சொல்லத் தோணுது 27: பலி கேட்கும் பயணங்கள்

By தங்கர் பச்சான்

பலருக்கும் பயண அனுபவம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. பயணம் செய்ய முற்படும் போதெல்லாம் மரணபயமும் வந்து தொற்றிக் கொள்கின்றன. வீட்டை விட்டுப் புறப்படும் போது கடவுளை வேண்டிக் கொள்வதைத் தவிர வேறெந்த வழியும் தெரிவதில்லை. தொடர்வண்டி, வானூர்தி விபத்துகள் எப்பொழுதோ ஒன்று ஏற்படுவதைப் போல அல்ல சாலைவழிப் பயணங்கள். விபத்து செய்திகள் இல்லாத நாட்களே இல்லை எனலாம்.

வெறும் செய்தியாகவே அதனை ஊடகங்களில் பார்ப்பவர்களுக்கும், படிப்பவர்களுக்கும், அந்த விபத்துக்களினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைப் பற்றி சிந்திக்க நேரமோ தேவையோ இருப்பதில்லை. வெறும் புள்ளி விபரங்களுக்குள் அவர்களின் வாழ்வு முடிந்து விடுகிறது.

ஒரு சாலை விபத்து ஏற்படும் போது எதனால் அது நிகழ்ந்தது என்பதற்கான காரணங்கள் ஆராயும் முன்னரே அரசாங்கம் உதவித் தொகையை மட்டும் அறிவித்துவிட்டு தனது கடமையை முடித்துக் கொள்கிறது.

விபத்து என நடந்தால் வாகனம் ஓட்டிவந்தமுறை மட்டும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதுதான் பெரும்பாலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. எல்லா விபத்துகளும் வெறும் வாகன ஓட்டிகளால் மட்டுமே நிகழ்வதில்லை. சாலையின் ஒழுங்கு, வாகனத்தின் இயங்குநிலை, வாகன ஓட்டியின் உடல்நிலை என அனைத்துமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

சாலையின் ஒழுங்கு மற்றும் சீர்கேட்டினால் ஏற்படுகின்ற விபத்துக்கள் பற்றி இதுவரை ஆராயப்பட்டதாகவோ, அவ்வாறு ஆராயப்பட்டாலும் அதனை உருவாக்கியவர் மீதும் மேற்கொண்டு பராமரித்த ஒப்பந்ததாரர் மீதும் அதற்குக் காரணமாக பின்புலத்தில் இயங்கும் அதிகாரிகள் மற்றும், அரசாங்கத்தின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தண்டனை வழங்கப்பட்டதாக யாராவது கேள்விப்பட்டிருக்கிறோமா?

ஒரு சாலை என்பது உருவாக்கப்படும் போதும், பின் அது பராமரிக்கப்படும்பொது மேற்கொள்ள வேண்டிய நிபந்தனைகள் இங்கு கடைபிடிக்கப்படுகின்றதா? பொறுப்பிலுள்ளவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு, தங்களுக்கு சேரவேண்டியதைக் கொடுத்தால் போதும் எவருக்கும் அந்தப் பணியைக் கொடுத்துவிடலாம் என்னும் நிலையில் தான் சாலைப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஒழுங்கான, நேர்மையான முறையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டால் ஒரே ஒரு சாலையாவது நம் நாட்டில் தேறுமா?

இவைகளெல்லாம் முறையாக மேற்கொள்ளப்பட்டன என கையெழுத்திடும் அமைச்சர்களும் அந்தத் துறை சார்ந்த அதிகாரிகளும், சாலை உருவாக்கிய ஒப்பந்ததாரரும் நீதிமன்றத்தால் என்றைக்காவது ஒருநாள் தண்டிக்கப்படும் பொழுதுதான் இவைகள் தொடர்பான குற்றங்கள் குறையும். அதுவரை முடித்து வைக்கப்படும் கணக்காகவே அனைத்து விபத்துக்களின் காரணங்களும் காணாமல் போகும். மனிதக் கொலை வழக்குகளுக்கு நீதிமன்றங்களில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் விபத்துத் தொடர்பான வழக்களுக்கு தரப்படுவதில்லை.

அதேபோன்று விபத்துக்குக் காரணமாகும் வாகனங்கள் பெரும்பாலும் அதன் தன்மையை இழந்து போன சாலைகளில் இயக்கத் தகுதியற்ற மிகப்பழைய வாகனங்களாகவும், பராமரிப்பு அற்றவைகளாகவும் இருப்பது இன்னொரு முதன்மையானக் காரணம். போக்குவரத்து அதிகாரியிடமிருந்து உரிமம் பெறுவதிலிருந்து நேர்மையான முறைகளைப் பின்பற்றப்படுவதில்லை. அதன் தரக்கட்டுப்பாட்டையும், தகுதி கட்டுப்பாட்டையும் நேர்மையாகவும், கண்டிப்புடனும் செயல்படுத்தினாலே முக்கால்வாசி விபத்துக்கள் தவிர்க்கப்படும். அந்தப் பதவியைப் பெறுவதற்காகவும், பணி இடமாற்றத்திற்காகவும் அந்த அதிகாரிகள் கொடுக்க வேண்டியவர்களுக்கு கொடுத்து தங்களின் நேர்மையை இழக்க வேண்டியிருக்கிறது. விபத்துக் காரணங்களை உண்மையுடன் ஆராய்ந்தால் எத்தனை அதிகாரிகள் தப்புவார்கள் என்பது தெரியவரும். அவைகளெல்லாம் இனி எக்காலத்துக்கும் நடக்கப் போவதில்லை.

குடிப்பழக்கம் பெறுகிவிட்ட கடந்த ஆண்டுகளில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடிக் கொண்டேப் போகிறது. நெடுஞ்சாலை மற்றும் உள்ளூர் சாலைகளின் ஓரமாக மதுக்கடைகள் இயங்கக்கூடாது என வழக்குப் போட்டுப் பார்த்தார்கள். நீதிமன்றமும் கட்டளைப் பிறப்பித்தது. நீதிமன்றத்தின் ஆணைகள் எத்தனையோ கண்டுகொள்ளப்படாமல் மீறப்பட்டு கொண்டிருப்பதுபோல் மதுக்கடைகளும் நெடுஞ்சாலைகளிலிருந்து அகற்றப்படவில்லை. சில இடங்களில் வெறும் வாசல்படிகளை மட்டும் வேறுப்பக்கம் மாற்றி வைத்துக் கொண்டார்கள்.

எல்லா விபத்துக்களும் குடிமக்களின் தலையிலேயே அவர்களின் குடும்பத்திலேயே ‘பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்’ என்பதுபோல விழுந்து கொண்டிருக்கின்றன. மக்களால் முடிந்ததெல்லாம் எலுமிச்சம்பழத்தை சக்கரத்தில் ஏற்றிவிட்டு சாலையோக் கடவுரை வேண்டுவது மட்டும்தான்.

தங்களின் வாகனத்தை வேறொரு வாகனம் கடப்பதை எவருமே விரும்புவதில்லை. என்னையா மீறினாய்? என்னுடைய வாகனத்தின் மதிப்பு என்ன? சுண்டைக்காய், நீ முந்துகிறாயா என வேகக்கட்டுப்பாட்டை பொருட்படுத்தாமலேயே ஒருவரையொருவர் முந்திக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் தொகை அதிகரித்ததால் வாகனங்கள் அதிகரித்திருக்கிறது. அதனால் விபத்துக்களும் அதிகமாகும்தானே எனச் சொல்லலாம். விலை மதிப்பற்றவை உயிர்கள் மட்டுமே. இவை அயல்நாடுகளில் மட்டுமே பின்பற்றப்படுகின்றன. சாலை விபத்து ஒன்று நிகழும்போது அங்கு மேற்கொள்ள வேண்டிய உடனடியான நடவடிக்கைகள் உடனுக்குடனாக செயல்படுத்தப்படுகின்றன. அதேபோல் இங்கு இதனை சரி செய்யக்கூடியவர்கள் உயர்நிலையிலுள்ள அதிகாரிகளும், ஆட்சியாளர்களும்தான்.அவர்கள் ஒருபோதும் இதில் அக்கரை செலுத்துவதாகத் தெரியவில்லை. ஏனென்றால் அவர்களிடம் ஹெலிகாப்டர் இருக்கிறது, சிவப்பு விளக்கு பொருத்திய மக்களை விரட்டியடிக்கும் வாகனங்கள் இருக்கின்றன. இங்கு பயந்து பயந்து பயணம் செய்பவர்களெல்லாம் இவர்களை பதவியில் அமர்த்தும் மக்கள்தான்.

சாலை விபத்துக்கள் குறித்த செய்திகளை கண்ணுறும் போதெல்லாம் அதனால் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்கள்தான் என் கண் முன் வந்து நிற்பார்கள். தந்தையை இழந்து வாழ்க்கைத் தவறவிட்டப் பிள்ளைகள், கணவனை இழந்து, மனைவியை இழந்து குழந்தைகளுடன் போராடும் குடும்பத்தலைவனும் தலைவியும், உடன்பிறந்தவர்களை இழந்து வாடும் அண்ணன், தம்பி, தங்கை, அக்காக்கள், திருமணத்துக்கு நாள் குறித்துவிட்ட மணமக்கள், மணம் முடிந்து கற்பனைகளுடன் வாழ்வைத் துவக்கவிருந்த இளம் கணவன், மனைவி, வாழ்க்கை என்னவென்றே வாழ்ந்துப் பார்க்காத பள்ளிச் செல்லும் இளம் பிஞ்சுகள் என எத்தனையோ உறவுகள் பாதிப்பையும், இழப்பையும் அடைந்து கொண்டிருக்கிறார்கள் . காரணமானவர்கள் என்ன முடிவை எடுக்கப் போகிறார்கள்? பலிகள் கேட்கும் கடவுளுக்கு பலி கொடுக்கவும் யாகங்கள், பூசை செய்யவும் தெரிந்து வைத்திருக்கிறோம். ஆனால், பலிகள் கேட்கும் பயணங்களுக்கு தங்களுக்கு தொடர்பே இல்லாத தங்களின் உயிரைத் தர வேண்டியிருக்கிறதே எனும் கேள்விக்கு பதிலை சிந்திக்க நமக்குத் தெரியவில்லை.

அந்த சாலைப்போட்ட நாளிலிருந்து அந்த குறிப்பிட்ட பாலத்தில் இதுவரை நடந்த விபத்துக்களைக் கணக்கெடுத்தால் நூறுக்கு மேலே கூடப் போகலாம். எத்தனை உயிர்கள் இழப்பு, எவ்வளவோ குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கின்றன.

கும்பகோணம்-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் நெய்வேலி வளைவிலிருந்து வடலூருக்கு செல்லும் வழியில் ஒரு ஓடையின் குறுக்கே எந்தக் காலத்திலோ அமைத்த அந்த ஒரே ஒரு வாகனம் மட்டும் செல்லும் ஒருவழிப் பாலம் பலி வாங்கிய உயிர்கள் கணக்கற்றவைகள்.இந்த வழியாக எத்தனை முறைகள் எத்தனை அமைச்சர்கள், முதலமைச்சர்கள், அதிகாரிகள், பொறியாளர்கள் கடந்து போயிருப்பார்கள்?

தீர்வுதான் இல்லை.இதுதான் நம்நாடு!

- சொல்லத் தோணுது…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: thankartamil@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்