ஸ்டார் டைரி 3 - கமல்ஹாசன் | சிவாஜி பாதி... எம்.ஜி.ஆர் பாதி!

By கா.இசக்கி முத்து

"கமல் சார் இன்னும் இளமையாகவும், புத்துணர்வுடனும் இருப்பதற்குக் காரணம், அவரது உடல் நலம் மீதான அக்கறைதான். இதை நான் விவரிப்பதைவிட சூரி சார் சொன்னால் நன்றாக இருக்கும்" என்று கமல்ஹாசனின் உடற்பயிற்சியாளர் சூரியின் பேசச் சொன்னார். சூரி கூறிய தகவல்கள், நம் மொழி நடையில்...

கமல்ஹாசனைப் பொறுத்தவரையில், தனது உணவு விஷயங்களில் மிகவும் கண்டிப்பானவராக இருப்பார். எது கிடைத்தாலும் சாப்பிடுவது, என்ன கொடுத்தாலும் அருந்துவது என்பதை அவரிடம் காணவே முடியாது. உடல்நிலை சரியில்லாத சமயத்தில் டாக்டர் ஏதாவது மாத்திரைக் கொடுத்தால்கூட, அந்த மாத்திரை ஏன், எதற்கு என்பதை தெரிந்துகொள்ளாமல் சாப்பிடமாட்டார். எப்போதுமே அரை வயிறு தான் சாப்பாடுவார். அரிசி வகைகள் மிகவும் குறைவாகவும், பயிறு வகைகள் மிகுதியாகவும் உணவில் சேர்த்துக் கொள்வார். காபி, டீயைத் தொடுவதே இல்லை. தேவைப்படும்போது, ப்ளாக் டீ மட்டுமே குடிப்பார்.

படப்பிடிப்பு எவ்வளவு தீவிரமாக நடைபெற்றாலும், காலையில் ஒரு மணி நேரம் யோகா, இரவு 3 மணி நேரம் உடற்பயிற்சி என்பதை கமல் ஒருநாள் கூட தவறவிட்டதில்லை. அதேபோல, எந்த ஊருக்கு படப்பிடிப்புக்கு சென்றாலும், அவருடைய உடற்பயிற்சியாளர் சூரி கமலுடன் சென்றுவிடுவார். அமெரிக்காவில் 'விஸ்வரூபம்', பெங்களூரில் 'உத்தம வில்லன்' படப்பிடிப்பு நடைபெற்றபோது அவர் உடனே சூரியும் சென்றுவிட்டார். ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு முடிந்தவுடன், சூரியின் பயிற்சிகளை தவறாமல் செய்துவிடுவது கமலின் வழக்கம்.

'உத்தம வில்லன்' படத்தில் மேக்கப், உடைகள் எல்லாம் களைந்து படப்பிடிப்பு விட்டு வெளியே வரவே இரவு ஏழரை மணியாகிவிடும். அப்போதுகூட களைப்பு அடையாமல், உடற்பயிற்சி செய்ய சென்று விடுவார் கமல். அந்த அளவுக்கு தனது உடல் மீது அக்கறை உடையவர். படத்துக்கு தகுந்தவாறு உடலைக் குறைப்பது, கூட்டுவது என சூரி சொல்லும் சாப்பாடு அனைத்தையும் தவறாமல் கமல் ஏற்றுக் கொள்வது உண்டு.

ஆளவந்தானுக்காக உடலுழைப்பு

'ஆளவந்தான்' படத்தில் ராணுவ வீரர் விஜயகுமார் கதாபாத்திரத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் சூரியை சந்தித்து உடம்பைக் கூட்ட வேண்டும் என்று கூறியிருக்கிறார் கமல். தொடர்ச்சியாக 4 மாதங்களுக்கு உடற்பயிற்சி கூடமே கதி என்று இருந்திருக்கிறார். முட்டையில் உள்ள வெள்ளைக் கரு மட்டும் தினமும் 30 சாப்பிட்டு உடம்பை ஏற்றியிருக்கிறார். தான் நினைத்த அளவுக்கு உடம்பு ஏறியவுடன்தான் படப்பிடிப்புக்கு சென்றிருக்கிறார் கமல். அந்தப் படப்பிடிப்பு முடிந்தவுடன், மீண்டும் உடலைக் குறைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

உடலைக் குறைப்பது என்பது உடனே முடியாது என்றவுடன், சரி.. பரவாயில்லை என்று அந்த உடல்வாகுக்கு ஏற்றவாறு 'பம்மல் கே.சம்பந்தம்' படத்தை ஒப்புக் கொண்டார். அந்தப் படப்பிடிப்புக்கு இடையே உடலைக் குறைத்து கொண்டே வந்திருக்கிறார். 'பஞ்ச தந்திரம்' படத் தொடக்கத்தின் போது மீண்டும் கமலின் பழைய உடலமைப்பைக் கொண்டு வந்துவிட்டார் சூரி. இப்போது 75 கிலோ எடையில் இருக்கிறார் கமல். இன்னும் 2 கிலோ குறைக்க வேண்டும் என்பது கமலின் ஆர்வமாக இருக்கிறது. அவ்வாறு குறைத்துவிட்டால் கமல் இன்னும் இளமையாக தெரிவார் என்கிறார் சூரி.

உடற்பயிற்சியின்போதும்கூட தீராத திரைப்பசி

தினமும் உடற்பயிற்சி செய்யும்போது கூட, சூரியிடம் இன்று இந்த மாதிரி காட்சிகளில் எல்லாம் நடித்தேன் என்று பகிர்ந்து கொள்வார் கமல். படப்பிடிப்பு இல்லாமல் பாடல் பதிவு மாதிரியான நேரங்களில்கூட பாடலைப் பாடிக் காட்டி சூரி என்ன நினைக்கிறார் என்பதை தெரிந்துகொள்வார்.

'தசாவதாரம்' படத்தில் வரும் பல்ராம் நாயுடு கதாபாத்திரத்தை சூரியால் மறக்கவே முடியாது. அந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது தினமும் உடற்பயிற்சியின் போது அப்பாத்திரம் மாதிரியே பேசிக் காட்டி அனைவரையும் சிரிப்பலையில் ஆழ்த்திவிடுவாராம் கமல். அந்தக் கதாபாத்திரம் படப்பிடிப்பு முடியும் வரை எப்போது கமல் உடற்பயிற்சிக்கு வருவார் என்று சூரி ஏங்கிய நாட்கள் எல்லாம் உண்டு.

அதே போல, உடற்பயிற்சியின்போது கூட நிறைய பேசுவார், பாடுவார், கவிதைகள் கூறுவார்... இப்படி ஏதாவது செய்துகொண்டே இருப்பார் கமல். 'மருதநாயகம்' படப்பிடிப்பின்போது காலை 4 மணிக்கே எழுந்து உடற்பயிற்சி செய்திருக்கிறார் கமல். அந்தக் கதாபாத்திரம் மீது கமலுக்கு அந்தளவுக்கு ஈர்ப்பு உண்டு.

'ஹேராம்' படத்தில் கையில் துப்பாக்கி வைத்திருக்கும் போஸ்டர் டிசைன் ஒன்று இருக்கிறது. அதற்காக, கைகள் போஸ்டரில் சரியாக இருந்தால் மட்டுமே நன்றாக இருக்கும் என்று நிறைய பயிற்சிகள் செய்திருக்கிறார்.

சூரி பார்வையில் கமல்ஹாசன் என்ற நடிகர் எப்படிப்பட்டவர்..? "எல்லாருக்கும் சிவாஜி சார், எம்.ஜி.ஆர் சாரைப் பிடிக்கும். அவர்கள் இருவரையும் கலந்தவர் கமல் சார். அவரை நிறையப் பேர் அடுத்த சிவாஜி என்பார்கள். சிவாஜி மாதிரி நடிப்பு என்றால் எம்.ஜி.ஆரைப் போல எடிட்டிங், இயக்கம் என அனைத்து பிரிவுகளையும் தெரிந்து கொண்டவர் கமல் சார். உடற்பயிற்சி செய்யும்போது அடிக்கடி "நீங்கள் சிவாஜி - எம்.ஜி.ஆர் இருவரையும் சேர்ந்த கலவை சார் என்பேன். சிரித்துக்கொண்டே இருப்பார்" என்றார் சூரி.

கா.இசக்கிமுத்து - தொடர்புக்கு esakkimuthu.k@thehindutamil.co.in

முந்தைய அத்தியாயம்:> ஸ்டார் டைரி 2 - கமல்ஹாசன் | 'ஸ்மார்ட்' ரஜினி

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்