ஜெயகாந்தனோடு பல்லாண்டு 24- "Courage is a great quality!”

By பி.ச.குப்புசாமி

“Courage is a great quality!” என்று ஒருமுறை ஜெயகாந்தன் கூறினார்.

அச்சமே சகல பாவங்களுக்கும் மூலா தாரம் என்றும், அச்சமே சீழ்களின் ஆசாரம் என்றும் பாரதியார் சொல்லியிருக் கிறார்.

ஜெயகாந்தனுக்குத் தைரியம் அவர் இயல்பிலேயே இருந்தது.

ஓர் ஊரில் ஒரு செருப்புக் கடையில் ஜெயகாந்தன் வேலை செய்திருக்கிறார். அந்தக் கடையில் தனது ஷுக்களைப் பழுது பார்க்க ஒப்படைத்த உள்ளூர் சப்-இன்ஸ்பெக்டர், அவற்றைத் திருப்பி வாங்க வந்தபோது, கடையில் தன்னந் தனியாக இருந்த ஜெயகாந்தனிடம் வாக்குவாதம் செய்து, தனது கோபத் தின் உச்சியில் கெட்ட வார்த்தை ஒன்றைச் சொல்ல, அவரை அடிக்கக் கடையில் அரிதண்டாவை உருவிக் கொண்டு பாய்ந்துள்ளார் ஜே.கே.

அரிதண்டா என்பது அந்தக் காலத்துக் கடைகளின் கதவாக இடம்பெற்ற தனித் தனிப் பலகைகளை, இரண்டு வளையங்களுக்கு ஊடாகச் சென்று இணைக்கும் ஓர் இரும்புத் தண்டு.

சப்-இன்ஸ்பெக்டர் அலறி அடித்துக் கொண்டு வெளியேறிவிட்டாராம். அதற்கப்புறம் அந்த ஊரில் ஜெயகாந்தன் இருக்கலாகாது என்று அவருடைய நலம் விரும்பிகள் இன்னோர் ஊருக்கு அவரை அனுப்பி வைத்தனராம்.

அதிகாரம் தன் மீது பாயும்போது எல் லாம் அவருக்கு ஓர் அலர்ஜி உண்டாகி விடும்!

எம்.கே.டி.சுப்பிரமணியம் நடத்திய ‘ஜெயக்கொடி‘ என்ற பத்திரிகைக்கு ஜெயகாந்தன் கொஞ்ச காலம் ஆசிரிய ராக இருந்தார்.

1968-ம் ஆண்டு மே மாதத்தில், ஜெய காந்தன் என்னையும் அழைத்துக் கொண்டு, புதுச்சேரி, திருச்சி, தஞ்சாவூர் என்று பல ஊர்களில் கூட்டங்களுக்குச் சென்றார்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் அவர் தந்தையுடன் பிறந்த சகோதரி, அதாவது ஜே.கே-வின் அத்தை வீடு இருந்தது. அங்கே போய் ஒரு பகல் பூராவும் இருந்துவிட்டு, மாலை வேளை யில் தஞ்சாவூர் செல்வதற்காக பாபநாசம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தோம்.

ரயிலுக்குக் காத்திருக்கும்போது, மறு நாளுக்கு ‘ஜெயக்கொடி‘ பத்திரிகைக் கான தலையங்கம் ஒன்றை அவர் கூற, நான் எழுதி வைத்துக்கொண்டேன்.

தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷன் வந்ததும், ஜே.கே அந்தத் தலையங்கக் கட்டுரையை தபாலில் சேர்க்குமாறு என்னை அனுப்பி வைத்தார்.

நான் திரும்பி வந்தபோது நான் கண்டது ஒரு சுவாரஸ்ய மான காட்சி!

ஜெயகாந்தன் ஹிக்கின் பாதம்ஸ் புத்தகக் கடைக்குச் சென்று, குனிந்த நிலையில் ஏதோ ஒரு புத்தகத்தைப் பார்த் துக் கொண்டிருந்தார். ஒரு போலீஸ்காரர் அவரிடம் சென்று, அவரது தோள்பட்டையை வெடுக் கென்று தொட்டு, “ஏங்க... இந்த சூட்கேஸ் யாரோடது?” என்று கேட்டார். ஜெயகாந்தனின் சூட்கேஸ், அவருக்கு இரண்டு அடிகள் பின்னால் தரையில் வைக்கப்பட்டு இருந்தது.

சட்டென்று எழுந்த ஓர் எரிச்சலோடு ஜெயகாந்தன் திரும்பிப் பார்த்தார். அவருக்குத் தன் உடம்பை யாரும் அநாவசியமாகத் தொட்டால், அது பிடிக்காது.

“ஏன்... என்னோடதுதான்” என்றார்.

போலீஸ்காரரின் கையில் ஒரு தவறு வசமாகக் கிடைத்துவிட்டது. அவர் முகம் மிகவும் அதிகாரத் தன்மை கொண்டதாக மாறிவிட்டது.

“இங்கே இப்படி வெச்சிட்டு வந்துட்டீங்களே... யாராவது எடுத்துனு போயிட்டா என்ன பண்ணுவீங்க?” என்று கொஞ்சம் நக்கல் தொனிக்கக் கேட்டார்.

“நீங்க என்னத்துக்கு இருக்கீங்க... போய்ப் பிடியுங்க!” என்றார் ஜெய காந்தன். இன்னும்கூட சூடாகவே வந்து விழுந்தன வார்த்தைகள்.

பாவம் அந்தப் போலீஸ்காரர் வெலவெலத்துப் போய்விட்டார்.

“இல்லே சார்... இங்கே அடிக்கடி திருட்டு போகுது. அதுக்குச் சொன் னேன்!” என்று ஒரு நயமான நிலைக்கு இறங்கிவந்தார்.

“அதை எப்படிச் சொல்லணும்?” என்று ஜெயகாந்தன் ஒரு நிமிடம் நயமாகப் பேசி, அந்த போலீஸ்காரரை ஆசுவாசப்படுத்திவிட்டு நகர்ந்தார்.

போலீஸ்காரர்களின் வாழ்க்கையின் மீது அவருக்குள்ள பரிவை, அவருடைய கதாபாத் திரங்களிலேயே காணலாம். அவருடைய ஒரு கதை யில் போலீஸ்காரராக வரு கிற ஒரு பாத்திரம், வீட்டுக்குள் நுழைந்து தன் தொப்பியைக் கழற்றி வைக்கிறபோதே, படித்துக் கொண்டிருக்கும் தன் மகனைப் பார்த்து, “இந்த போலீஸ்கார அலைச்சல் உத்தியோகம் உனக்கு வேண்டாம்... கண்ணே!” என்று சொல்லும்.

ஜே.கே.வின் தாய் மாமன் கோவிந்த ராஜப் பிள்ளை என்பவர் ஓர் போலீஸ் உயர் அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர். அவரை வைத்து ஜெயகாந்தன் நேர்மையான ஒரு போலீஸ் அதிகாரியின் கதையைக் கூட எழுதியிருக்கிறார். ஜெயகாந்தனுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்ட அந்த ஆண்டு, சபரிமலைப் பயணத்தில் இருந்து திரும்பும்போது, திருநெல்வேலியில் எங்களையும் அழைத்துக் கொண்டு ஜெயகாந்தன், தன் தாய் மாமனைப் போய்ப் பார்த்தார்.

பேச இயலாத வகையில், தொண்டை யில் ஒரு குழாய் செருகி இருக்க, ஜெயகாந்தனின் மாமா, தன் அருகே இருந்த ஒரு சிலேட்டில் ‘சாகித்ய அகாடமி விருது’ செய்தி பார்த்தேன் என்று எழுதிக் காட்டிப் பூரித்தார். இப்போதும் கோவிந்த ராஜப் பிள்ளை எங்கள் நினைவுகளில் அமரத்துவம் பெற்றுவிட்டார்!

தெரு போலீஸ்காரர்களிடம் கோபித் துக் கொள்வது மட்டும் அன்று ஜெய காந்தனின் தைரியம்!

சமூகத்தில் பரவலாகவும் அழுத்தமாக வும் தற்காலிகமாக ஆட்சிபுரிகிற நேரடியான மற்றும் மறைமுகமான கருத்ததிகாரங்களிடமும் அவர் தனது தைரியத்தைக் காட்டினார்!

ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் ஓடுகிற கார்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு, குறிப்பிட்ட ஒருவருக்கு ‘வாழ்க’ என்று கூறிய பிறகே மேற்கொண்டு பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டன.

அத்தகைய சூடான கொந்தளிப்பான சூழ்நிலையில், வேலூர் மண்டித் தெரு வில் ஜெயகாந்தன் பேசிய பேச்சு, தைரிய லட்சுமியின் திவ்ய சொரூபமாகும்!

“இதோ, இந்தக் கூட்டம் முடிந்து தன்னந்தனியாக நான் காரோட்டிக் கொண்டு சென்னைக்குப் போகப் போகி றேன். வழியில் வந்து என்னைச் சந்திக் கிறீர்களா?” என்று அந்த மிரட்டல் கூட்டத் துக்கு ஒரு அதட்டல் விடுத்தவர் ஜே.கே!

முன்னாள் அமைச்சர் ப.உ.சண்முகம் வேலூர் மண்டித் தெருவில் ஒரு மாடியில் இருந்துகொண்டு, ஜெயகாந்தனின் இந்தப் பேச்சைக் கேட்டதாகப் பின்னால் சொல்லப்பட்டது. அவரும் கூட ஒரு ‘வாழ்க’ சொல்லாமல் சுதந்திரமாக காரில் போக முடியாதிருந்த காலம் அது!

ஜெயகாந்தன் ‘ஹர ஹர சங்கர’ எழுதியது தைரியத்தின் இன்னுமோர் அடையாளம் ஆகும். பிரபல தமிழ் இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் “அதன் இலக்கிய மதிப்பு ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த நேரத்தில் இந்த மாதிரி எழுதுவதற்கு ரொம்பவும் தைரியம் தேவை!’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இழப்பதற்கு விலங்குகள் மட்டுமே இருக்கின்றன என்கிற மனோ பாவத்தில் பிறந்த மேலான தைரியம் ஜே.கேவுடையது.

- வாழ்வோம்

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pisakuppusamy1943@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

வலைஞர் பக்கம்

28 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்