பந்தக் கால் ஊன்றி, காப்பு கட்டியதில் இருந்து ஊருக்குள்ளே கள்ளு, சாராயப் புழக்கமில்லை; கால் அதிரும் நடை இல்லை; காது அதிரும் பேச்சு இல்லை.
எல்லா ஆண்களும் வலது கையில் மஞ்சள் காப்பு கட்டி, பக்தி பழுத்துப் போய் இழைந்து திரிந்தார்கள்.
பெண்கள் எல்லாம் மஞ்சள் சேலையில் அதிகாலைக் குளியலாடி, நீர் சொட்டச் சொட்ட, நுனி முடியில் கொண்டை இட்டிருந்தார்கள். இளவட்டங்கள், பத்து நாள் தாடியை சொரிந்துகொண்டு அலைந்தார்கள்.புஷ்பவதி ஆகாத ஏழு பெண் குழந்தைகளை ‘பேச்சியம்மன்’ ஆக்கி, கூனிக் கிழவி வீட்டு முன் நித்தமும் ஊர் கூடி பாத பூஜை செய்தார்கள்.
நாராயணத் தேவர் வீட்டு சனி மூலை இருட்டுக்குள் நூறு, இருநூறு முளைப்பாரிகள் வளர்ந்து கொண்டிருந் தன. இந்த வருட முளைப்பாரி எக்குப் போட்டு வளர்வதை பார்த்தால், ‘நல்ல மழை பெய்து நாடு செழிக்கும்’ என்ப தில் அட்டி இல்லை. ‘நாடு செழிக்குதோ… இல்லையோ, நம்ம ஊரைப் பிடிச்ச பீடை விலகணும். அது போதும்’ என்பதுதான் ஊர்க் கணக்கு.
எவர் விட்ட சாபமோ! பதினேழு, இருபது வருஷங்களாக ஊர் பட்டழிந்து விட்டது. ஏதோ… இருளப்பசாமி புண்ணியத்துல இந்த வருஷம் எல்லாம் கூடி வருது. சாமி குத்தம் இல்லாம நல்லபடியாக நடத்தி முடிக்கணும்.
கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகம் ஊண், உறக்கமின்றி ஈசலாய் அலைந் தார். அத்தனை சுமையும் அவர் தலையில் ஏறிக் கிடந்தது. அரண்மனைச் சேவகத்தில் சிக்கித் தவிக்கும் அவரைச் சுற்றிலும் ஐந்து தலை நாகமாக, திசைக்கொரு நாக்கு நீண்டு கழுத்தை வளைக்கிறது.
தலைக்கு மேல் தொங்கும் கத்தியாக, உடையப்பன் மிரட்டுகிறான். சென்னைப் பட்டணத்தில் இருக்கும் வெள்ளையம்மா கிழவி ஒரு பக்கம் உத்தரவிடுகிறாள். செண்பகத் தோப்புக் காட்டுக்குள் இருக்கும் தவசியாண்டி மறு பக்கம் ‘தண்ணி’ காட்டுகிறான். கண் முன்னே பெருங்குடி கிராமம்; முதுகுக்குப் பின்னே தன் பெண்டு பிள்ளைகள்.
எவர் மனதும் கோணாமல் இசைவாய் காய் நகர்த்தி காரியத்தை முடிக்க வேண்டிய பொறுப்பு ரத்னாபிஷேகம் பிள்ளையின் தலையில் விழுந்து கிடக்கிறது.
இடையில் வந்து அரண்மனையோடு ஒட்டிக் கொண்ட ‘லோட்டா’வும் ஒரு வகையில் கணக்குப்பிள்ளைக்கு ஒத் தாசையாக இருந்தான். ஏவிய காரியங்களுக்கு எல்லாம் ஓடி, நடந்து ஊழியம் செய்யும் ‘லோட்டா’, தன்னைத் தானே ‘பாதி அரண்மனை’யாக நினைத்துப் பூரித்துப் போயிருந்தான். இந்த நினைப்பே கணக்குப்பிள்ளையின் பாதிச் சுமையை இறக்கியது.
“ ‘லோட்டா’… அரண்மனைக்குள்ள என் ஊழியம் இன்னும் எம்புட்டு நாளைக்கோ… தெரியல. எனக்குப் பின்னாடி உனக்குதான் அந்த பாக் கியம் கிடைக்கப் போகுதுன்னு நெனைக்கிறேன். என் கண்ணுள்ளபோதே அரண்மனை நெளிவு சுளிவுகளை கத்துக்கோ…” என அவ்வப்போது ‘லோட்டா’வுக்கு ‘உருமா’ கட்டி விடுவார்.
‘லோட்டா’, கணக்குப்பிள்ளை சொல்வதையும் தாண்டி யோசித்தான். ‘உங்களுக்கு பின்னாடி ‘கணக் குப் பிள்ளை’ உத்தியோகம் மட்டுமா என் கைக்கு வரப் போவுது? உடையப்பனுக்குப் பின்னாடி ‘அரண்மனை’ பட்டமே எனக்குத்தான்! வாரிசு இல்லாத சொத்துதானே? என் தலைவிதி இப்படி இருக்கும்போது, எவன் தடுக்க முடியும்?’ என்கிற நினைப் பில் தோள்பட்டையைத் தூக்கிக் கொண்டு, உறங்காமலே கனவுகளோடு அலைந்தான்.
இருபதுக்கு மேற்பட்ட அரண்மனைச் சேவகர்களுக்கு இப்போதெல்லாம் ‘லோட்டா’தான் மேஸ்திரி. இவ்வளவு பேரில் ஒரே ஒருத்தன் மட்டும் ‘லோட்டா’வை மதிப்பதில்லை.
அவன் பேரு, ‘கூழு’. காதில் கடுக்கண் அணிந்திருப்பான். நெற்றியில் குங்குமப் பொட்டு. இடுப்புக்கு கீழே இறங்காத, அடர் வண்ண ரவிக்கை போன்ற ஆம்பளை சட்டை. கொசுவம் வைத்துக் கட்டிய கைலி. வாய் நிறைய வெற்றிலைக் குதப்பல். இடுப்பை முழங்கைகள் உரச, இடமும் வலமும் புட்டம் ஆடும் நடை. உடையப்பனின் அந்தரங்கப் பட்சி. அரண்மனைக்கு ‘பெண்’கள் ஏறி வரும் நீல வண்ணக் கூட்டு வண்டியில், இம்மி தூசு தங்க விட மாட்டான். பளபளக்க துடைத்துக் கொண்டே இருப்பான்.
ஊருக்குள் காப்புக் கட்டியதில் இருந்து ‘கூழு’க்கு வேலை இல்லை. இன்னும் ரெண்டே நாள். திருவிழா முடியவும் கூட்டு வண்டிக்கும் ‘கூழு’க்கும் வேலை வந்துரும்.
அரண்மனைக்குள்ளே ‘லோட்டா’வுக் குப் பேச்சு துணை ‘கூழு’தான். வலிய பேச்சுக்கு இழுத்தான். “ஏப்பா ‘கூழு’... ஏழெட்டு நாளா அரண்மனை கடுமையான விரதத்தில இருக்காரோ?” என்றான்.
வெற்றிலை நாக்கால் உதடுகளைத் துழாவிக் கொண்டே, ‘லோட்டா’வின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ரெண்டு முறை, ஏற இறங்க நோட்டமிட்ட ‘கூழு’, “கூட்டு வண்டிக்குத்தான் வேலை கிடையாது. பாட்டிலும் கிளா ஸும் எப்பவும் போல உருளுது!” என வாயைக் குணட்டினான்.
“என்னது… பாட்டிலு உருளுதா? அப்புறம் என்ன விரதம்?”
“எனக்கென்னமோ… இது சாமி விரதமா தெரியல. ஏதோ சபதத்தை நிறைவேத்தப் போற ஆங்காரமும் வெறியுமாதான் தெரியுது. போதையில தினமும் புலம்பல் தான். ‘உயிரோட இருக்கிற ஒரே சாட்சியை அழிக்கணும். ஒரே சாட்சியை அழிக்கணும்’னு புலம்புறாரு. பத்தாம் நாள் திருவிழாவில யாரு தலை உருளப் போகுதோ… தெரியல” சொல்லி விட்டு ‘கூழு’ நாலு திக்கும் பார்த்தான்.
“அடேய் ‘லோட்டா’ அங்கே என்னடா புரணி? வாடா இங்கே...” உள்ளே இருந்து குரல் கேட்டது.
“இந்தா… வர்றேன் அரண்மனை” பதறி விழுந்தடித்து ஓடினான் ‘லோட்டா’.
தனுஷ்கோடி துறைமுகத்தில் ஒதுங்கியது கப்பல். பயணிகள் ஒருவர் பின் ஒருவராக இறங்கினார்கள்.
வரவேற்க வந்து கரையில் நிற்கும் கூட்டம், அவரவரின் விருந்தாளிகளைக் கண்டதும் உற்சாகத்தில் கை அசைத்தார்கள்.
பிறந்த மண்ணைவிட்டு வெளி யேற்றப்பட்டபோது கன்னியாய் இருந்த அரியநாச்சியையும் பாலகனாய் இருந்த துரைசிங்கத்தையும் இருபது வருஷங் கள் கழித்து அடையாளம் காண இயலாமல் தவித்துப் போய் நின்றான் தவசியாண்டி.
- குருதி பெருகும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:
irulappasamy21@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
12 days ago
வலைஞர் பக்கம்
13 days ago
வலைஞர் பக்கம்
18 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago