ஜெயகாந்தனோடு பல்லாண்டு - 16

By பி.ச.குப்புசாமி

ஆச்சர்யப்படுகிற அளவுக்கு எளி மையாக இருப்பவர் ஜெயகாந்தன். சாகித்ய அகாடமியின் ‘ஃபெலோஷிப்’ அவருக்கு வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சி வழக்கமாக நடைபெறும் டெல்லியில் அல்லாமல், அந்த ஆண்டு பெங்களூரில் உள்ள ரவீந்திர பவனில் நடைபெற்றது.

ஜெயகாந்தன் தங்குவதற்கு ஓர் உயர்ரக ஹோட்டலில் விசாலமான அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர் அதில் நான்கு நாட்கள் தங்கிக் கொள்ளலாம். நிகழ்ச்சியில் பேசிய யூ.ஆர்.அனந்த மூர்த்தி, இதுவரை சாகித்ய அகாடமியின் ‘ஃபெலோஷிப்’ வாங்கியவர்களிலேயே வயதில் இளையவர் ஜெயகாந்தன்தான் என்று கூறி பெருமைப்படுத்தினார். அந்த நிகழ்ச்சியில் ஜெயகாந்தனுக்கு இருந்த எல்லா வேலைகளும் முதல் நாளே முடிந்துவிட்டன. மீதி மூன்று நாட்களில் என்ன செய்வது?

இங்கே எதற்கு சும்மா இருந்து கொண்டு? நாம் திருப்பத்தூர் போகலாமே என்றார் ஜே.கே. நாங்கள் சந்தோஷமாகத் தலையாட்டி னோம். அந்த சுகவாச ஸ்தலத்தை அவ்வளவு சீக்கிரம் பிரிவதை எங்கள் மனம் விரும்பாமல் இருந்ததெனினும், அவர் திருப்பத்தூர் போகலாம் என்று பிரியப்பட்டது எங்களைப் பெருமைப்பட வைத்தது. பெங்களூர் மெஜஸ்டிக் பஸ் நிலை யத்துக்கு வந்து பஸ் ஏறினோம்.

நாங்கள் திருப்பத்தூர் போய்ச் சேர்ந்த போது இரவாகிவிட்டதால், எங்கள் வீட்டிலேயே தங்கிவிட்டோம். எங்கள் வீடு ஒரு சத்திரம் போல் பெரிய இடவசதி கொண்டதால், எத்தனை பேர் வேண்டுமானாலும் அங்கே வந்து தாராளமாகத் தங்கலாம். மறுநாள் காலையிலேயே, நாகராஜம் பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தி மற்றும் பொன்னுசாமி ஆகிய நண்பர்கள், ஜெயகாந்தனை தங்கள் கிராமத்துக்கு அழைத்துச் செல்ல வந்துவிட்டனர்.

ஜெயகாந்தன் அவர்களிடம் அன்பாகப் பேசியவாறே கேட்டார்: ``கிருஷ்ண மூர்த்தி, நேற்று நாங்கள் பெஙகளூரில் தங்கியிருந்த அறைக்கு ஒருநாள் வாடகை எவ்வளவு இருக்கும்னு நினைககிறே?" கிருஷ்ணமூர்த்தி, ஜெயகாந்தன் மீது போற்றுதல் மிகக் கொண்டவர். தனது மகனின் பெயராக, ஜெயகாந்தனின் மகனின் பெயரான ஜெயசிம்மன் என்பதையே வைத்தவர்.

பெங்களூரில் ஹோட்டலில் ஓர் அறைக்கு எவ்வளவு வாடகை இருக்கும் என்கிற விஷயம் எல்லாம் தெரியாதவர் அவர். ``ஒரு எரநூறு எரநூத்தைம்பது இருக்குங்களா?" என்று கேட்டார். ஜெயகாந்தன் சிரித்துவிட்டு, ‘‘ஒருநாள் வாடகை இரண்டாயிரத்து அறுநூத்தித் தொண்ணூறு ருபாய்!’’ என்றார். கிருஷ்ணமூர்த்தி வாயைப் பிளக்காத குறைதான்.

அப்புறம், ஜெயகாந்தன் மேலும் சொன்னார்: ‘‘கிருஷ்ணமூர்த்தி, அங்கே பெங்களூர்ல அந்த ஹோட்டலில் இருக்கும்போது ’இப்போ திருப்பத்தூர், நாகராஜம்பட்டி நண்பர்களெல்லாம் கூட இருந்தா எவ்வளவு நல்லாயிருக்கும்’னு நினைச்சேன். நீங்களெல்லாம் சேர்ந்து அங்கே வர முடியாது. ஆனா, நா இங்கே வர முடியுமே? அதனாலதான் இங்கே வந்துட்டேன்’’ என்றார்.

மறுநாள் நாங்கள் எங்கள் காலைப் பொழுதையும், அந்த நாளின் முழுப் பொழுதையும் கொண்டாடும் விதமாக நாகராஜம்பட்டி கிராமத்துக்குப் போய் விட்டோம்.

அங்கே, பொன்னுசாமியின் மாட்டுக் கொட்டகையில் ஒரு கயிற்றுக் கட்டில் போடப்பட்டு, அதன் மீது வைக்கோலைப் பரப்பி வைத்துப் போர்வையால் போர்த்தி மூடி, அதன் மீது அவரை உட்கார வைத்தார்கள். கொட்டகையில் கட்டில் நின்ற இடம் தவிர, மீதிப் பரப்பு பூராவும் மெத்து மெத்தென்று வைக்கோல் பரப்பப்பட்டு, அதன் மேலே கோரைப் பாய், கோணிப் பை என்று பலவகை விரிப்புகள் விரிக்கப்பட்டன.

எல்லோரும் அவரவருக்குச் சுகமான இடங்களில் அமர்ந்து கொண்டோம்.

`குப்பா, நீ இங்க உக்காந்துக்கோ!’ என்று ஜெயகாந்தன் தான் அமர்ந்திருந்த கட்டிலிலேயே எனக்கும் இடம் தந்தார்.

ராஜபோகமான ஒரு தங்கும் இடத்தை விட்டுவிட்டு, இப்படி ஒரு குக்கிராமத்து மனிதர்களின் எளிய உபசாரத்தில் மோகம் கொண்டு வந்து நிற்கிற இந்த மனிதரை எந்த வகையறாவில் சேர்ப்பது என்று தெரியாமல் நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

அன்று பூராவும் நாங்கள் கேட்ப தற்கு அர்த்தமானதாகவும், அனுபவிக்கும் போது அற்புதமானதாகவும் தோன்றுகிற சில காரியங்களைச் செய்தோம்.

அருகே இருந்த சோளக்குட்டை ஏரியில் தூண்டில் போட்டு மீன் பிடித்தோம். பொன்னுசாமியின் பம்புசெட் போட்ட பெரிய விவசாயக் கிணற்றில் நீச்சலும் நீர் விளையாடலும் நிகழ்த்தினோம். நேற்றுதான் அந்த பஃபேயில் பெயர் தெரியாத பதார்த்தங்களை எல்லாம் ருசி பார்த்த எங்களுக்குக் கேழ்வரகுக் கூழும், புதினாத் துவையலும் ஈடு இணையற்ற எதிர்ப்பதம் ஆயின. சாமை அரிசிச் சோறும், பண்ணைக் கீரைக் குழம்பும் என்கிற எளிய சமையல் பாகங்கள், `வரக ரிசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும், மொரமொரவெனவே புளித்த மோரும்‘ என்று அவ்வையாரை விருந்தோத வைத்த அனுபவத்தை எங்களுக்கு மேலும் விளங்கச் செய்தன.

ஜெயகாந்தனை விருந்தாளியாக ஏற்பவர்கள் பெரிதும் சிரமப்பட வேண்டியதே இல்லை!

திருப்பத்தூரில் எங்கள் வீடு எத்தனையோ முறை அவரை வரவேற்று உபசரித்திருக்கிறது. வெறும் கொள்ளுப் பருப்பு கஞ்சியையும் நெத்திலிக் கருவாடு வறுவலையும் வைத்தே அவரை நாங்கள் ஆனந்தப்படுத்திவிட்டோம். அதுமட்டுமல்ல; ‘குப்புசாமியின் வீட்டில் கொள்ளுப் பருப்பு கஞ்சியும் நெத்திலிக் கருவாடும் செய்து வைத்திருப்பார்கள்...’ என்று ஆசை காட்டி எத்த னையோ பெரிய மனிதர்களை யும் தன்னுடன் அழைத்துக் கொண்டு வருவார். வந்த வுடனேயே, `குப்புசாமி, கொள் ளுப் பருப்பு கஞ்சியா வைத்தி ருக்கிறாய்?’ என்று கேட்டு ஊர்ஜிதப்படுத்திக் கொள்வார்.

கொள்ளுப் பருப்பு கஞ்சியை, காய்ச்சியவுடன் சூடாகவும் உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கலாம். மறுநாள் காலை யில் அது ஆறிய பழங்கஞ்சி ஆனபிறகு குடித்தாலும் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து எடுத்தது போல் அத்தனை குளிர்ச்சியாக இருக்கும். நாங்கள் பத்தாண்டுகள் சபரிமலைப் பயணம் போனபோது எல்லாம், நான் எங்கள் வீட்டுச் சார் பாகத் தயாரித்துக் கொண்டு போகிற பட்சணங்கள் லிப்பேட் என்கிற தட்டையும், கம்புப் பணியாரமும்தான். இதில் கம்புப் பணியாரம் எல்லாரையும் வெகுவாகக் கவர்ந்துவிட்டது.

சிவகாசி ரயில் நிலை யத்தில் நண்பர் ராஜசபை அவர்கள் கிலோ கணக்கில் பாதம் அல்வாவைக் கொண்டு வந்து தருவார். எங்கள் குழுவுக்கு அவ்வளவு பெரிய உபசாரமெல்லாம் கிடைக்கும். ஆயினும், எங்கள் வீட்டு கம்புப் பணியாரத்துக்கு அங்கு கிடைத்த பெரிய மரியாதையையும் என்றைக்கும் மறக்க முடியாது.

கடுங்குளிரில் பம்பையாற்றில் திளைத்துத் திளைத்துக் குளித்து முடித்த பிறகு, நாங்கள் எங்கள் இரவு உணவுக்கு யோசனை செய்வோம். அங்கே பம்பை நதி தீரத்தில் எத்தனையோ ஹோட் டல்களும் இருக்கும். அங்கே வழங்கப்படுகிற சோறு, கொட்டை கொட் டையாகச் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஜெயகாந்தன், பம்பை நதி ஓரமாகவே சிறுசிறு தென்னங்கீற்று குடில்கள் அமைத்துக் கஞ்சி வெள்ளமும், குச்சி வள்ளிக் கிழங்கு பொரியலும் சூடாகத் தருகிற இடங்களைத் தேர்ந்தெடுப்பார்.

அலுமினியத் தட்டில் சூடுபறக்கும் கஞ்சி, அதிலே ஒரு சிறிய அலுமினிய ஸ்பூன், ஒரு சிறிய தட்டில் கிழங்குப் பொரியல், பக்கத்தில் ஒரு சிறிய அலுமினிய டம்ளரில் உப்புக் கரைத்த தண்ணீர் என்று வைத்துவிடுவார்கள். இந்த வெறுங்கஞ்சியில் இவ்வளவு சுவையா என்று நாங்கள் வியப்போம். வீடுபோய்ச் சேர்ந்ததும் இதே மாதிரி செய்து பார்க்க வேண்டும் என்று நான் ஒவ்வொரு முறையும் எண்ணுவது உண்டு.

அப்போது எல்லாம் எங்கள் சபரி மலைப் பயணத்துக்குத் தலைக்கு இருநூறு ரூபாய்க்கு உள்ளாகத்தான் செலவாகும். நண்பர் இராம.கண் ணப்பன் அவர்கள், இந்தக் காரணத் துக்காகவே ஒவ்வோர் ஆண்டும் எங்கள் குழுவில் இணைந்துகொள்வார். சினிமாக்காரர்கள் போகிற குழுவில் ஏராள மாகச் செலவாகிறது என்பது அவரது அபிப்ராயம்.

அன்பு கொண்ட மாந்தரும் ஆண்டவனும் ஒன்றேதான். அவர்களை நாம் எளிய முறைகளிலேயே எட்டிப்பிடிக்க முடியும். சிக்கெனப் பிடிக்க முடியும். தேனோடு சேர்த்து மீனையும் கொண்டுவந்த குகனை, `அரியதாம் உவப்ப உள்ளத்து அன்பினால் அமைந்த காதல் தெரிதரக் கொணர்ந்தது என்றால் அமிழ்தினும் சீர்த்தயன்றே’ என்று ராமனின் வாயில் நுழைந்து கம்பன் பாராட்டுவான்.

அவருக்கான விருந்து உபசாரங்களில் ஜெயகாந்தன் அரியதாம் உவப்ப உள் ளத்து அன்பினால் அமைந்த காதலைத் தான் பிரதானமாகப் பாவித்தார்.

- வாழ்வோம்...
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pisakuppusamy1943@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

4 days ago

வலைஞர் பக்கம்

11 days ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

16 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

17 days ago

வலைஞர் பக்கம்

21 days ago

வலைஞர் பக்கம்

24 days ago

வலைஞர் பக்கம்

25 days ago

வலைஞர் பக்கம்

27 days ago

வலைஞர் பக்கம்

29 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

மேலும்