இன்று அன்று | 1897 மார்ச் 10: சாவித்ரிபாய் பூலே நினைவுதினம்

By செய்திப்பிரிவு

பெண்கள் முன்னேற்றத்துக்காகவும், சமுதாய மாற்றத் துக்காகவும் உழைத்தவர்களில் முக்கியமானவர் சாவித்ரிபாய் பூலே. பெண்களின் உரிமைகளுக்காகப் போராடும் பலரும் தங்களின் முன்னோடியாகக் கருதுவது இவரைத்தான்.

மகாராஷ்டிர மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் உள்ள நைகாவ் கிராமத்தில் 1831-ல், விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் சாவித்ரிபாய். அந்தக் கால வழக்கப்படி 9-வது வயதில் அவருக்குத் திருமணம் நடந்தது. சாவித்ரிபாயைத் திருமணம் செய்தவர், பின்னாட்களில் இந்திய சமூகப் புரட்சியின் தந்தையாக உருவெடுத்த ஜோதிராவ் பூலே. சாதியக் கொடுமைகளுக்கு எதிராகவும், புறக்கணிக்கப்பட்ட மக்களுக்குக் கல்வியை வலியுறுத்தியும் போராடிய ஜோதிராவின் கொள்கை

களால் ஈர்க்கப்பட்டார் சாவித்ரிபாய். அந்த லட்சியத் தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் இருக்கவில்லை. பிராமண விதவை ஒருவரின் மகனைத் தத்தெடுத்து வளர்த்தார்கள். தனது கணவரிடம் கல்வி கற்றார் சாவித்ரிபாய். பிற்போக்குத்தனத்தில் ஊறித் திளைத் திருந்த உறவினர்கள் மற்றும் சமூகத்தினரின் எதிர்ப்பையும் மீறி, ஜோதிராவ் பூலேயின் பணிகளுக்குத் துணைநின்றார்.

1848-ல் புணேயில் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினார் சாவித்ரிபாய் பூலே. முதன்முதலாகத் திறக்கப்பட்ட பெண்கள் பள்ளி அதுதான். அந்தக் காலத்தில் பெண்கள் இளம் வயதில், வயதான ஆண்களைத் திருமணம் செய்ததால், விரைவிலேயே கணவரை இழக்க நேர்ந்தது. சமூகப் புறக்கணிப்புகளை எதிர்

கொண்ட அந்தப் பெண்களுக்கு ஆதரவளித்தார் சாவித்ரிபாய் பூலே. அத்துடன் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கர்ப்பம் தரித்த அபலைப் பெண்களுக்கு உதவும் வகையில், ஆதரவு இல்லம் ஒன்றையும் நடத்தினார். பொது நீர்நிலைகளில் தண்ணீர் எடுக்க அனுமதி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, தங்கள் சொந்த வீட்டிலேயே கிணறு வெட்டினார்கள் அந்தத் தம்பதியினர். தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான பள்ளியை 1852-ல் சாவித்ரிபாய் தொடங்கினார்.

புரட்சிகரமான அவரது செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த உயர் சாதியினர், அவரைப் பலவகைகளிலும் அவமானப் படுத்தினார்கள். எனினும், தனது கொள்கைகளிலிருந்து அவரை எந்தச் சக்தியாலும் பிரிக்க முடியவில்லை.

அயராத போர்க்குணம் கொண்டிருந்த சாவித்ரிபாய் நல்ல கவிஞரும்கூட. மராத்தியக் கவிதைகளின் முன்னோடி என்று போற்றப்படும் இவரது கவிதைகளும் சமூகக் கருத்துக்களைத்தான் கொண்டிருந்தன. 1854-ல் இவர் வெளியிட்ட ‘காப்யா பூலே’ எனும் கவிதைத் தொகுப்பில், சாதிய அடக்குமுறைகள், கல்வியின் அவசியம், இயற்கையின் அழகு உள்ளிட்ட விஷயங்கள் பதிவு செய்யப்பட்டன.

தனது மாணவிகளிடமும் சமுதாய அக்கறைகுறித்த விழிப்புணர்வை ஊட்டினார் சாவித்ரிபாய். தனது கணவருடன் இணைந்தே சமூக விடுதலைக்காகப் போராடினாலும் தனது தனித் தன்மையை இழக்காமல் இருந்தவர் அவர். 1890-ல் ஜோதிராவ் பூலே மறைந்த பின்னர் அவர் நடத்திவந்த ‘சத்ய ஷோதக் சமாஜ்’ (உண்மையைத் தேடுபவர்களின் சங்கம்) எனும் அமைப்பைத் தானே முன்னெடுத்து நடத்தினார்.

1897-ல் இந்தியாவில் பரவிய கொள்ளை நோய்க்குப் பலர் பலியானார்கள். அந்நோயால் பாதிக்கப்பட்டவர் களுக்குச் சிகிச்சை அளிக்க புணேவுக்கு அருகில் உள்ள ஹட்ஸ்பார் நகரில் தனது வளர்ப்பு மகன் யஷ்வந்த்துடன் இணைந்து மருத்துவமனையைத் தொடங்கினார் சாவித்ரிபாய். கடைசியில் அவரும் கொள்ளைநோய்த் தாக்குதலுக்கு இதே நாளில் பலியானார்.- சரித்திரன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

15 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்