குருதி ஆட்டம் 26- கூடி வந்த இரை!

By வேல ராமமூர்த்தி

ஊர் சனம் கிழக்குப் பொழுதை விடிய விடவில்லை. இருளப்பசாமி கோயிலை நோக்கி, சன்னம் சன்னமாகக் கிளம்பி போய்க் கொண்டிருந்தது.

போகிற வழியில் முளைக்கொட்டுத் திண்ணை. நாலு கல்தூணில் நிற்கும் ஓட்டுக் கொட்டகை. மையத்தில் மூன்று அடுக்குக் கும்பம். கும்பத்தைச் சுற்றி, ஊர் குமரிகள் வளர்த்த முளைப்பாரிகள். நாராயணத் தேவர் வீட்டு சனிமூலை இருட்டில் வளர்ந்த இந்த வருஷ முளைப்பாரி, வஞ்சகம் இல்லாத வளர்த்தி. குமரிகளின் இடுப்புக்கு மேல் உயர வளர்த்தி. தலையில் தூக்கி வைத்து ஊர் சுற்றி வருபவளின் கழுத்து வலித்துப் போகும்.

முளைக்கொட்டுத் திண்ணையைக் கடந்து போகும் சனம், கும்பத்து முளைப் பாரிகளைக் கண்டதும் கைகூப்பி வணங்கி, “ஊரைப் பிடிச்ச பீடை விலகணும் தாயீ…” என கன்னத்தில் போட்டுக்கொண்டு கண்மாய் பாதையில் நடந்தது.

கரை இறக்கத்தில் கோயில். 17 வருஷத்துக்குப் பிந்தி பிறந்த விடலை களும் சிறுவர்களும் இருளப்பசாமி கோயிலை இத்தனை அலங்காரத்தோடு பார்த்தது இல்லை.

புது டவுசர், சட்டை போட்டிருக்கும் உற்சாகத்தில் சிறுவர்கள், வீட்டுக்கும் கோயிலுக்கும் கால் ஓயாமல் ஓடித் திரிந்தார்கள்.

வெட்டுக் கிடாய்களின் கொம்புகளில் பூ சுற்றி, இளவட்டங்கள் கோயிலுக்கு அழைத்துக் கொண்டுபோனார்கள். பாலாட்டம் புல்லையும் பச்சை செடி கொடிகளையும் தின்று கொழுப்பேறி வளர்ந்த கிடாய்கள், வெட்டுப்படப் போவது தெரியாமல் போருக்குப் போகிற தோரணையில், கொம்புத் தலை தூக்கி யுத்தக் கள நடை போட்டுப் போயின.

பட்டுப் பாவாடை தாவணியில் மினுங்கும் குமரிகளை முன்னே நடக்கவிட்டுக் கண்ணழகு பார்த்தபடி, பெரிய பொம்பளைகள் நடந்தார்கள்.

நல்லாண்டி வீட்டுக்கு வெள்ளை யம்மா கிழவி வந்திருக்கும் செய்தி, நேற்று இரவே ஊருக்குள் கசிந்து இருந்தது. அரண்மனைக்கு மட்டும் சேதி எட்டலே. பெருங்குடி பெருசுகளின் நினைவில் மட்டும் கிழவி இருந்தாள். இளந்தாரிகளுக்குக் கிழவியை இன்னாருன்னே தெரியலே.

ஊருக்கு கடைசி வீடாய் நல்லாண்டி குடும்பம் கோயிலுக்குக் கிளம்பியது. பொங்கல், பூஜை சாமான்களை தலைச் சுமையாகச் சுமந்து போகிற சாக்கில், வெள்ளையம்மா கிழவியை ஊடே விட்டு, மறைத்துக்கொண்டு நடந்து போனார்கள்.

கோயில் வாசலில் நின்ற கணக்குப் பிள்ளை ரத்னாபிஷேகம், வெள்ளை யம்மா கிழவியை எதிர்கொண்டு ஓட வந்து, “வாங்க தாயீ வாங்க... வாங்க…” தலைக்கு மேல் கும்பிட்டபடி அழைத்துப் போனார்.

இருளப்பசாமியை கோயில் பூசாரி தவசியாண்டி அலங்காரப்படுத்தி இருந்தான். சாமியின் இடுப்பைச் சுற்றி சிவப்பு வண்ணச் சிற்றாடையும் இடது தோளை வளைத்து, குறுக்கு வசமாய் பச்சை வண்ணச் சிற்றாடையும் உடுத்திவிட்டிருந்தான். சாமியையும் சிம்ம வாகனத்தையும் சந்தனம், குங்குமத் திலகங்களால் நிறைத்திருந்தான். கழுத்தில் இருந்து கால் மறைத்து மலர் மாலைகள். உச்சிக் கொண்டையில் பூச் சுற்று.

ரத்னாபிஷேகம் பிள்ளை அழைத்துப் போய் சாமிக்கு முன் நிறுத்திய வெள்ளையம்மா கிழவி, கோயில் பூசாரியாய் தவசியாண்டியைக் கண்டதும் அதிர்ச்சியுற்றாள். ‘இவன் இன்னமுமா… உயிரோடு இருக்கிறான்?’ என்கிற நினைவோட்டத்தில் சாமியைப் பார்த்தாள்.

வெள்ளையம்மாவைக் கண்ட தவசியாண்டி நொடி நேரம் துணுக்குற்று, தீபாராதனை தட்டை தன் முகத்துக்கு நேராக உயர்த்தி, “வாங்க தாயீ…” என்றான்.

தவசியாண்டியை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்த்த வெள்ளையம்மா, கற்பூர நெருப்பைக் கை குவித்து வணங்கி கண்களில் ஒற்றிக் கொண்டாள்.

இருவரின் முகக் குறிப்புகளைக் கண்ணளந்த ரத்னாபிஷேகம் பிள்ளை, கூட்டத்தை விலக்கி பாதை நோக்கி ஓடினார்.

கூட்டம் முணுமுணுத்தது, “அரண்மனை வர்றாரு...” உடையப்பனும் பெருநாழி முதலாளியும் அரண்மனை ஆட்கள் புடை சூழ வந்து கொண்டிருந்தார்கள். திரும்பி, பாதையில் கண் ஓட்டிய வெள்ளையம்மா உடையப்பனைக் கண்ட தும் மெல்ல நகர்ந்து, ஆல மரத்துப் பக்கம் ஒதுங்கி மறைந்தாள்.

இருளப்பனுக்கு அருகில் நின்ற தவசியாண்டி, கை நிறையக் கற்பூரத்தை அள்ளிப் போட்டு, ஆராதனைத் தட்டில் பெரு நெருப்பை எரியவிட்டான்.

ஒரே வெட்டில் கிடாய்த் தலையை உருட்டும் காவல்க்காரத் திருமால் தேவரின் கை அரிவாள் ரத்தப் பசியோடு மினுங்கியது.

கோயில் புறப்பாட்டுக்கு ஆயத்த மாகிக் கொண்டிருந்த செவ்வந்தியின் பின்னால் நின்று, கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அரியநாச்சி. நேற்று குடிசைக்கு வந்ததில் இருந்து ஒரு வார்த்தைகூட பேசாதவள் செவ்வந்தி. ஆனாலும், அரியநாச்சியின் நினைவோரம் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருந்தாள்.

தன்னை அரியநாச்சி பார்த்துக் கொண்டிருப்பதை பிடரி கண்ணால் பார்த்துவிட்ட செவ்வந்தி, நெருங்கி வந்தாள். “கோயிலுக்குப் போகலாமா?” என்றாள்.

பதிலேதும் சொல்லாதவள், எதிர் குடிசையை பார்த்தாள். திரிக்கப்பட்ட ‘வைக்கோல் பிரி’யை வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தான் துரைசிங்கம்.

“துரைசிங்கம்… கிளம்பலாமா?” இங்கிருந்தே கேட்டாள் அரியநாச்சி.

“ம்…” தலையை ஆட்டினான் துரைசிங்கம்.

கூட்டு வண்டிக்குள் அரியநாச்சியும் செவ்வந்தியும் ஏறி அமர்ந்தார்கள். கதவு இல்லாத குடிசைகளைக் காட்டில் விட்டுவிட்டு வண்டியைக் கிளப்பினான் துரைசிங்கம்.

வைக்கோல் பிரிக்குள் மறைந்திருக் கும் ஆயுதங்கள், வண்டி ஓட்டத்தில் நழுவி விழுந்து விடாமல் கை அணைத்தபடி பெருங்குடி நோக்கி ஓட்டிப் போனான்.

விவரம் தெரிந்த நாளில் இருந்து வெளி உலகம் கண் டிராத செவ்வந்தி, உற்சாக மாக அமர்ந்து வந்தாள்.

வெறிச்சோடிக் கிடந்த ஊருக்குள் கஜேந்திரனின் கார் நுழைந்தது.

பாட்டியை ரயிலேற்றிவிட்டதில் இருந்து தனிமையில் தவித்தவன், ‘லண்டன் பயணத்துக்கு முன் ஊரைத் தான் பார்த்து வருவோமே’ என்கிற திடீர் முடிவில் கிளம்பி வந்துவிட்டான்.

‘கணக்குப்பிள்ளை வீடு இதுதான்’ எனக் கை காட்ட, யாரையும் காணோம். பொத்தாம் பொதுவாக ஓரிடத்தில் காரை நிறுத்தி இறங்கியவன், கண் களை அலையவிட்டான். தெரு வெங்கும் தோரணங்களும் வாசல் கோலங்களுமாக திருவிழாக் களைகட்டி இருந்தது ஊர்.

‘நல்ல ஊராக இருக்கிறதே!’ நடந்தான். எதிரே ஒரு கூட்டு வண்டி வந்து கொண்டிருந்தது. கைகாட்டி நிறுத்தினான். வண்டி ஓட்டி வந்த ஊமையன் துரைசிங்கத்திடம், “இங்கே… கணக்குப்பிள்ளை வீடு எது?” என்றான்.

வண்டித் திரை நீக்கி கஜேந்திரனை அரியநாச்சி பார்த்தாள். திரைக்குள் இருந்த செவ்வந்தியை கஜேந்திரன் பார்த்தான்.

தன் இரை இவன்தான் என அறியாத துரைசிங்கம், காளைகளை விலக்கி கண்மாய் பாதையில் செலுத்தினான்.

- குருதி பெருகும்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: irulappasamy21@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

18 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்