ஜெயகாந்தனோடு பல்லாண்டு 16

By பி.ச.குப்புசாமி

கடந்த பத்தாண்டுகளுக்குள்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு காணும் பொங்கலன்று காலையில் சீக்கிரமாகவே ஜெயகாந்த னிடம் இருந்து போன் வந்தது. அவர் அன்று மத்தியானம் திருவண்ணாமலை ரமணாசிரமம் வருவதாகவும், என்னை யும் அங்கு வருமாறும் சொன்னார்.

நண்பர் வா.சீ.வேங்கடாசலத்தை அழைத்துக்கொண்டு திருவண்ணா மலைக்குப் புறப்பட்டேன்.

நாங்கள் திருவண்ணாமலை ரமணாசிரமம் போய்ச் சேருவதற்கு மத் தியானம் 2 மணிக்கு மேல் ஆகிவிட்டது.

ரமணாசிரமத்தில், ’’ஜெயகாந்தன் வந்திருக்கிறாரா, எங்கிருக்கிறார்?’’ என்று கேட்டால், ஜெயகாந்தன் என்கிற பெயரே அவர்களுக்குத் தெரியாது என்பது தெரிந்தது. ஜெயகாந்தன் பிரபல எழுத்தாளர் என்பதையெல்லாம் நாங்கள்தான் சொல்ல நேர்ந்தது.

நல்லவேளையாக அங்கே ஒரு நபர், ‘‘இளையராஜாவோடு வந்திருக் கிறாரே… அவரா?’’ என்று கேட்டார்.

‘எதற்கு திடீரென்று ஜே.கே. காணும் பொங்கலன்று திருவண்ணாமலைக்கு வருகிறார்? அவருடன் யாரெல்லாம் வருகிறார்களோ…’ என்று ஏற்கெனவே குழம்பியிருந்த நான் சட்டெனத் தெளிந்தேன்.

இசைஞானி இளையராஜாவுக்கும் ஜெயகாந்தனுக்கும் உள்ள நட்புறவை நான் நன்கு அறிந்தவன் என்பதால், துப்புக் கிடைத்த சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்காத குறையாக, ‘‘ஆமாம்… ஆமாம்… அவரேதான்!’’ என்று சொன்னேன்.

அவர்கள் எங்களை, அருகில் இருந்த ஒரு சிறு கட்டிடத்துக்குக் கூட்டிச் சென்றார்கள்.

மேலே மாடியில் இருந்த ஜெயகாந்த னிடம், திருப்பத்தூரில் இருந்து யாரோ வந்திருப்பதாக போய்ச் சொன்னார்கள்.

‘‘குப்புசாமியா? வா... வா!’’ என்று அவர் குரல் கொடுக்கவே, முகத்துவா ரத்து நதியின் உற்சாகத்தோடு நானும் வேங்கடாசலமும் படியேறி அவர் முன்னே போய் நின்றோம்.

அங்கே அவர் மட்டும் அல்லாமல், இளையராஜாவும் இருந்தார். வயதான ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி அவர்களோடு பேசிக்கொண்டிருந்தார்.

இளையராஜாவுக்கும் ஒரு வணக்கம் போட்டு முடிக்கும் முன்பே, அவர் எங்கள் இருவரின் இருக்கைகளுக்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்தினார். அங்கே, மேலும் இரண்டு இருக்கைகள் கொண்டு வந்து போடப்பட்டன.

அதற்குப் பின், நாங்கள் அங்கே வருவதற்கு முன்பு நிகழ்ந்து கொண் டிருந்த உரையாடலானது மேலே தொடர்ந்து நிகழ்ந்தது. அந்த உரையாடல் குகை நமச்சிவாயர் கோயிலோ, வேறு ஏதேனும் பற்றியதோ… எனக்குச் சரியாகக் காதில் விழவில்லை. ஞாபகத்திலும் இல்லை.

இளையராஜா மறுநாள் காலையில் தான் கார் அனுப்புவதாகவும், பாடலாசிரியர் முத்துலிங்கமும் உடன் வருவார் என்றும், அந்த இடத்தை ஜே.கே. அவசியம் பார்க்க வேண்டும் என்றும் சொன்னார்.

இடையில் இளையராஜா இருந்த தால், ஜெயகாந்தன் என்னைக் கொஞ் சம் எட்டிப் பார்த்து, ‘’குப்புசாமி நம்மால போக முடியுமா?’’ என்று கேட்டார்.

அதற்குள் இடைமறித்த இளைய ராஜா, ‘’எல்லாம் முடியும். ரொம்பத் தொலைவு கிடையாது… கிட்டேதான்!’’ என்றார்.

சரியென்று ஜெயகாந்தன் எழுந்துவிட் டார். அவருக்கு சேஷாத்ரி ஆசிரமத்தில் அறை எடுக்கப்பட்டிருந்தது.

நானும் வேங்கடாசலமும் கடைசியாக அமர்ந்திருந்த காரணத்தால், ஜே.கே. முதலில் கீழிறங்கிப் போன பின்பும், அந்த வெள்ளைக்காரப் பெண்மணியோடும் இளையராஜாவோடும் ஒரு நிமிஷம் எஞ்சி நின்றோம்.

இளையராஜாவிடம் அந்தப் பெண்மணி, ‘‘ஹூ இஸ் ஹீ?’’ என்று ஆங்கிலத்தில் கேட்டார்.

அதற்கு இளையராஜா, ‘‘ஹீ இஸ் எ கிரேட் லிட்டரரி பர்சனாலிட்டி. ஹீ இஸ் லைக் எ குரு ஃபார் அஸ்!’’ என்று விளக்கி னார். ராஜாவின் இந்த வார்த்தைகளை அன்று ஜெயகாந்தன் கூட காதுபடக் கேட்டிருக்க மாட்டார். ஆனால், நாங்கள் கேட்டோம். இளையராஜாவின் மீது எங்கள் மரியாதையும் அபிமானமும் பன்மடங்கு கூடின.

ஜெயகாந்தனோடு தனியாக வந்து பேசிய பிறகுதான், இளையராஜா தான் கூப்பிடுகிற ஒரு நாளில், தான் கூட்டிச்

செல்கிற ஊருக்கு வர வேண்டும் என்று இவரிடம் வாக்கு வாங்கிக் கொண்டதையும், இந்தக் காணும் பொங்கல் நாளில் அவர்தான் ஜெயகாந்தனை இங்கு அழைத்து வந்திருக்கிறார் என்பதையும் நாங்கள் அறிந்துகொண் டோம். அந்த சந்தர்ப்பத்தில் நாங்களும் அங்கே சேர்ந்துகொள்ள வேண்டும் என்று விரும்பி ஜெயகாந்தன் எங்களை அழைத்திருக்கிறார்.

அன்று இரவு சேஷாத்ரி ஆசிரமத் தில் எங்களுக்கான அறையில் இருக்கும்போது, கவிஞரும், பிரபல பாடலாசிரியருமான முத்துலிங்கம் வந்து ஜெயகாந்தனுடன் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார்.

முத்துலிங்கம் ஒரு நல்ல மனிதர் என்பதை மட்டும் அல்லாமல்; பாடல் புனைவதில் மிகத் திறமை கொண்டவர் என்பதையும் நான் கொஞ்ச நேரத் திலேயே உணர்ந்துகொண்டுவிட்டேன்.

யாப்பிலக்கணம் எல்லாம் கற்றுத் தேர்ந்து, மிகவும் சிறப்பாகக் கவிதை எழுதினாலும்கூட, வெற்றிகரமான சினிமா பாடலாசிரியன் ஆகிவிட முடியாது. அதிலும் இப்போது இருப்பது போல, போட்டுத் தருகிற மெட்டுக்குப் பாடல் போடவேண்டும் என்றால், அதற் குத் தத்தகாரம் தெரிந்திருக்க வேண்டும் என்பதை எல்லாம் அவர் சொன்னார். அவர் அப்படி சொன்னதெல்லாம் எங்களுக்குத்தான். ஜெயகாந்தனுக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?

மறுநாள் காலை, ஜெயகாந்தனைப் போய் பார்க்கச் சொன்னாரே இளைய ராஜா, அந்த இடத்துக்கு அன்று இளையராஜாவோடு முத்துலிங்கம் போய் வந்திருக்கிறார். அந்த விஷயம் பேச்சில் வந்தது.

‘‘ராஜா… என்ன வேகமா நடக்கிறார் சார்! என்னால ஃபாலோவ் பண்ண முடியலே!’’ என்றார் முத்துலிங்கம்.

‘‘யோவ்… அவரு சிட்டுக்குருவி மாதிரி. விர்ர்ருன்னு போயிடுவாரு. அவரோடு போய்ப் போட்டிப் போட முடியுமா?’’ என்ற ஜெயகாந்தனின் கூர்மையான பார்வையில், முத்துலிங்கத் தின் ஒரு காலின் சுண்டுவிரலில் பஞ்சு வைத்து ஒரு சிறிய பேண்டேஜ் துணி சுற்றியிருப்பது பட்டுவிட்டது.

‘‘அது என்ன?’’ என்று கேட்டார்.

‘‘அதுதான்… இன்னைக்குப் போனோ மில்ல, ராஜா வேகத்தைப் பிடிக்க நானும் வேக வேகமாப் போனேனா, வழியிலே ஒரு சின்ன முள்ளு அடிச்சிடுச்சி!’’ என்று அப்பாவியாகச் சொன்னார் முத்துலிங்கம்.

அவ்வளவுதான். ‘‘அப்படியா!’’ என்ற ஜெயகாந்தன்… என்னைப் பார்த்து, ‘‘நாம காலையில அங்கே போக வேணாம்!’’ என்று சொல்லி, மறுநாள் காலையில் இளையராஜா சொன்ன இடத்துக்கு ஜே.கே-வோடு போகப் போகிறோம் என்கிற என் ஆசையில் மண்ணள்ளிப் போட்டார் ஜெயகாந்தன்.

முத்துலிங்கமும் நானும் ஜே.கே-வின் முடிவை மாற்ற முயற்சி செய்தோம். முடியவில்லை. நடப்பதற்கு அவர் எப்போதுமே சிரமப்படுவார் என்பது எங்கள் எல்லோருக்கும் ஏற்கெனவே தெரியும். ஒரு காலத்தில் அவர் 11 ஆண்டுகள் சபரிமலை யாத்திரை மேற்கொண்டு, நீலி மலை ஏற்றமெல்லாம் ஏறி இறங்கியவர் என்று சொன்னால் இப்போது யாரும் நம்ப மாட்டார்கள்.

‘‘வேணாம்பா! காலையில கோயிலுக்கு வேணும்னாப் போய்ச் சாமி கும்பிடலாம். அங்கெல்லாம் வேணாம்!’’ என்று சொன்னவர், ‘‘ஆதி அருணாச்சலம் அமர்ந்த பெருமாளேன்னுதான் பாடியிருக்காங்க. ஆதி அருணாச்சலம் அலைஞ்ச பெருமாளேன்னு பாடலை!’’ என்றார்.

எங்கள் ஏமாற்றங்களை எல்லாம் ஒரு சிரிப்பலை அடித்துக்கொண்டு போய்விட்டது.

ஆனாலும், அன்று அவ்வளவு பிரியத்தோடு இளையராஜா, அந்த இடத்தைத் தாயினும் சாலப் பரிந்து உரைத்தாரே, அதைப் பார்க்காமல் போனது இன்னமும் எனக்கு ஒரு பெரிய நஷ்டமாகத் தெரிகிறது.

- வாழ்வோம்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:

pisakuppusamy1943@gmail.com

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வலைஞர் பக்கம்

1 day ago

வலைஞர் பக்கம்

2 days ago

வலைஞர் பக்கம்

7 days ago

வலைஞர் பக்கம்

30 days ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

1 month ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

வலைஞர் பக்கம்

3 months ago

மேலும்