“பாரதியார் இன்று நமக்கு வைத்துவிட்டுப்போன சொத்துக்கள் பல. அவற்றில் முக்கியமானவற்றைக் குறிப்பிட வேண்டின் ஞானரதம், குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கனக சுப்புரத்தினம் என்ற பாரதிதாஸன் என்று சொல்ல வேண்டும்” என்று புதுமைப்பித்தன் பாரதிதாசனைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.
புதுவையில், 1891 ஏப்ரல் 29-ல் பிறந்தவர் கனக சுப்புரத்தினம். பிரெஞ்சுப் பள்ளியில் படித்தவர் என்றாலும், தமிழ் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார் அவர். தமிழ்ப் பண்டிதர்களின் மேற்பார்வையில் தமிழை ஆர்வத்துடன் கற்றார்.
இளம் வயதிலேயே பாடல்கள் இயற்றுவதில் தேர்ந்தார். தமிழில் நல்ல புலமையைப் பெற்ற பாரதிதாசனுக்கு காரைக்கால் அரசினர் கல்லூரியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது. பாரதியின் பாடல்கள் மீது மிகுந்த அபிமானம் கொண்டிருந்த அவருக்கு, பாரதியின் முன்னிலையிலேயே தனது பாடல்களைப் பாடிக்காட்டும் சந்தர்ப்பமும் வந்தது. அவரது திறமையைக் கண்ட பாரதி அவரைப் பாராட்டினார். அன்று முதல் பாரதி தாசனானார், கனகசுப்புரத்தினம். பத்திரிகைகளிலும் எழுதத் தொடங்கினார். கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன் என்று பல பெயர்களில் எழுதியிருக்கிறார்.
பெரியாரின் மீது பற்று கொண்டிருந்த பாரதிதாசன், திராவிட இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றினார். சுதந்திரப் போராட்டம், திராவிட இயக்கம் நடத்திய போராட்டங்களில் கலந்துகொண்டு பல முறை சிறை சென்றிருக்கிறார். பெரியார் அவரைப் ‘புரட்சிக் கவிஞர்’ என்று அழைத்தார். அண்ணா, ‘புரட்சிக் கவி’ என்று பட்டம் அளித்துக் கவுரவித்தார். ‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’ என்று அவரது படைப்புகளின் பட்டியல் நீளமானது. பாரதிதாசனின் படைப்புகளைக் குறைவாக மதிப்பிடுபவர்கள் உண்டு. அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் புதுமைப்பித்தன் இவ்வாறு குறிப்பிட்டார்:
“பாரதிதாஸனின் இன்னும் இரண்டொரு விசேஷ அம்சங் களைப் பற்றிக் குறிப்பிட விரும்புகிறேன். அவர் ஏதோ சுய மரியாதைக் கொள்கைகளுக்கு அடிமையானவர், அதனால் அவரிடம் தேசபக்திப் பாட்டுகளைப் பார்க்க முடியாது; அந்த மட்டில் அவர் மட்டமான கவிஞரெனச் சிலர் சித்தாந்தம் பண்ணுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ‘உன்னை விற்காதே’ என்ற பாட்டை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
இன்பம் வந்து நெருங்கிடு நேரத்தில்
ஈனர் அஞ்சிக் கிடக்கிற நேரத்தில்
ஒன்றி லாயிரம் தர்க்கம் புரிந்துபின்
உரிமைத் தாய்தனைப் போவென்று சொல்வதால்
என்னை யீன்ற நறுந்தாய் நாட்டினை
எண்ணுந் தோறும் உளம்பற்றி வேகுதே !
அன்பி ருந்திடில் நாட்டின் சுகத்திலே
ஆயிரம் கதை ஏன் வளர்க்கின்றனர்?
இப்படிப் பாடுவோரைத் தேசப்பற்று இல்லாதவர் என்று குற்றம்சாட்ட வேண்டும் எனில், பாரதியார் தொடுத்துவைத்த பாணியில், அவர் கற்பனையை அவலமாக்கி, உயிரற்ற கொடிப் பாட்டு, நாட்டுப்பாட்டு என்ற எதிரொலிச்சான் கோவில்களைப் பிறர் போல இவரும் கட்டவில்லை என வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். அதெல்லாம் மறைவாக நமக்குள்ளே பேசிக்கொள்கிற கதைகளாக இருக்க முடியுமே தவிர, மேடை ஏறாது”.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
30 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago