சார்லி ஹெப்டோ தாக்குதல்: அகமது மெராபத்தை தெரியுமா உங்களுக்கு?

By செய்திப்பிரிவு

பாரீஸ் பத்திரிகை மீதான தாக்குதல், அதையொட்டிய பிரான்ஸ் மற்றும் உலகலாவிய ஊடகப் பொதுப் பார்வையையும், இஸ்லாம் மதத்தையும் தீவிரவாதத்தையும் முன்வைத்து பேசப்படும் கோணங்களையும் உள்ளடக்கிய இரண்டு குறுங்கட்டுரைகளின் தமிழாக்கம் இது.

முதல் கட்டுரை, Barry University - Dwayne O Andreas School of Law-ன் இணைப் பேராசியர் காலீத் இ பெய்தூன் எழுதி, 'அல் ஜஸீரா'வில் வெளிவந்தது. இரண்டாவது கட்டுரை, பத்திரிகையாளர் மைக்கேல் டீகான் எழுதி, 'டெலிகிராப்' தளத்தில் வெளியானது.

முஸ்லிம்கள் தலைப்புச் செய்திகளாக்கப்படுவது எப்போது? - காலீத் இ பெய்தூன்

பிரான்ஸ் அங்கத இதழான 'சார்லி ஹெப்டோ'வை குறிவைத்துத் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் கொல்லப்பட்ட முதல் நபர் அப்பாவியான அகமது மெராபத். இந்தப் பத்திரிகையின் தலைமையகத்தின் சைட்வாக்கில் அந்தப் பிரெஞ்சு இஸ்லாமிய போலீஸ்காரர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சார்லி ஹெப்டோ அலுவலகத்திற்குள் நுழைந்து எடிட்டர், அற்புதமான கார்ட்டூனிஸ்ட்கள் ஆகியோரை கொல்வதற்குச் சில கணங்கள் முன்னால், மூன்று தீவிரவாதிகளில் ஒருவரால் துப்பாக்கி முனையில் மெராபத் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பாரீஸ் துப்பாக்கிச் சூடு பற்றிய மீடியாக்களின் கவரேஜ் எல்லாம் ஸ்டேபானே சார்போன்னியர், ஜார்ஜஸ் வோலின்ஸ்கி, ழான் காபுட், பெர்னார்ட் வெர்ல்ஹாக் என்று சார்லி ஹெப்டோ சம்பவத்தில் கொல்லப்பட்ட முக்கியமான சார்லி ஹெப்டோவை உருவாக்கிய மூளைகள் பற்றியே பேசின. முதல் பலியான அகமது மெராபத் தலைப்புச் செய்தியில் இருந்து தள்ளிவைக்கப்பட்டார்.

மெராபத் பாதிக்கப்பட்டதை முக்கியத்துவப்படுத்துவதைத் தவிர்க்கிற அரசியல், பிரதிநிதித்துவ அரசியல்களை மறுக்க முடியாது.

மெராபத்தின் மரணம் இஸ்லாமியர்களைத் தீவிரவாதிகள், அயலர்கள், விளிம்பு நிலையில் உள்ளவர்கள் என்று இறுக்கமாகக் காட்டும் பரவலான பார்வையைச் சிக்கலாக மாற்றுகிறது. அரசாங்கம், பிரான்சில் உள்ள இஸ்லாமியர்களை அழிவை உண்டு செய்பவர்களாகச் சட்டத்தை மதிக்காதவர்களைக் காட்டிய பார்வையை மறுக்கிறது.

இந்தத் துக்ககரமான சம்பவத்தைத் தாண்டி, சார்லி ஹெப்டோ படுகொலைகள் அடிப்படையைச் சுட்டுகின்றன, இஸ்லாமிய அடையாளமே முக்கியம். அது தலைப்புச் செய்தியாகத் துப்பாக்கியை ஏந்தி நிற்பவர் இஸ்லாமியராக இருக்கிறபோது மாறும். அந்தத் துப்பாக்கியை எதிர்கொள்ளும் அப்பாவியாக இஸ்லாமியர் இருக்கிறபோது அந்தச் செய்தி கண்டுகொள்ளப்படாது. இதுவே உலகில் பெரும்பாலும் நடக்கிறது. குறிப்பாக நவீன இஸ்லாமிய வெறுப்பின் சிற்பியான பிரான்ஸ் தேசமும் இதில் அடக்கம்.

பிரான்ஸ் மக்கள் தொகையில் இரண்டாவது பெரிய மதத்தினராக இஸ்லாமியர்கள் உள்ளார்கள். மொத்த அறுபத்தி ஆறு மில்லியனில் ஐந்து முதல் பத்துச் சதவிகிதம் பேர் இஸ்லாமியர்கள். இஸ்லாமின் அளவு, மக்கள்தொகை வளர்ச்சி ஆகியவை இஸ்லாமியர்களுக்கு எதிரான கடுமையான நவீன காலச் சட்டங்களைக் கொண்டுவந்தன. தலை முக்காட்டை 2004-லும், 2010-ல் நிகாப் எனப்படும் முகத்தை மூடிக்கொள்ளும் முறையையும் இஸ்லாமிய வெறுப்புச் சிந்தனைகளால் அரசு தடை செய்தது. இஸ்லாமிய மற்றும் பிரெஞ்சு அடையாளங்கள் ஒன்றுக்கொன்று இணையவே முடியாது, அவற்றுக்குள் சமரசம் சாத்தியமில்லை என்பதை அறிவிப்பதாக அரசின் சட்டங்கள் செயல்பட்டன.

தன்னுடைய இஸ்லாமிய மக்களின் மீது கட்டாய மதச்சார்பின்மையைக் கொண்டுவந்து இருவகையான கலாசாரத் தேர்வைத் தந்தது. 'இஸ்லாமும், மேற்குலகும்', 'இஸ்லாமிய நிலம் அல்லது பிரான்ஸ்' என்பதே அவர்களுக்குத் தரப்பட்ட தேர்வு. இப்படிப்பட்ட காலக்கெடு அரசால் தரப்பட்டாலும் பிரான்ஸ் இஸ்லாமியர்கள், பிரான்ஸ் குடிமக்கள் என்பதையே முதன்மையாகக் கொண்டு செயல்பட்டார்கள்.

நாட்டின் முப்பது - அறுபது லட்சம் பிரான்ஸ் இஸ்லாமியர்களின் பிரதிநிதியாக இந்த மூன்று தீவிரவாதிகளை நாட்டின் சிவில் சொசைட்டி, தீவிரமான குரல்கள் கருதின. இந்த மாதிரியான பிரச்சாரங்கள், அங்கு ஏற்கெனவே ஊறிப் போயுள்ள இஸ்லாமிய வெறுப்போடு இஸ்லாமியர்கள், இஸ்லாமிய சமூகங்கள் மீது வன்முறையை வளர்க்கவே பயன்படும்.

பிரான்ஸ் தேசத்தின் இஸ்லாமிய வெறுப்பு புதன் நிகழ்வுக்குப் பிறகு இன்னமும் தீவிரமாகவும், ஆழமாகவும் வளரும். மூன்று தீவிரவாதிகளின் செயல்கள், வெறுப்பை விரும்பும் நபர்களின் பார்வையில் இஸ்லாமியர்களை இன்னமும் பொறுப்பு கொண்டவர்களாக மாற்றியிருக்கிறது. இன்னமும் பல இஸ்லாமியர்கள் பாதிப்புக்கு உள்ளாகப் போகிறார்கள்.

வில்லன்களுக்குப் பதிலாக பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்களை முன்னிறுத்துவது வெறுப்பைப் பலமடங்கு தணிக்கும். மூன்று தீவிரவாதிகளைப் பற்றிச் செய்தி பரப்புவதை விட, மெராபத்தின் தீரமான போராட்டத்தை முன்னிறுத்தி பேசுவது இஸ்லாமியர்கள் பிரான்ஸ் தேசத்தின் குடிமக்களே என்கிற கருத்தை பொருத்தமாக அழுத்திச் சொல்லும். அவர்கள் மற்றவர்களைப் போலச் சாதாரண வேலைகள் பார்க்கும், குடும்பங்களோடு அமைதியாக வாழும் நபர்கள் என்பதும், வன்முறையைக் கண்டிக்கும் இஸ்லாமை நம்புபவர்களே அவர்கள் என்பதும் மக்களுக்குப் புரியும். அரசாங்கம் உருவாக்கி வைத்திருக்கிற 'தீவிரமான பற்றுக் கொண்டவர்கள் அவர்கள்' என்கிற பிம்பத்தில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும்.

அகமது மெராபத் பாதிக்கப்பட்ட ஒருவர். அவர் ஒரு இஸ்லாமியர் என்பதற்கும் மேலானவர். அவர் தன் வாழ்விலும், மரணத்திலும் பிரான்ஸ் தேசத்தின் பெரும்பான்மை இஸ்லாமியர்களின் மாதிரியாக இருந்துள்ளார். சட்டத்தை மதிக்கிற பிரான்ஸ் குடிமகனாக இருந்த மெராபத், தன்னுடைய இஸ்லாமிய அடையாளத்தை அரசின் சட்டங்களோடு இணக்கமாக மாற்றிக்கொண்டார். அவர் நாட்டில்

பரவலாக இருந்த இஸ்லாமிய வெறுப்புக்கு நடுவிலும் ஒரு பிரான்ஸ் குடிமகனாகவும், இஸ்லாமியராகவும் ஒரு சேர இருந்துள்ளார்.

தாக்குதலின் முதல் பலியான அகமது மெராபாத்தின் கதை தலைப்புச் செய்திகளில் தவிர்க்கப்படுகிறது. புதன்கிழமை முதல் பாரீஸ் நகரில் இருந்து வரும் ரிப்போர்ட்கள், விவரணைகள் ஆகியவற்றில் அவரின் முகமோ, பெயரோ காணப்படவில்லை. அவரின் தீரம் மிகுந்த, பாதிக்கப்பட்ட நெகிழ்வான கதையைச் சொல்வது மேலும் பல உயிர்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்கும். மிக முக்கியமாக, அகமது மெராபத்தின் பார்வையில் கதையைச் சொல்வது இஸ்லாமிய அடையாளம், பிரெஞ்சு குடிமகன் அடையாளம் இரண்டும் இணைந்தும், உறுதியாகவும் இருக்க முடியும் என்பதை விளக்கும்.

****

வெறும் அங்கதம் அல்ல - மைக்கேல் டீகான்

சார்லி ஹெப்டோவின் அங்கதத்தால் பாரீஸ் தீவிரவாதிகள் காயப்பட்டு உள்ளார்கள் என்று நம்புகிறோம். நாம் தவறாக எண்ணிக்கொண்டு இருக்கலாம்.

இது ஒரு கோட்பாடு. கேலிச்சித்திரங்களால் தீவிரவாதிகள் காயப்படுவது இல்லை. நபிகள் நாயகத்தைப் பகடி செய்யும் கேலிச்சித்திரங்கள் கூட அவர்களைக் காயப்படுத்துவது இல்லை. அவர்களைப் பகடிகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. எனக்குத் தெரிந்தவரையில் அவர்கள் நபிகள் நாயகத்தைப் பற்றியும் கவலைப்படுவதில்லை.

தாங்கள் கேலிச்சித்திரங்களால் காயப்படுவதாக அவர்கள் நடிக்கிறார்கள். படுகொலைகள் புரிவதற்கு அவர்களுக்குக் காரணங்கள் தேவைப்படுகின்றன. அவ்வளவுதான்!

படுபயங்கரமான அக்கொலைகள் மூலம் முஸ்லிம் அல்லாத மக்களைக் கோபம், வேதனைகொள்ள வைத்து, அவர்களின் வெறுப்பை இஸ்லாமியர்களை நோக்கி திருப்புவதுதான் இவர்களின் நோக்கம். அந்த மக்கள் இஸ்லாமியர்களைக் குறை சொல்லி, அவர்களைச் சித்திரவதை செய்ய வேண்டும் என்பது இவர்களின் இலக்கு. அம்மக்கள் இஸ்லாமியர்களின் நூலை எரிக்க வேண்டும், மசூதிகளைத் தாக்க வேண்டும், தெருக்களில் மிரட்டப்பட வேண்டும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அந்நியர்கள் போல ஆக வேண்டும். அவர்கள் ஆதரவைத் தேட வேண்டும். தீவிரவாதிகள் ஆகவேண்டும். விளைவு: தீவிரவாதிகள் எண்ணிக்கையில் பெருக்கி முஸ்லிம்கள் அல்லாத மக்களைக் ஒரு உள்நாட்டுப் போரை தொடங்கவைக்க வேண்டும்.

நம்முடைய கோபம் ததும்பும் அப்பாவித்தனத்தோடு இது கேலிச்சித்திரங்கள் தொடர்பானது என்று தொடர்ந்து நாம் எண்ணுகிறோம். நாம் கேலிச்சித்திரங்களை வரையாவிட்டால் தீவிரவாதிகள் வெல்கிறார்கள், வரைந்தால் தோற்கிறார்கள் என்று நாம் கருதுகிறோம். ஏராளமான ஐரோப்பிய செய்தித்தாள்களில் அந்தச் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரங்கள் மீண்டும் அச்சிடப்பட்டுள்ளன. இதைக்கண்டு மேற்குலகில் உள்ள தீவிரவாதிகள் தனியாகக் கோபத்தில் கத்திக்கொண்டு இருக்கிறார்கள். ("பெரிய விபத்து இது! பேனா போராளிகளைத் தோற்கடித்து இருக்கிறது. நம் திட்டம் திருப்பித் தாக்கியிருக்கிறது. அங்கதம் நம்மை மீண்டும் வீழ்த்தி அவமதித்து இருக்கிறது.") ஆனால், இதை என்னால் அவ்வளவு உறுதியாகச் சொல்ல முடியவில்லை. நாம் கேலிச்சித்திரங்களை மீண்டும் மீண்டும் வெளியிடாவிட்டால் தீவிரவாதிகள் வென்று விடுவதாக நான் எண்ணவில்லை. அவர்களின் தூண்டிலில் சிக்கி எகிறி குதித்து, முஸ்லிம்களை நாம் வெறுக்க ஆரம்பித்தாலே அவர்கள் ஜெயிக்கிறார்கள்.

இது வெறும் அங்கதம் அல்ல. அதற்குப் பலமடங்கு அதிகமான ஒன்று.

தமிழில்:பூ.கொ.சரவணன்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

19 hours ago

வலைஞர் பக்கம்

13 days ago

வலைஞர் பக்கம்

14 days ago

வலைஞர் பக்கம்

19 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்