்பாவாக பெயின்ட் வாங்கித் தருகிறாள். அந்த பெயின்ட்டுக்கு பல வண்ணங்களின் பெயர் வைத்துத் தருகிறாள். அவனும் வரைந்து தீர்க்கிறான். எல்லா வண்ணமும் கலந்துதான் தன் ஓவியம் உருவாவதாக அவன் நினைத்துக் கொண்டிருப்பான். ஆனால், அது ஒற்றை வண்ணத்தில் உருவான ஓவியங்கள் என்பது அவனுக்கும் அவன் இழந்த கண்களுக்கும் தெரியாது.
ஆனால், வெறும் நீல வண்ணக் கலவையிலான அவனது ஓவியங்கள், கலைச் சந்தையில் தனித்துவத்துடன் கவனம் ஈர்க்கும். அதுவே அவனை புகழின் உச்சத்துக்குக் கொண்டு செல்லும்.
ஒரு கட்டத்தில் அடையாளமற்று இருந்த மைக்கேல் உலகம் போற்றும் ஓவியனாக ஓர் அங்கீகாரத்தைப் பெறும்போது 'இருவருக்குள்ளும் எப்போதும் போல் சண்டை பிறக்கிறது. அப்போது, தான் இதுவரை ஒற்றை வண்ணத்தை வைத்துதான் நூற்றுக்கணக்கான ஓவியங்களைத் தீட்டி இருக்கிறோம் என்ற உண்மை தெரியவரும். அதுவே தனக்கு வெற்றி தந்தது என்றாலும், தன்னை காயத்ரி ஏமாற்றிவிட்டதை எண்ணி வெறுத்துத் தெறிப்பான் மைக்கேல். 'நீ எனக்காக செய்த செலவினை வேண்டுமானாலும் திருப்பித் தருகிறேன். என் வாழ்க்கையை விட்டு விலகி விடு, என் வீட்டை விட்டு வெளியேறு' என்று கூச்சலிடுகிறான். அவள் சொல்வதைக் கேட்க அவனுக்கு நிதானம் இல்லை. 'சரி, இனிமே என் வாழ்க்கையைப் பார்த்துக் கொள்கிறேன்" என்று மனதுக்குள் உரைத்து அவனிடமிருந்து காயத்ரி விலகிச் செல்வாள்.
தனக்குப் புகழ் கிட்டுவதற்கு வித்திட்டாலும்கூட, தன்னிடம் நேர்மையாக இல்லை என்ற நிஜக் கலைஞனின் கோபத்தின் வெளிப்பாடுதான் காயத்ரியை மைக்கேல் உதறிய முடிவு. அதேபோல், ஒரு மகத்தான கலைஞனின் வெற்றிக்காக, நட்பின் பெயரிலான துரோகி ஒருவனுக்கு துகிலுரிக்கவும் முன்வந்த காயத்ரிக்கோ, உண்மை நிலையைப் புரியவைத்து அவனது வெற்றி வாழ்க்கையில் பங்குபோட தன்மானம் இடம் தரவில்லை.
நம் சமூகச் சூழலில் 'லிவிங் ரிலேஷன்ஷிப்' பற்றி பொட்டில் அடித்துப் பேசிய 'ஆர்டிஸ்ட்' ஓர் உன்னதப் படம். இந்தப் படத்தில் அமைந்த உண்மையும் இயல்புத்தன்மையும் 'ஓ காதல் கண்மணியில்' மிஸ்ஸிங்.
குடும்ப 'கமிட்மென்ட்ஸ்' எனும் வலையில் சிக்காமல் தங்கள் இலக்குகளை அடைவதற்கு கிடைக்கின்ற சுதந்திரம், சமூக கட்டமைப்புகளில் சிக்கிக் கொள்ளாத அதேநேரத்தில், இளமையின் தேவையைப் பூர்த்தி செய்தல், குடும்ப அமைப்புக்கே உரிய பாதுகாப்புத் தன்மையைப் பெறுதல் முதலானவை பற்றியெல்லாம் சினிமா மொழியில் பேசும் படம் ஆர்ட்டிஸ்ட். அதேவேளையில், நம் இந்தியக் குடும்பச் சூழலில் வளர்ந்து, அந்த உறவில் ஈடுபடும்போது உண்டாகும் உளவியல் சிக்கல்களையும் அப்படம் காட்சிகளால் நிரவியிருக்கும்.
பாரம்பரியத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், இந்தப் படத்தின் கதை போகும் திசையைக் கண்டு திடுக்கிடலாம். ஆனால், அவர்களின் லிவிங் டுகெதர் வாழ்க்கையைத் தொடங்கியதால் ஏற்பட்ட சிக்கல்கள், எதிர்பாராத விபத்தால் நிகழ்ந்த தடுமாற்றங்கள் முதலானவை அந்த உறவு குறித்த எண்ணத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, இரண்டு கதாபாத்திரங்களுக்கு ஆதரவும் எதிர்ப்பும் தரத் தொடங்கிவிடும். அந்த இடத்தில்தான் ஷியாம் பிரசாத் தன் ஆளுமையைப் பதிவு செய்திருப்பார்.
ஆனால், இங்கே மணிரத்னம்? வழக்கமான தமிழ் சினிமா தன்மைகள் இல்லாதபோதும் 'ஓ காதல் கண்மணி' ஒரு வழக்கமான மணிரத்னத்தின் சினிமாவே. காலத்திற்கேற்றார் போல் நவநாகரீகம் பெற்றிருக்கிறது. திருமணம் என்ற பந்தம் பக்கம் சாய்வதற்கு, 'அரவணைப்பு' என்ற அம்சம்தான் முக்கியக் காரணம் என்று மணி நேரடியாகவும் குறிப்பாலும் சொல்லியிருக்கிறார். ஆனால், அது மட்டுமே வலுவான காரணமாக இருந்திருக்க முடியாது என்பது நிதர்சனம். வேறு காரணங்களைத் தேடியிருந்தால், திருமண பந்தம் தேவையற்றது என்ற நிலைப்பாட்டுக்குக்கூட ஒரு படைப்பாளியாக இறுதி முடிவு எடுத்திருக்கக் கூடும். அது, தற்போதைய தமிழ்ச் சூழலில் எதிர்ப்பு அரசியலுக்கு வித்திடும் என்பதால் பாதுகாப்பான ஆட்டக்காரராகவே இருந்திருக்கிறார் என்று தோன்றுகிறது.
இதைப் போன்ற கீச்சிடல்கள் இருந்தும் 'ஓ காதல் கண்மணி' ஈர்த்ததற்கு முக்கிய காரணம் பிரகாஷ்ராஜ், லீலா சாம்சனின் முதுமைக் காதலே! 'வயதானாலும் நீயென் கண்மணியே' என்று உணர்த்தும் விதத்தில் பிரகாஷ் தன் மனைவியை நடத்தும் விதம் அழகாக இழைக்கப்பட்டிருக்கிறது. முதுமை மண வாழ்க்கையில் அமைந்திருந்த இந்த நேர்மையான பதிவேற்றம், 'லிவிங் டுகெதர்' உறவை உரைக்க மட்டும் தவறிவிட்டது.
தமிழ் சினிமாவில் கதாநாயகனை, ரசிகர்களை குஷிப்படுத்தும் போகப் பொருளாக நாயகிகளை கையாளும் இயக்குனர்கள் இடையே 'நாயகியை பெண்ணாக, மனைவியாக, ரத்தமும் சதையும் உணர்ச்சி கொண்ட ஓர் உயிராக' நாகரீகத்துடன் கையாளும் மணி ரத்னத்தின் நாயகர்களின் கண்ணியம் மனதைக் கவர்கிறார்.
"நீ பாரிஸுக்கு போ... உலகத்துல எங்க வேணும்னாலும் போ... ஆனா, என்ன கல்யாணம் பண்ணிட்டு போ! உன் கனவுகளைத் துறந்து எனக்காக மட்டும் வாழ் என்று சொல்பவன் காதலன் அல்ல சாடிஸ்ட்!"
இந்த ஒரு கண்ணிய நடத்தையே ஒகே கண்மணிக்கு ஓஹோ போட வைக்கிறது!
ஆனால், ஏனோ மீண்டும் முதல் பாராவை இங்கே போட்டு இந்தக் கட்டுரையை முடிக்கத் தோன்றுகிறது...
பலூனுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் காற்றுக்கு இருக்கின்ற சுதந்திரம்தான் இன்றைய தமிழ் சினிமா படைப்பாளிகளுக்கு இருக்கிறது. டாஸ்மாக் பற்றியும், பெண்களை எள்ளி நகையாடியும் சுதந்திரமாக படம் எடுக்கலாம். அந்த வட்டத்தைத் தாண்டி மதம், கலாச்சாரம், அரசியல் முதலானவற்றைப் பேசினால் படைப்பாளிகளின் நிலைமை அதோகதிதான். சமீபத்தில் வெளிவந்த பல படங்கள் சந்தித்த நிலை இதை மெய்ப்பித்துள்ளது.
சினிமா பித்தனின் ஃபேஸ்புக் பக்கம்>https://www.facebook.com/CinemaPithan
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
4 months ago