தான் கடந்து வந்த வாழ்க்கையை அப்துல் கலாம் நினைத்துப் பார்ப்பதாக அமைந்துள்ளது அவர் எழுதியுள்ள 'எனது பயணம்' நூல். இதில் இளைய தலைமுறை அறிந்துகொள்ள நிறைய தகவல்கள் பொதிந்து கிடக்கின்றன.
இந்நூலை தமிழில் மொழிபெயர்த்துத் தந்திருப்பவர் நாகலட்சுமி சண்முகம். நூலின் ஒவ்வொரு அத்தியாயத்துக்கும் தகுந்த ஓவியங்களை வரைந்து அழகு சேர்த்திருக்கிறார் பிரியா செபாஸ்டியன்.
நூலிலிருந்து ஒரு சிறிய பகுதி இங்கு பகிரப்படுகிறது:
எங்கள் ஊரின் சிறிய மக்கட்தொகையில் இந்துக்கள் பெருமளவில் இருந்தனர். எங்களைப் போன்ற இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் குறைவான எண்ணிக்கையில் அங்கு வசித்து வந்தனர். ஒவ்வொரு சமூகமும் மற்ற சமூகத்தினருடன் ஆரோக்கியமான ஒற்றுமையுடன் வாழ்ந்து கொண்டிருந்தது.
வெளியுலகின் பிரிவினைகளும் மாற்றங்களும் எங்கள் ஊருக்குள் அரிதாகவே நுழைந்தன. மற்ற இடங்களில் ஏற்பட்ட சமூக வன்முறைகள் மற்றும் வகுப்புப் பிரிவினைவாதம் பற்றிய செய்திகளை தினசரிச் செய்தித்தாள்கள் சுமந்து வந்தன.
ஆனால் இங்கு, வாழ்க்கை அதன் பழங்கால அமைதி நிலையிலேயே தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த அமைதியான மத இணக்கம் பல தலைமுறைகளாக இங்கு நிலவி வந்திருந்தது. ராமநாதசுவாமி கோயிலின் சிலையை ஒருமுறை காப்பாற்றிக் கொடுத்த எங்களுடைய முப்பாட்டனின் கதையை அவ்வப்போது கூறுவதை எங்கள் தந்தை பெரிதும் விரும்பி வந்தார்.
அக்கதை இவ்வாறு அமைந்திருந்தது:
ஒரு குறிப்பிட்ட திருவிழா நாளன்று, ராமநாதசுவாமி விக்கிரகம் கருவறையைவிட்டு வெளியே எடுக்கப்பட்டு, ஊரைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்படும். கோயிலைச் சுற்றிலும் பல குளங்கள் இருந்தன. கோயில் சிலை இந்தக் குளங்களைச் சுற்றியும் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படும். அப்படிப்பட்ட ஓர் ஊர்வலத்தின்போது, சுவாமி விக்கிரகம் திடீரென்று குளத்திற்குள் விழுந்துவிட்டது.
சிலை குளத்திற்குள் விழுவதற்கு முன்பு கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அடுத்தடுத்துப் பல விஷயங்கள் நடந்துவிட்டிருந்ததால், துல்லியமாக என்ன நிகழ்ந்தது என்று யாருக்கும் இப்போது தெளிவாக நினைவிருக்கவில்லை. ஒரு பெரும் குழப்பம் உருவானது. கடவுள்களின் சீற்றத்திற்கு விரைவில் தாங்கள் ஆளாகப் போவதாகக் கற்பனை செய்தபடி மக்கள் பீதியோடு அசைவின்றி நின்றனர்.
ஆனால் அக்கூட்டத்தில் ஒரே ஒருவர் மட்டும் நிதானமாக இருந்து சமயோசிதமாகச் செயல்பட்டார். எனது முப்பாட்டனார்தான் அவர். அவர் அக்குளத்திற்குள் குதித்து, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அச்சிலையை மீட்டுக் கொண்டு வந்தார்.
அது குறித்து அக்கோயில் அர்ச்சகர்களும் கோயிலின் மற்ற அதிகாரிகளும் பெரிதும் நன்றியுடையவர்களாக இருந்தனர். அவர் ஓர் இஸ்லாமியர் என்பது உண்மைதான். கோயிலின் மிகப் புனிதமான விக்கிரகம், அதைக் கையாள்வதற்கு அனுமதிக்கப்படாத ஒருவரால் தொட்டுக் கையாளப்பட்டது குறித்து சாதி மற்றும் மதத் தூய்மைவாதிகள் பெரும் அதிர்ச்சியடைவார்கள் என்றாலும், இத்தகைய எந்த உணர்வுகளும் அங்கு வெளிப்படுத்தப்பட வில்லை.
மாறாக, என முப்பாட்டனை அவர்கள் ஒரு கதாநாயகனைப்போல நடத்தினர். இனிமேல் அந்தத் திருவிழாவின்போது, கோயிலின் முதல் மரியாதை அவருக்குத்தான் கொடுக்கப்படும் என்று கோயில் அதிகாரிகள் பிரகடனம் செய்தனர்.
முற்றிலும் வேறொரு மதத்தைச் சேர்ந்த ஒரு நபருக்கு மட்டுமன்றி, எவரொருவருக்கும் அரிதாகவே வழங்கப்படுகின்ற ஒரு மாபெரும் கௌரவம் இது. அதன்படி, ஒவ்வொரு முறையும் இப்படிப்பட்டத் திருவிழா நாளன்று, அக்கோயில் என் முப்பாட்டனுக்குத் தொடர்ந்து முதல் மரியாதை கொடுத்து வந்தது. இந்த சம்பிரதாயம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நீடித்து வந்தது. பின்னாளில் என் தந்தைக்கும் அந்த மரியாதை கொடுக்கப்பட்டது.
-புத்தகம்:எனது பயணம்,நூலாசிரியர்:ஏ.பி.ஜே.அப்துல் கலாம்,தமிழில்:நாகலாட்சுமி சண்முகம்
வெளியீடு : மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், Sales & Marketing Office: 7/32, Ground Floor, Ansari Road, Daryaganj, New Delhi-110 002, விலை: ரூ.150/- பக்.170.
நூல் குறித்த விவரம் அறிய: பி.தியாகராஜன் - 91-9677153529, thiagu@manjulindia.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
15 days ago
வலைஞர் பக்கம்
20 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago