தமிழில் பேசுவது தகுதியா? தரக்குறைவா?

By உதிரன்

உலக அளவில், 100 ஆண்டுகளுக்கு முன், 6,200 ஆக இருந்த மொழிகள் இன்று 3,000க்கும் குறைவாக குறைந்துள்ளதாக, மொழியியல் அறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 22 மொழிகள் அதிகாரபூர்வமாக உள்ளன.

உலகில் உள்ள மொழிகளுக்குள் ஒரு தொடர்பை ஏற்படுத்தவும், ஒற்றுமையை வளர்க்கவும், ஆண்டுதோறும் பிப்ரவரி 21ம் தேதி உலக தாய்மொழி தினம் யுனெஸ்கோ அமைப்பால் கடைபிடிக்கப்படுகிறது.

தாய்மொழிக்கான இடம் எது?

பல மொழிகளோடு பிறந்து வளர்ந்து, தன் தோழமை மொழிகள் எல்லாம் சிதைந்த போதிலும் இன்றளவும் தன் இளமைத் தன்மையை இழக்காமல் வாழ்ந்து வளர்ந்து நிற்கும் ஒற்றை மொழி வாழும் செம்மொழி நம் தமிழ் மொழிதான். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இலக்கியத்திலும் பேச்சுவழக்கிலும் இருந்த ஒரே மொழி இன்றளவும் இருக்கிறதென்றால் அது தமிழ்தான் என்பதற்கு சான்றுகள் உள்ளன.

ஆனால், இந்த வரலாற்றுப் பாரம்பரியம்மிக்க தாய்மொழியைப் பேசுவதற்குத்தான் நாம் தயங்குகிறோம். தமிழில் பேசினால் தரம் குறைந்துவிடும் என்று தப்புக்கணக்கு போடுகிறோம்.

ஆங்கிலம்தான் அறிவா?

சிந்தனையின் தொடக்கப்புள்ளி தாய்மொழி என்று தெரிந்துகொண்ட நாம் நம் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைப்பதைத்தான் பெருமையாக கருதுகிறோம்.

ஆங்கிலம் மட்டும்தான் அறிவு. ஆங்கிலமொழியில் படித்தால்தான் அறிவு மேம்படும். வேலை வாய்ப்பு கிடைக்கும். நல்ல சம்பளம் வாங்க முடியும் என்பது எழுதப்படாத விதியாக இருக்கிறது. ஆங்கிலம் கற்றால்தான் அகிலமே மதிக்கும் என்பது எந்த விதத்திலும் உண்மை இல்லை. ஆனால், இதைப் புரிந்துகொள்ளாததால்தான் இன்றைய பெற்றோர்களின் மனநிலை வேறு திசையில் பயணிக்கிறது.

'என்னாலதான் தஸ் புஸ்னு இங்கிலீஷ் பேசுற மாதிரி படிக்க முடியலை. என் குழந்தையாவது படிக்கட்டும்' என்று பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழிக் கல்வியில் படிக்க வைக்கிறார்கள். அதையே பெருமைக்கான அடையாளமாக கருதுகிறார்கள்.

உண்மையில், அப்படிப் படிக்கும் மாணவர்கள் இயல்பாக சிந்திக்க முடிகிறதா?

கல்வி என்பது அறிவை மேம்படுத்துவதற்காக அமைய வேண்டுமே அல்லால் ஒருவனின் மனப்பாட திறனை வெளிப்படுத்துவதாக அமையக்கூடாது. ஆனால், ஆங்கில மொழி நமக்குள் புரிந்துகொள்ளும் திறனை வளர்க்காமல் மனனம் செய்யும் முறையை மட்டும் கற்றுக்கொடுக்கிறது.

தாய்மொழி மூலமாகவே ஒருவர் தான் கூற விரும்பும் கருத்தை தெளிவாகவும் ,முழுமையாகவும் ,ஆழமாகவும் தெரிவிக்க முடியும் . ஒவ்வொருவரும் சிந்திப்பது தன் சொந்த தாய்மொழியில்தான். அதுதான் இயல்பான அடிப்படை புரிதலைக் கொடுக்கும். அதுவே அந்த குழந்தையின் படைப்பாற்றலை வளர்த்தெடுக்கும்.

ஆனால், அந்த சூழலை வளர்த்தெடுக்க வேண்டிய தமிக அரசு எந்த வித அக்கறையும் காட்டாததுதான் வருத்த்ததின் உச்சம். ஒரு மாநிலத்தின் ஆட்சி மொழியை ஒரு பாடமாகக்கூட படிக்காமல் பட்டம் பெற முடியும் என்ற அவலநிலை தமிழகத்தில் நிலவுவது எவ்வளவு பெரிய முரண்.

"தாய் மொழியைப் போற்றி வீழ்ந்த நாடும் இல்லை

தாய் மொழியைப் புறக்கணித்து வாழ்ந்த நாடும் இல்லை " என்பது உலகறிந்த உண்மை.

தேவை என்றால் ஆங்கில மொழியில் அனைத்து பாடங்களையும் படிப்பதை ஊக்கப்படுத்துவதை விட ஆங்கில மொழி அறிவை மேம்பட செய்யலாம்.இந்த நிதர்சனத்தைப் புரிந்துகொண்டு, எந்த ஒரு குழந்தைக்கும் தாய்மொழிக் கல்விதான் சிறந்தது என்பதை நாம் செயல்படுத்துவோம்.

இந்த தருணத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன?

அனைத்து தனியார் அரசுப் பள்ளிகளுக்கும் தமிழ் வழிக் கல்வி கட்டாயம் என்பதை சட்டமாக்குதல் வேண்டும். ஆங்கிலம் மொழிப் பாடமாகவும் , தமிழ் பயிற்று மொழியாகவும் இருத்தல் வேண்டும் .

மம்மி, அங்கிள் என்று குழந்தைகளை அழைக்கச் சொல்லி பெருமைப்படுவதை கொஞ்சம் மாற்றி, அழகுத் தமிழில் அன்பை வளர்ப்போம். முடிந்தவரை தமிழை நம் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்போம். தமிழில் பேச பயிற்சி தருவோம்.

தமிழில் பேசுவதே தகுதி என்பதை நம் அடுத்த தலைமுறைக்கு உணர்த்துவோம்.

ஏன் தமிழின் பெருமையை உணர்த்த வேண்டும்?

எந்த மொழிக்கும் இல்லாம மென்மையும், ஆழமும், அர்த்தமும் தமிழ் மொழிக்கு இருக்கிறது.

சித்தப்பா, மாமா என்ற இரண்டு உறவுகளும் வெவ்வேறு அர்த்தம் தருபவை. ஆனால், ஆங்கிலத்தில் இருவரையும் அங்கிள் என்றே அழைப்பது உறவின் அர்த்தத்தையே மாற்றி விடுகிறது.

யானைக்கு தமிழில் வேழம், களிறு, பிடி என்று எத்தனையோ வார்த்தைகள் இருக்கின்றன. இங்கிலாந்திலே இல்லாத ஒரு உயிரினம் யானை. ஆனால், அந்நாட்டு மொழியில் எலிபேண்ட் (elephant) என்று அழைப்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும்?

மிகப்பெரிய ஆங்கில அறிஞர்கள் கூட தங்கள் படைப்புகளில் கண்ணுக்கு கண்: பல்லுக்குப் பல் என்று தான் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், திருவள்ளுவர் மட்டும்தான் உனக்கு தீமை செய்தவனுக்குக் கூட ,அவன் வெட்கப்படும் படி நல்லது செய் என்று சொல்கிறார்.

''நாம் பயிலும் கல்வி தாய்மொழியில் இருந்தால் மட்டுமே சிந்திக்கும் திறன் சிறப்பாக அமையும்'' என்றார் மகாத்மா காந்தி. இனியும் தமிழில் பேசுவது தகுதியா?தரக்குறைவா? நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

9 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்