வாழ்க்கையில் மனதுக்குப் பிடித்தமான விஷயங்கள் நடந்துவிட்டால், உள்ளம் கொண்டாடும். விருப்பம் இல்லாத விஷயத்தை எதிர்கொள்ள நேர்ந்தால், மனதில் குழப்பங்கள் மூளும். இது அடிப்படை உளவியல். படிப்பை நீங்கள் பிடித்தமான விஷயமாக நினைத்தால் இந்த குழப்பங்கள் இல்லை. இதற்கு ஒரு சுலபமான, எளிமையான தீர்வு உள்ளது.
உங்கள் படிப்பைப் பற்றிய நேர்மறை கற்பனை உலகுக்கு அடிக்கடி ஓர் இன்பச் சுற்றுலா சென்று வாருங்கள். இதற்கு பணம் தேவையில்லை. நண்பர்களும் தேவையில்லை. உளவியலில் இதை ‘மென்டல் டூர்’ (Mental Tour) என்பார்கள். அதாவது, நன்றாக படித்து, நிறைய மதிப்பெண்கள் பெற்று, உங்களுக்குப் பிடித்தமான துறையில் பிடித்தமான வேலையில் இருக்கிறீர்கள். அல்லது சுயதொழிலில் பெரிய அளவில் சாதனை செய்துகொண்டிருக்கிறீர்கள். இப்படிப்பட்ட கற்பனை உலகில் அடிக்கடி உலவுங்கள். பின்பு படித்தால், எந்த பாடமும் பனங்கற்கண்டாக இனிக்கும். இது உளவியல் உண்மை!
தேர்வு காலத்தில் காலடி எடுத்து வைத்துள்ள மாணவர்கள் கண் விழித்துப் படித்துவிட்டு, படுக்கைக்குச் சென்றவுடன் ‘உடனே தூக்கம் வராதா’ என ஏங்குவர். ஏனெனில் அல்ஜீப்ராவும் கெமிஸ்ட்ரி பார்முலாக்களும் மூடிய கண்களுக்குள் அவ்வப்போது வந்து மன இறுக்கத்தை ஏற்படுத்தும். எனவே, சூத்திரம் மனப்பாடம் செய்வதை, படுக்கைக்குச் செல்வதற்கு 2 மணி நேரம் முன்பாக நிறுத்திக்கொள்ளவும்.
நல்ல மதிப்பெண் மூலமாகவே தரமான கல்லூரியில், விரும்பிய மேற்படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். இது உண்மைதான். அதே நேரம், மன அழுத்தத்துக்கான முக்கியக் காரணமும் இதுதான். ‘மதிப்பெண் குறைந்தால் டாப்10 கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் போய்விடுமோ’ என்ற அச்சம் இப்போது தேவையில்லாத ஒன்று. டாப் 10 கல்லூரிகள் என்பதில் வணிகம் உட்பட பல்வேறு சூட்சுமங்கள் இருக்கின்றன. அதற்குள் விரிவாக செல்லத் தேவையில்லை. உண்மையில் இங்கு டாப் 100 கல்லூரிகள் உள்ளன. அதில் சேர்ந்து திறமையை நிரூபிப்போம் என்ற மனப்போக்கை வளர்த்துக்கொள்ளுங்கள்.
மன அழுத்தத்துடன் தேர்வு எழுதச் செல்பவர்கள், கவனக்குறைவுக்கு ஆட்பட்டு சிறு பிழைகளை செய்து அதிக மதிப்பெண்களை இழக்கின்றனர். இதை ஒவ்வோர் ஆண்டும் கண்கூடாகப் பார்த்துவருகிறேன். குறிப்பாக சிலருக்கு, கடந்த ஓராண்டாக இல்லாத மன அழுத்தம் திடீரென தேர்வுக்கு ஒரு மாதம் முன்பாக தொற்றிக்கொள்ளும். பதற்றம் அதிகரிக்கும். இதயம் வேகமாக துடிக்கும். உள்ளங்கை, உள்ளங்கால் வியர்க்கும். உடல் சூடாகி லேசான காய்ச்சல் போல உணர்வார்கள். பார்வையும்கூட லேசாக மங்கும். நாக்கு வறளும். படித்தது மொத்தமும் மறந்துபோகும். ஆண்டுக்கு 10 மாணவர்களை இப்படி சந்திக்கிறேன். தவறு மாணவர்கள் மீது அல்ல. அதிகமான அழுத்தத்தை, எதிர்கால பாரத்தை ஓராண்டாக அவர்கள் மேல் சுமத்தியவர்கள் மீதுதான் தவறு.
இதுபோன்ற சூழலில், மாணவர்கள் பயப்படக்கூடாது. பதற்றம் ஏற்பட்டால் எல்லோருக்குமே உடலில் அட்ரீனல், கார்டிசால் ஆகிய ஹார்மோன்கள் சுரப்பது வழக்கம். அவை சுரப்பதால் ஏற்படும் உடலியல் ரீதியான பிரச்சினைகள்தான் உங்களுக்கும் ஏற்படுகின்றன. உங்களுக்குத் தெரிந்த மனநல மருத்துவரிடம் கவுன்சலிங் பெறுவதன் மூலம் ஓரிரு நாட்களில் வெகு சுலபமாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணலாம்.
எதிர்காலத்தை நன்கு திட்டமிட்டு, லட்சியத்தை அடையும் நோக்கத்துடன் நடந்தால் வீண் குழப்பங்கள், பதற்றம், அச்சம் ஆகிய அனைத்தையுமே தவிர்க்கலாம். அவசரமாக படிப்பது, புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்வது, தெரியாத வினா-விடையையே நினைத்துக்கொண்டு இருப்பது, பாடத்திட்டத்தை விட்டு வெளியே இருந்து கேள்வி வருமா என சந்தேகம் கொள்வது ஆகிய வீண் சந்தேகங்கள், குழப்பங்களை தவிர்க்க வேண்டும். இவையும் மன அழுத்தத்துக்கு முக்கியக் காரணிகள்.
அதேபோல, மாணவர்கள் பெரும்பாலும் ஒரு மதிப்பெண், 3 மதிப்பெண் கேள்விகளில் சிறு தவறு செய்கின்றனர். இவர்கள் என்னிடம் வந்து, ‘நன்றாக தெரிந்த பதில். எப்படி தவறு செய்தேன் என்றே தெரியவில்லை’ என்பார்கள். காரணம், மன அழுத்தம் மட்டுமே. எனவே, தங்கள் பிள்ளையை மன அழுத்தம் வாட்டுகிறதா என்பதைக் கண்டறிவது பெற்றோரின் முக்கியக் கடமை.
மாணவர்கள் பெரும்பாலும் இடத்தை விட்டு நகராமல் ஒரே இடத்தில் அமர்ந்து படிக்கிறார்கள். அதை தவிர்க்கலாம். வீட்டிலேயே மாடியில் சில மணி நேரம் படிக்கலாம். தோட்டம் இருந்தால் அங்கு சிறிது நேரம் படிக்கலாம். பாதுகாப்பான, கவனத்தை சிதறடிக்காத பூங்காக்கள் அருகில் இருந்தால், அவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இவை எல்லாம் படிப்பு தொடர்பான மன அழுத்தங்களைப் போக்கும் உத்திகள். எங்கு படித்தாலும், அக்கம்பக்கத்தில் வேடிக்கை பார்க்காமல் உங்கள் கவனம் படிப்பில் மட்டுமே இருக்கவேண்டும்.
ஒரே பணியில் வெகு நேரம் கவனம் செலுத்துவது கடினம் என்பதால் மனதை மாற்றுச் சூழலுக்கு கொண்டு செல்வது மனதை சமநிலைப்படுத்தும். மனச் சமநிலையுடன் படிக்கும் போது தன்னம்பிக்கை அதிகரிக்கும். வாழ்த்துக்கள்!
இவை எல்லாம் முக்கியம்..
# வினா வங்கி மற்றும் பாடப் புத்தகத்தில் இருந்தே 80 சதவீத கேள்விகள் கேட்கப்படுவதால், அதை நன்றாக படித்து வைத்துக்கொள்ளுங்கள்.
# நன்றாக படித்த பாடங்களை ஒருமுறைக்கு 2 முறை எழுதிப் பாருங்கள். 20 நிமிடம் படித்தால், 10 நிமிடம் அதை எழுதவேண்டும்.
# மாதிரி தேர்வில் செய்த தவறுகளை பட்டியலிட்டு, அதில் செய்யவேண்டிய திருத்தங்களுக்கு முக்கியத்துவம் அளியுங்கள். மாதிரி தேர்வில் சாய்ஸில் விட்ட கேள்விகளை அக்கறை எடுத்துப் படித்து, எழுதிப் பாருங்கள்.
# வகுப்பில் எழாத பாட சந்தேகங்கள், படிக்கும்போது எழலாம். உடனே ஆசிரியரை அணுகி தீர்வு காணுங்கள்.
# எல்லாவற்றையும்விட முக்கியம்.. படிப்பையும் தேர்வையும் தாண்டி மிகப் பெரிய உலகம் ஒன்று இருக்கிறது. அதை மனதில் நிலைநிறுத்துங்கள். வெற்றி உங்களுக்கே!
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
9 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago