கவிதைக்கும் ஓவியத்துக்கும், கவி தைக்கும் சிற்பத்துக்கும், கவிதைக்கும் நாட்டியத்துக்கும், கவிதைக்கும் ஒரு காட்சிக்கும் உள்ள பிரிக்கவொண்ணா உறவு போன்றது கவிதைக்கும் ஜெயகாந்தனுக்கும் உள்ள உறவு.
வீட்டை விட்டு ஓடும் சிறுவனாக இருந்தபோதே,
‘பட்டேன் பலதுயரம் பாரிலுள்ளோ ரால்வெறுக்கப்
பட்டேன் படுகின்றேன் பட்டிடுவேன் – பட்டால்என்
நாட்டுக் குழைக்குமெனை நாடே வெறுக்கநான்
வீட்டுக்கும் வேண்டா தவன்’
என்று ஒரு சீட்டு எழுதி வீட்டு மாடத்தில் வைத்துவிட்டுப் போனவர் அவர்.
‘படமுடியா தினித்துயரம்
படமுடியா தரசே!
பட்டதெலாம் போதும்
பரிந்து வந்தெனைக் காவாய்’
- என்ற பெரும்பக்தி கொண்ட பெரும் புலவோர் பாடல்வரிகளுக்கு எதிரில், ஒரு சிறுவன் கேட்ட ‘பட்டால் என்?’ என்கிற கேள்வியைப் போட்டுப் பாருங்கள். அந்தச் சிறுவனின் மனத்தில் அப்போதே குடிகொண்டுவிட்டிருந்த மாற்றுக் கவிதா மனோபாவத்தைப் புரிந்துகொள்ளலாம்.
வெண்பா அவருக்கு ஒரு விளையாட்டுப் பொம்மை. சில நேரங்களில் அவசரத்தில் அதற்கு ஓர் பாதிப்பு உண்டாகிவிடலாம். ஆனால், அதைப் பின்னால் எளிதில் ஒட்ட வைத்துச் சரிசெய்துவிடுவார். வெண்பாவில் கொஞ்சவும் செய்யலாம். கோபத்தில் ஒரு சாட்டையை எடுத்துச் சொடுக்கவும் செய்யலாம்.
ஒரு முறை வெள்ளக்குட்டை கிராமத்தில் ஒரு வீட்டின் சவுகரியமான பெரிய மாடி அறையில் அவர் தங்கியிருந்தபோது, வேடிக்கையாகப் பேசிக் கொண்டே மத்தியானத்துக்குள் முப்பது, நாற்பது வெண்பாக்களை அவர் இயற்றிவிட்டார். அப்போதெல்லாம், ‘குறிப்புசாமி’யாகிய நான் என்னுடைய ‘குறித்துவைக்கிற’ வேலையை நிறுத்திவிட்டிருந்ததால், அவையெல்லாம் வெறுங்காற்றில் கலந்துபோய்விட்டன.
ஜெயகாந்தனுக்கு மிகவும் பிடித்தமான கவிதைகளை எழுதியவர் தமிழ்ஒளி. வெண்பா வில் வசைபாடுவதில் காளமேகத்துக்கு அடுத்த வேகத்தை நான் அவரிடம் கண்டேன்.
ஒரு முறை ஓர் எழுத்தாளரை வசைபாடித் தாக்குவதற்குத் தமிழ்ஒளி ஜெயகாந்தனை அழைத் திருக்கிறார். இருவர் சேர்ந்து ஒரு வெண்பாவை இயற்றுவதும் ஒரு விளையாட்டுத்தான். அப்படி ஒரு கவி விளையாட்டை இருவரும் ஆடப் புகுந்தனர்.
‘பித்தன் உனைப்புகழ்ந்து பேசினான் என்பதனால்
கத்தலாம் என்று கதைக்காதே’
- என்று முதல் இரு வரிகளை ஜெயகாந்தன் சொன்னார். இங்கு ‘பித்தன்’ என்பது புதுமைப் பித்தனைக் குறிக்கும்.
ஜெயகாந்தன் சொல்லி நிறுத்தியதும், அடுத்து… ‘எத்தனே’ என்று தனிச் சீர் போட்டு, தமிழ் ஒளி சொல்லிய பின்னிரு வரிகள் கீழே:
‘ஆடும் சிவனுடனே ஆடுகின்ற பேய்க்கும்பல்
ஆடுமோ சிற்றம் பலம்?’
- கவியின் கற்பனை வளமாக இருந்தால், ஒரு வசைபாடலில் கூட அற்புதமான படிமங்கள் வந்து படிந்துவிடும் என்பதற்குத் தமிழ் ஒளியின் வரிகள் சான்று!
‘‘நான் சொல்லிய வரிகளை விடவும், தமிழ் ஒளியின் வரிகள்தான் மிகச் சிறப்பு!’’ என்று ஜெயகாந்தனே சொன்னார். நல்ல வரிகளை வஞ்சனையில்லாமல் புகழ்கிறவர் அவர்.
ஆனால், அந்தப் பின்னிரு வரிகளும், முன்னிரு வரிகளின் பொருளை அடியொற்றிப் போகிறவை என்பதால், அந்த முழு வெண்பாவும் அழகுடையதாகிறது.
எத்தனை ஆயிரம் கிலோ மீட்டர்கள் அவரோடு காரிலும் ரயிலிலும் நாங்கள் பயணித்திருக் கிறோம்! கார் ஓட்டும்போது பெரும்பாலும் கவிதை ஏதாவது சொல்லிக் கொண்டுதான் அவர் தன் வழியைக் கடப்பார்.
‘பாதை நல்ல பாதை – இது
பயமில்லாத பாதை!’
- என்று எந்தப் பாதையையும் அவர் பாடுவார். அப்புறம் அந்தப் பாதையை அழகழகாக வர்ணிப்பார்.
‘கள்ளர் பயமும் இல்லை – மரம்
கனி கொடுக்கும் பாதை!’
- என்று அதனை விஸ்தரிப்பார்.
‘தங்கும் மடங்கள் உண்டு – பல
தருமதுரைகள் உண்டு
சுங்கச் சாவடி இல்லை – பரி
சோதனைகள் இல்லை!’
- என்று ஒரு புராதனமான பாதையின் வடிவத் தைப் பாடலில் கொண்டு வருவார்.
அவர் தன் கருத்துக்கும் ரசனைக்கும் இயைந்த பாடல்களையும் கவிதைகளையும் மட்டும் புனைந்தவர் அல்லர். தனது கதாபாத்திரங்கள் சிலவற்றை எழுதும்போது, அந்த பாத்திரங்கள் பாடுவதாக எழுதும் பாடல்களிலும் அவர் நிபுணர்.
‘படுகுழி’ என்கிற, வெளிவராமலே பாதியில் நின்றுபோன கதையில் வரும் ஒரு திருநங்கை யின் பாடல் என்னால் மறக்க முடியாததாகும்.
‘பொன்னாப் பொறந்திருந்தாப் - இந்தப்
பூலோகத்து ரம்பை நான்
ஆணாப் பொறந்திருந்தா – அந்த
அருச்சுனர்க்கு வாரிசு
ரெண்டுங்கெட்டு நான் பொறந்தேன் – என் ராசாவே
லெஞ்ஜை கெட்டு வாழுறனே!’
சில நேரங்களில் ஜெயகாந்தன் நாட்டுப்புற பாடல்களின் வடிவிலேயே தனது கவிதைகளைப் பாட ஆரம்பித்துவிடுவார்.
திருச்சிக்குப் போகும் வழி என்று நினைக் கிறேன். தாத்தையங்கார்பேட்டை என்கிற ஓர் ஊர் வந்தது. போதாதா! ஜெயகாந்தனுக்குப் பாடல் பிறக்க ஆரம்பித்துவிட்டது.
‘தாத்தையங்காரு பேட்டையிலே
தளுக்குக் காட்டி நிக்கையிலே
காளையை வண்டியில் பூட்டையிலே
கருக்கரிவாளைத் தீட்டையிலே
திரும்பிப் பாக்காம போனியளே - மீண்டும்
திரும்பி வரவும் மாட்டியளே?’
அவரது கவிதைகள் மற்றும் பாடல்களின் பெருஞ்சிறப்பு, அவை மிகமிக அழகிய பாவனைகளைக் கொண்டவை என்பதே!
‘எத்தனை நாள் காத்திருந்தேன்
இதுதானா என்றாள்
இன்னும் இன்னும் காத்திருந்தால்
இன்னும் இன்னும் என்றான்!’
- என்றெல்லாம் வார்த்தைகள் வெகுவசமாக அவர் வலையில் வந்து வீழ்ந்தன.
- வாழ்வோம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pisakuppusamy1943@gmail.com
முக்கிய செய்திகள்
வலைஞர் பக்கம்
1 day ago
வலைஞர் பக்கம்
2 days ago
வலைஞர் பக்கம்
7 days ago
வலைஞர் பக்கம்
30 days ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
1 month ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago
வலைஞர் பக்கம்
3 months ago