இது தேர்தல் காலம். நேர்மை, தூய்மை, ஊழல், லஞ்சம் என்பன உள்ளிட்ட சொற்களின் ஆதிக்கம் மிகுந்த காலம். பிரதமர் வேட்பாளர் முதல் எம்.பி. வேட்பாளர் வரையிலானவர்களின் நேர்மையைப் பற்றி அறிந்தோ அறியாமலோ பேசுகிறோம். சரி, இந்த 'நேர்மை'யின் நிலைமை நம் அன்றாட வாழ்க்கையில் எப்படி இருக்கிறது?
நல்லனவற்றை தூரத்தில் வைத்து ஆராதித்தே பழக்கப்பட்டுப்போன நாம், அதன் கரம் பிடித்து நடக்க முயல்வதே இல்லை. அதனால்தானோ என்னவோ, இறைவனுடன் கூட வழிநடப்பதை தவிர்த்து அவருக்கு தனியாக இல்லம் அமைத்து கொடுத்து வணங்குகிறோம். வெறும் சொல்லாக பார்க்கப்பட வேண்டிய 'நேர்மை'க்கு, என்று தூய்மை சாயம் பூசப்பட்டதோ, அன்றே அது ஊர் பஞ்சாயத்தால் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுவிட்டது.
'எங்கு பார்த்தாலும் ஊழல், ஊழல், ஊழல், ஐயகோ..!' என்று தினம் தினம் செய்தித்தாளை பார்த்து விட்டு குமுறும் நடுத்தர வர்க்க தந்தை, தன் மகளுக்கு ஆயிரக்கணக்கில் லஞ்சம் (மன்னிக்கவும். அதிகாரப்பூர்வ சொல் - டொனேஷன்) கொடுத்து சிறந்தது எனக் கருதப்படும் பள்ளியில் எல்.கே.ஜி. சீட் பெற்று கொடுத்து பெருமை கொள்வதை என்னவென்று சொல்வது?
ஐந்து வயதில் பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைத்து விட்டு, அறுபதில் கரும்பாய் இருக்க வேண்டும் என்று எண்ணுவது எந்த விதத்தில் நியாயம்?
மகனின் பழக்கவழக்கத்தை வளர்க்கிறேன் என்ற பெயரில் மளிகைக் கடைக்கு அழைத்து செல்கிறார் தாய். கடையில் இருக்கும் ஏழை முதியவர் கணக்குப் பிழையில் பத்து ரூபாய் குறைத்து சொல்ல, சொன்னதை கொடுத்து விட்டு திரும்பும் தாயிடம், "பத்து ரூபாய் கூடுதலா வருமே மா?" என்று கேட்கிறான் மகன். "விடுடா. பத்து ரூபாய் லாபம்" என்று சொல்லி சிரிக்கும் தாய், மகனிடம் விதைப்பது நல்ல பழக்கவழக்கங்களை அல்ல, எளியவரை ஏய்ப்பது என்ற கொடூரமான விதையை. விதைப்பது சரியாய் இருந்தால்தானே வளர்வது முறையாய் இருக்கும்?
நேர்மை இச்சமூகத்தால் இரு வகையாய் அனுசரிக்கப்படுகிறது. ஒன்று அர்ச்சிக்கப்படுகிறது அல்லது வஞ்சிக்கப்படுகிறது. இரண்டுமே தவறென்ற போதிலும், அர்ச்சிக்கப்பட்டாலாவது செய்வது தவறென்ற உள்ளுணர்வு உள்ளத்தை உறுத்தும். நேர்மை வஞ்சிக்கப்படும்போது, நேர்மையே குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்படும் அவல நிலைக்கு தள்ளப்படுகிறது. செய்வது தவறென்றுகூட புரியாத பரிதாப நிலையே நிலவுகிறது.
சமீபத்தில் என் அலுவலகத்தில், போக்குவரத்து செலவுகளை திரும்பப் பெரும் சலுகை வழங்கப்பட்டிருந்தது. குறிப்பிட்ட தொகை வரை பற்றுச்சீட்டு இல்லாமலே பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. பயணமே செய்யாதவரெல்லாம் பயணம் செய்ததாகக் கூறி ஆயிரக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டனர். நாங்கள் சிலர் மட்டும் உள்ளதை உள்ளபடி பெற்றுக் கொண்டோம். எதிர்பார்க்காத வகையில் அனைவரின் முன்னர் நாங்கள் காட்சிப் பொருளாய் தென்பட்டோம். 'பிழைக்கத் தெரியாதவர்கள்' என்ற பட்டத்தையும் பெற்று, அனைவருக்கும் எள்ளிநகையாட கைப்பொருளாய் சிக்கிக் கொண்டோம். குற்றவாளி கூண்டில் நிற்பதைப் போன்றே உணர முடிந்தது. கேள்வி மேல் கேள்வி, "நிறைய பணம் வச்சுருக்கியோ?" என்ற கேள்வி சற்று வதைக்கவே செய்தது. "அது என் பணம் இல்லையே. அதை எப்படி பெறுவது?" என்று மனம் கேட்க துடித்தாலும், கேட்டாலும் ஒரு பயனும் இல்லை என்று எண்ணி புன்னகைத்து விட்டு முடித்தேன்.
குறுந்தொழில் முதல் பெருந்தொழில் வரை வரி ஏய்ப்பு செய்வது, தவறான கணக்கு காண்பிப்பது, பற்றுச்சீட்டு இல்லாமல் விற்பனை செய்வது, தள்ளுபடி கிடைக்கும் என்பதால் பற்றுச்சீட்டு இல்லாமல் பொருள் வாங்குவது, சாலையோர கடைகளில் சாப்பிட்டுவிட்டு கணக்கு சொல்லும் போது 2 இட்லி குறைவாக சொல்வது, மொழி தெரியாத ஆட்களிடம் ஆட்டோக்காரர்கள் அதிக பணம் கேட்பது, வேலை நேரத்தில் கஸ்டமர்களை பார்க்கப் போவதாக சொல்லி மார்க்கெட்டிங் எக்சிக்யூடிவ்கள் வீட்டில் ஓய்வு எடுப்பது, விலை தெரியாத மக்களிடம் பொருட்களை அதிக விலைக்கு வியாபாரிகள் விற்பது... இது போன்ற சிறிய அளவில் செய்வதெல்லாம் தவறில்லை என்று நாம் எண்ணும் வரையில், பெரிய வணிகர்கள் கோடி கோடியாய் ஏய்த்து சம்பாதிப்பதையும், அரசியல்வாதிகள் கத்தை கத்தையாய் ஊழல் செய்வதையும் தட்டி கேட்க நமக்கு அருகதை இல்லை என்றும், அவர்கள் திருந்துதல் நடக்காத காரியம் என்றுமே எண்ணத் தோன்றுகிறது.
கேள்வி கேட்க வேண்டிய 'நேர்மை', கேலிப் பொருளாய் குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுவதும், கேள்விக் கணைகளால் துளைக்கப்படுவதும், இந்தியாவுக்கு மட்டும் இல்லை, மானுடத்துக்கே இழி நிலை என்றே கொள்ள முடிகிறது. எப்போதும் போல, என்றாவது ஒரு நாள் நேர்மை அர்ச்சிக்கப்படவோ, வஞ்சிக்கப்படவோ இல்லாமல், இயல்பாக அனுசரிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
17 days ago
வலைஞர் பக்கம்
24 days ago
வலைஞர் பக்கம்
26 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
2 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
4 months ago