பாரதியார் தமிழ்நாட்டு நதிகளைப் போற்றிப் பாடும்போது, காவிரிக்கு அடுத்ததாகத் தென் பெண்ணை ஆற்றை வைத்திருக்கிறார்.
கிருஷ்ணகிரிக்கு அருகே, தமிழ்நாட் டில் பிரவேசிக்கும் தென்பெண்ணை யாறு, ஆரம்பத்தில் வெகுதொலைவு, அகலம் குறைந்ததோர் ஆறாகத்தான் போகிறது. சாத்தனூர் அணையைக் கடந்து, மணலூர்ப்பேட்டை, திருக்கோவி லூர் என்று தாண்டுகிறபோது, அது காவிரி யன்னதோர் அகலத்தோடு கருணையும் கம்பீரமும் கலந்ததோர் காட்சி கொண்டுவிடுகிறது.
முகத்துவாரப் பகுதியில் எல்லா ஆறு களும் கடலை அணைக்கும் அவசரத்தில் அநேகக் கரங்கள் கொண்டுவிடுகின்றன. தென்பெண்ணை ஆற்றின் அத்தகைய கரங்களில் ஒன்றுதான் கெடிலம்.
‘வெண்ணெய் உருகுமுன் பெண்ணை பெருகும்’ என்பது பழமொழி. இதை ஜெயகாந்தன் அழகாகச் சொல்வார்.
சிறுவர்கள் தங்கள் சட்டைகளையும் கால்சராய்களையும் கழற்றிக் கரையில் வைத்துவிட்டு, நல்ல நிலா வெளிச்சத் தில் பெண்ணையின் பெருங்கரங்களில் ஒன்றான கெடிலம் ஆற்றின் நீரற்ற நெடுமணல்வெளியில், உற்சாகக் கூச்சல்களோடு கபடி ஆடிக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆட்டத்தின் இடையில், யாரோ ஒரு சிறுவன் ஆறு வருகிற மேற்குத் திசையின் அடிவானத்தை உற்று நோக்குகிறான். ஆற்று மணலை வந்து வானம் ஆலிங்கனம் செய்யும் வரம்பில், ஒரு ஜரிகை நூல் இழை போல் எதுவோ நிலா வெளிச்சத்தில் மின்னுகிறது.
அனுபவ ஞானம் கொண்ட சிறுவன், ‘‘ஆத்துல தண்ணி வருதுடோய்..!’’ என்று உரக்கக் கத்துகிறான். எல்லா சிறுவர்களும் கரைக்கு ஓடிவந்து தங்கள் கால்சராய்களைத் தரிக்கும் முன்பே, அவர்களது கணுக்கால்களைத் தண்ணீர் வந்து தொட்டுவிடுகிறது.
வெண்ணெய் உருகுமுன் பெண்ணை பெருகும் இந்த அதிசயக் காட்சியைத் தனது பால்யத்தில் காணும் பேறுபெற்றவர் ஜெயகாந்தன்.
அவர் திருப்பத்தூர் வந்து, எங்க ளைச் சேர்த்துக்கொண்டு சேலம், தருமபுரி, கோவை என்று போகிற போதெல்லாம் வழியிலே தென் பெண்ணையாற்றை இரண்டு இடங் களில் நாங்கள் கடப்போம்.
சேலம் போகும்போது அனுமன் தீர்த்தத்திலும், தருமபுரி சாலையில் இருமத்தூர் என் கிற இடத்திலும் தென்பெண்ணை குறுக் கிடும். அனுபவிப்பவர்களுக்குத்தான் தெரியும்… ஆறு என்பது எவ்வளவு அற்புதமான தரிசனம் என்பது!
ஒருமுறை, இருமத்தூரில் காலத் தின் கருணை போல தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது. நாங்கள் இறங்கிக் குளித்துவிட்டு, ஏதோ கூட்ட அவசரம் கருதி, உடனடியாகப் புறப்பட்டு விட்டோம்.
கூட்ட ஜோலிகள் எல்லாம் முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு, திரும்பிக் கொண்டிருக்கும்போது, மாதவி அனுப் பிய மாலை போல வழித்தடத்தில் மறுபடியும் இருமத்தூர் வந்தது. அதற்கு வெகுநேரம் முன்னதாகவே, இருமத்தூர் ஆற்றில் மறுபடியும் குளித்துவிட்டுப் போவது என்று ஏற்கெனவே நாங்கள் தீர்மானித்துவிட்டிருந்தோம்.
கூட்ட அவசரங்கள் ஏதும் இல்லாத தால் நாங்கள் சாவகாசமாகக் குளிக்க ஆரம்பித்தோம். நதியின் நீரோடு சென்றால், அது எவ்வெவ் வாழ்கையின் ஞாபகங்களையோ நினைவில் கொண்டு வருமோ? அவ்வாறுதான் நிகழ்ந்தது.
ஜெயகாந்தன் குளித்துக் கொண்டும், நீந்திக் கொண்டும், ஜலபத்மாசனங்கள் செய்து கொண்டும், தான் குளித்த பால்ய காலக் கெடிலத்துக்கும் மட்டுமல்லாமல், பெயர் தெரிந்தும் தெரியாமலும் தான் தோய்ந்த அத்தனை ஆறுகளுக்கும் அவற்றின் கரைகளில் நிகழ்ந்த வாழ்க்கைக்கும் போய்விட்டார்.
காரோட்டிக் கொண்டே பாடல் புனைபவர், நீராடிக் கொண்டிருக்கும்போது என்ன செய்வார்?
அவர் பாட ஆரம்பித்தார்.
‘சென்று நீராடிய துறைகளெல்லாம் நான்
திரும்பி வந்தாட விரும்புகிறேன்!’
ஜெயகாந்தனின் கவிதை வரிகள் போன்றே, அவரது குரலும் ஒரு விசேஷத் தன்மை கொண்டிருக்கும். சினிமாவில் பாடியவர்களில் அவருக்கு சிதம்பரம் ஜெயராமனை மிகவும் பிடிக்கும். அந்தக் குரலில் உள்ளதோர் ஆண்மையின் கார்வை எங்களையும் கவர்ந்ததுதான்.
‘மறுபடியும் இங்கே வந்து நீராட வேண்டும்!’ என்று நினைத்துக்கொண்டு போனோமே, அது போகம் கனியொன்று பழுத்தது போல் பலிக்கும் பேரின்பம் எங்களுள் பரவியது.
‘சென்று நீராடிய துறைகளெல்லாம் நான்
திரும்பி வந்தாட விரும்புகிறேன்!’
இப்படி உருவான வரியை இரண்டு மூன்று முறை தன் சாரீரத்தில் இழைத் தவர், விரைவிலேயே அடுத்த வரிக்கும் போய்விட்டார்.
‘அன்று நான் கட்டிய சிறுமணல் வீட்டினை
ஆற்றின் கரையெல்லாம் தேடுகிறேன்!’
தண்ணீரின் மேற்பரப்பு சிதறச் சிதறச் கைதட்டி ஆரவாரித்து நாங்கள் இந்த வரியை வரவேற்றோம். வாழ்வின் லட்சியங்களை இழந்து இழந்து தேடும் ஆழ்ந்த சோகம் இந்த வரிகளில் வடிந்திருப்பதுபோல் பட்டது.
அப்புறம் இருவரிகளையும் சேர்த்து இன்னொரு முறையும் அவர் பாடி னார். அந்த ஆறே உற்சாகம் கொண்டு அலைகளை உந்தி உந்தித் தள்ளி, எங்களைத் தழுவித் தழுவிச் சென்றது.
இது வெறும் நீராடல் அன்று!
‘சென்று நீராடிய துறைகளெல்லாம்’
என்கிற கவிமொழி, ஒரு கலைஞன் ஈடுபட்ட துறைகள் பற்றியதாகிறது.
‘நான் திரும்பி வந்தாட விரும்புவது’
என்பது இன்னும் பிறவி உண்டு மாதரசே இன்பமுண்டு’ என்கிற பிறவி ஏக்கத்தைப் பேசுகிறது.
அன்று கட்டிய சிறுமணல் வீட்டினைத் தேடுபவர்களுக்கு, அந்த விளையாட்டில் தோழமைக் கொண்டவர்களின் கவனம் வராமலா போகும்?
மேலும் வளர்கிறது ஜெயகாந்தனின் கவிதை.
‘என்னோ டாடிய சிறுவர் சிறுமியர்
எங்கே என நான் தேடுகிறேன்!’
அவர்களெல்லாம் என்னவாகி இருப்பார்கள்? எங்கு போயிருப்பார்கள்? எல்லாவற்றிலும் சுபமுடிவு காணும் ஜெயகாந்தனின் கவிமனம் அடுத்த வரியையும் சேர்த்து அழகாகப் பாடுகிறது.
‘‘என்னோ டாடிய சிறுவர் சிறுமியர்
எங்கே என நான் தேடுகிறேன்
அன்னையர் தந்தையர் ஆன கதைகளை
அறிந்து மகிழ்ந்து பாடுகிறேன்!’
இதில் ‘ஆன கதைகளை…’ என்பதில் அந்தச் சிறுவர் சிறுமியரின் வாழ்க்கை பூராவும் உணர்த்தப்பட்டுவிடுகிறது. அவர்களை நாம் பிரிந்ததில் என்ன சோகம் இருக்கிறது?
‘அறிந்து மகிழ்ந்து’ என்கிற சொற்பிரயோகம், கவிக்குரிய இயற்கை யான மங்களகரமான மனோ பாவங் களில் இருந்து பிறப்பது. இந்த மகிழ்ச்சிதான் எண்ணற்ற மக்களையும் அவர்களின் வாழ்க்கையையும் ஆசிர் வதிக்கிறது.
இனி, அடுத்த கவிதை…
‘நண்பர்கள் செய்த நன்மைகட்கெல்லாம்
நன்றிகள் கூற விரும்புகிறேன்
பெண்களின் வாழ்வில் என் பேதைமையால் செய்த
பிழைகள் பொறுத்திட வேண்டுகிறேன்!’
அடடா, எவ்வளவு காலத்துக்கும் பிறகு என்ன ஒரு வருத்தம்! ஒரு நதியில் நீராடுவது என்பது எவ்வளவு அமோகமான அனுபவமாகிவிடுகிறது பாருங்கள்.
பெண்களின் வாழ்வில் என் பேதமையால் செய்த பிழைகள் என்பதில், தஞ்சாவூரில் கொஞ்ச காலம் முரட்டு பையனாக ஜெயகாந்தன் வாழ்ந்தபோது, தெருவில் பெண்கள் காயப்போட்ட கஞ்சி வடாம் துணிகளை எல்லாம் வேண்டுமென்றே காலில் மிதித்துச் சென்றதையும், இத்தகைய பிற செயல்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கவிதை எப்படியெல்லாம் பிறக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக, ஜெயகாந்தனின் பல கவிதைகள் பிறந்த கதைகளைக் கூறலாம். அவற்றுள் இதுவும் ஒன்று.
- வாழ்வோம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:
pisakuppusamy1943@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
4 days ago
வலைஞர் பக்கம்
11 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
14 days ago
வலைஞர் பக்கம்
16 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
21 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
25 days ago
வலைஞர் பக்கம்
27 days ago
வலைஞர் பக்கம்
29 days ago
வலைஞர் பக்கம்
1 month ago