‘உன்னைப் போல் ஒருவன்’ திரைப் படத்தை எடுத்து ஜெயகாந்தன் ஓய்ந்திருந்த சமயத்தில், அவரிடம் இருந்த ஃபிலிம் சுருள்களை அவசரத்துக்குக் கேட்டு வாங்க, நடிக வேள் எம்.ஆர்.ராதாவின் புதல்வர் எம்.ஆர்.ஆர்.வாசு ஜெயகாந்தனை வந்து அணுகினார்.
அந்தச் சந்திப்பில் ஜெயகாந்தனின் சிறப்புகளை அறிந்து கொண்ட எம்.ஆர்.ஆர்.வாசு, ஒரு நட்பு உதவியாக ஜெயகாந்தன் தியாகராய நகர் தொகுதியில் தேர்தலில் போட்டியிட்ட போது, அவருக்குத் தேர்தல் ஏஜென்ட் ஆகவே பணியாற்றினார். நாங்கள் எல் லாம் பகல்பூராவும் பிரச்சாரம் செய்து விட்டு, இரவு உணவுக்கு வாசுவின் வீட்டுக்குப் போய்விடுவோம். அமர்க் களமான விருந்து கொடுத்து அவர் எங்களை எல்லாம் உபசரிப்பார்.
நடிகர்களின் அந்த அதீதமானப் புகழ் வெளிச்சத்தை வெறுக்கும் ஜெய காந்தன், அவர்களுக்காக ரசிகர் மன்றங் கள் அமைக்கிற இளைஞர்களின் ஆர்வங் களுக்குக் கவலைப்பட்ட ஜெயகாந்தன், ஆச்சரியப்படும் விதத்தில் ஒருமுறை, ‘கமல்ஹாசன் ரசிகர் நற்பணி மன்றம்’ நடத்திய விழா ஒன்றில் கலந்துகொண்டு, ‘ரசிகர் மன்றத்துக்கும் ரசிகர் நற்பணி மன்றத்துக்கும்’ இடையில் உள்ள வேறுபாடுகளை சுட்டிக்காட்டி, அந்த விழாவில் அனைவரையும் வாழ்த்தினார். நற்பணிகள் யாருடைய பெயரால் நடந்தால்தான் என்ன!
ஜெயகாந்தனுக்கு ‘ஞானபீட விருது’ வழங்கப்பட்டு சில நாட்கள் கடந்த பிறகு, ரஜினிகாந்த் தனியாகத் தானே காரோட்டிக்கொண்டு வந்து, கே.கே.நகரில் இருந்த ஜெயகாந்தனின் பழைய வீட்டின் மொட்டை மாடிக் கொட்டகையில் அமர்ந்திருந்த ஜெயகாந்தனைச் சந் தித்து வாழ்த்தியதை நண்பர்கள் கூறி அறிந்திருக்கிறேன்.
பேச்சின் இடையே சினிமா நடிகை களைப் பற்றிய அவதூறு பரவும் நேரத்திலெல்லாம், அந்த அவதூறு கூறும் நபர்களிடமெல்லாம் முகம் சுளிக்க நடந்துகொண்டு, அவர்களின் பேச்சைத் தடுத்து நிறுத்திவிடுவார்.
ஒரு கூட்டத்தில் பேசப் போயிருந்த போது, ஒரு பிரபலமான அரசியல் தலைவரையும் ஒரு பிரபலமான நடிகை யையும் இணைத்து, அந்தக் கட்சிக் காரர்கள் கேள்வி கேட்டபோது, ஜெயகாந்தனின் இந்தக் குணம் வெளிப்பட்டது.
‘யாருக்காக அழுதான்?’ படப்பிடிப் பின்போது, ஒரு காட்சியில் நடிகையின் முந்தானை விலகியிருப்பதைக் கண்டு, படப்பிடிப்புக்கு ‘கட்’ சொல்லி, நடிகை யிடம் மாராப்பைச் சரியாகப் போடும்படி ஜெயகாந்தன் சொன்னாராம். அவரது கண்ணியத்தைக் கையெடுத்துக் கும் பிட்டு, அந்த நடிகை மன நெகிழ்ந்தாராம்.
ஜெயகாந்தனின் தமிழ் சினிமா வைப் பற்றிய கடுமையான விமர் சனங்களையும், தமிழ் சினிமா பிரமுகர்கள் அவரைப் போற்றிப் புகழ்ந்து கூறுவதையும் தொடர்ந்து கவனித்து வந்த நான், மிகச் சமீபத்தில்தான் அவரிடம் அந்த உண்மையைக் கூறினேன்.
‘‘ஜே.கே நீங்கள் தமிழ் சினிமாவை மிகக் கடுமையாக விமர்சித்து வந்திருக் கிறீர்கள். ஆனால், அவர்கள் யாவரும் உங்களைப் பற்றி மிகவும் உயர்வாகவே கூறி வருகின்றனர்!’’ என்றேன்.
‘‘ஆமாம் இல்லே..!’’ என்று, தானும் அப்போதுதான் உணர்ந்துகொண்ட வரைப் போல் ஜெயகாந்தன் பதில் அளித்தார்.
‘தமிழ் சினிமாவில் ஜெயகாந்தன் எதையுமே ரசிக்கவில்லையா?’ என்கிற கேள்வி எழுவது இயல்பு. தமிழ் சினிமா தந்த இசையை அவர் ரசித்தார். அது தந்த பல பாடல்களை, தலை வாரும்போதும், உடை மாற்றும்போதும், காரோட்டும்போதும் பாடும் பழக்கம் அவ்வப்போது அவருக்கு இருந்தது.
‘இது மாலை நேரத்து மயக்கம் என்று ஒரு பாடல் தமிழ் சினிமாவில் வந்தது. ‘‘அந்த வரிகளை மறந்து விடுங்கள். அந்த டியூனை மட்டும் கவனியுங்கள்!’’ என்றார்.
பூமாலை போல் உடல் மணக்கும்…’
‘பாயில் படுத்து நோயில் விழுந்தால்
காதல் கானல் நீரே…’
என்கிற வரியைப் பாடியிருந்த பாடகர், அந்த வரிகளுக்குக் கவித்துவத்தை மீறிய ஒரு கானாமிர்தக் கவர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார். ‘இழுக்குடைய பாட்டுக்கு இசை நன்று’ என்பர் பெரியோர்.
இசைஞானி இளையராஜாவோடு இருந்த நட்பும் அவர் சங்கீத ஞானத்தைத் தானாக வளர்த்தது என்றும் கூறலாம். இளையராஜாவின் சினிமாப் பாடல்கள் சிலவற்றை அவரிடமே சுட்டிக் காட்டி, ‘இது, இந்த ராகம்தானே?’ என்று கேட்டு, இளையராஜாவிடமே ஒரு ‘சபாஷ்’ பெற்றுவிடுவார் ஜே.கே.
எப்போதும் ஜெயகாந்தன் மெட்டுக் குப் பாட்டு எழுதியது இல்லை. அவர் எழுதிய பாட்டுக்குத்தான் மெட்டுப் போடப்பட்டது. அந்தப் பாடல்களை இயற்றும்போதே, அவர் தன் சொந்த மெட்டில்தான் அவற்றை இயற்றியிருப்பார். எனவே, அவர் பாடல்களுக்கு இசை யமைத்தவர்களுக்கு எல்லாமும் எளி தாகவும் சிறப்பாகவும் போயிற்று.
‘சொர்க்கமே என்றாலும்…’
என்கிற இளையராஜாவின் பாடலை அவர் அடிக்கடி பாடுவார்.
‘மாடு கன்னு மேய்க்க
மேயறதைப் பார்க்க
மந்தைவெளி இங்கில்லையே…’
என்று ஜே.கே பாடிக் காட்டியபோதெல்லாம், நானறிந்த கிராமங்களின் மந்தைவெளி களுக்கெல்லாம் போய்விடுவேன் நான்.
காலம் மாறிய நினைவுகளை எல் லாம் கொண்டுவருவதல்லவோ கலை!
ஜெயகாந்தன் ‘உன்னைப் போல் ஒருவன்’ படம் எடுத்தபோது, ஒரு பிரசவ வேதனைக் காட்சியில், அந்தப் பெண்ணின் கால் பெருவிரல் நெட்டித் தள்ள, கால் விரலில் இருந்த மெட்டி கழன்று எகிறிப் போய்விடுவது போல் ஒரு காட்சியை எங்களிடம் பேசும்போது பிரஸ்தாபித்தார். ஆனால், அந்தப் படத்தில் அப்படி ஒரு காட்சியே இல்லை. இது பற்றிக் கேட்டபோது, ‘‘கவித்துவம் அதிகமானால் யதார்த்தம் குறைந்துவிடும். ஆகவேதான் அந்தக் காட்சியை நீக்கிவிட்டேன்!’’ என்று கூறினார்.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ சினிமா வெற்றிபெற்று, அடுத்ததாக, ‘ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’ தயா ரிக்கப்பட்டுகொண்டிருந்த காலகட்டத் தில், ஒருநாள் இயக்குநர் பீம்சிங்கைப் பார்க்க ஜெயகாந்தன் சென்றபோது, என்னையும் உடன் அழைத்துச் சென் றிருந்தார். அன்று பீம்சிங் தமது வாழ்வனுபங்களில் ஒன்றைப் பற்றிக் கூறி, நெடுநேரம் எங்களுடன் பேசிக் கொண்டிருந்தார். நிஜவாழ்வில் அவர் எத்தகைய உத்தமமான மனிதர் என்பதை அறிந்து அவர் மேல் எனக்குப் புதிய புதிய மதிப்புகள் உண்டாயின.
ஜெயகாந்தன் பெரிய அதிர்ஷ்டக் காரர்தான். ஆனாலும் சில துரதிர்ஷ்டங் களும் அவர் வாழ்வில் நிகழாமல் இல்லை. இயக்குநர் பீம்சிங் போன்ற நல்ல மனிதர் திடீரென்று மறைந்ததை அவ்வாறுதான் சொல்ல முடியும். பீம்சிங் மட்டும் அல்லாமல், ஜெயகாந்தனின் மீது பெருமதிப்புக் கொண்டு, அவரை எப்போதும் உச்சியில் வைத்து உபசரித்த செல்வப் பிரபுக்கள் சில ரின் மறைவையும் ஜெயகாந்தனின் துரதிர்ஷ்டப் பட்டியலில் சேர்க்கலாம். மரணம் என்கிற துரதிர்ஷ்டம், வாழ்ந்து பார்த்த நினைவுகள் என்கிற அதிர்ஷ்டத்தை மங்க வைத்து விடுமோ? மேலும் மேலும் ஒளிரச் செய்யாதோ?
ஒரு துரதிர்ஷ்டத்தைத் துரத்திக் கொண்டு அதிர்ஷ்டம் வருவது போல், பீம்சிங்கின் புதல்வருள் ஒருவரும் புகழ்பெற்ற எடிட்டிங் நிபுணருமான பி.லெனின் வந்தார். ஜெயகாந்தனின் ‘ஊருக்கு நூறு பேர்’ கதையை சினிமாவாக இயக்கிய பி.லெனின் அந்த ஆண்டு சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றார்.
ஜெயகாந்தனைப் பொறுத்தவரை யில், அவர் தானே முனைந்து முயற்சிகள் மேற்கொண்டு இயக்கித் தொடர்ந்து தமிழ் சினிமா தயாரிக்கிற எண்ணங்களுக்கு விடைகொடுத்துவிட்டார். தான் மேன்மேலும் சினிமா முயற்சிகளில் ஈடுபடுவது, தனது படைப்பு உத் வேகத்தை வெகுவாக குறைத்துவிடும் என்று எண்ணியோ என்னவோ, சினிமாவைப் பற்றிய தன் கனவுகளில் இருந்து அவர் கழன்றுகொண்டார். வழக்கம்போல் அவர் கவனித்துவரும் வாழ்வின் கதைகளை எழுதிக்கொண்டு போகலானார்.
ஃபிலிம் இன்ஸ்டிட்டியூட்டில் பயின்று, புதிதாகப் படம் எடுக்க வருகிற திறமையான இயக்குநர்கள் எல்லாம், அவர்கள் பயிலும் காலத்திலேயே, பரிசோதனைக்காக இயக்கிப் பார்த்த கதைகள் பெரும்பாலும் ஜெயகாந்தன் கதைகளாகவே இருந்தன. தனது கதைகளின் மூலம் ஜெயகாந்தன் தமிழ் சினிமாவோடு உருவமற்ற ஒரு குரலில் உரையாடிக்கொண்டுதான் இருப்பார்.
கதை விவாதங்களின் வானத்திலெல் லாம் அவர் ஒரு கார்முகில் போலவே கவிந்திருப்பார்.
- வாழ்வோம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pisakuppusamy1943@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
27 days ago
வலைஞர் பக்கம்
28 days ago
வலைஞர் பக்கம்
1 month ago