மஹாதேவி வர்மா 10

By ராஜலட்சுமி சிவலிங்கம்

இந்தி இலக்கியத்தின் தூண்களில் ஒருவராகக் கருதப்பட்டவரும் ‘நவீன மீரா’ என்று போற்றப்பட்டவருமான மஹாதேவி வர்மா (Mahadevi Varma) பிறந்த தினம் இன்று (மார்ச் 26). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 உத்தரப் பிரதேச மாநிலம் பரூக்காபாத்தில் (1907) வழக்கறிஞர் குடும்பத்தில் பிறந்தார். மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் பள்ளிப் படிப்பு, ஜபல்பூரில் இளங்கலைப் படிப்பை முடித்தார். 7 வயதிலேயே எழுதுவதில் ஆர்வம் இருந்தது. பள்ளியில் படிக்கும்போதே, இவரது கவிதைகள் பிரபல பத்திரிகைகளில் வெளிவந்தன.

 அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் எழுதிய நீஹார், ரஷ்மி ஆகிய கவிதைத் தொகுப்பு, நூல்களாக வெளிவந்தன. அற்புதமான கவிதைகள் எழுதியதோடு, தீப்ஷிகா, யாமா ஆகிய தனது படைப்புகளுக்கான ஓவியங்களையும் இவரே தீட்டினார்.

 திருமணமானவர் என்றாலும் துறவு வாழ்க்கை வாழ்ந்தவர். புத்த மதத்தில் மிகுந்த பற்று கொண்டவர். பெண் கல்வி மேம்பாட்டுக்காகத் தொடங்கப்பட்ட அலகாபாத் மகிளா வித்யா பீடத்தின் முதல் தலைமை ஆசிரியராகவும் பிறகு இதன் வேந்தராகவும் பணியாற்றினார்.

 பெண்களுக்காக ‘சாந்த்’ என்ற பத்திரிகையை நடத்தினார். உரைநடை எழுத்திலும் வல்லவர். இவரது படைப்புகளில் சொந்த அனுபவங்களை உள்ளடக்கிய ஸ்ம்ருதி கீ ரேகாயே, அதீத் கே சலசித்ர ஆகிய நினைவுச் சித்திரங்கள் மிகவும் பிரபலம்.

 நவீன இந்தி இலக்கியத்தின் சாயாவாத், ரஹஸ்யவாத் ஆகியவற்றின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவராக குறிப்பிடப்படுகிறார். அடிமை இந்தியாவில் நிலவிய துன்பம், துயரங்களைக் கண்டு வேதனை அடைந்த இவர், அவற்றைத் தன் படைப்புகளில் வெளிப்படுத்தினார். சமூகப் பிரச்சினைகள், ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கைத் தரம் குறித்த சிந்தனைகள் அடங்கிய இவரது கட்டுரைத் தொகுப்பு ‘ஸ்ருங்கலா கீ கடியா’.

 சுதந்திரப் போராட்டத்திலும் தீவிரமாகப் பங்கேற்றார். மகாத்மா காந்தியின் சமூக சீர்திருத்தக் கொள்கைகளால் கவரப்பட்டு, சமூக சேவையிலும் ஈடுபட்டார். பெண் கல்வி, பெண் விடுதலைக்காக அயராது பாடுபட்டார். இதுபற்றி பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தீவிரமாக உழைத்தார்.

 தனது கவிதைகளில் சமஸ்கிருதம், வங்காள மொழிகளின் இனிமையான வார்த்தைகளைக் கலந்து இந்தி மொழியைச் செறிவூட்டினார். இசையும் அறிந்தவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர்.

 இவரது படைப்புகளில் பிரிவு, சங்கமம், இயற்கை, அழகியல், ஆன்மிகம், தத்துவம் ஆகிய அனைத்தும் அடங்கியிருந்தன. பரமாத்மாவுடன் இணையத் துடிக்கும் ஆத்மாவின் தவிப்பையும், துயரத்தையும் இவரது காவியங்கள் அற்புதமாக எடுத்துக் கூறின.

 அலகாபாத்தில் இலக்கிய மன்றத்தைத் தொடங்கினார். சாகித்ய அகாடமி விருது, பத்மபூஷண், பத்மவிபூஷண், ஞானபீட விருது மட்டுமின்றி, இலக்கியத்துக்காக வழங்கப்படும் அனைத்து விருதுகளையும் பெற்றுள்ளார்.

 ‘நவீன மீரா’, ‘இந்தி இலக்கியக் கோயிலின் சரஸ்வதி’ என்று போற்றப்பட்ட மஹாதேவி வர்மா 80 வயதில் (1987) மறைந்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

3 days ago

வலைஞர் பக்கம்

5 days ago

வலைஞர் பக்கம்

6 days ago

வலைஞர் பக்கம்

8 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

12 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

20 days ago

வலைஞர் பக்கம்

23 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்